Monday, 26 February 2024

திருக்குறள் வழிநின்று திருவள்ளுவரை அறிதல்-7

திருக்குறள் வழிநின்று திருவள்ளுவரை அறிதல்-7

திருக்குறளும் சங்க இலக்கியங்களும்
குறுந்தொகை, நற்றிணை, புறநானூறு முதலான சங்க இலக்கியங்களில் திருக்குறள் தொடரும், கருத்துக்களும் கையாளப்பட்டுள்ளன. 
1. குறுந்தொகை:
பழைமை என்னும் அதிகாரத்தில்,
பேதைமை ஒன்றோ பெருங்கிழமை என்றுணர்க
நோதக்க நட்டார் செயின் - 805 
என்று திருவள்ளுவர் குறிப்பிடுகிறார். 

இதே கருத்தினை குறுந்தொகையில் 
பேதை மையால் பெருந்தகை கெழுமி
நோற்கச் செய்ததுஒன்று உடையேன் கொல் - 230 என்று அறிவுடை நம்பி அவர்கள் எழுதுகிறார்.

2. நற்றிணை:
வான்சிறப்பு என்னும் அதிகாரத்தில்
நீரின்றி அமையாது உலகெனின் யார்யார்க்கும்
வானின்று அமையாது ஒழுக்கு – 20
என்று திருவள்ளுவர் குறிப்பிடுகிறார். 

அதேபோல் நற்றிணை முதல் பாடலில் கபிலர் அவர்கள்
நீரின்றி அமையா உலகம் போலத் 
தம்மின்றி அமையா நம்நயந்து அருளி 
என்று திருக்குறளைக் கையாண்டுள்ளார்.

3. புறநானூறு:
செய்நன்றி மறவாமை என்னும் அதிகாரத்தில்
எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை
செய்ந்நன்றி கொன்ற மகற்கு -110 
என்று திருவள்ளுவர் குறிப்பிடுகிறார். 

ஆலத்தூர் கிழார் என்னும் புலவர் திருக்குறளினை அறம் என்று அழைக்கிறார். ஆவர் தனது பாடலில் 
நிலம்புடை பெயர்வது ஆயினும் ஒருவன் 
செய்தி கொன்றோர்க்கு உய்தி இல்லென
அறம் பாடின்றே ஆயிழை கணவ
என்று திருக்குறளின் செல்வாக்கு ஊடுருவி இருப்பதினைக் காணலாம். 

4. சிலப்பதிகாரத்தில் திருக்குறள்:
ஓர்ந்துகண் ணோடாது இறைபுரிந்து யார்மாட்டும் 
தேர்ந்துசெய் வஃதே முறை -541 என்று செங்கோன்மை என்னும் அதிகாரத்தில் திருவள்ளுவர் குறிப்பிடுகிறார். அதாவது செங்கோன்மை என்பது நல்ல முறையில் ஆட்சி செய்தல். ஒரு வழக்கை நன்கு ஆராய்ந்து ஒரு பக்கமே அன்பு செலுத்தி சார்ந்து விடாமல் நடுவுநிலையுடன் இருந்து சாட்சிகளைத் தீர விசாரித்த பிறகு தீர்ப்பு வழங்குவது ஆகும். 
மேற்கண்ட திருவள்ளுவரின் கருத்துக்கள் சிலப்பதிகாரத்தில்
‘சினைஅலர் வேம்பன் தேரான் ஆகி,
ஊர்காப் பாளரைக் கூவி ஈங்குஎன்
தாழ்பூங் கோதை தன்கால் சிலம்பு
கன்றிய கள்வன் கையது ஆகில்
கொன்றுஅச் சிலம்பு கொணர்க ஈங்கு” - என சிலப்பதிகாரம் 16:149&153 இல் வேறு சொற்களில் கூறப்பட்டுள்ளது. வேம்பு சூடிய பாண்டிய மன்னன் சிறிதும் ஆராய்ந்து பாராதவனாகி காவலரைக் கூவி அழைத்து ‘அக்கள்வனைக் கொன்று அச்சிலம்பை இங்குக் கொணர்க” என்றான். இங்கு மன்னன் தீர விசாரிக்காமல் கூறிய வார்த்தைகளால் நீதி தவறிவிட்டான் என்று புலனாகிறது. 

‘எண்பதத்தான் ஓரா முறைசெய்யா மன்னவன்
தண்பதத்தான் தானே கெடும்”-  548 என்று செங்கோன்மை அதிகாரத்தில் திருவள்ளுவர் குறிப்பிடுகிறார். அதாவது அரச தர்மம் என்று கருதப்பட்ட தன்மையுடன் ஆராய்ந்து நீதிநெறி செலுத்தாத மன்னன் தாழ்ந்த நிலையின் நின்று தானே கெடுவான் என்கிறார். இதே கருத்தினை வழக்குரை காதைப் பகுதியில் பாண்டியனின் சால்பை விளக்குகின்ற நோக்கில் கூறப்பட்ட வெண்பா வானது,
‘அல்லவை செய்தார்க்கு அறம்கூற்றம்ஆம் என்னும்
பல்லவையோர் சொல்லும் பழுதன்றே”-1 என எடுத்துரைக்கின்றது. அதாவது அறம் அல்லாதவைகளைச் செய்தவர்களுக்கு அறமே கூற்றாக அமையும்.அறமே எமனாக இருந்து தண்டிக்கும் என்று ஆன்றோர்கள் கூறும் சொற்கள் பொய்யல்ல.

கொடுங்கோன்மை என்னும் அதிகாரத்தில் திருவள்ளுவர் குறிப்பிடும்; 
‘அல்லற்பட்டு ஆற்றாது அழுதகண்ணீர்அன்றே
செல்வத்தைத் தேய்க்கும் படை” -555 என்ற குறளானது மன்னனின் ஆட்சிக் கொடுமையைத் தாங்க முடியாது குடிமக்கள் அழுது வடிக்கும் கண்ணீரே அந்த ஆட்சியை அழிக்கும் கருவியாகும் என்று குறிப்பிடுகிறது. 
இதனையே சிலப்பதிகாரத்தில் 
‘அல்லல்உற்று ஆற்றாது அழுவாளைக் கண்டுஏங்கி
மல்லல் மதுரையார் எல்லாரும் தாம்மயங்கிக்
களையாத துன்பம்இக் காரிகைக்குக் காட்டி
வளையாத செங்கோல் வளைந்தது இதுஎன்கொல்?”- சிலப்பதிகாரம் :19: 15ர&18 இல் இளங்கோவடிகள் குறிப்பிடுகிறார். அதாவது துன்புற்று ஆற்றாது அழுது புலம்பும் கண்ணகியைக் கண்டு ஏங்கி மதுரை நகர் மக்கள் செய்வதறியாது திகைத்தனர். நீக்க முடியாத துன்பத்தினை இக்காரிகைக்குச் செய்து எக்காலத்தும் வளையாத மன்னவனின் செங்கோல் வளைந்ததே என எண்ணித் துன்புற்றனர். 

வெருவந்த செய்யாமை என்னும் அதிகாரத்தில் 
‘இறையடியன் என்றுஉரைக்கும் இன்னாலச்சொல் வேந்தன்
உறைகடுகி ஓல்லைக் கெடும்”- 564 என்று திருவள்ளுவர் குறிப்பிடுகிறார். அதாவது மக்கள் கூறும் தீச்சொல்லுக்கு ஆளாகும் வேந்தனுடைய வாழ்நாளும் குறையும் செல்வமும் விரைந்து கெடும். 
இதே கருத்து வழக்குரைக் காதையில், கண்ணகி பாண்டிய மன்னனைப் பார்த்து, ‘தேரா மன்னனே!” என்று அழைத்தது ‘ஆராய்ச்சி இல்லாத மன்னனே” என்று பொருள்படும். இக்கடின வார்த்தை பாண்டிய மன்னனை கதற வைத்தது.
‘யானோ அரசன்? யானே கள்வன்!
மன்பதை காக்கும் தென்புலம் காவல்
என்முதல் பிழைத்தது; கெடுகஎன் ஆயள்!” - சிலப்பதிகாரம் 20:75ரூ77 இல் தனக்குத் தானே தண்டனை விதித்துக் கொண்டு உயிர் துறக்கச் செய்தது. 

 
வாழ்க்கைத் துணைநலம் என்னும் அதிகாரத்தில்
தெய்வம் தொழஅள் கொழுநன் தொழுதுஎழுவாள்
பெய்எனப் பெய்யும் மழை- 55 என்று திருவள்ளுவர் குறிப்பிடுகிறார். 
அதாவது வேறு தெய்வங்களைத் தொழாதவளாய்த் தன் கணவனையே தெய்வமாகக் கருதி தொழுது உறக்கத்திலிருந்து கண்விழிப்பவள் பெய் என்றால் மழை பெய்யும் என்கிறார். 
இக்கருத்தினை உணர்த்தும் வகையில் மதுரைக் காண்டத்தில் இறுதியில் வரும் வெண்பா வருமாறு:
‘தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுவாளைத் 
தெய்வம் தொழும்தகைமை திண்ணிதால் 


தெய்வமாய்
மண்ணக மாதர்க்கு அணியாய் கண்ணகி
விண்ணகமா தர்க்கு விருந்து” என்று மண்ணக மகளிர்க்கெல்லாம் அணி போன்றவளான கண்ணகி தெய்மாகி விண்ணக மகளிர்க்கு விருந்தாயினள். வேறு தெய்வத்தைத் தொழாது தன் கணவனைத் தொழுவாளைத் தெய்வமும் தொழும் என்று இளங்கோவடிகள் குறிப்பிடுகிறார். 

தொல்காப்பியத்தினைப் பின்பற்றி திருக்குறள்:

எவ்வாறு திருக்குறளினை பின்பற்றி சில இலக்கியங்களில் குறிப்பு உள்ளனவோ அதே போல் திருவள்ளுவர் தொல்காப்பியத்தினை பின்பற்றி திருக்குறளினை அமைத்துள்ளார்.
தொல்காப்பியர் அறம், பொருள், இன்பம் என்னும் மூன்று நிலைகளில் கருத்துக்களைக் கூற வேண்டும் என்று கூறியுள்ளார். இதனை,
அந்நிலை மருங்கின் அறம் முதலாகிய
மும்முதல் பொருட்டும் உரிய என்ப என்று தொல்.1363 நவில்கின்றது. 

‘மந்திரம்” என்பதனைப் பற்றிக் குறிப்பிடும்போது
நுpறைமொழி மாந்தர் ஆணையில் கிளந்த
முறைமொழி தானே மந்திரம் என்ப -1434 என்று தொல்காப்பியர் குறிப்பிடுகிறார்.
திருவள்ளுவரும் தொல்காப்பியரை பின்பற்றி
நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து
மறைமொழி காட்டி விடும் -28 என்று தடம் பதிக்கிறார்.



 

No comments:

Post a Comment