கடந்த வாரம் திருவள்ளுவர் குறித்து அறிஞர் என்ன சொன்னார்கள் என்று பார்த்தோம். இந்த வாரம், திருவள்ளுவர் குறித்தும் அவருடைய வரலாறு குறித்தும் சொல்லப்படும் பொதுக் கூற்றுகள் என்னவென்று பார்ப்போம்.
திருவள்ளுவருக்கு வழங்கப்படும் பிற பெயர்கள்:
திருவள்ளுவரது பெயர், பெற்றோர் மற்றும் பிறப்பிடம் ஆகியவை உறுதிசெய்யப்படவில்லை. இருந்தாலும் அவர் கி.பி. 2 ஆம் நூற்றாண்டில் பிறந்திருக்கலாம் என்று சிலர் தெரிவித்தனர்.
திருவள்ளுவர் மாமூலனார் என்ற புலவரால் பாடப் பெற்றவர். மாமூலனார் வாழ்ந்த காலம் பொ.ஊ.மு. 400க்கும் பொ.ஊ.மு. 100க்கும் இடையில் மாமூலனார் மற்றும் ஆரியப்படைக் கடந்த நெடுஞ்செழியப் பாண்டிய மன்னனால் திருவள்ளுவர் பற்றிய குறிப்புகள் உள்ளதால் திருவள்ளுவர் பொ.ஊ.மு. 5 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்திருக்கலாம் என்ற கருத்து உள்ளது.
திருவள்ளுவர் தான் இயற்றிய திருக்குறளை மதுரையில் அரங்கேற்ற மிகவும் சிரமப்பட்ட போது அவ்வையார் அவருக்கு உதவினார் என்ற கூற்று உள்ளது. அவ்வையார் என்ற பெயரில் பல பெண் கவிஞர்கள் வாழ்ந்து மறைந்த போதும், திருவள்ளுவருக்கு உதவிய அவ்வையார் வாழ்ந்த காலத்தில் அதியமான் மற்றும் பரணர் ஆகியோரும் வாழ்ந்திருப்பதாகக் தெரிகிறது. இவர்கள் மாமூலனருக்கு முற்பட்ட காலத்தில் வாழ்ந்தவர்கள் ஆகையால் திருவள்ளுவர் பொ.ஊ.மு. 5 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்திருக்கலாம் என்ற கருத்து உள்ளது.
ஆனால், தமிழக அரசு பொ.ஊ.மு. முதல் நூற்றாண்டில் சென்னையில் உள்ள மயிலாப்பூரில் பிறந்து வளர்ந்திருக்கலாம் என்று அறிவித்துள்ளது. அதன் அடிப்படையில் வள்ளுவர் ஆண்டும் கணக்கிடப்படுகிறது. மயிலாப்பூரில் திருவள்ளுவருக்குக் கோவிலும் எழுப்பப்பட்டுள்ளது.
இவருடைய மனைவி பெயர் வாசுகி என்று அறியப்படுகிறது.
இவருடைய முதல் பாடல் கொண்டு இவருடைய பெற்றோர் பெயர் ஆதி, பகவன் என்று இருக்கலாம் என்ற கருத்தும் உள்ளது.
திருவள்ளுவருக்கு வழங்கப்பட்ட மற்ற பெயர்கள்.
• தெய்வப்புலவர்
• பொய்யில் புலவர்
• முதற்பாவலர்
• பொய்யாமொழிப் புலவர்
• மாதானுபங்கி
• பெருநாவலர்
• செந்நாப்போதர்
• தேவர்
• நாயனார்
திருவள்ளுவர் வழிவந்த இரண்டு நூல்கள்
ஞானவெட்டியான், பஞ்சரத்னம் இவை பிற்கால நூல்களாகும், இந்நூல்கள் பிற்காலத்தில் இவர் வழியில் வந்தவரால் எழுதப்பட்டமையால் அவரும் திருவள்ளுவர் என்றே அழைக்கப்பட்டார்.
திருவள்ளுவரை கௌரவிக்கும் விதமாக தமிழக அரசால் அவருக்கு வள்ளுவர் கோட்டம் அமைக்கப்பட்டது மற்றும் கன்னியாக்குமரியில் முக்கடல் சங்கமிக்கும் இடத்தில் திருக்குறளின் 133 அதிகாரங்களைக் கருத்தில் கொண்டு 133 அடியில் அவருக்கு சிலை அமைக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டுள்ளது.
தற்போது வள்ளுவரின் உருவம் எப்படி இருந்திருக்கும் என்று ஒவ்வொருவரும் தங்களுக்கேற்றவாறு அரசியல் செய்து வருகிறார்கள். திருவள்ளுவரின் உருவம் எப்படி அமைந்தது என்பதனை வரும் வாரத்தில் பார்ப்போம்.
No comments:
Post a Comment