Wednesday, 3 February 2021

பாரம்பரிய வகைகளைப் போற்றுவோம், பயன்படுத்துவோம்

02.02.2021 அன்று அலுவல் ரீதியாக சமுதாயப் பண்ணைப் பள்ளி உருவாக்குவதற்காக ஏற்கனவே அலுவலர்களால் தொகுக்கப்பட்ட முன்மாதிரி கள ஆளுமைகளை சந்திக்கலாம் என திட்டமிட்டு அங்கக மேலாண்மையில் (Organic Farming) பயிர் தொழில் செய்து வருபவர்கள் பற்றி என எனது அலுவலரிடம் விசாரித்தேன். அதன் அடிப்படையில் கள ஆய்வு மேற்கொண்டேன். இதில் இன்னொரு நோக்கமும் இருந்தது. அங்கக முறையில் விவசாயம் செய்வது இப்போது தான் குறிப்பாகக் கொரோனா தாக்கத்திற்குப் பிறகுதான் அதிகப்படியாக இயற்கை சார்ந்த உணவுகளை, சத்தான உணவுகளை உட்கொள்வது குறித்து விழிப்புணர்வு இருந்தாலும் பழக்கம் ஏற்பட ஆரம்பித்துள்ளது. ஆகவே, இந்த அங்கக மேலாண்மை முறையில் பயிர் உற்பத்தியை அதிகப்படுத்த வேண்டும். அப்படி அதிகப்படுத்த வேண்டும் எனில் அவர்கள் மேற்கொள்ளும் ஒரு சவால் சந்தைப் படுத்தல். சந்தைப் படுத்தலில் பெரு வியாபாரிகள் எளிதில் செய்ய இயலும். ஆனால் குறு விவசாயிகள் சந்தைப்படுத்தலில் அவ்வளவாக ஈடுபடுவதில்லை. அவர்கள் பொருட்களுக்கு தேவைகள் அதிகம் ஏற்படும் போது, அவர்கள் அதிக உற்பத்தியில் ஈடுபடுவார்கள். அப்படியெனில் நுகர்வோர்களை வெளியில் தேடுவதை விட உள்ளுரில் பக்கத்து ஊரில் அல்லது அருகேயுள்ள உற்பத்தியாளர் குழுக்கள் அல்லது கூட்டமைப்புகளுடன் இணைப்பை ஏற்படுத்திக் கொடுப்பது நிச்சயம் பலனளிக்கும் என்ற உறுதியான நம்பிக்கையின் அடிப்படையில், அந்தநல்லூர் ஒன்றியத்தில் உள்ள எட்டரை என்னும் கிராமத்தில் அங்கக மேலாண்மை முறையில் வேளாண்மை செய்து கொண்டிருக்கும் திருமதி. விஜயலெட்சுமி அவர்கள் இயற்கை விவசாயத்தில் விளைவித்துள்ள நெல் வகைகளைக் காணச் சென்றோம். 
போகும் வழியில் அதே ஊரிhல் அங்கக மேலாண்மை முறையில் அவரைப் போன்றே ஈடுபட்டுள்ள இருவரின் வயல் வெளியில் இருந்து சீரக சம்பா, மாப்பிள்ளை சம்பா மற்றும் வெள்ளைப் பொன்னி ஆகியவற்றைக் காணும் வாய்ப்பும் கிட்டியது. 
முதலில் அறுவடைக்குக் கிட்டத்தட்ட தயாராக இருக்கும் தூயமல்லி என்ற பாரம்பரிய இரக நெல் வயலுக்குச் சென்றோம். கதிர்கள் நம்மை வரவேற்பது போல தலைப்பகுதி மட்டும் நமது நிற்கும் பகுதியில் சாய்ந்து மற்ற பகுதிகள் திடமாக நின்று கொண்டிருந்தன. கதிர்களின் கணத்தினால் அவை சாய்ந்து நிற்கின்றனவா, அல்லது நம்மிடையே எவ்வளவு செல்வங்கள் சேர்;ந்தாலும், அறிவு மிகுந்திருந்தாலும் அவை சேர சேர அதற்கேற்ற பணிவு என்ற ஒன்றை எப்போதும் கடைப்பிடிக்க வேண்டும் என்று உணர்த்துகின்றனவா என்று எண்ணும் அளவிற்கு கதிர்கள் உச்சி மட்டும் சாய்ந்திருந்தன. அதுவும் நன்கு உயரமாகவும் வளர்ந்திருந்தன. கதிர்கள் நுனி சாய்ந்திருந்ததால் என் இடுப்பளவிற்கு இருப்பது போல் வரப்பிலிருந்து பார்க்கும் போது தெரிந்தது. 
‘உள்ளே போய் பாருங்க சார், எவ்வளவு நீளம் இருக்குன்னு தெரியும்” என்று விஜயலெட்சுமி கூறினார். 
“நான் உள்ளே சென்றால், பயிர் வீணாகி விடாதா?” என்றேன்.
“இப்படி பயிரை நீக்கிக் கொண்டே உள்ளே செல்லுங்கள் சாh”;, என்று என்னுடைய அலுவலர் டெமோ காண்பித்தார்.
“நடக்கும் அளவிற்கு இடைவெளி இருக்கும் சார், உள்ளே செல்லுங்கள்” என்று விஜயலெட்சுமி கூறவும். எனது அலுவலர் செய்து காட்டிய மாதிரிப்படியே உள்ளே சென்றேன். 
நான் உள்ளே சென்றவுடன் ஒரு குருவி ஒன்று உள்ளிருந்து பறந்து வெளியே ஓடியது. மற்றும் ஆங்காங்கே தேன் சிட்டுவின் சத்தங்களும் கேட்டுக் கொண்டிருந்தது. 
“குருவி உள்ளே கூடு கட்டியிருக்கு சார், இந்த மாதிரி பாரம்பரிய வகை பயிர் வயல்லதான் இந்த மாதிரி கூடெல்லாம் கட்டும், ரசாயன உரங்கள் வயல்ல கூடு கட்டாதுசார்” என்றார் விஜயலெட்சுமி
அப்படியா என்று ஆச்சரியத்துடன் சாய்ந்திருந்த கதிரினை நீட்டவாக்கில் வைத்துப் பிடித்துப் பார்த்த போது, அது என் உயரத்தை விட அதிக உயரத்தில் இருந்தது இன்னும் ஆச்சரியமூட்டியது. 
“எப்படி, சமீபத்தில பெருமழை வந்தப்ப பல பேரு நெல்லு தண்ணீர்ல அழுகி போயிடுச்சி, தண்ணீர்ல சாய்ஞ்சிடுச்சி இந்த நெல்லுக்குப் பாதிப்பு வரலையா?”
“இங்க வாங்க சார்” என்று ஓரப்பகுதியில் இருந்து கதிரின் அடிப்பகுதியைக் காட்டினால், கதிர் அடிமுதல் நுனிவரை நன்கு தடிமனாக இருந்தன. 
“சார், இந்தளவுக்கு தடிமனா இருக்குறதுனால இது பாதிக்கப்படாம நின்னு வேலை செய்ஞ்சது” என்றார் விஜயலெட்சுமி. அவர் சொன்னதுபோல் நெற்பயிரினைப் பார்க்கும் போது அதன் உறுதித்தன்மையை புரிந்து கொள்ள முடிந்தது. பிறகு அவருடைய வயலின் வரப்பினூடேயே கடந்து அவர்கள் அடுத்ததாக சமீபத்தில் தெளித்திருந்த நாட்டு உளுந்து வகையைப் பார்க்க சென்றோம். கிட்டத்தட்ட 3 ஏக்கருக்கு தூய மல்லி பயிரிட்டிருப்பார். வரப்பில் நடந்து செல்கையில் வயலூடேயே குருவிகளின் சத்தம் ஆங்காங்கேக் கேட்க முடிந்தது மகிழ்ச்சியாக இருந்தது. 
சமீபத்தில் தான் தெளித்திருந்ததால் சிறு இலைகள் துளிர்;த்து வந்திருந்ததை மட்டும் காண முடிந்து. பக்கத்து வயலில் உள்ளவர்கள் மலர்களை பயிரிட்டுருந்ததால் அதனையும் கிளிக் செய்தோம். 
மேலும், அவருடைய வாழைத் தோப்பைக் காட்டினார், இயற்கை முறையில் இலைக்காக வளர்ந்திருந்த வாழைகள் நடுவே காய்கறிகள் ஊடுபயிராகப் போட்டிருந்ததை விளக்கிக்கினார். அதனைத் தொடர்ந்து மற்றொரு இடத்தில் அவருடைய வயல் இருப்பதாக் தெரிவித்தார். அதனைப் பார்க்கலாம் என்று கிளம்பியபோது மற்றொரு வகை நெல் வயலைக் கண்டோம். அதில் கர்நாடகாப் பொன்னி அறுவடைக்குக் காத்திருந்தது. 
“அதனை நெருங்கி பாருங்கள் சார்”  என்றார் எனது அலுவலர் திரு. பூபாலன்.
கதிர்கள் காய்ந்திருந்தது.
“இவைகள் இராயன உரங்கள் மருந்துகள் அடிக்கப்பட்டவைகள் சார், இலைகள் விரைவில் இளகி பட்டுவிடும், பாருங்கள் காய்ந்து கிடக்கிறது” என்று எனது அலுவலர் கூறினார். எனக்கும் பார்ப்பதற்கு அப்படித்தான் தோன்றியது. 
“சார், ரசாயன உரம் போட்டு வளர்ர நெல்லுக்கும் இயற்கை உரம் போட்டு வளர்ர நம்ம பாரம்பரிய நெல்லையும் ஈசியா கண்டுபிடிச்சிடலாம் சார்” என்றார் விஜயலெட்சுமி
“எப்படி” என்றேன்.
“மத்த நெல்லு எல்லாம் நடுவில கதிர் இருக்கும் நுனியில் வைக்கோல் தெரியும். ஆனால், இயற்கை முறை விவசாயத்துல கதிர் நுனியில இருக்கும். நன்றாகப் பாருங்கள்” என்றார்.
நான் அதுவரைப் பார்த்த சீரக சம்பா, மாப்பிள்ளை சம்பா, வெள்ளைப் பொன்னி மற்றும் தூய மல்லி அனைத்துமே அப்படித்தான் இருந்தது. 
“சார், நானும் வெள்ளைப் பொன்னி போட்டிருக்கேன் சார், ரசாயனம் உரம் தான் போட்டிருக்கேன்? என்றார் பூபாலன்
“நல்ல விளைச்சல் இருக்கா?” என்றேன். 
“விளைச்சல் இருக்கு சார், ஆனால், இயற்கை உரம் போடறதுக்கும் ரசாயன உரத்தில விளையறதுக்கும் வித்தியாசம் இருக்கும் சார். என்னுடைய நெல்லை ஒரு மூட்டையில் கொட்டினேன் என்றால் அது 75 கிலோ வரும் வரை என்றால், அதே அளவு இயற்கை முறையில் விளைந்த நெல்லை கொட்டினால் 100 கிலோ வரும் சார். இயற்கை முறையில வளருவதில் எடை அதிகமாக இருக்கும் சார்” என்றார்.  
புதிய விடயமாக இருக்கிறதே என்று யோசித்துக் கொண்டே, விஜயலெட்சுமி அவர்களின் அடுத்த நெல் வயலுக்குச் சென்றோம். அங்கே இலுப்பைப் பூ சம்பா என்ற இரக நெல் விளைந்திருந்தது. பார்க்கும் போதே அதன் நிறம் நெல் கருகி விட்டதோ என்று எண்ணத் தோன்றியது. ஆனால், அதுதான் அதன் நிறம் என்றுணர்ந்த போது, அந்த நெல்லில் கிடைக்கும் அரிசி எலும்பு பலப்படுத்த உதவும் என்று தெரிந்த போது, அதைக் குறித்த மதிப்பு மேலும் அதிகரித்தது. 
“இந்த வகை நெல்லு, தூய மல்லி மாதிரி அதிக மகசூல் வராது சார், ஒரு ஏக்கருக்கே 10-12 மூட்டைதான் வரும், அதனால இந்த அரிசி விலை கொஞ்சம் அதிகமாக இருக்கும் சார். அதுமட்டுமில்லாமால் இதனை அதிகமாக கஞ்சி வைத்துக் குடிக்கும் பழக்கம் இருப்பதால் இதனை பச்சை அரிசியாகவே கொடுத்துவிடலாம்” என்றார் விஜயலெட்சுமி
பூபால் கொஞ்சம் நெல்லைக் கொய்து கையில் தேய்த்துக் கொடுத்தார். 
“சரிம்மா, இந்த அரிசியெல்லாம் மக்கள் வாங்குறாங்களா?”
“ இயற்கை விவசாயம் பண்றவங்க மரச் செக்கு எண்ணெய் தயாரிக்கிறவங்கன்னு நாங்க ஒரு வாட்ச் அப் குழுவுல இருக்கறோம் சார், அதுமூலமா எங்க உற்பத்திப் பொருள் உடனே வித்திடுது. சில பேரு வாங்கி வெளி நாட்டுக்கெல்லாம் அனுப்பறாங்க. பெங்களுருக்கெல்லாம் அனுப்பறோம் என்றார்”
“பரவாயில்லைமா நல்ல் விடயம் பண்ணுறீங்க, ஆனால், மக்கள் பழைய அரிசிதானே கேப்பாங்க நீங்க விளைஞ்ச உடன் கொடுத்துடுவீங்களா?
“இல்லை சார், அறுவடைக்குப் பிறகு 2 அமாவாசை வரைக்கு வைத்திருந்து அதன் பிறகு தான் சார் அரைப்போம். அதற்கு பிறகு கொடுத்தால் அதனை பழைய அரிசி கணக்கில் தான் வரும் என்றார். 
“நீங்க கொப்பரையில அவிச்சு புழுங்க அரிசி கொடுக்கறீங்களா? எப்படி பண்றீங்க?”
“இப்பவெல்லாம் அதுமாதிரி பண்றதில்ல சார், சில அரிசி மில்லுல மருந்து கலந்து அவிச்சுக் கொடுப்பாங்க, அதனால் அது மாதிரி இல்லாம என்னுடை சொந்தக்காரப் பொண்ணு வேலை செய்யிற பக்கத்துல இருக்குற ஊருல இருக்க அரிசி மில்லுல கொடுத்துடுவேன். அவங்களும் கெமிக்கல் சேராம எங்க நெல்ல அவிச்சி காய வைச்சி அரைக்கிற நிலை வரும்போது சொல்லிடுவாங்க. நான் போய் அரைச்சி, குருணையை நான் எடுத்துக்குவேன், அரிசியை வித்திடுவேன்”
“இப்ப உனக்கு, இந்த மாதிரி வகைகளை விதைக்கிறதுனால எப்படி பீல் பண்ணுறீங்க?”
“சந்தோசமா இருக்கு சார், ஆரம்பத்துல இதை நானும் எனது வீட்டுக்காரரும் செய்ய ஆரம்பிக்கிறப்ப சுத்தி விவசாயம் பண்றவங்க எங்கள சத்தம் போட்டாங்க, ஏன் விவரம் இல்லாம இருக்கீங்க, இதுல இலாபம் ஒன்னும் கிடைக்காதுன்னு சொன்னாங்க, ஆனால், இப்ப மழை எல்லாத்தையும் எங்க நெல்லு தாங்கி நின்னப்ப, உங்க வெள்ளாமை நல்லா இருக்கு பரவாயில்லை அப்படின்னு சொல்ல ஆரம்பிச்சாட்டங்க. நான் இலைக்காக வாழை தோப்பு வைச்சிருக்கேன். அதுல ஊடு பயிரா காய்கறிகள் தான் போட்டேன். இயற்கை முறையில் பண்றதால ஆரம்பத்துல அதுல நிறைய பூச்சிகள் வந்தது, அப்புறம் ரொம்ப நல்லா இருந்தது. காய் பறிக்கிறதுக்கு முன்னவே ஆர்டர் வந்துடும் சார். மருந்து தெளிச்சாத்தான் பூக்கள் நல்லா வரும்கறதுனால நாங்க இப்ப பூக்கள் சாகுபடி செய்றதே இல்லை. அப்புறம், 5 வருஷமா நான் இதப் பண்ணிக்கிட்டு இருக்கேன். யாரும் களத்துல வந்து இந்த அளவிற்கு நேரடியா எங்கிட்ட பேசனதில்லை. நீங்க வந்தது எங்களுக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு சார். எங்க வீட்டுக்காரர் இன்னைக்கு வெளில இருக்கார். அவர் இருந்தார்னா இன்னும் சந்தோஷப் பட்டிருப்பார்” என்று முழுப் பூரிப்புடன் சொன்னார் விஜயலெட்சுமி. 
இலுப்பைப் பூ சம்பா நெல் வயலைக் கடக்கும் போது, பரங்கிக் கொடியும் அதனூடே சுரக் கொடியும் படர்ந்திருந்ததைக் கண்டோம். திரும்பி வருகையில் அந்தக் கொடியின் சொந்தக்கார பாட்டி பரங்கிக்காயையும் சுரக்காயையும் பறித்துத் தந்தார். காசு வேண்டாம் என்று மறுத்தார். டீ செலவிற்கு வைத்துக் கொள்ளுங்கள் என்று ஒரு 50 ரூபாயை அவரிடம் வழங்கிவிட்டு அங்கிருந்து கிளம்பினோம். 
# பாரம்பரிய வகைகளைப் போற்றுவோம், பயன்படுத்துவோம். பெருவியாபாரிகளின் கலப்படங்களைத் தவிர்த்து உடல் ஆரோக்கியத்தைப் பேண இது மிகவும் உதவியாக இருக்கும். 
நாம் பாரம்பரிய வகைகளைப் பயன்படுத்தப் பயன்படுத்த உழவர்கள் பாரம்பரிய வகைகளை பயிரிடுவதும் அதிகமாகும். 
--

1 comment:

  1. Harrah's Philadelphia Casino and Racetrack - Dr.D.
    Harrah's 거제 출장안마 Philadelphia Casino 서산 출장샵 and Racetrack offers the best casino 김천 출장샵 action anywhere in 영천 출장샵 Philadelphia! The excitement never stops! Book your hotel room today! 태백 출장마사지

    ReplyDelete