திருக்குறள் வழிநின்று திருவள்ளுவரை அறிதல்-12
தமிழ் இலக்கியங்களில் ஐந்து பெரும் காப்பியங்களில் சிலப்பதிகாரம், மணிமேகலை, சீவக சிந்தாமணி மற்றும் வளையாபதியில் திருக்குறளின் தாகக்கங்களையும் திருவள்ளுவரின் சிந்தனைகளையும் எவ்வாறு உள்வாங்கி சேர்த்திருக்கிறார்கள் என்பதை கடந்த வாரங்களில் கண்டோம். இன்று ஐம்பெரும் காப்பியங்களில் ஒன்றான குண்டலகேசியில் திருவள்ளுவர் எவ்விதம் ஆளுகை செலுத்தியிருக்கிறார் என்பதைக் காண்போம்.
இது ஒரு பௌத்த இலக்கியமாகும். இந்நூலை இயற்றியவர் நாதகுத்தனார் என்னும் பௌத்தர். சீவக சிந்தாமணிக்கும் வளையாபதிக்கும் காலத்தால் முற்பட்டது. சமண சமயக் கொள்கைகளை மறுத்தற்பொருட்டு எழுந்த காவியமாக நீலகேசி உரையின் மூலம் அறியப்படுகிறது. குண்டலகேசி முழுமையும் கிடைக்கப்பெறவில்லை. ஆனால் உரைகளில்
வந்தவை 19 செய்யுள்கள். நூல் முழுதும் கிடைக்கப் பெறாததால், மேற்கோள் நூல்களின் மூலமே இதன் கதையை அறிய முடிகிறது. வீர சோழிய உரை, புறத்திரட்டு, நீலகேசி ஆகிய நூல்களில் குண்டலகேசி பற்றிய குறிப்புகள் இருக்கின்றது.
குண்டலகேசி காப்பியத்தைத் தழுவி கலைஞர் மு. கருணாநிதி அவர்களால் எழுதப்பட்ட நாடகம் 1950 ஆம் ஆண்டு வெளிவந்த மந்திரி குமாரி என்ற திரைப்படமாகும்.
குண்டலகேசியில் திருவள்ளுவரின் கருத்துக்கள் பொதிந்தவற்றைக் காண்போம்.
அறன் வலியுறுத்தல் அதிகாரத்தில் திருவள்ளுவர்
மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்துஅறன்
ஆகுல நீர பிற – 34 என்று குறிப்பிடுகிறார்.
முனதில் மாசற்றவனாக இருப்பதே அனைத்து அறன்களுக்கும் அடித்தளமாகும். மற்ற நெறிகள் வெறும்ஆரவாரமே ஆகும். இதே போன்று குண்டலகேசியில்
'தீயவினை நோக்கும் இயல்சிந்தனையு மில்லாத்
தூயவினை நோக்கி யுளதுப்புரவும் எல்லாம்'-குண். 8 என குறிப்பிடப்படுகிறது.
அதாவது உலகிலே தூய்மை என்பது தீய வினைகளைப் பார்க்கும் நெறிகளில் செல்லும் சிந்தனையே இல்லாத தூயவனிடம் மட்டும் உள்ள சிறந்த குணம். அத்தகைய தூயவனிடமே துப்புரவும் உள்ளது என்கின்றார். ஆகவே மனத்தூய்மையே அறம் என்பதை வலியுறுத்துகிறார் நாதகுத்தனார்.
தவம் என்னும் அதிகாரத்தில்
உற்றநோய் நோன்றல் உயிர்க்குறுகண் செய்யாமை
அற்றே தவத்திற் குரு. – 261 என்று திருவள்ளுவர் குறிப்பிடுகிறார்.
பிறர் செய்யும் துன்பங்களைத் தாங்குதலும் தான் பிறர்க்குத் துன்பம் செய்யாமையும்தான் தவம் எனப்படும் எனக் குறிப்பிடுகிறார். இதில் உற்ற நோய் நோன்றல் என வள்ளுவர் கூறியதை விரித்துக் குண்டலகேசியில்
போர்த்தல் உடைநீக்குதல் பொடித்துகண் மெய்பூசல்
கூர்த்த பணியாற்றுதல் குளித்து அழலுள்நிற்றல்
சாத்தரிடு பிச்சையர் சடைத்தலை யராதல்
வார்த்தை இவைசெய்தவம் மடிந்தொழுக வென்றார் - குண். 4
குளிராலும் பனியாலும் உடலுக்கு வரும் நோயை போக்க போர்த்திக் கொள்ளுதல் முதலியவற்றாலும் உடல் நடுக்கத்தை வெண்ணீறணிவதாலும் வெப்பத்தைக் குளித்தலாலும் போக்கிக் கொள்வது மரபு. குளிர்காலத்தும் மழைகாலத்தும் பனிக்காலத்தும் ஆடையணியாமல் நீருள் குளித்தலும் வேனிற் காலத்து வெயிலில் நிற்றலும் அழல் நடுவில் நிற்றலும் உற்ற நோய் தோன்றலாவன என விளக்குகிறார்.
காம சிந்தனையானது மிகவும் கொடியது. தீப் போல உள்ளிருந்து காந்துவது. அதனை நுகர்ந்து நுகர்ந்து உவர்ப்புண்டாகித் துடைப்போம் என்பது நெருப்பை நெய்யால் அவிக்க எண்ணுவது போலாகும் என்கிறது குண்டலகேசி.
வகையெழில் தோள்கள்என்றும் மணிநிறக்குஞ்சி என்றும்
புகழ்எழ விகற்பிக்கின்ற பொருள்இல் காமத்தைமற்றோர்
தொகைஎழுங் காதல்தன்னால் துய்துயாம் துடைத்தும் என்பார்
அகையழல் அழுவந்தன்னை நெய்யினால் அவிக்கலாமே – குண். 5 என்ற செய்யும் கீழ்க்காணும் வள்ளுவத்தின் நீட்சியாகும்.
நெய்யால் எரிநுதுப்பேம் என்றற்றால் கௌவையால்
காமம் நுதுப்போம் எனல் - 1148 அலர் அறிவுறுத்தல் என்னும் அதிகாரத்தில் திருவள்ளுவர் குறிப்பிடுகிறார். அதாவது நெய்யை ஊற்றி நெருப்பை அணைக்க முடியுமா? அதுபோல பழிச் சொல்லால் காதல் தீயை அணைக்க முயல்வதும் அப்படித்தான் என்கிறார். இது மேற்கூறிய குண்டலகேசி செய்யுளிற்கு ஏற்கனவே முன்னுரை எழுதியது போல் அல்லவா இருக்கிறது!
திருவள்ளுவர் நிலையாமை அதிகாரத்தில்
நில்லாத வற்றை நிலையின என்றுணரும்
புல்லறி வாண்மை கடை – 331 என்று குறிப்பிடுகிறார்.
நிலையில்லாதவற்றை நிலையானது என்று உணரும் அறியாமை புல்லின் அறிவிற்கு ஒப்ப கீழ்நிலையானதாகும் என்கிறார். மேற்கூறிய கருத்தில் ஒத்தமைந்த குண்டலகேசி பாடல் பின்வருமாறு:
போதர உயிர்த் ஆவி புகவுயிர்க் கின்றதேனும்
ஊதியம் என்று கொள்வர் உணர்வினான் மிக்கநீரர்
ஆதலால் அழிதன் மாலைப் பொருள்களுக்கு அழிதல் வேண்டா
காதலால் அழுதும் என்பார் கண்நனி களைய லுற்றார் - குண்.7
அதாவது தோன்றிய அனைத்தும் அழியக் கூடியன. அழியும் பொருட்களுக்காக நாம் வருந்த வேண்டாம். அப்படி வருந்துபவர்கள் ‘ நாங்கள் அப்பொருள் மீது வைத்த காதலால் அழுகிறோம்” என்று கூறுவார் என்றால் அவர்கள் அழுது அழுது கண்களை வீணாக வருத்துபவரே ஆவார் என்று குறிப்பிடப்படுகிறது. மேற்கூறிய குறளுக்கு எவ்வளவு பொருத்தமாக உள்ளது என்று கண்டீரா?
ஊழ் என்னும் அதிகாரத்தில் திருவள்ளுவர் குறிப்பிடுகிறார் பரியினும் ஆகாவாம் பாலல்ல உய்த்துச் சொரியினும் போகா தம-376
முயன்று முயன்று தேடினாலும் நமக்குப் பொருந்தாதன உண்டு. வாரி வாரி ஈந்தாலும் நம்மைவிட்டுப் போகாதனவும் உண்டு என்கிறார்.
இதனையே ‘நல்வழி”யில் அவ்வையார்
வருந்தி அழைத்தாலும் வாராத வாரா
பொருந்துவன போமின் என்றால் போக - இருந்து ஏங்கி
நெஞ்சம் புண்ணாக நெடுந்தூரம் தாம் நினைத்து
துஞ்சுவதே மாந்தர் தொழில் என்கிறார். அதாவது வருத்தப்பட்டு முயன்று அழைத்தாலும் நமக்கு சேரவேண்டியவை அல்லாதன வந்து சேர்வதில்லை. நம்மிடம் பொருத்த வேண்டியவை நம்மை விட்டுப் போக வேண்டும் என்றால் போவதும் இல்லை. அப்படி இருக்கும் போது ஒன்றை அடைய வேண்டும் என்பதற்காக நெஞ்செமெல்லாம் புண்ணாகும்படி நெடுந்தூரம் திட்டமிட்டு கொண்டிருந்து சாவதே இந்த மாந்தரின் தொழிலாக இருக்கிறது என்று கூறுகிறார்.
இதனையே குண்டலகேசியில்,
ஆதலும் அழித்தலும்
மறிப மறியும் மலிர்ப மலிரும்
பெறுப பெறும் பெற்று இழப்ப இழக்கும்
அறிவது அறிவார் அழுங்கார் உவவார்
உறுவது உறும் என்று உரைப்பது நன்று – குண். 18
அதாவது அழியும் பொருளெல்லாம் அழிந்தே தீரும், ஆவன ஆகும், வருவன வந்தே தீரும், போவன போகும், இவற்றையெல்லாம் மாற்றியமைக்க முடியாது. ஆதலால், உண்மையுணர்ந்தோர் உவத்தலும் வெறுத்தலும் அழுதலும் களித்தலும் செய்ய மாட்டார்கள். இவையணைத்தும் ஊழால் உருவானவை நன்றும் தீதும் பிறர் தரவ hரா என்று உணர்ந்து செயல்படுவர் என்று குறிப்பிடுகிறது. திருவள்ளுவரின் வார்த்தைகள் எங்ஙனம் பிறதிபலிக்கிறது என்பதை அறிய முடிகிறதா? மேற்கூறியவற்றை இன்னும் எளிமையாகக் கூற வேண்டும் எனில் முத்து என்னும் தமிழ் திரைப்படத்தில் நடிகர் ரஜினிகாந்த் பேசுவது போல் அமைந்த வசனத்தைச் சொல்லலாம். ‘ கிடைக்கிறது கிடைக்காம இருக்காது. கிடைக்காம இருக்கிறது கிடைக்காது”. மேற்கூறியவற்றில் இருந்து எளிமையாகச் சொல்ல வேண்டும் என்றால் திருவள்ளுவர் சிந்தனை எக்காலத்திலும் சிறந்து விளங்கும் என்பது தெளிவாகிறது அன்றோ?
No comments:
Post a Comment