Monday, 23 December 2024

திருக்குறள் வழி நின்று திருவள்ளுவரை அறிதல்- 49:

திருக்குறள் வழி நின்று திருவள்ளுவரை அறிதல்- 49:
உறுப்பு நலன் அழிதல்:
கடந்த வாரம் பொழுதுகண்டு இரங்கல்அதிகாரத்தில் இருந்து பார்த்தோம். இந்த வாரம்; உறுப்பு நலன் அழிதல் அதிகாரத்தில் இருந்து பார்ப்போம். உறுப்பு நலன் அழிதல் என்பது காதலரை பிரிந்த நிலையில் உடல் உறுப்புகள் நலம் கெடும் நிலையை உணர்த்துவதாகும். வாருங்கள் நாமும் சென்று பார்ப்போம்... 
சிறுமை நமக்கொழியச் சேட்சென்றார் உள்ளி
நறுமலர் நாணின கண் -1231
பிரிவை நினைத்து அழுது அழுது வாடிய காதலியின் கண்கள் எதனைப் பார்த்து வெட்கப்படுகின்றன? ‘பிரிவைப் பொறுக்காத சிறுமையை துன்பத்தை நமக்கு அளித்துவிட்டு நெடுந்தொலைவு சென்று விட்டாரே அவர் என்று... அவரை எண்ணி அழுவதால், காதலியின் கண்கள் அழகிழந்து கிடக்கின்றன. முன்பு கண்களைக் கண்டு வெட்கப்பட்ட நறுமன மலர்களுக்கு முன்பு இப்போது கண்கள் வெட்கப்பட்டுக் கிடக்கின்றன” 
நயந்தவர் நல்காமை சொல்லுவ போலும்
பசந்து பனிவாரும் கண் -1232
தன் காதலர் தன்னிடம் அன்பு காட்டவில்லை என்பதை பிறருக்கு எப்படி காதலி உணர்த்துகிறார்? இதோ திருவள்ளுவர் சொல்வதைக் கேளுங்கள், ‘பசலை நிறம் அடைந்து நீர் சொரியும் கண்கள், தாம் விரும்பிய காதலர் தமக்கு அன்பு செய்யாத தன்மையை பிறருக்குச் சொல்வன போல உள்ளன” என்கிறார். பசலை நிறமும் அடைந்து அதில் கண்ணீரும் சேர்ந்து வருகையில் யார்தான் பிரிவுத் துன்பத்தைக் குறித்து உணர மாட்டார்கள்?
தணந்தமை சால அறிவிப்ப போலும்
மணந்தநாள் வீங்கிய தோள் -1233
பசலை நிறமும் கண்ணீரும் மட்டும்தான் பிரிவை உணர்த்துமா என்ன? வேறு எது பிரிவை உணர்த்துகிறது. ‘காதலரோடு கூடியிருந்த காலத்தில் மகிழ்ந்து பூரிப்பால் பருத்த என் தோள்கள், இப்போது மெலிவடைந்து அவருடைய பிரிவை நன்றாக தெரிவிப்பவைப் போல உள்ளன” ஆக, தோள்களும் பிரிவுத் துன்பத்தைக் காட்டுகிறது என்கிறார் அய்யன்  திருவள்ளுவர். 
பணைநீங்கிப் பைந்தொடி சோரும் துணைநீங்கித்
தொல்கவின் வாடிய தோள் -1234
மேற்காணும் குறட்பாவில், தோள் மெலிந்ததால் மேலும் என்ன நிலையடைகிறது என்பதைக் கூறுகின்றார், ‘ தமக்குத் துணையான காதலரை விட்டுப் பிரிந்ததனால், பழைய அழகு கெட்டு வாடிய தோள்கள்,பருத்த தன்மை கெட்டு இப்போது வளையல்களும் கழலும் படி மெலிந்ததுள்ளன” என்கிறார். 
கொடியார் கொடுமை உரைக்கும் தொடியொடு
தொல்கவின் வாடிய தோள் -1235
படுபாவி, என்னை இப்படி மாற்றிவிட்டானே என்ற புலம்பலை திருவள்ளுவர் காதலியின் வாயிலாக இப்படிச் சொல்கின்றார். ‘வளையல்களும் கழன்று வீழ, என்னுடைய பழைய அழகும் கெட்டுப் போன தோள்கள், இந்தக் கொடியவரின் கொடுமையைப் பிறர் அறியச் சொல்கின்றன”. என்கின்றார்.
தொடியொடு தோள்நெகிழ நோவல் அவரைக்
கொடியர் எனக்கூறல் நொந்து -1236
காதலர் கொடியவர் என்று கூறிவிட்டால் காதலி மனமகிழ்வாரா? ‘வளையல்கள் கழன்று தோள்களும் மெலிந்து வருவதால், என்னைப் பார்ப்வர்கள் அவரைக் ‘கொடியவர்” என்று கூறக் கேட்டு நானும் வருத்தமடைகின்றேன்”. என்று காதலி குறிப்பிடுவதாக திருவள்ளுவர் குறிப்பிடுகிறார். இதுவன்றோ உண்மையான காதல்!.
பாடு பெறுதியோ நெஞ்சே கொடியார்க்கென் 
வாடுதோட் பூசல் உரைத்து -1237 
கண்டுகொள்ளாமல் இருக்கும் காதலருக்கு உரைப்பாயோ நெஞ்சமே என்று கேட்பது போல் மேலே உள்ள குறட்பாவினை அமைத்துள்ளார் வள்ளுவர்,’ நெஞ்சமே! கொடியவராக மாறிவிட்டு என்னுடைய காதலருக்கு என்னுடைய வாடிய தோள்களின் ஆரவாரத்தை எடுத்துச் சொல்லி, நீயும் பெருமை கொள்வாயோ” என்று காதலி கேட்பது போல் அமைத்துள்ளார். 
முயங்கிய கைகளை ஊக்கப் பசந்தது
பைந்தொடிப் பேதை நுதல் - 1238
எவ்வளவு வேகத்தில் பசலை நோய் பற்றும்? 
‘முன்பு அவளை நான் இறுகத் தழுவி, அது அவளுக்கு வருத்தம் தருமோ என்று மெல்லக் கைகளைத் தளர்த்திய அப்பொழுதிலேயே, பொன் வளையல்களை அணிந்த என் காதலியில் நெற்றியின் ஒளி குறைந்ததே” என்று காதலியை நினைத்து காதலன் வருந்துவதாகக் குறிப்பிடுகிறார். கண், தோள் மற்றும் நெற்றி வரை இதுவரை பாதிப்பினைக் காட்டியுள்ளார். அடுத்தக் குறளிலும் இதன் நீட்சியாகவேக் கொடுத்துள்ளார். 
முயக்கிடைத் தண்வளி போழப் பசப்புற்ற
பேதை பெருமழைக் கண் -1239 என்கிறார். அதாவது, ‘காதலன் கையை மெல்ல நெருக்கத்திற்கு இடையே குளிர்ந்த காற்று நுழைய, அதையே ஒரு பிரிவு என்று கருதி பெரிய மழை போன்ற கண்கள் பசலை நிறம் அடைந்து துன்புற்றன” 
கண்ணின் பசப்போ பருவரல் எய்தின்றே
ஒண்ணுதல் செய்தது கண்டு -1240
மேற்கூறிய குறட்பாவில், ‘குளிர்ந்த சிறு காற்று இடையே நுழைந்ததைக் கண்டு நெற்றி, பசலை நிறம் அடைந்தது, அதனைக் கண்டு அவளுடைய கண்களின் பசலையும் பெருந்துன்பம் அடைந்தது” என்கிறார். 

தொடர்ந்து பார்ப்போம்...
குறிப்பு: இணைக்கப்பட்டுள்ள படங்களை செயற்கை நுண்ணறிவுத் தொழில் நுட்பத்தில் உருவாக்கியுள்ளேன். பிழையிருப்பின் பொறுத்துக் கொள்க.
நன்றி

No comments:

Post a Comment