Monday, 2 December 2024

திருக்குறள் வழி நின்று திருவள்ளுவரை அறிதல்- 46:

திருக்குறள் வழி நின்று திருவள்ளுவரை அறிதல்- 46:
நினைந்தவர் புலம்பல் :
கடந்த வாரம் தனிப்படர் மிகுதி அதிகாரத்தில் இருந்து பார்த்தோம். இந்த வாரம்; நினைந்தவர் புலம்பல் அதிகாரத்தில் இருந்து பார்ப்போம். நினைந்தவர் புலம்பல் என்பது காதலரை நினைத்து புலம்புதலைக் குறிக்கின்றது. இனி பிரிதலினால் எப்படியெல்லாம் காதலர்கள் புலம்பியுள்ளனர் என்பதைக் காணலாம். 
முதல் குறளில், இன்று எங்கு நோக்கினும் கள்ளுக்கடைகளில் குவிந்து மக்களைப் பார்க்க முடிகிறது. அப்படி எனில், அவர்கள் அதில் ஏதோ ஒரு இன்பத்தை அனுபவிப்பதற்காக அங்கு குவிந்துள்ளனர் எனலாம், ஆனால், அதனை விட இனிமையானது எது? இதோ கீழே உள்ள குறளைப் பாருங்கள்.
உள்ளினும் தீராப் பெருமகிழ் செய்தலால்
கள்ளினும் காமம் இனிது -1201
கூடி அனுபவித்த இன்பத்தைப் பிரிந்து இருக்கும் போது நினைத்தாலும் பெருமகிழ்ச்சியை ஏற்படுத்துவதால், உண்டபோது மட்டும் மகிழ்ச்சியை ஏற்படுத்தும் கள்ளைக் காட்டிலும் காதல் இனிமையானது என்கிறார் வள்ளுவர். 
எனைத்தொனறு ஏனிதேகாண் காமம்தாம் வீழ்வார்
நினைப்ப வருவதொன்று ஏல் -1202
மேற்கூறிய குறளில், தாம் விரும்பி இணைந்த காதலரை பிரிவில் நினைத்தாலும் வரக்கூடிய துன்பம் இல்லாமல் போகின்றது. அதனால், எந்த வகையிலும் காதல் சுகமானதுதான் என்று பிரிவிலும் நினைவில் கிடைக்கும் சுகத்தினைக் குறிப்பிடுகிறார். 
நினைப்பவர் போன்று நினையார்கொல் தும்மல்
சினைப்பது போன்று கெடும் -1203
நாம் எவ்வளவு முறை வேகமாக வரும் தும்மலை அடக்கியிருக்கிறோம் அல்லது தும்மல் வருவது போல இருக்கும் சமயத்தில் வராமால் அடங்கிவிடும், அந்த சமயத்தில் நாம் ஏதாவது நினைத்ததுண்டா? ஆனால் திருவள்ளுவர் என்ன சொல்கிறார் பாருங்கள் மேற்கூறிய குறளில், ‘வருவது போல இருந்து வராமல் அடங்கி விடுகிறதே தும்மல், அது போன்று என்னை நினைப்பது போலிருந்துவிட்டு நினைக்காமல் விடுகின்றாரோ?” என்கிறார். அடுத்தக் குறளில் காதலர்களுக்கே உரிய சந்தேகத்தைக் குறிப்பிட்டுக் காட்டுகிறார்...
யாமும் உளேங்கொல் அவர்நெஞ்சத்து எந்நெஞ்சத்து
ஓஒ உளரே அவர் -1204
எம்முடைய நெஞ்சத்தில் காதலராகிய அவர் தொடர்ந்து எப்போதும் இருக்கின்றாரே? யாமும் அவருடைய நெஞ்சத்தில் இருந்து நீங்காமல் எப்போதும் இருக்கின்றோமா? என்கிறார். 
தம்நெஞ்சத்து எம்மைக் கடிகொண்டார் நாணார்கொல்
எம்நெஞ்சத்து ஓவா வரல் -1205
ஒரு காதல் பிரிவு எப்படி வேண்டும் என்றாலும் நினைக்கத் தோன்றும் நினைத்துப் புலம்பத் தோன்றும், அதனைத் தான் மேலேயுள்ள குறளிலும் குறிப்பிடுகிறார், ‘தம்முடைய நெஞ்சத்தில் எம்மை வரவிடாமல் காவல் காக்கும் என்னுடைய காதலர், எம்முடைய உள்ளத்தில் மட்டும் ஓயாமல் வந்து செல்வதைப் பற்றி வெட்கப்பட மாட்டாரோ?” என்று காதலரின் புலம்பலைக் குறிப்பிட்டுள்ளார். அடுத்து வரும் குறளும் பல காதலர்கள் மட்டுமல்ல உண்மையான அன்பு கொண்டு பிரிந்து இருக்கும் நிலையில் வாழும் அனைத்துத் தம்பதியனருக்கும் பொருத்தமான குறள் ஆகும். 
மற்றியான் என்னுளேன் மன்னோ அவரொடியான் 
உற்றநாள் உள்ள உளேன் -1206
‘என் காதலரோடு நான் கூடி வாழ்ந்த நாட்களை நினைத்துக் கொள்வதால்தான் நான் உயிரோடு இருக்கின்றேன், இல்லையென்றால், வேறு எதனை நினைத்து நான் உயிர் வாழ முடியும்?” என்று காதலர் புலம்புவதாகக் குறிப்பிடுகிறார் திருவள்ளுவர். நான் மேற்சொன்னக் கூற்று சரிதானே?
மறப்பின் எவனாவன் மற்கொல் மறப்பறியேன்
உள்ளினும் உள்ளம் சுடும் -1207
‘மறந்தால் தானே நினைப்பதற்கு” என்ற கூற்று பலரும் கூற நாம் ஒருவேளைக் கேள்விப்பிட்டிருக்கலாம், இதை 2000 வருடங்களுக்கு முன்னரே, பிரிவுத் துன்பத்தில் புலம்புதலில் ஒருவர் உள்வாங்கி குறிப்பிடுகிறார் என்றால் அவரை ஞானி என்று குறிப்பிடாமல் வேறு என்ன சொல்வது, இதோ குறளின் அர்த்த்ம். ‘மறதி என்பதே இல்லாமல் அவரை நினைத்துக் கொண்டிருக்கும் போதே உள்ளத்தைப் பிரிவு சுடுகின்றதே, அப்படி இருக்கும் போது அவரை நினைக்காமல் மறந்து விட்டால் என்ன ஆவேனோ?”
எனைத்து நினைப்பினும் காயார் அனைத்தன்றோ
காதலர் செய்யும் சிறப்பு -1208
உண்மையான அன்பின் சிறந்த உதவி எது என்பதை விளக்கும் குறள், ‘என் காதலரை நான் எவ்வளவு அதிகமாக நினைத்தாலும் அதற்காக அவர் என் மேல் கோபம் கொள்ள மாட்டார். இத்தகைய அன்புள்ளம் கொண்ட அவர் எனக்குத் தரும் சிறந்த உதவியே அதுதான்”. 
விளியுமென் இன்னுயிர் வேறல்லம் என்பார் 
அளியின்மை ஆற்ற நினைந்து -1209
பிரிவின் துயரத்தைக் குறிப்பிடும் குறள் இது, ‘நாம் இருவரும் வேறானவர் அல்ல என்று கூறிய காதலர் கொஞ்சம் கூட இரக்கமில்லாதவராக என்னைப் பிரிந்து சென்றுள்ளதை நினைத்து என்னுயிர் கொஞ்சம் கொஞ்சமாக அழிந்து கொண்டிருக்கின்றது”
விடாஅது சென்றாரைக் கண்ணினால் காணப்
படாஅதி வாழி மதி -1210
பிரிந்திருக்கும் நிலையில் இருக்கும் சிலர் நிலவைப் பார்க்கையில் அதே சமயம் அவருடைய காதலரும் வெளியூரில் இருக்கும் நிலையில் நிலவைப் பார்த்துக் கொண்டிருப்பதாக இருந்தால், அந்த நிலையில் நிலவை ஒரே சமயத்தில் பார்ப்பதன் மூலம் அது இருவரின் பிணைப்பாகவும் தாங்கள் அருகருகே இருப்பதாகவும் நினைக்கும் வாய்ப்பினை ஏற்படுத்துகின்றது, இது போன்ற நிலையினை திருவள்ளுவர் எப்படிக் கையாளுகின்றார்? 
‘நிலவே என் உள்ளத்தில் பிரியாமல் இருந்து இறுதியில் என்னைப் பிரிந்துச் சென்ற காதலரை என் கண்ணால் தேடிக் கண்டுபிடிப்பதற்குத் துணையாக நீ மறையாமல் இருப்பாயாக என்று காதலி கூறுகிறார்”. என்னே திருவள்ளுவரின் ஞானம்!
தொடர்ந்து பார்ப்போம்...
குறிப்பு: இணைக்கப்பட்டுள்ள படங்களை செயற்கை நுண்ணறிவுத் தொழில் நுட்பத்தில் உருவாக்கியுள்ளேன். பிழையிருப்பின் பொறுத்துக் கொள்க.
நன்றி

No comments:

Post a Comment