திருக்குறள் வழிநின்று திருவள்ளுவரை அறிதல்-6
உரையாசிரியர்கள்:
- திருக்குறளுக்கு உரை செய்தவர்களுள் பதின்மர் குறிப்பிடத்தக்கவர். அவருள் தரும சேனர் என்பவர் முற்பட்டவர் ஆவார். மணக்குடவர் முற்பட்டவர் என்று சொல்பவரும் உண்டு. இவர் உரையில் சமண சமயக் கொள்கைகளே பேசப்பட்டுள்ளன. என்று அபிதான கோசம் என்னும் நூல் கூறுகின்றது.
திருக்குறள் பகுப்பு முறை:
அறத்துப்பால்:
இயல் பகுப்பு – பாயிரம் - 4 அதிகாரம், இல்லற இயல் - 20 அதிகாரம், துறவற இயல் -13 அதிகாரம், ஊழ் இயல் - 1 அதிகாரம் மொத்தம் 38 அதிகாரம்
பாயிரம் நான்கு இல்லறம் இருபான், பன்மூன்றே
தூயத்துறவறம், ஒன்று ஊழாக – ஆய
அறத்துப்பால் நால்வகையா ஆய்ந்துரைத்தார் நூலின்
திறத்துப்பால் வள்ளுவனார் தேர்ந்து
- எறிச்சலூர் மலாடனார் - திருவள்ளுவ மாலை -25
பொருட்பால்:
இயல் பகுப்பு – அரசு இயல் - 25 அதிகாரம், அமைச்சு இயல் - 10 அதிகாரம், அரண் இயல் - 2 அதிகாரம், கூழ் இயல் - 1 அதிகாரம், படை இயல் - 2 அதிகாரம், நட்பு இயல் - 17 அதிகாரம், குடி இயல் -13 அதிகாரம் மொத்தம் 70 அதிகாரங்கள்
ஆரசியல் ஐயைந்து, அமைச்சியல் ஈரைந்து
உருவல் அரண்இரண்டு, ஒன்றுஒண்கூழ் - இருஇயல்
திண்படை, நட்புப் பதினேழ், குடிபதின்மூன்று
எண்பொருள் ஏழாம் இவை.
- போக்கியர்-திருவள்ளுவ மாலை -26
காமத்துப்பால்:
இயல் பகுப்பு - ஆண்பால் இயல் - 7 அதிகாரம், பெண்பால் இயல் -12 அதிகாரம், இருபால் இயல் - 6 அதிகாரம் - மொத்தம் 25 அதிகாரம்
ஆண்பால் ஏழ்: ஆறிரண்டு பெண்பால்: அடுத்துஅன்பு
பூண்பால் இருபால் ஓர்ஆறாக – மாண்பாய
காமத்துப் பக்கம்ஒரு மூன்றாகக் கட்டுரைத்தார்
நாமத்தின் வள்ளுவனார் நன்கு
- மோசிகீரனார் -திருவள்ளுவமாலை -27
தருமர், மணக்குடவர், தாமத்தர், நச்சர்,
பரிதி, பரிமே லழகர் - திருமலையர்,
மல்லர், பரிப்பெருமாள், கலிங்கர் வள்ளுவர்நூற்கு
எல்லையுரை செய்தார் இவர்
- தனிப்பாடல்
திருக்குறள் உரையாளர் பதின்மருள் காலத்தால் பிற்பட்டவர் பரிமேலழகர்.
மேற்கூறியவர்கள் திருக்குறளுக்கு நேரே உரை எழுதியவர்கள் போக இளங்கோ அடிகள், சீத்தலைச் சாத்தனார், சேக்கிழார், கம்பர் முதலானோர் தம் நூல்களில் ஆங்காங்கே திருக்குறளை எடுத்தாண்டு விளக்கமும் கூறியுள்ளனர்.
திருக்குறளுக்கு உரை எழுதாமல் வேறு நூல்களுக்கு உரை எழுதியோருள் பலர் தம் உரைகளில் தேவையான பல இடங்களில் திருக்குறளுக்கு உரை எழுதியுள்ளனர்.
மயிலைநாதர், சங்கர நமசிவாயர் ஆகியோரும் தம் உரைகளின் நடுவே திருக்குறளுக்கு விளக்கம் தந்துள்ளனர்.
சிலப்பதிகாரத்தின் அரும்பத உரையாசிரியரும், அடியாருக்கு நல்லாரும் தத்தமது உரைகளில் ஆங்காங்கே திருக்குறளுக்கு உரை கண்டுள்ளனர்.
மணக்குடவர், பரிதியார், பரிப்பெருமாள், காளிங்கர், பரிமேலழகர் ஆகிய ஐவர் உரைகளையும் சேர்த்து தருமை ஆதீனம் ‘ திருக்குறள் உரைவளம்” என்னும் நூலை வெளியிட்டுள்ளது.
திருக்குறள் வரை வளத்தோடு ஆங்கில மொழி பெயர்ப்புகளையும் தொகுத்து, திருப்பனந்தாள் காசிமடம் ‘திருக்குறள் உரைக்கொத்து” என்னும் தொகுப்பை வெளியிட்டுள்ளது.
மு. வரதராசனார், நாமக்கல் கவிஞர், புலவர் குழந்தை, கலைஞர் கருணாநிதி, சாலமன் பாப்பையா போன்ற பல அறிஞர்களும் திருக்குறளுக்கு உரை கண்டுள்ளனர்.
No comments:
Post a Comment