கடந்த வாரம் குறிப்பறிதல் பற்றிப் பார்த்தோம். இந்த வாரம் புணர்ச்சி மகிழ்தல் அதிகாரத்தில் உள்ள குறள்களைப் பற்றிப் பார்ப்போம்.
கண்டுகேட்டு உண்டுயிர்த்து உற்றறியும் ஐம்புலனும்
ஒண்தொடி கண்ணே உள -1101
கண்ணால் பார்த்தும், காதால் கேட்டும், நாவால் சுவைத்தும், மூக்கால் முகர்ந்தும், தொட்டும் உணர்கின்ற ஐந்தறிவினை வெளிப்படுத்தும் ஐம்புலன்களின் இன்பங்களும் ஒளி பொருந்திய வளையல் அணிந்துள்ள இவளிடேமே உண்டு என்று கூறுகிறார் அய்யன் திருவள்ளுவர்.
பிணிக்கு மருந்து பிறமன் அணியிழை
தன்நோய்க்குத் தானே மருந்து -1102
நோய்களுக்கு வேறு மருந்துகள் இருக்கின்றன, ஆனால், அணிகலன்கள் அணிந்த இவளால் உண்டான நோய்க்கு இவளே மருந்தாக இருக்கின்றாள். வேறு மருந்து கிடையாது என்கிறார்.
தாம்வீழ்வார் மென்றோள் துயிலின் இனிதுகொல்
தாமரைக் கண்ணான் உலகு -1103
தாமரைக் கண்ணனின் உலகம் என்று சொல்கிறார்களே? அது நான் விரும்பும் என்னவளின் தோளைத் தழுவித் தூங்கும் உறக்கத்தைவிட அவ்வளவு இனிமை வாய்ந்ததா என்ன? என்று கேட்கிறார்.
கீழ்வரும் பாடல் நேரிடையாகச் சொல்வது போல் அமைந்துள்ளது ஆனால், அதனை எவ்வளவு நாசூக்காச் சொல்லியிருக்கிறார் அய்யன்.
‘சிற்றின்பம் என்றிதை யார் வந்து சொன்னது
பேரின்பத் தாமரை மலர்கின்றது” என்ற வரிகள் இதனினும் உருவாகியிருக்குமோ?
நீங்கின் தெறூஉம் குறுகுங்கால் தண்ணென்னும்
தீயாண்டுப் பெற்றாள் இவள் -1104
தன்னை விட்டு விலகிச் சென்றால் சுடுகிறது, அருகில் நெருங்கி வந்தால் குளிர்கிறது, இந்த நெருப்பை, இவள் எங்கேயிருந்து தான் பெற்றாள்? என்று தலைவனின் உணர்வினை தன்மையாகக் கூறுகிறார்.
வேட்ட பொழுதில் அவையவை போலுமே
தோட்டார் கதுப்பினாள் தோள்-1105
நினைத்த மாத்திரத்திலே எந்தப் பொருளை நினைத்தோமோ அது விரும்பிய பொழுது வந்து இன்பம் தருவதைப் போல, மலரணிந்த கூந்தலை உடையவளான இவளுடைய தோள்கள் இன்பம் தருகின்றன என்கிறார். என்னே ஒரு கற்பனை!
உறுதோறு உயிர்தளிர்ப்பத் தீண்டலால் பேதைக்கு
அமிழ்தின் இயன்றன தோள் -1106
இந்த இளமங்கையைத் தழுவும் போதெல்லாம் வாடிக் கிடக்கும் எனது உயிர் புத்துயிர் பெறுகிறதே? அழகிய இவளுடைய தோள்கள் அமிழ்தத்தினால் செய்யப்பட்டதாக இருக்குமோ? என்று தீண்டலின் புத்துணர்வினை விளக்குறார் தன் பாணியில்.
தம்மில் இருந்து தமதுபாத்து உண்டற்றால்
அம்மா அரிவை முயக்கு -1107
அழகிய மா நிறமுறைடைய என்னவளைத் தழுவும் போது கிடைக்கும் இன்பமானது, தான் சொந்த உழைப்பில் இருந்து சம்பாதித்தவற்றை பிறருடன் பகிர்ந்து உண்ணும் போது கிடைக்கும் சுகம் போன்றது என்கிறார். இந்த உணர்ச்சியை வார்த்தையால் விளக்குவதைவிட உணர்ந்து பார்க்கும் போது என்னே ஒரு சுகம் என்பதை தானம் செய்தவர்கள் மட்டுமே உணர்வர்.
வீழும் இருவர்க்கு இனிதே வளியிடை
போழப் படாஅ முயக்கு -1108
காற்று புகுந்து செல்ல இயலாத அளவிற்கு இறுக அணைத்துக் கொண்டிருப்பதில் உள்ள சுகமானது காதலர் இருவருக்கும் இனிமை ஏற்படுத்துவதாகும்.
ஊடல் உணர்தல் புணர்தல் இவைகாமம்
கூடியார் பெற்ற பயன் -1109
செல்லமாக சண்டையிட்டுக் கொள்வதும், பிறகு அதனை உணர்ந்து சமாதானம் ஆகி அதன் பின் கூடுதல் இவைதான் இணையர்கள் பெற்றிடும் பெறும் பயன்கள் ஆகும்.
அறிதோறு அறியாமை கண்டற்றால் காமம்
செறிதோறும் சேயிழை மாட்டு -1110
அறியாத விடயங்களை அறியும் போது நம்முடைய அறியாமையை நாம் தெரிந்து கொண்டது போல அழகிய அணிகலன்களை அணிந்திருக்கும் மங்கையிடம் கூடக் கூட அவள் மீது என் காதற்சுவையும் புதிது புதிதாகத் தெரிகிறது.
தொடர்ந்து பார்ப்போம்...
குறிப்பு: இணைக்கப்பட்டுள்ள படங்களை செயற்கை நுண்ணறிவுத் தொழில் நுட்பத்தில் உருவாக்கியுள்ளேன். பிழையிருப்பின் பொருத்துக் கொள்க.
நன்றி
No comments:
Post a Comment