Monday, 11 March 2024

திருக்குறள் வழிநின்று திருவள்ளுவரை அறிதல்-9


திருக்குறள் வழிநின்று திருவள்ளுவரை அறிதல்-9

கம்பராமாயணம் கவிச்சக்கரவர்த்தி கம்பரால் எழுதப்பட்டது என்று அனைவரும் அறிவோம். ஆனால் இந்த நூலுக்கு கம்பர் அவர்கள் இராமவதாரம் என்றே பெயரிட்டிருந்தார். ஆனால் இராமாயணம் பலராலும் இயற்றப்பட்டதால், கம்பர் அவர்களின் பெயரோடு இணைத்து கம்பராமாயணம் என்று அழைக்கப்படுகிறது.

‘கம்பன் வீட்டுக் கட்டுத்தறியும் கவிபாடும்’ என்ற கூற்று இருக்கிறது.அப்படியென்றால் எந்தளவுக்கு கம்பர் அவர்களின் கவிகள் சிறப்பு வாய்ந்தது என்று அறிந்து கொள்ள இயலும். இத்தகையச் சிறப்பு வாய்ந்த கவிச்சக்கரவர்த்தி கம்பர் அவர்கள் எவ்வாறு தன்னுடைய நூலில் ஆங்காங்கே திருக்குறளில் சொல்லப்பட்ட கருத்துக்களை உள்வாங்கியுள்ளார் என்பதைக் காணலாம்.

அன்புடைமை என்னும் அதிகாரத்தில் திருவள்ளுவர்

அறத்திற்கே அன்பு சார்பு என்ப அறியார்

மறத்திற்கும் அஃதே துணைகுறள் 76

என்று அன்பு அறத்திற்கு மட்டுமே ஆதாரமாகும் என்று கூறுபவர்கள் அறிவிலிகள். ஆனால், அன்பானது அறத்திற்கு மட்டும் அல்லாது, வீரத்திற்கும் ஆதாரமாக நிற்கும் என்று குறிப்பிடுகிறார். இதனை உள்வாங்கிய கம்பர்,

துஞ்சினானைத் தம்முயிரின் துணையைக் கண்டார் துணுக்கத்தால்

நஞ்சு நுகர்ந்தார் என உடலம் நடுங்கா நின்றார் என்றாலும்

அஞ்சி அழுங்கி விழுந்திலரால் அன்பின் தறுகண் பிறிதுணடோ

வஞ்சம் இல்லா மனத்தானை வானில்தொடர்வான் மனம் வலித்தார்

-அயோத்தியா காண்டம் -தைலம் ஆட்டுப்படலம் -69

என்று குறிப்பிடுகிறார்.

தசரதனின் மரணச் செய்தியைக் கேள்விப்பட்ட தேவிமார் மூன்று பேரும் துக்கம் தாளாது அழுகின்றனர். தங்கள் உயிருக்குத் துணையாக இருந்த நாயகன் இறந்தபின் தாங்கள் இப்பூவுலகில் வாழ்வதில் பொருளில்லை என்பதைப் புரிந்து கொண்டு தாங்கள் மூவரும் தசரதனைப் பின்பற்றி வானுலகம் செல்வதென உறுதி பூண்டனர். நெஞ்சில் துக்கம் பீறிட்ட போதிலும் மனம் சோர்ந்து விடவில்லை மனவலிமையுடன் இருந்தனர் என்பதை கம்பர் மேற்காணும் பாடலின் மூலம் குறிப்பிடுகிறார்.

 

என்பிலதனை வெயில்போலக் காயுமே

அன்பிலதனை அறம் - 77 என்று திருவள்ளுவர் குறிப்பிடுகிறார்.

இதில் எலும்பு இல்லாத புழுவை வெயில் அரிப்பதுப் போல அன்பு இல்லாத உயிரை அறம் அரிக்கும் எனக் கூறுகிறார். இதனைக் கையாண்டுள்ள கம்பர் அவர்கள், தசரதனின் மரணத்தால் மனமுடைந்த கோசலையின் புலம்பலைக் காட்சிப்படுத்தும் கம்பர் அவர்கள், தசரதனின் உடலைத் தொட்டுப் பார்த்து மூச்சும் துடிப்பும் இல்லை என்பதை உறுதி செய்த கோசலையின் நிலையினை:

உயிர்ப்பிலன் துடிப்பும் இலன் என்று உணர்ந்து உருவம் தீண்டி

அயிர்த்தனள் நோக்கி மன்னற்கு ஆருயிர் இன்மை தேறி

மயில்குலம் அனைய நங்கை கோசலை மறுகி வீழ்ந்தாள்

வெயில்சுடு கோடைதன்னில் என்புஇலா உயிரின் வேவாள் -

-அயோத்தியா காண்டம் -தைலம் ஆட்டுப்படலம் -61

என்ற பாடலில் கூறுகையில் சுடு வெயிலில் எலும்பில்லாப் புழுவைப் போல நைந்து போனாள் என்கிறார்.

 அன்புடைமை அதிகாரத்தில்

அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ் ஆர்வலர்

புன்கணீர் பூசல் தரும் - 71 என்ற திருக்குறளில் அன்பு வெள்ளத்தைத் தடுக்க எந்தக் கருவியாலும் முடியாது. அன்பென்னும் ஆர்வம் பெருகியர்கள் கண்களில் அது கண்ணீராய்த் தடையின்றித் தோன்றும் என்கிறார்.

இக்குறளைக் கையாண்டுள்ள கம்பர் பாலகாண்டம் எதிர்கொள் படலத்தில் தசரத வேந்தனை சனக மன்னன் எதிர்கொண்டு வரவேற்கும் பகுதியில் ஒரு இடத்தில் பரதன் இராமனை வணங்க இராமன் பரதனை மார்போடு அணைத்துக் கட்டித் தழுவுகிறான். இதனைக் கம்பர்,

உன்னுபேர் அன்பு மிக்கு ஒழுகிஒத்து ஒண்கணீர்

பன்னு தாரைகள் தர தொழுது எழும் பரதனை

பொன்னின் மார்பு உற அணைத்து உயிர் உறப் புல்லினான்

தன்னை அத்தாதை முன் தழுவினால் என்னவே

-        பாலகாண்டம்: எதிர்கொள் படலம்:26 இல் குறிப்பிடுகிறார்.

அதாவது பரதனின் ஒளிபொருந்திய கண்களில் நீர் தாரைத் தாரையாகப் பெருகியதைக் கண்ணீர் என்று கூறாமல் எப்போதும் இராமனை நினைத்திருக்கும் தன்மையுள்ள பரதனின் உள்ளத்தில் தோன்றிய அன்பு மனத்தில் அடங்க முடியாமல் கண்களின் வழியே சிந்தியதைப் போன்று கண்களின் வழியே வெளியேறியது எனக் குறிப்பிடுகிறார்.

 ஆழிவி னவைநீக்கி ஆறுய்த்து அழிவின்கண்

அல்லல் உழப்பதாம் நட்பு  -786 என்று நட்பு என்னும் அதிகாரத்தில் திருவள்ளுவள் குறிப்பிடுகிறார். அதாவது நண்பருக்கு நேரும் தீங்குகளைத் தடுத்து, அவரை நல்வழியில் நடத்தி அவருக்கு வரும் துன்பத்தைத் தானும் பகிhந்து கொள்வதே நல்ல நட்பாகும் என்று குறிப்பிடுகிறார். இக்குறளைக் உள்வாங்கிய கம்பர் அவர்கள் ஆரணியக் காண்டத்தில் இராவணன் சூழ்ச்சிப் படலத்தில் வரும் கீழ்க்காணும் பாடலில் சீதை இலக்குவனைக் கடுஞ்சொற்களால் திட்டுகையில்,

ஒருபகல் பழகினார் உயிரை ஈவரால்;;

பெருமகன் உலைவுறு பெற்றி கேட்டும் நீ

வெருவலை நின்றனை ... .

-        ஆரண்ய காண்டம் -இராவணன் சூழ்ச்சிப் படலம் 13 இல் குறிப்பிடுகிறார். அதாவது அன்புள்ளம் கொண்டுள்ளவர்கள்; எனில் ஒருநாள் பழகினாலும் நட்புக்காக உயிரையும் கொடுக்கத் துணிவர். ஆனால்நீயோ அவ்வாறு இல்லாமல் இராமனுக்குத் தீங்கு வந்த போதும் உதவாமல் நிற்பது நல்லதல்ல என இலக்குவனுக்கு எடுத்துரைத்தாகக் கம்பன் குறிப்பிடுகிறார்.

 

இதே நட்பதிகாரத்தில் வள்ளுவர்

உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே

இடுக்கண் களைவதாம் நட்பு – 788 என்று குறிப்பிடுகிறார். அதாவது உடுத்த ஆடை நெகிழும்போது ஓடிவந்து மானம் காக்கும் கைபோல, உறுதுயர் நேரும்போது நண்பரைக் காக்க விரைவதே இனிய நட்பு என்கிறார். இதனையே கம்பர்,  இராமனின் கூற்றாக  ;

என்ற அக்குரக்கு வேந்தை, இராமனும் இரங்கி நோக்கி,

‘உன் தனக்கு உரிய இன்ப துன்பங்கள் உள், முன் நாள்

சென்றன போக, மேல் வந்து உறுவன தீர்ப்பல்; அன்ன

நின்றன எனக்கும் நிற்கும் நேர்‘... என மொழியும் நேரா.

-        கிட்கிந்தா காண்டம்- நட்புக் கோட் படலம் -3811 என்ற பாடலில் குறிப்பிடுகிறார்.

அதாவது இராமன் சுக்ரீவனனைப் பார்த்து இவ்வாறு கூறுகிறார். உனக்கு உள்ள இன்ப துன்பங்களில் இனி வந்து சேரும் துன்பங்களை நான் நீக்குவேன், இனி வரும் இன்பமும் துன்பமும் நம் இருவருக்கும் சமம் என மொழிந்தார்.

 

புணர்ச்சிப் பழகுதல் வேண்டா உணர்ச்சிதான்

நட்பாம் கிழமை தரும் -785 என்று நட்பதிகாரத்தில் திருவள்ளுவர் குறிப்பிடுகிறார். அதாவது நெருங்கிப் பழகுவதால் மட்டும் ஏற்படுவதல் நட்பு என்னும் உரிமை. ஒருமனதாகும் உணர்ச்சிதான் இந்தக் கேண்மைக்கு வலிமை என்று குறிப்பிடுகிறார். இக்குறளின் தன்மையொற்றியே கம்பராமாயணத்தில் யுத்த காண்டம் வீடணன் அடைக்கலப் படலத்தில் சுக்ரீவனும் வீடணனும் தழுவிக் கொள்ளும் காட்சியினை,

தொல்லருங் காலம் எல்லாம் பழகினும், தூயர் அல்லார்

புல்லலர் உள்ளம்; தூயர் பொருந்துவர், எதிர்ந்த ஞான்றே;

ஒல்லை வந்து உணர்வும் ஒன்ற இருவரும்ஒருநாள் உற்ற

எல்லியும் பகலும் போலத் தழுவினர், எழுமின் தோளார்;

- யுத்த காண்டம்-வீடணன் அடைக்கலப் படலம் 120 என்று விளக்குகிறார் கம்பர். அதாவது நெடுங்காலம் நெருங்கிப் பழகி வந்தாலும் மனத் தூய்மை இல்லாதவர்கள் ஒன்றுபடுவதில்லை. மனத்தூய்மை உள்ள மேலோர் சந்தித்த கணமே மனம் ஒன்றிவிடுவர் என்பதை எடுத்துரைக்கையில் திருவள்ளுவரின் குறள் கருத்தைப் போற்றியே பயன்படுத்தியிருப்பது தெளிவாகிறது.

இன்னும் பல இடங்களில் இதுபோன்று கம்பர் திருக்குறளினை உள்வாங்கி ஆங்காங்கே தனது கருத்துக்களை கம்பராமாயணத்தில் தெரிவித்திருக்கிறார். ஆக திருவள்ளுவர் சங்க காலப் புலவர்கள் மனதிலும் தன்னுடைய அறத்தினுடைய கூடிய கருத்துக்கள் மூலம் ஆணித்தரமாக நின்றிருக்கிறார் என்பது விளங்குகிறது.

No comments:

Post a Comment