நலம் புனைந்துரைத்தல்:
கடந்த வாரம் புணர்ச்சி மகிழ்தல்; பற்றிப் பார்த்தோம். இந்த வாரம் நலம் புனைந்துரைத்தல் அதிகாரத்தில் உள்ள குறள்களைப் பற்றிப் பார்ப்போம். நலம் புனைந்துரைத்தல் என்பது காதலின் அழகினை சிறப்பித்து உரைத்தலாகும்.
மலர் என்றாலே மென்மை, அதுவும் அனிச்சம் மலரினை மென்மையிலும் மென்மைக்குக் குறிப்பிடுவர். இதனை முகர்ந்து பார்த்தாலே வாடி விடும் தன்மையுடைய மலராகும்.
இதனை
மோப்பக் குழையும் அனிச்சம் முகந்திரிந்து
நோக்கக் குநழ்யும் விருந்து -90 என்ற பாடலில் தெரிவிக்கிறார். அதாவது அனிச்ச மலர் முகர்ந்தவுடனேயே வாடிவிடும், அதேபோல் விருந்தினர்கள் வருகையின் போது மாறுபட்டு அவர்களைப் பார்த்தால் அவர்கள் முகம் வாடிவிடும் என்கிறார். அனிச்சமலரினை பற்றி ஏற்கனவே தெரிவித்துள்ளர். அந்தளவுக்கு அனிச்சமலரினைப் பற்றிக் குறிப்பிட்டவர், இப்போது நலம் புனைந்துரைத்தலில் எவ்வாறு உவமைப்படுத்துகிறார் என்று பார்ப்போம்.
நன்னீரை வாழி அனிச்சமே நின்னினும்
மென்னீரள் யாம்வீழ் பவள் -1111 என்று குறிப்பிடுகிறார்.
அதாவது அனிச்ச மலரே, நீ எவ்வளவு சிறப்புடைய மென்மைத் தன்மை பெற்றிருக்கிறாய். நீ வாழ்க! ஆனால், நான் விரும்புகின்றவளோ உன்னை விட மிக மென்மைத் தன்மையானவள் என்று தன் காதலியை அனிச்சம் மலரினும் மென்மையாகக் காட்டுகின்றார்.
மேற்கூறியப் பாடலில் அனிச்ச மலரினைச் சுட்டிக் காட்டியவர் அடுத்தப்பாடலில்
மலர்காணின் மையாத்தி நெஞ்சே இவள்கண்
பலர்காணும் பூவொக்கும் என்று -1112 எனக் குறிப்பிடுகிறார்.
புலியூர்க் கேசிகன் அவர்களின் உரையில் மேற்கூறியப் பாடலில் குறிக்கும் பாடலை குவளை மலர்களுடன் ஒப்பிடுகிறார். அதாவது, தலைவன் தனது நெஞ்சத்திடம் சொல்கிறார், நெஞ்சமே, இவள் கண்களும் பலராலும் காணப்படும் இக்குவளை மலரைப் போன்றதாகுமோ, என்று இக்குவளை மலரைக் கண்டால் நெஞ்சமே, நீயும் மயங்குகின்றாயே! என்றுக் குறிப்பிடுகிறார்.
முறிமேனி முத்தம் முறுவல் வெறிநாற்றம்
வேலுண்கண் வேய்த்தோ ளவட்கு -1113
மூங்கில் போன்ற தோள்களை உடைய அவள் இளந்தளிர் மேனி கொண்டவள், முத்துப்பல் வரிசை கொண்டவள், மயக்கத்தை ஏற்படுத்தும் உடல் நறுமணம், மையூட்டப்பட்ட வேல்விழி கொண்டவள் எனது காதலி என்று தலைவன் காதலியின் அழகினை வர்ணித்துள்ளார், இரண்டாயிரம் ஆண்டுகளுக்குப் பிறகு இன்றும் காதலியை வர்ணிப்பவர்களுக்கு முன்னுதாரணமாய் கவி வடித்துள்ளார் அய்யன்.
மற்றொரு கவிதையைப் பார்ப்போமா? குவளை மலர்களை வைத்து கவி வடித்துள்ளார். குவளை மலர்கள் மட்டும் பார்க்கும் திறன் பெற்றால் சிறந்த அணிகளைப் பூண்டிருக்கும் இவன் காதலியின் கண்களைப் பார்த்து விட்டு, ‘இவளுடைய கண்களுக்கு நாம் ஒப்பாக மாட்டோம்” என்று தலையைக் கவிழ்த்து நிலத்தை நோக்குமே என்கிறார் பின்வருமாறு,
காணின் குவளை கவிழ்ந்து நிலன்நோக்கும்
மாணிழை கண்ணொவ்வேம் என்று -1114
மறுபடியும் அனிச்ச மலரை அழைத்து வரும் பாடல், தன் காதலி மென்மையானவள் என்றவர், எந்த அளவிற்கு என்று குறிப்பிடுகிறார்.
அனிச்சப்பூக் கால்களையாள் பெய்தாள் நுகப்பிற்கு நல்ல படாஅ பறை -1115
அதாவது, அனிச்சம் மலரை விட மென்மையானத் தன் காதலி தன்னை அறியாமல் அனிச்சம் மலரை காம்புடன் சூடிக் கொண்டு விட்டாள், ஆதலால் அதன் பாராமல் அவளுடைய இடை ஒடிந்து இருப்பதால் ஒலிக்கப்படும் பறை இசை அவளுக்கு இனிமையாக இருக்காது என்கிறார்.
தொடர்ந்து பார்ப்போம்...
குறிப்பு: இணைக்கப்பட்டுள்ள படங்களை செயற்கை நுண்ணறிவுத் தொழில் நுட்பத்தில் உருவாக்கியுள்ளேன். பிழையிருப்பின் பொருத்துக் கொள்க.
நன்றி
No comments:
Post a Comment