Monday, 15 April 2024

திருக்குறள் வழி நின்று திருவள்ளுவரை அறிதல்- 14

திருக்குறள் வழி நின்று திருவள்ளுவரை அறிதல்- 14
நீர் மேலாண்மையில் வள்ளுவர்:
கடந்த வாரம் திருக்குறளில் நீர்ச்சுழற்சியின் இன்றியமையாதனக் குறித்துப் பார்த்தோம். 
ஒரு திருக்குறள் ஒரு அதிகாரியை கிணறு தோண்டி மக்களின் தாகத்தைத் தீர்க்க உதவியது என்றால் உங்களால் நம்ப முடிகிறதா?. எல்லீசன் என்று தமிழின் மரபுப்படி தனது பெயரை மாற்றிக்கொண்ட Francis Whyte Ellis என்ற பிரித்தானிய அரசின் கீழ் பணியாற்றிய ஒரு அதிகாரி ஆவார். 
திருக்குறள் மீது மிகுந்த பற்றுக் கொண்ட இவர், சென்னையில் 1818 இல் கடும் வறட்சி ஏற்பட்டது. அப்போது சென்னைக் கலெக்டராக இருந்த எல்லீசன் 27 கிணறுகளை வெட்டினார். அவற்றில் ஒன்று இராயப்பேட்டை பெரிய பாளையத்தம்மன் கோயிலில் இன்றும் உள்ளது. இவற்றின் கைப்பிடிச் சுவரில் பதிக்கப்பட்டிருந்த ஒரு கல்லில் எல்லீசனின் நீண்ட கவிதை ஒன்று இருந்தது. 
அதில்
...சாயங்கொண்ட தொண்டிய சாணுறு நாடெனும்
ஆழியில் இழைத்த வழகுறு மாமணி
புனகடல் முதலாக புடகலளவு
நெடுநிலந்தாழ நிமிர்ந்திரு சென்னப் 
பட்டணத் தெல்லீசன்னென்பவன் யானே  
பண்டார காரிய பாரஞ்சுமக்கையிற்
தெய்வப் புலமை திருவள்ளுவனார் 
திருக்குறடன்னிற் றிருவுளம் பற்றிய 
‘இரு புனலும் வாய்ந்த மலையும் வருபுனலும்
வல்லரணு நாட்டிற் குறுப்பு 
என்பதின் பொருளை யென்னுளாய்ந்து..
என்று எழுதியுள்ளார் எனில் மேற்கூறிய திருக்குறள் அவரை எந்தளவு மேலாண்மையில் அதுவும் நீர் மேலாண்மையில் ஆளுகை செய்ய

வைத்துள்ளது என்பதை அறிய முடிகிறது. 
எல்லீசன் அவர்கள் குறிப்பிட்டுள்ள திருக்குறளின் பொருள் பின்வருமாறு:
ஆறு மற்றும் கடல் என்னும் இரு புனலும், வளர்ந்தோங்கி நீண்டு அமைந்த மலைத் தொடரும், வரு புனலாம் மழையும் வலிமை மிகு அரணும் ஒரு நாட்டின் சிறந்த உறுப்புகளாகும் என்று குறிப்பிடுகிறார். ஆக, நமது ஆட்சியமை வலிமையாக இருக்கவேண்டும் எனில் அவசியம் நீர் இருத்தல் அவசியம் என்பதையுணர்ந்த எல்லீசன் அவர்கள் மேற்கண்ட கவிதையினை வடித்து கல்வெட்டில் பதித்துள்ளார். 
என்னே ஒரு தமிழ் பற்று! திருக்குறள் பற்று! மற்றும் பொருள் உணர்ந்து அதனைக் கடைபிடிக்கும் தன்மை!
திருவள்ளுவர் நீரின் முக்கியத்துவம் குறித்துப் பேசுகையில் மழைநீருக்குத்தான் அதிக முக்கியத்துவம் அளித்துப் பேசுகிறார். ஆகவே, வான்சிறப்பு என்ற அதிகாரத்தினையே இயற்றியுள்ளார். 
இதில் மிகவும் பிரசித்தி பெற்றக் குறளான,
துப்பார்க்கு துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத் 
துப்பாய தூஉம் மழை – 12

இதில் துத்தற்சொல் நான்குமுறை வந்தது சொற்பொருட் பின்வருநிலையணியாகும். துப்பாய துப்பாக்கி என்பது சொற்பின் வருநிலையணி. துப்பாய தூஉம் என்பது இசைநிறை அளபெடை என்னும்  அமைப்பில் இயற்றப்பட்ட இப்பாடல் மழைநீரின் தன்மையினைக் குறிப்பிடுகிறது. அதுமட்டுமல்லாது மனிதர்களுக்கு இருக்க வேண்டிய இரக்கக் குணத்தினையும் இது குறிப்பிடுகிறது. மழை நீரானது உண்பருக்குத் தகுந்த பொருட்களை விளை வித்துத் தந்து அவற்றைப் பருகுவோர்க்குத் தானும் ஒர் உணவாக (பருகும் நீராக) விளங்குவது மழையே ஆகும் என்று திருக்குறளில் குறிப்பிடுகிறார். இந்தத் தன்மையினை மனிதர்களுக்


கு வேண்டிய கொடைத் தன்மைக்கும் சான்றாகக் குறிப்பிடலாம்.
தற்போது தேர்தல் நேரமாக இருக்கிறது. இதில் பல சந்தர்ப்பவாதிகள் தங்களுடைய அறிவினை தான் எங்கு சேர்ந்துள்ளாரோ அதற்கேற்ப மாற்றிக் கொள்வதுண்டு. பல்வேறு மனிதர்களும் அவ்வாறே தன்னுடைய அறிவினை தான் சேர்ந்துள்ள இனத்திற்கேற்ப மாற்றிக் கொள்கின்றனர். இதனையே அரசியல் என்னும் அதிகாரத்தில் வள்ளுவர் இவ்விதம் குறிப்பிடுகிறார். 
நிலத்தியல்பால் நீர்திரிந் தற்றாகும் மாந்தர்க்கு 
இனத்தியல்ப தாகும் அறிவு- 452. 
அதாவது நிலத்தில் சேர்ந்தவுடன் நீர் தான் சேர்ந்த நிலத்தின் தன்மையால் நீர் இயல்பை இழந்து, அந்த நிலத்தின் இயல்பாக மாறிவிடும். அதுபோல மக்களின் அறிவும், தாங்கள் சேர்ந்த இனத்தின் இயல்பாகவே மாறிவிடும் என்பதாகும். 
தொடர்ந்து பார்ப்போம். 



No comments:

Post a Comment