வெகுநாள் கழித்து மீண்டும் முகநூல் பக்கம் திரும்பியிருக்கிறேன். ஒருவர் எத்தகைய செயல்கள் செய்து கொண்டிருந்தாலும், அவருக்குப் பிடித்த செயல் செய்வதனைப் போன்று இன்பம் என்று ஒன்றும் இல்லை. இதனையே ஜார்ஜ் பெர்னாட் ஷா அவர்கள் குறிப்பிடுகையில்இ ‘ஒருவனுக்குப் பிடித்தமான பொழுதுபோக்கே அவனுடைய வேலையாக அமைந்து விட்டால் அவனைவிட அதிர்ஷ்டசாலி எவருமில்லை” என்பதுதான். நம் அனைவருக்கும் அத்தகைய கொடுப்பனைகள் அமைந்து விடுவதில்லை. ஆனால், தனக்குப் பிடித்தமானவற்றை ஒரு சிலரே வற்புறுத்தியாவது செய்து மகிழ்வுறுகிறார்கள். எனக்கும் அவ்வாறு என்னதான் பலவிதமான பணிகள் நிமித்தம் சுழன்று கொண்டு அதில் மக்கள் பெறும் நன்மை கண்டு மகிழ்வுற்றாலும் எழுதும் போது கிடைக்கும் இன்பமே தனி, அதனை பதிவிட்ட பிறகு கிடைக்கும் நிம்மதி அளவிட முடியாதது.
ஒரு மனிதன் புகழ் அடைந்த பிறகு அவனை கொண்டாடுவது, அவனுக்கும் தனக்கும் பழக்கம் உண்டு என்று மார் தட்டிக் கொள்வது, புகழடைந்த மனிதருக்குத் தெரிகிறதோ இல்லையோ அவரை எப்போதாவது நேரில் சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்தால் அவருடன் புகைப்படம் எடுத்துக் கொள்வது (அல்லது செல்ஃபி எடுத்துக் கொள்வது) அதன் மூலம் அவரால் தன்னுடைய புகழைக் கூட்டிக் கொள்வது என்று நடைபெறுவது வழக்கம். இதில் ஒரு சிலரால் அவர் நாடறியப்படும் ஒரு சிலரால் அவர் மொழி அறியப்படும் ஒரு சிலரால் அவர் ஊர் அறியப்படும் இப்படி ஒரு சிலரே அந்த புகழின் உச்சிக்குச் செல்வர். ஆனாலும், அவர்களால் ஒரு சில வருடங்கள் மட்டுமே நினைவில் நிற்கக் கூடியவராக இருப்பர் அடுத்த நபர் வரும் போது அவர் பெயர் மறந்து போகலாம் அல்லது நினைவூட்டல் தேவைப்படாமல் இருக்கலாம். ஆனால், ஒரு நபர் 2000 வருடங்களுக்குப் பிறகும் அதே புகழோடு நின்று கொண்டிருக்க முடியும் என்றால் மதத்தைத் தள்ளி வைத்து நோக்கின் திருவள்ளுவர் தவிர வேறு யாரைக் குறிப்பிட முடியும்?
ஒரு புத்தகம் 2000 வருடங்களைத் தாண்டி எப்படி கொண்டாடப் படுகிறது? சைவர், ஆசிவகத்தினர், ஜைன மதத்தினர், பௌத்த மதத்தினர், கிறித்தவம் மற்றும் இந்து என்று எப்படி நோக்கினும் ஒவ்வொருவரும் தங்கள் மதத்தைச் சார்ந்த நூலாக திருவள்ளுவர் இயற்றிய திருக்குறளைப் பார்க்கின்றனர். பகுத்தறிவுவாதிகளும் நாத்திகர்களும் இந்நூலை தங்கள் நூலாகவேப் பார்க்கின்றனர். இரவின் வேளையில் நிலவொளியில் நீங்கள் எந்த திசையில் நடந்து சென்றாலும் அந்த நிலவு உங்களைப் பின்தொடர்வதை போல உங்களுக்கு உணர்வு ஏற்படும். அப்படித் தான் திருக்குறளை நீங்கள் எப்படி நோக்கினாலும் அது உங்கள் சார்ந்து பொருள்படுவதை உணரலாம்.
சிறுவயதில் இருந்து எத்தனையோ நடிகர்களின் ரசிகராக இருந்திருக்கிறேன். காலங்கள் மாற மாற அவர்கள் மீதான ரசனை மாறிக் கொண்டேயிருக்கிறது. ஆனால், சிறு வயதில் இருந்து திருக்குறளைப் படிக்கிறேன். அப்போது புரிந்தும் புரியாமலும் படித்தேன். ஆனால், இப்போதும் எனக்குத் திருவள்ளுவர் தேவைப்பட்டுக்கொண்டே இருக்கிறார். நாளாக நாளாக எனக்கு வயதாகிறது. ஆனால், திருவள்ளுவர் தன் குறள் மூலம் இன்றும் இளமையாகத் தான் இருக்கிறார். ஒவ்வொரு முறை திருக்குறளில் இருந்து குறிப்புகள் எடுக்கும் போதும் அதனில் ஏற்படும் உற்சாகம் குறைவுபடுவதில்லை. அவர் கூற்றுப்படியே தொட்டணைத்தூறும் மணற்கேணி போல அறிவு மட்டுமல்ல மகிழ்ச்சியும் ஊறிக்கொண்டே தான் இருக்கிறது அவர் நூலைப் படிக்கும் போது.
சமீப காலங்களில் வாழ்ந்து மறைந்த சில வரலாறு படைத்தவர்களின் வாழ்க்கைத் தொகுப்பை பதிவிட்டிருக்கிறேன். ஆனால், 2000 வருட காலமாக தன் படைப்பின் மூலம் வாழ்ந்து கொண்டிருக்கும் வள்ளுவரை அவரின் நூல் வழி நின்று அவரைக் காணுவது சிறப்புடையதாக இருக்கும் என்று எண்ணுகிறேன்.
ஆதலால், இன்று அவருடைய நாளாக தமிழக அரசால் அங்கீகரிக்கப்பட்ட இந்நாளில் இருந்து துவங்குவதுதான் சரியாக இருக்கும் என்று கருதுகிறேன். இனி ஒவ்வொரு செவ்வாய் கிழமையிலும் திருவள்ளுவரை திருக்குறள் வழி நின்று நோக்கலாம் என்று சிறிய முயற்சி செய்கிறேன் வள்ளுவருக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக!
இன்று அவரைப் பற்றி மற்றவர்கள் சொன்ன ஒரு சில வார்த்தைகள் மட்டும் தங்களுக்காக...
தமிழ்நாட்டின் பெருமையாக மகாகவி பாரதியார் சொன்னது என்ன?
"வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து
வான்புகழ் கொண்ட தமிழ்நாடு"
பாவேந்தர் பாரதிதாசன் இன்னும் பல படி மேலே சென்று
"வள்ளுவனைப் பெற்றதால்
பெற்றதே புகழ் வையகமே"
என்று வள்ளுவரால் உலகினுக்கே பெருமை என்று பறை சாற்றுகிறார்.
திருவள்ளுவர் இயற்றிய திருக்குறள் குறித்து அறிமுகப்படுத்தும் போது
‘இறைவன் மனிதனுக்குச் சொன்னது கீதை, மனிதன் இறைவனுக்குச் சொன்னது திருவாசகம், மனிதன் மனிதனுக்குச் சொன்னது திருக்குறள்” என்று ஜெயபாரதி அவர்கள் குறிப்பிடுகிறார்.
அதாவது மதத்தின் புனிதத்தோடு இவர் இயற்றிய நூல் ஒப்பிடப்படுகிறது. ஆகவே, இதனை உலகப் பொதுமறை என்றும் அழைக்கப்படுகிறது.
‘இந்த மனிதர் 1800 ஆண்டுகள் ஆனாலும் கூட தான் சந்திக்கிற ஒவ்வொரு மனிதருடன் கைக் குலுக்கக் கூடிய ஆற்றலுடன் இருக்கிறார்” என்கிறார் எழுத்தாளர் சுஜாதா
‘திருவள்ளுவர் அறத்துப்பால் மூலம் தன்னை ஒரு புலவராக நிரூபிக்கிறார், பொருட்பாலின் மூலம் தன்னை ஒரு அரசனாக நிரூபிக்கிறார்மற்றும் காமத்துப் பால் மூலம் தன்னை ஒரு கவிஞராக நிரூபிக்கிறார்
” என்கிறார் தமிழறிஞர் சுகிசிவம்
” என்கிறார் தமிழறிஞர் சுகிசிவம்
தமிழ்நாட்டில் உள்ள இளைஞர்களிடம் எனது வேண்டுகோள், உலகில் எந்த மொழியிலும் திருவள்ளுவரைப் போல் ஒரு அறிஞரைத் தேடிப் பெறவே முடியாது, இவரை மட்டுமே நம்பி நீங்கள் இறுதிநாள் வரை வாழ முடியும். கேள்வி கேட்கலாம். அவ்வளவு கேள்விகளுக்கும் பதில் சொல்வார்”என்கிறார் தமிழறிஞர் நெல்லைக் கண்ணன்
மேலே கூறியவை சிறிய அறிமுகம் மட்டுமே இனி வரும் வாரங்களில் வள்ளுவர் தோற்றம் குறித்தக் கருத்துக்கள், அவரின் சிந்தனையால் விளைந்த திருக்குறள் வெளிவந்த வரலாறு, திருக்குறளில் கூறப்பட்டுள்ள கருத்துக்கள் மூலம் திருவள்ளுவர் எத்தகையை ஆளுமையுடையவர் என்பதை காணலாம்.
அனைவருக்கும் திருவள்ளுவர் தின நல்வாழ்த்துக்கள்
No comments:
Post a Comment