Saturday, 13 June 2026

திருக்குறள் வழி நின்று திருவள்ளுவரை அறிதல்-123: திருக்குறளில் அரசியல்:

திருக்குறள் வழி நின்று திருவள்ளுவரை அறிதல்-123: 
திருக்குறளில் அரசியல்: 
தெரிந்து தெளிதல்:
திருக்குறளில் அரசியல் என்ற தலைப்பில் பார்த்து வருகிறோம்,
 அரசியலில் ‘இடன் அறிதல்” என்ற அதிகாரத்தின்; அரசியல் சார்ந்த கருத்துகளை திருவள்ளுவர் என்ன குறிப்பிடுகிறார் என்பதனை கடந்த வாரம் பார்த்தோம். இந்த வாரம் ‘தெரிந்து தெளிதல்” என்ற அதிகாரத்தில் உள்ள குறட்பாக்களைப் பார்ப்போம். 
தெரிந்து தெளிதல் என்பது வெறும் தனிமனித உறவுகளுக்கானது அல்ல, அது ஒரு நாட்டின் தலைவன் அல்லது அரசு தன் நிர்வாகத்தை எப்படிக் கட்டமைக்க வேண்டும் என்பதற்கான அரசியல் உத்தி மற்றும் ஆபத்துக் குறைப்பிற்கான மேலாண்மை பற்றிய அதிகாரமாக இருக்கிறது. 
இந்த அதிகாரத்தில் என்ன மாதிரியான கோட்பாடுகளை திருவள்ளுவர் விளக்குகிறார் என்பதனைப் பார்ப்போம். 
அரசியலில் நாம் தெரிந்து கொள்ள வேண்டிய மிக முக்கியமானத் தகவலை இந்த அதிகாரத்தின் முதல் குறளிலேயே சொல்கிறார். ஒரு சிறந்த தலைவனைத் தேர்ந்தெடுக்க வேண்டுமெனில் அவரிடம் நாம் என்ன தகுதிகளைக் கவனிக்க வேண்டும் என்று சொல்கிறார்?
முதல் குறளைக் கவனியுங்கள்.
அறம்பொருள் இன்பம் உயிரெச்சம் நான்கின்
திறம்தெரிந்து தேறப் படும் -501 என்கிறார். 
அதாவது, அறவழியிலே உறுதியானவராகவும் பொருள் வழியிலே நாணயமானவராகவும், இன்பத்தைத் தேடி மயங்காதனவராகவும், தன்னுயிருக்கு  அஞ்சாமல் இருப்பவரையே ஆராய்ந்து அறிந்து அவரை தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்கிறார். இன்னும் விளக்கமாகக் கூற வேண்டும் என்றால், மேற்கூறியவற்றில் ஏதேனும் ஒன்றில் ஒருவர் பலவீனமாக இருந்தால் கூட அவர் நாட்டினுடைய பாதுகாப்பிற்கு மிகவும் பெரிய ஆபத்தானவராக மாறிவிடுகிறார் என்கிறார். ஆகவே, நமக்கு ஒரு தலைவரை தேர்ந்தெடுக்கும் வாய்ப்புக் கிடைக்கும் போது மேற்கூறிய தகுதியினைக் கண்டறிந்து தேர்ந்தெடுக்க வேண்டும். 
அடுத்தக் குறளில், முந்தைய குறளுக்கு அடுத்த நிலையை விளக்குகிறார். 
குடிப்பிறந்து குற்றத்தின் நீங்கி வடுப்பரியும்
நாணுடையான் சுட்டே தெளிவு -502
அதாவது, நல்ல குடியில் (இதில் நல்ல குடி என்பதனை பின்வரும் குணங்களைக் கொள்க) பிறந்து குற்றங்கள் இல்லாதவராகவும் பழிச்சொல்லுக்கு அஞ்சி தவறான செயல் செய்யக் கூடாதவராகவும் இருக்கும் ஒருவரையே பதவிக்குத் தேர்வு செய்ய வேண்டும் என்கிறார் திருவள்ளுவர். 
மேலும், ஒரு தலைவனாக இருப்பார் எப்போதும் திறந்த மனதோடு இருக்கவேண்டும். பிறர் கருத்துக்களை கேட்பதற்குத் தாரளமானவராக இருக்க வேண்டும். தனக்குத் தான் எல்லாம் தெரியும் என்று நினைப்புடன் இருப்பவர் சிறந்த தலைவராக இருக்க முடியாது.  அடுத்தக் குறளைக் கவனியுங்கள்
அரியகற்று ஆசற்றார் கண்ணும் தெரியுங்கால்
இன்மை அரிதே வெளிறு-503 என்கிறார் திருவள்ளுவர்.
அதாவது, அருமையான நூல்களைக் கற்றுத் தேர்ந்து, குற்றங்கள் எதுவும் இல்லாமல் இருப்பவரிடத்திலும், ஆராய்ந்து பார்த்தால், அவரிடம் அறியாமை அறவே இல்லை என்று கணித்து விட முடியாது என்று குறிப்பிடுகிறார். ஆகவே, எதனையும் தெளிந்து அறிதல் வேண்டும் என்பதனை உணர்த்துகிறார் திருவள்ளுவர். 
தொடர்ந்து பார்ப்போம். 

குறிப்பு: இணைக்கப்பட்டுள்ள படங்கள் மற்றும் காணொலி ஆகியவற்றை செயற்கை நுண்ணறிவுத் தொழில் நுட்பத்தில் உருவாக்கியுள்ளேன். பிழையிருப்பின் பொறுத்துக் கொள்க.

நன்றி

https://www.youtube.com/@AAAInfotainment

தோப்பு

Saturday, 6 June 2026

திருக்குறள் வழி நின்று திருவள்ளுவரை அறிதல்-122:

திருக்குறள் வழி நின்று திருவள்ளுவரை அறிதல்-122: 
திருக்குறளில் அரசியல்: 
இடன் அறிதல்:
திருக்குறளில் அரசியல் என்ற தலைப்பில் பார்த்து வருகிறோம்,
 அரசியலில் ‘இடன் அறிதல்” என்ற அதிகாரத்தின்; அரசியல் சார்ந்த கருத்துகளை திருவள்ளுவர் என்ன குறிப்பிடுகிறார் என்பதனை கடந்த வாரம் பார்த்தோம். இந்த வாரம் தொடர்ந்த குறட்பாக்களைப் பார்ப்போம். 

இளம் வயதிலேயே அரியணையில் ஏறிய கரிகால சோழனுக்கு எதிராகச் சேர மன்னன் பெருஞ்சேரலாதன், பாண்டிய மன்னன் மற்றும் 11 குறுநில மன்னர்கள் (வேளிர் ) ஒன்று கூடி ஒரு பிரம்மாண்டக் கூட்டணியை உருவாக்கினர். சோழப் படையை விட இக்கூட்டணியின் படை பல மடங்கு பெரியதாக இருந்தது. கரிகாலச் சோழன் தற்காப்புப் போரில் ஈடுபடாமல், தஞ்சாவூர் அருகில் இன்றைய கோவில்வெண்ணி என்று அழைக்கப்படும் வெண்ணி என்ற இடத்தில் எதிரிப் படைகளை துணிச்சலாக எதிர் கொண்டார். ஏதிரிகளின் பிரம்மாண்டப் படையை எதிர்கொள்ள அவர் தன் படையைச் சக்கர வடிவில் அமைத்து, எதிரிப் படையின் மையப்பகுதியை நோக்கி ஒரு கூர்மையான அம்பு போல ஊடுருவி அதிரடித் தாக்குதல் நடத்தினார். இதனால் எதிரிப் படை நிலை குலைந்தது. போரின் போது சேர மன்னன் பெருஞ்சேரலாதனின் முதுகில் அம்பு பாய்ந்தது. இதனால் அவர் அவமானத்தில் வடக்கிருந்து உயிர் துறந்தார். இந்த நிகழ்வு கரிகாலச் சோழனை தமிழகத்தின் ஒப்பிடி முடியாத பேரரசாக மாற்றியது. 
இதுபோன்று சிறிய படை உடையவனும் எப்போர்பட்ட எதிராளியினையும் வீழ்த்துவதற்குச் சரியான இடத்தில் சேர்ந்தால், வெற்றி கொள்ள முடியும் என்பதனை திருவள்ளுவர் பின்வரும் குறளில் விளக்குகிறார். 

சிறுபடையான் செல்லிடம் சேரின் உறுபடையான்
ஊக்கம் அழிந்து விடும் - 498
அதாவது, சிறிய படை என்றாலும் அது தனக்குரிய இடத்தில் இருந்து போரிட்டால் அது பெரிய படையை வென்று விட முடியும் என்கிறார். 
எப்போதும் ஒருவருக்கு தன்னுடைய சொந்த ஊரில் பலமானவராக இருப்பார். பல காரணங்கள் இருப்பினும் தங்களுடைய புவியியல் அமைப்பை நன்கு தெரிந்து வைத்திருப்பதுதான் இதற்கு முக்கிய காரணம்.
ஸ்பார்ட்டா நாட்டின் மன்னர் லியோனிடாஸ் தனது முக்கிய படையான 300 ஸ்பார்ட்டன் வீரர்கள் மற்றும் சில ஆயிரம் கிரேக்கக் கூட்டாளி வீரர்களை மட்டுமே கொண்டு, ஜெர்க்ஸஸ் தலைமையிலான் 100000 முதல் 150000 வீரர்கள் கொண்ட பிரம்மாண்ட பெர்சிய படையை எதிர்த்து நின்றார். ஸ்பார்ட்டன்கள் பெர்சிய படையை ஒரு குறுகிய மலைப்பாதைக்குள் வரவழைத்துப் போரிட்டனர். எவ்வளவு பெரிய படையாக இருந்தாலுமு;, ஒரு சில நூறு வீரர்கள் மட்டுமே நுழைய முடியும். பெர்சியர்களின் பெரும்படை பலம் அங்கே பயனற்றுப் போனது. கனமான கவசங்கள் அணிந்த ஸ்பார்ட்டன் வீரர்கள் மூன்று நாட்களுக்கு பெர்சியப் படையை முன்னேற விடாமல் தடுத்து நிறுத்தி அவர்களுக்குப் பெரும் சேதத்தை ஏற்படுத்தினர். 
பின்வரும் குறளிலும் திருவள்ளுவர் இதனை விளக்குகிறார்.  
சிறைநலனும் சீரும் இலரெனினும் மாந்தர் 
உறைநிலத்தோடு ஒட்டல் அரிது -499 என்கிறார். 
அதாவது, பாதுகாப்புக்கான வலிமையான கோட்டையும் மிகுந்த படை பலமும் இல்லாமல் இருப்பவர் என்றாலும் பகைவரின் இடத்திற்கே சென்று தாக்குவது என்பது கடினமான செயலாகும் என்கிறார் திருவள்ளுவர். 
எப்பேர்பட்ட வீரனாக இருந்தாலும் தான் வலுவிலக்கப்பட்டால் அவரை விட எளியவர் கூட அவரை எளிதில் தாக்கிவிட முடியும். இதனை எளிய விளக்கத்தின் மூலம் பின்வரும் குறளில் விளக்கியுள்ளார் திருவள்ளுவர். 
காலாழ் களரில் நரியடும் கண்ணஞ்சா 
வேலாள் முகத்த களிறு -500
போர்க் களத்தில் வேலேந்திய வீரரையும் கோர்த்தெடுத்த கொம்பு உடைய அஞ்சாத ஆண் யானையும், அதன் கால் புதையும் சேற்று நிலத்தில் மாட்டிக் கொண்டால், சிறுநரிகளும் அந்த யானையைக் கொன்று விடும் என்கிறார் திருவள்ளுவர். 
தொடர்ந்து பார்ப்போம். 

குறிப்பு: இணைக்கப்பட்டுள்ள படங்கள் மற்றும் காணொலி ஆகியவற்றை செயற்கை நுண்ணறிவுத் தொழில் நுட்பத்தில் உருவாக்கியுள்ளேன். பிழையிருப்பின் மற்றும் தாமதத்திற்குப் பொறுத்துக் கொள்க.

நன்றி

https://www.youtube.com/@AAAInfotainment

தோப்பு