Monday, 18 March 2024

திருக்குறள் வழிநின்று திருவள்ளுவரை அறிதல்-10

திருக்குறள் வழிநின்று திருவள்ளுவரை அறிதல்-10



கடந்த வாரங்களில் திருவள்ளுவரின் திருக்குறளின் தாக்கம் எவ்வாறு பிற தமிழ் இலக்கியங்களான சிலப்பதிகாரம்இ மணிமேகலை மற்றும் கம்பராமாயணத்தில் தாக்கத்தினை ஏற்படுத்தின என்று பார்த்தோம். இன்று அந்த காலத்து கற்பனைகள் நிரம்பிய (கயவெயளல)  இலக்கியமாகப் படைக்கப்பட்ட மதுரையைச் சேர்ந்த  சமண முனிவர் திருத்தக்கத் தேவர் எழுதிய ஐம்பெரும் காப்பியங்களில் ஒன்றான மணநூல் என்று அழைக்கப்படும் சீவக சிந்தாமணியில் திருக்குறளின் தாக்கம் எவ்விதம் பொதிந்திருக்கிறது என்பதைப் பார்ப்போம். 
'ஒருமை மகளிரே போலப் பெருமையும் 
தன்னைத்தான் கொண்டொழுகின் உண்டு' -974 
என்று திருவள்ளுவர் அவர்கள் பெருமை என்னும் அதிகாரத்தில் குறிப்பிடுகிறார்.  
அதாவது உறுதியான கற்புள்ளம் கொண்ட பெண் தன்னைக் காத்துக் கொள்வது போலப் பெருமையும் தன்னைப் போற்றி நடப்பவர்களாலேயே சிறப்புப் பெறுகிறது என்கிறார். இதையே திருத்தக்கத் தேவர்,
'குலத்தலை மகளிர்தங் கற்பின் கோட்டகம்
நிலைப்படா நிறைந்தன பிறவும் என்பவே' – சீவக சிந்தாமணிஇ 41 என்று கவிதைத் திரையில் காட்டுகிறார். 
வெள்ளம் பல வாய்க்கால்களாகப் பிரிந்து நிறைந்து சென்று கொண்டிருக்கிறது. அதன் வேகத்தைத் தணிக்க வீரர்கள் ஆங்காங்கே படல்கள் அமைக்கின்றனர். அதனால் வெள்ளம் கரைக்கு அடங்கிச் செல்கிறது. இக்காட்சியை திருத்தக்கத் தேவர் அவர்கள்இ ஒருமை மகளிர்இ எல்லை மீறாத பெண்கள்இ மனநிறையுடைய கற்புடைய குலமகளிர்இ அவர்கள் வீட்டிற்கும் கணவனுக்கும் அடங்கி வரம்பு மீறாமல் நடப்பவர்கள்இ அவர்களைப் போல வெள்ளம் கரைக்கு அடங்கி நடக்கிறது என்று குறிப்பிடுகிறார். அதாவது ஐம்புலன்களையும் அது வழி போகவிடாமல் தன்வழி நடக்கச் செய்தலாகும். 

பேதைமை அதிகாரத்தில் திருவள்ளுவர்இ
'மையல் ஒருவன் களித்தற்றால் பேதைதன்
கையொன் றுடைமை பெறின்' - 838 என்று குறிப்பிடுகிறார். 
அதாவது அறிவற்றவன் ஒருவன் கையில் எப்படியாவது செல்வம் அகப்பட்டு விட்டால் அவன் கள்ளைக் குடித்த மதியற்றவன் போல் ஆட்டம் காட்டுவான் என்ற குறளில் குறிப்பாக பேதையானவன் அறிவு இருந்தும் செயல்படாதவனாக இருப்பான் என்று குறிப்பிடுகிறார். இதே போன்றுஇ

'சொல்லருஞ் சூற்பசும் பாம்பின் தோற்றம்போல்
மெல்லவே கருவிருந் தீன்று மேலலார்
செல்வமே போற்றலை நிறுவித் தேர்ந்தநூற்
கல்விசேர் மாந்தரின் இறைஞ்சிக் காய்த்தவே' – சீவக சிந்தாமணிஇ 53
என்று திருத்தக்கத் தேவர் குறிப்பிடுகிறார். 
வெள்ளம் வாய்க்காலில் வழிந்தோடிப் வயல்வெளிகளில் பாய்ந்துஇ பயிரை வளர்த்ததுஇ பயிர்கள் அடுக்கடுக்காகக் கதிர்கள் கொண்டனஇ கதிர்களில் அடர்த்தியான நெல்மணிகள் அதனால் கதிர்கள் தலைநிமிர்ந்து நிற்கின்றன. பின்னர் சிறிது சிறிதாகக் கதிர்கள் பால் கொண்டன. மணிகள் பருத்து நின்றன. இப்போது அதே கதிர்கள் தலைவணங்கி நிற்கின்றன. என்று குறிப்பிடுகிறார். இதில் ஆழமாக நோக்கும் போது ‘மேலலார் செல்வமே போற்றலை நிறுவி.. ” என்பதனை மேற்கண்ட குறளால் ஒப்பிட்டுள்ளதைக் காணலாம். 
அடுத்து ‘தேர்ந்தநூற் கல்விசேர் மாந்தரின் இறைஞ்சிக் காய்த்தவே” என்னும் பகுதியில் சிலர் நூல் அறிவு இல்லாமலேயே பேரறிவுடையவராக இருக்கலாம். ஆனால் அது மட்டும் பத்தாதுஇ அறிவின் தரத்தை முன்கூட்டியே ஆய்ந்தறிய நூலறிவும் வேண்டும். நூலறிவும் பலகாலம் பயின்று தேர்ச்சியடைய வேண்டும்” என்று கல்விக்குப் பெருமை சேர்க்கிறார். 
மேற்கூறியவைகள் பணியுமாம் என்றும் பெருமை சிறுமை
பணியுமாம் தன்னை வியந்து -978 என்ற குறளுக்கும் பொருத்தமுடையதாக இருக்கிறது. அதாவது பெருமையுடையவர்கள் பணிவுடையவர்களாக இருப்பர். சிறுமைக் குணம் கொண்டவர்கள் தற்புகழ்ச்சியில் மயங்கித் தம்மைத் தாமே பாராட்டிக் கொள்வர் என்று குறிப்பிடுகிறார். 
'நாடு' என்னும் அதிகாரத்தில் திருவள்ளுவர் அவர்கள்
'பெரும்பொருளால் பெட்டக தாகி அருங்கேட்டால் 
ஆற்ற விளைவது நாடு' – 732 என்று குறிப்பிடுகிறார். எல்லா வகைப் பொருளும் வளமும் பெருகி இருப்பதால் மக்கள் விரும்புவதாய் எந்நாளும் கேடின்றி விளைவதாய் அமைந்ததே சிறந்த நாடு என்கிறார். இதனை உள்வாங்கித் திருத்தக்கத்தேவர் அவர்கள்
'...மரு தணிந்து கேடிலா
வளவயல் வைகலும் இன்ன தென்பதேன்' - சீவக-64 என்கிறார்

நாடு என்னும் அதிகாரத்தில் திருவள்ளுவர்
'தள்ளா விளையுளும் தக்காரும் தாழ்விலாச்
செல்வரும் சேர்வது நாடு' – 731 என்று குறிப்பிடுகிறார். மாறாத விளைச்சலும், மதிப்பிற்குரிய சான்றோரும், வளம் குன்றாச் செல்வரும் ஒருங்கே அமைந்ததே நல்ல நாடு என்று குறிப்பிடுகிறார். 
திருத்தக்கத் தேவர் நகரின் சிறப்பினைக் குறிப்பிடுகையில்,
'நற்றவஞ் செய்வார்க்கிடம் தவஞ்செய்வார்க்கும் 
அஃதிடம்' - சீவக. 77 என்று குறிப்பிடுகிறார். மேல் குறிப்பிட்ட குறளில் தக்கார் என்போர் அறவோர் எனப்படுவர். அவர்கள் தவஞ்செய்யக்கூடிய துறவோர் ஆக இருக்கலாம். ஆகவே திருத்தக்கத் தேவர் இருவகை தவம் செய்யக்கூடியவருக்கும் ஏற்ற நகரம் என்றுக் குறிப்பிடுகிறார். 

'பட்டவர் தப்பலிற் பரவையேந் தல்குல்
அட்டொளி யரத்தவாய்க் கணிகை – சீவக. 98
அகழியானது, அகப்பட்டவரை தன்னகப்படுத்தித் தாழ்த்திக் கொள்வதால் அது கணிகையை ஒத்துள்ளது என்று கணிகையின் இயல்பை திருத்தக்கத் தேவர் குறிப்பிடுகிறார். இது வரைவின் மகளிர் என்ற அதிகாரத்தில் 
'வரைவிலா மாணிழையார் மென்றோள் புரையிலாப்
பூரியர்கள் ஆழும் அளறு' – 919 என்ற திருக்குறளை ஒத்துப் போகிறது. அதாவது கட்டுப்பாட்டுக்குள் அடங்காத காமக்கணிகையரின் மெல்லிய தோள்கள் தகுதியற்ற கீழ்மக்கள் அழுந்திக் கிடக்கும் சகதி நிலம் என்று குறிப்பிடுகிறார். 
'குறிப்பறிதல்' என்னும் அதிகாரத்தில் திருவள்ளுவர் 
'இருநோக்கு இவளுண்கண் உள்ளது ஒருநோக்கு
நோய்நோக்கொன் றந்நோய் மருந்து' -1091 குறிப்பிடுகிறார். அதாவது மையுண்ட இவள் கண்களுக்கு இரண்டு பார்வை உண்டு. ஒரு பார்வையால் நோய் வரும். மற்றொரு பார்வையோ மருந்து தரும் என்று குறிப்பிடுகிறார். 
இக்குறளை அடிப்படையாக வைத்துத் திருத்தக்கத்தேவர் சீவகனின் தாய் விசையின் கண்ணழகையும் அவற்றின் இயல்பையையும் இவ்வாறு விளக்குகிறார். 
‘... மாண்பில்நஞ்சு மமிர்தமுமே 
போல்குணத்த பொருகயற்கண்” –சீவக. 166 இல் குறிப்பிடுகிறார். 
நஞ்சுக்கு மாண்போடு இல்லாமமல் இருப்பதுதான் இயற்கை, அது யாரையும் கொல்வது. ஆனால், நஞ்சுடைய பாம்பை நஞ்சுக் கொல்லாது. ஆனாலும், விசையின் நோய் விளைவிக்கும் கண்ணாகிய நஞ்சு உடையவனையே கொல்கிறது. அது மாண்பின்மையின் உச்சக்கட்டம்தான். அது போகட்டும். ஆனால், அமுதத்திற்கு உயிர்களை வாழ வைக்கவும் வளரவைக்கவும் உடைய மாண்புள்ளது. அத்தகைய அமுதத்தை உடைய விசையின் பார்வையானது அரசனை எக்கணமும் தன்னைவிட்டுப் பிரியாத பிணிநோய் என்று குறிப்பிடுகிறார். எவ்வளவு பொருத்தமாக உள்ளது குறளும் சிந்தாமணி கவியும்!. 

நாம் பின்வரும் குறளை அறிந்திருக்க வாய்ப்புள்ளது. அதாவது,
அடுத்தது காட்டும் பளிங்கு போல் நெஞ்சம் 
கடுத்தது காட்டும் முகம் -706 என்று குறிப்பறிதல் அதிகாரத்தில் திருவள்ளுவர் குறிப்பிடுகிறார். தன்னை அடுத்திருக்கும் ஒரு பொருளைத் தெள்ளத்தெளிவாக பளிங்குகல் காட்டி விடும் அதுபோல் மனதில் இருக்கும் நிகழ்வினை அவனுடைய முகம் காட்டிவிடும் என்பதாகும். 
இதனையே சீவக சிந்தாமணியில் 
‘பளிக்கறைப் பவழப்பாவை பரிசெனத் திகழுஞ் சாயற
 ... ... கண்ணாள்” –சீவக. 192 என்று குறிப்பிடுகிறார். அதாவது பளிக்கறை-பளிங்குகல் , அடுத்ததைக் காட்டும் பளிங்குக்கல்லைப் பவழம் தன்தம்மையாக்கினாற் போல, சச்சந்தன் மனமாகிய பளிங்குக்கல்லினுள் புகுந்து பவழப்பாவையாகிய விசையே விளங்கி நின்றாள் என்று குறிப்பிடுகிறார். 

நாணுத் துறவுரைத்தல் என்னும் அதிகாரத்தில் நமது பெண்களின் தனிப்பெருமையைக் குறிப்பிடுகையில் திருவள்ளுவர் 
'கடலன்ன காமம் உழந்தும் மடலேறாப்
பெண்ணின் பெருந்தக்கது இல்' -1137 அதாவது இவளுக்கும் கங்கு கரையில்லாக் கடல்போலக் காமம் பொங்கத்தான் செய்கிறது. ஆனால் நாணம் குலைந்து செய்யாத தன் துயரத்தைப் பொறுத்திருக்கும் பெண்ணைப் போன்ற பெருந்தகுதி ஆணுக்கு இல்லை; பெண்மை பெருமைக்கு உரியது என்கிறார்.
இதே உவமையை ஆள நினைத்த திருத்தக்தேவர் கற்புக்கடம் பூண்ட சச்சந்தன் விசையை இருவரிடமும் அமைத்து,
'கடிமணக் கிழமையோர் கடலின் மிக்கதே' – சீவக. 196 என்று குறிப்பிடுகிறார். இதில் மணக்கிழமை-கற்புக்காலத் துறவு, அது கடல் அளவில்லை அதனின் பெரிது என்று குறிப்பிடுகிறார். இவ்வாறு பல்வேறு இடங்களில் திருக்குறளின் ஆட்சியை திருத்தக்கத் தேவர் சிதறவிட்டிருக்கிறார். இதிலிருந்து திருவள்ளுவரின் புலமை எவ்வாறு திருத்தக்கத் தேவரை உள்வாங்கி தன் பாடல்களில் எழுதத் தூண்டியது என்பதை உணர முடிகிறது. 

No comments:

Post a Comment