Monday, 12 August 2024

திருக்குறள் வழி நின்று திருவள்ளுவரை அறிதல்- 31

கடந்த வாரம் குறிப்பறிதல் அதிகாரத்தில் உள்ள சில பாடல்களின் விளக்கங்களைப் பார்த்தோம். தற்போது,  பின்வரும் குறளுக்கு, திருவள்ளுவர் ஏற்கனவே நமக்குக் கொடுத்த குறளில் இருந்தே உதாரணம் எடுக்கலாம்
அடுத்தது காட்டும் பளிங்குபோல் நெஞ்சம்
கடுத்தது காட்டும் முகம்-706 
அதாவது, எதிரில் என்ன இருக்கிறதோ அதனை அப்படியே பிரதிபலிக்கும் கண்ணாடி போன்று மனதில் என்ன இருக்கின்றதோ அதனை முகம் பிரதிபலிக்கும் என்கிறார் திருவள்ளுவர். அதே போன்று
ஊறாஅ தவர்போல் சொலினும் செறாஅர்சொல்
ஓல்லை உணரப் படும் (1096) என்கிறார். அதாவது, காதலை மறைத்துக் கொண்டு, புறத்தில் வெளி நபர்களிடம் பேசுவது போல கடுமையான சொற்களை உதிர்த்தாலும், அவளுடைய அகத்தில் கோபமின்றி அன்பு கொண்டிருப்பது விரைவில் வெளிப்பட்டுவிடும். 
கோபம் உள்ள இடத்தில் தான் குணம் இருக்கும் என்று சொல் பிறந்ததும் இதனால் தானோ?
சேறாஅச் சிறுசொல்லும் செற்றார்போல் நோக்கும் 
ஊறாஅர்போன்று உற்றறார் குறிப்பு-1097
பகை எண்ணம் இல்லாத கடுமையான வார்தைகளும்;, பகைவரை சுட்டெரிப்பது போன்ற கடுமையான பார்வையும், புறத்தில் வெளி நபரை போல நடித்துக் கொண்டு உள்ளத்தால் அன்பு கொண்டிருப்பவரை அடையாளம் காட்டும் குறிப்புகளாம் என்று வெளியில் கோபத்தோடு இருப்பது போல காட்டிக் கொண்டாலும் உள்ளத்தில் உண்மையான அன்பானவர்களுக்கான குறிப்பாகச் சொல்கிறார் திருவள்ளுவர். 
பொய்க்கோபம், செல்லக் கோபம் போன்றவைகளை மேற்கண்ட குறளுக்கு இணையானதாகக் கருதலாமோ?
அசையியற்கு உண்டாண்டோர் ஏஎர்யான் நோக்கப்
பசையினள் பைய நகும் -1098.
அவளை இரப்பது போல நான் பார்த்த போது, அதனால் நெகிழ்ந்தவளாய் மெல்ல புன்னகைத்தாள், அதனால் அசையும் இயல்பு உடையவளுக்கு அந்தச் சிரிப்பும் ஓர் அழகுதான் என்கிறார். 
‘நாணமோ, இன்னும் நாணமோ?” என்று பாடத்தோன்றுகிறதா?
ஏதிலார் போலப் பொதுநோக்கு நோக்குதல் 
காதலார் கண்ணே உள -1099
காதலர்களுக்கு என்று ஒரு பொதுவான இயல்பு உள்ளது. அதாவது, அவர்கள் பொது இடத்தில் ஒருவரையொருவர் அந்நியரைப் பார்ப்பது போலப் பார்த்துக் கொள்வர். இது காதலர்களுக்கே உரிய தந்திரம்
கண்ணொடு கண்இணை நோக்கொக்கின் வாய்ச்சொற்கள்
என்ன பயனும் இல -1100
காதலில் உரிய இருவருள், ஒருவர் கண்ணோடு மற்றவர் கண்ணும் தம் நோக்கத்தால் ஒத்ததானால், அவர் வாய்ச் சொற்களால் எந்தப் பயனுமில்லை.  கண்ணும் கண்ணும் பேசும் போது அங்கு உதடுகள் பேச்சுக்கு அவசியம் இல்லை என்கிறார்.
‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் காதல் என்று அர்த்தம் தானோ...?”
தொடர்ந்து பார்ப்போம்...
குறிப்பு: இணைக்கப்பட்டுள்ள படங்களை செயற்கை நுண்ணறிவுத் தொழில் நுட்பத்தில் உருவாக்கியுள்ளேன். பிழையிருப்பின் பொருத்துக் கொள்க.
நன்றி





No comments:

Post a Comment