Monday, 26 August 2024

திருக்குறள் வழி நின்று திருவள்ளுவரை அறிதல்- 33

திருக்குறள் வழி நின்று திருவள்ளுவரை அறிதல்- 33:
நலம் புனைந்துரைத்தல்:

கடந்த வாரம் புணர்ச்சி மகிழ்தல்; பற்றிப் பார்த்தோம். இந்த வாரம் நலம் புனைந்துரைத்தல் அதிகாரத்தில் உள்ள குறள்களைப் பற்றிப் பார்ப்போம். நலம் புனைந்துரைத்தல் என்பது காதலின் அழகினை சிறப்பித்து உரைத்தலாகும்.
மலர் என்றாலே மென்மை, அதுவும் அனிச்சம் மலரினை மென்மையிலும் மென்மைக்குக் குறிப்பிடுவர். இதனை முகர்ந்து பார்த்தாலே வாடி விடும் தன்மையுடைய மலராகும். 
இதனை 
மோப்பக் குழையும் அனிச்சம் முகந்திரிந்து
நோக்கக் குநழ்யும் விருந்து -90 என்ற பாடலில் தெரிவிக்கிறார். அதாவது அனிச்ச மலர் முகர்ந்தவுடனேயே வாடிவிடும், அதேபோல் விருந்தினர்கள் வருகையின் போது மாறுபட்டு அவர்களைப் பார்த்தால் அவர்கள் முகம் வாடிவிடும் என்கிறார். அனிச்சமலரினை பற்றி ஏற்கனவே தெரிவித்துள்ளர். அந்தளவுக்கு அனிச்சமலரினைப் பற்றிக் குறிப்பிட்டவர், இப்போது நலம் புனைந்துரைத்தலில் எவ்வாறு உவமைப்படுத்துகிறார் என்று பார்ப்போம். 
நன்னீரை வாழி அனிச்சமே நின்னினும்
மென்னீரள் யாம்வீழ் பவள் -1111 என்று குறிப்பிடுகிறார். 
அதாவது அனிச்ச மலரே, நீ எவ்வளவு சிறப்புடைய மென்மைத் தன்மை பெற்றிருக்கிறாய். நீ வாழ்க! ஆனால், நான் விரும்புகின்றவளோ உன்னை விட மிக மென்மைத் தன்மையானவள் என்று தன் காதலியை அனிச்சம் மலரினும் மென்மையாகக் காட்டுகின்றார். 
மேற்கூறியப் பாடலில் அனிச்ச மலரினைச் சுட்டிக் காட்டியவர் அடுத்தப்பாடலில்
மலர்காணின் மையாத்தி நெஞ்சே இவள்கண்
பலர்காணும் பூவொக்கும் என்று -1112 எனக் குறிப்பிடுகிறார். 
புலியூர்க் கேசிகன் அவர்களின் உரையில் மேற்கூறியப் பாடலில் குறிக்கும் பாடலை குவளை மலர்களுடன் ஒப்பிடுகிறார். அதாவது, தலைவன் தனது நெஞ்சத்திடம் சொல்கிறார், நெஞ்சமே, இவள் கண்களும் பலராலும் காணப்படும் இக்குவளை மலரைப் போன்றதாகுமோ, என்று இக்குவளை மலரைக் கண்டால் நெஞ்சமே, நீயும் மயங்குகின்றாயே! என்றுக் குறிப்பிடுகிறார். 
முறிமேனி முத்தம் முறுவல் வெறிநாற்றம்
வேலுண்கண் வேய்த்தோ ளவட்கு -1113
மூங்கில் போன்ற தோள்களை உடைய அவள் இளந்தளிர் மேனி கொண்டவள், முத்துப்பல் வரிசை கொண்டவள், மயக்கத்தை ஏற்படுத்தும் உடல் நறுமணம், மையூட்டப்பட்ட வேல்விழி கொண்டவள் எனது காதலி என்று தலைவன் காதலியின் அழகினை வர்ணித்துள்ளார், இரண்டாயிரம் ஆண்டுகளுக்குப் பிறகு இன்றும் காதலியை வர்ணிப்பவர்களுக்கு முன்னுதாரணமாய் கவி வடித்துள்ளார் அய்யன். 
மற்றொரு கவிதையைப் பார்ப்போமா? குவளை மலர்களை வைத்து கவி வடித்துள்ளார். குவளை மலர்கள் மட்டும் பார்க்கும் திறன் பெற்றால் சிறந்த அணிகளைப் பூண்டிருக்கும் இவன் காதலியின் கண்களைப் பார்த்து விட்டு, ‘இவளுடைய கண்களுக்கு நாம் ஒப்பாக மாட்டோம்” என்று தலையைக் கவிழ்த்து நிலத்தை நோக்குமே என்கிறார் பின்வருமாறு,
காணின் குவளை கவிழ்ந்து நிலன்நோக்கும்
மாணிழை கண்ணொவ்வேம் என்று -1114
மறுபடியும் அனிச்ச மலரை அழைத்து வரும் பாடல், தன் காதலி மென்மையானவள் என்றவர், எந்த அளவிற்கு என்று குறிப்பிடுகிறார். 
அனிச்சப்பூக் கால்களையாள் பெய்தாள் நுகப்பிற்கு                                                           நல்ல படாஅ பறை -1115
அதாவது, அனிச்சம் மலரை விட மென்மையானத் தன் காதலி தன்னை அறியாமல் அனிச்சம் மலரை காம்புடன் சூடிக் கொண்டு விட்டாள், ஆதலால் அதன் பாராமல் அவளுடைய இடை ஒடிந்து இருப்பதால் ஒலிக்கப்படும் பறை இசை அவளுக்கு இனிமையாக இருக்காது என்கிறார்.  

தொடர்ந்து பார்ப்போம்...
குறிப்பு: இணைக்கப்பட்டுள்ள படங்களை செயற்கை நுண்ணறிவுத் தொழில் நுட்பத்தில் உருவாக்கியுள்ளேன். பிழையிருப்பின் பொருத்துக் கொள்க.
நன்றி




Monday, 19 August 2024

திருக்குறள் வழி நின்று திருவள்ளுவரை அறிதல்- 32

திருக்குறள் வழி நின்று திருவள்ளுவரை அறிதல்- 32
கடந்த வாரம் குறிப்பறிதல் பற்றிப் பார்த்தோம். இந்த வாரம் புணர்ச்சி மகிழ்தல் அதிகாரத்தில் உள்ள குறள்களைப் பற்றிப் பார்ப்போம். 
கண்டுகேட்டு உண்டுயிர்த்து உற்றறியும் ஐம்புலனும்
ஒண்தொடி கண்ணே உள -1101
கண்ணால் பார்த்தும், காதால் கேட்டும், நாவால் சுவைத்தும், மூக்கால் முகர்ந்தும், தொட்டும் உணர்கின்ற ஐந்தறிவினை வெளிப்படுத்தும் ஐம்புலன்களின் இன்பங்களும் ஒளி பொருந்திய வளையல் அணிந்துள்ள இவளிடேமே உண்டு என்று கூறுகிறார் அய்யன் திருவள்ளுவர். 
பிணிக்கு மருந்து பிறமன் அணியிழை
தன்நோய்க்குத் தானே மருந்து -1102
நோய்களுக்கு வேறு மருந்துகள் இருக்கின்றன, ஆனால், அணிகலன்கள் அணிந்த இவளால் உண்டான நோய்க்கு இவளே மருந்தாக இருக்கின்றாள். வேறு மருந்து கிடையாது என்கிறார். 
தாம்வீழ்வார் மென்றோள் துயிலின் இனிதுகொல்
தாமரைக் கண்ணான் உலகு -1103
தாமரைக் கண்ணனின் உலகம் என்று சொல்கிறார்களே? அது நான் விரும்பும் என்னவளின் தோளைத் தழுவித் தூங்கும் உறக்கத்தைவிட அவ்வளவு இனிமை வாய்ந்ததா என்ன? என்று கேட்கிறார். 
கீழ்வரும் பாடல் நேரிடையாகச் சொல்வது போல் அமைந்துள்ளது ஆனால், அதனை எவ்வளவு நாசூக்காச் சொல்லியிருக்கிறார் அய்யன். 
‘சிற்றின்பம் என்றிதை யார் வந்து சொன்னது
பேரின்பத் தாமரை மலர்கின்றது” என்ற வரிகள் இதனினும் உருவாகியிருக்குமோ? 
நீங்கின் தெறூஉம் குறுகுங்கால் தண்ணென்னும்
தீயாண்டுப் பெற்றாள் இவள் -1104
தன்னை விட்டு விலகிச் சென்றால் சுடுகிறது, அருகில் நெருங்கி வந்தால் குளிர்கிறது, இந்த நெருப்பை, இவள் எங்கேயிருந்து தான் பெற்றாள்? என்று தலைவனின் உணர்வினை தன்மையாகக் கூறுகிறார்.  
வேட்ட பொழுதில் அவையவை போலுமே
தோட்டார் கதுப்பினாள் தோள்-1105
நினைத்த மாத்திரத்திலே எந்தப் பொருளை நினைத்தோமோ அது விரும்பிய பொழுது வந்து இன்பம் தருவதைப் போல, மலரணிந்த கூந்தலை உடையவளான இவளுடைய தோள்கள் இன்பம் தருகின்றன என்கிறார். என்னே ஒரு கற்பனை!




உறுதோறு உயிர்தளிர்ப்பத் தீண்டலால் பேதைக்கு
அமிழ்தின் இயன்றன தோள் -1106
இந்த இளமங்கையைத் தழுவும் போதெல்லாம் வாடிக் கிடக்கும் எனது உயிர் புத்துயிர் பெறுகிறதே? அழகிய இவளுடைய தோள்கள் அமிழ்தத்தினால் செய்யப்பட்டதாக இருக்குமோ? என்று தீண்டலின் புத்துணர்வினை விளக்குறார் தன் பாணியில். 
தம்மில் இருந்து தமதுபாத்து உண்டற்றால்
அம்மா அரிவை முயக்கு -1107
அழகிய மா நிறமுறைடைய என்னவளைத் தழுவும் போது கிடைக்கும் இன்பமானது, தான் சொந்த உழைப்பில் இருந்து சம்பாதித்தவற்றை பிறருடன் பகிர்ந்து உண்ணும் போது கிடைக்கும் சுகம் போன்றது என்கிறார். இந்த உணர்ச்சியை வார்த்தையால் விளக்குவதைவிட உணர்ந்து பார்க்கும் போது என்னே ஒரு சுகம் என்பதை தானம் செய்தவர்கள் மட்டுமே உணர்வர்.
வீழும் இருவர்க்கு இனிதே வளியிடை 
போழப் படாஅ முயக்கு -1108
காற்று புகுந்து செல்ல இயலாத அளவிற்கு இறுக அணைத்துக் கொண்டிருப்பதில் உள்ள சுகமானது காதலர் இருவருக்கும் இனிமை ஏற்படுத்துவதாகும்.  
ஊடல் உணர்தல் புணர்தல் இவைகாமம்
கூடியார் பெற்ற பயன் -1109
செல்லமாக சண்டையிட்டுக் கொள்வதும், பிறகு அதனை உணர்ந்து சமாதானம் ஆகி அதன் பின் கூடுதல் இவைதான் இணையர்கள் பெற்றிடும் பெறும் பயன்கள் ஆகும். 
அறிதோறு அறியாமை கண்டற்றால் காமம்
செறிதோறும் சேயிழை மாட்டு -1110
அறியாத விடயங்களை அறியும் போது நம்முடைய அறியாமையை நாம் தெரிந்து கொண்டது போல அழகிய அணிகலன்களை அணிந்திருக்கும் மங்கையிடம் கூடக் கூட அவள் மீது என் காதற்சுவையும் புதிது புதிதாகத் தெரிகிறது. 

தொடர்ந்து பார்ப்போம்...
குறிப்பு: இணைக்கப்பட்டுள்ள படங்களை செயற்கை நுண்ணறிவுத் தொழில் நுட்பத்தில் உருவாக்கியுள்ளேன். பிழையிருப்பின் பொருத்துக் கொள்க.
நன்றி

Monday, 12 August 2024

திருக்குறள் வழி நின்று திருவள்ளுவரை அறிதல்- 31

கடந்த வாரம் குறிப்பறிதல் அதிகாரத்தில் உள்ள சில பாடல்களின் விளக்கங்களைப் பார்த்தோம். தற்போது,  பின்வரும் குறளுக்கு, திருவள்ளுவர் ஏற்கனவே நமக்குக் கொடுத்த குறளில் இருந்தே உதாரணம் எடுக்கலாம்
அடுத்தது காட்டும் பளிங்குபோல் நெஞ்சம்
கடுத்தது காட்டும் முகம்-706 
அதாவது, எதிரில் என்ன இருக்கிறதோ அதனை அப்படியே பிரதிபலிக்கும் கண்ணாடி போன்று மனதில் என்ன இருக்கின்றதோ அதனை முகம் பிரதிபலிக்கும் என்கிறார் திருவள்ளுவர். அதே போன்று
ஊறாஅ தவர்போல் சொலினும் செறாஅர்சொல்
ஓல்லை உணரப் படும் (1096) என்கிறார். அதாவது, காதலை மறைத்துக் கொண்டு, புறத்தில் வெளி நபர்களிடம் பேசுவது போல கடுமையான சொற்களை உதிர்த்தாலும், அவளுடைய அகத்தில் கோபமின்றி அன்பு கொண்டிருப்பது விரைவில் வெளிப்பட்டுவிடும். 
கோபம் உள்ள இடத்தில் தான் குணம் இருக்கும் என்று சொல் பிறந்ததும் இதனால் தானோ?
சேறாஅச் சிறுசொல்லும் செற்றார்போல் நோக்கும் 
ஊறாஅர்போன்று உற்றறார் குறிப்பு-1097
பகை எண்ணம் இல்லாத கடுமையான வார்தைகளும்;, பகைவரை சுட்டெரிப்பது போன்ற கடுமையான பார்வையும், புறத்தில் வெளி நபரை போல நடித்துக் கொண்டு உள்ளத்தால் அன்பு கொண்டிருப்பவரை அடையாளம் காட்டும் குறிப்புகளாம் என்று வெளியில் கோபத்தோடு இருப்பது போல காட்டிக் கொண்டாலும் உள்ளத்தில் உண்மையான அன்பானவர்களுக்கான குறிப்பாகச் சொல்கிறார் திருவள்ளுவர். 
பொய்க்கோபம், செல்லக் கோபம் போன்றவைகளை மேற்கண்ட குறளுக்கு இணையானதாகக் கருதலாமோ?
அசையியற்கு உண்டாண்டோர் ஏஎர்யான் நோக்கப்
பசையினள் பைய நகும் -1098.
அவளை இரப்பது போல நான் பார்த்த போது, அதனால் நெகிழ்ந்தவளாய் மெல்ல புன்னகைத்தாள், அதனால் அசையும் இயல்பு உடையவளுக்கு அந்தச் சிரிப்பும் ஓர் அழகுதான் என்கிறார். 
‘நாணமோ, இன்னும் நாணமோ?” என்று பாடத்தோன்றுகிறதா?
ஏதிலார் போலப் பொதுநோக்கு நோக்குதல் 
காதலார் கண்ணே உள -1099
காதலர்களுக்கு என்று ஒரு பொதுவான இயல்பு உள்ளது. அதாவது, அவர்கள் பொது இடத்தில் ஒருவரையொருவர் அந்நியரைப் பார்ப்பது போலப் பார்த்துக் கொள்வர். இது காதலர்களுக்கே உரிய தந்திரம்
கண்ணொடு கண்இணை நோக்கொக்கின் வாய்ச்சொற்கள்
என்ன பயனும் இல -1100
காதலில் உரிய இருவருள், ஒருவர் கண்ணோடு மற்றவர் கண்ணும் தம் நோக்கத்தால் ஒத்ததானால், அவர் வாய்ச் சொற்களால் எந்தப் பயனுமில்லை.  கண்ணும் கண்ணும் பேசும் போது அங்கு உதடுகள் பேச்சுக்கு அவசியம் இல்லை என்கிறார்.
‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் காதல் என்று அர்த்தம் தானோ...?”
தொடர்ந்து பார்ப்போம்...
குறிப்பு: இணைக்கப்பட்டுள்ள படங்களை செயற்கை நுண்ணறிவுத் தொழில் நுட்பத்தில் உருவாக்கியுள்ளேன். பிழையிருப்பின் பொருத்துக் கொள்க.
நன்றி





Monday, 5 August 2024

திருக்குறள் வழி நின்று திருவள்ளுவரை அறிதல்- 30

குறிப்பறிதல்:

இந்த வாரம் திருக்குறளில் காமத்துப்பாலில்குறிப்பறிதல் என்ற அதிகாரத்தில் இருந்து பார்ப்போம்.

என்னப் பார்வை இந்தப் பார்வை?” என்ற பாடல் கேட்டுள்ளீர்களா? ஆனால் அந்தப் பாடலில் பார்வையின் வகைகள் குறித்து எதுவும் இடம் பெற்றிருக்காது. ஆனால்> தலைவியின் பார்வையில் தலைவன் புரிந்து கொள்ளும் செய்தியை சொல்லும் குறிப்பறிதல் என்ற அதிகாரத்தில் மையுண்ட பார்வை- 1091, கள்ளப்பார்வை -1092, 94,99 வெட்கப் பார்வை /சிரிப்பு -1093,98 கண்ணை புருவத்துள் மறைப்பது போல் சிமிட்டிச் சிரித்தல் -1095, போலி சினப் பார்வை மற்றும் சொல் -1096, 97 என பலவகைகளில் வகைப்படுத்தியுள்ளார் அய்யன் திருவள்ளுவர்.

ஒரு கண்ணின் வெண்ணெய் ஒரு கண்ணில் சுண்ணாம்பு என்று ஓரவஞ்சனை செய்பவர்களை நாம் சொல்லிக் கேட்டிருப்போம். ஆனால் நாம் பார்க்கப் போவது அதுவல்ல... அது இரண்டு நபர்களை மூன்றாம் நபர் எப்படி வேறுவேறு விதமான நிலைப்பாட்டுடன் பார்க்கிறார் என்று அர்த்தமாகிறது. பாம்பின் கடிக்கு பாம்பு விடம்தான் மருந்து என்பது போன்று தலைவியின் பார்வையை விளக்குகிறார் அய்யன் திருவள்ளுவர்.

இருநோக்கு இவளுண்கண் உள்ளது ஒருநோக்கு

நோய்நோக்கொன் றந்நோய் மருந்து -1091 என்கிறார்.

அதாவது இவளுடைய மை தீட்டிய கண்களில் உள்ளது இரண்டு வகையான நோக்கம் இருக்கிறது. அவற்றுள் ஒரு நோக்கம் நோய் செய்தல் ஆகும் மற்றொன்று அதற்கான மருந்தாக அமைகிறது என்கிறார்.

ஒரு புதுக் கவிதை ஒன்று நினைவிற்கு வருகிறது.

என்னைப் பார்த்தவுடன்

தலைகவிழும் உன் இமைகள்

மீன் வலையா? அல்லது கொசுவலையா?”

அதாவது என் நினைவினை மீன் வலைக்குள் மாட்டுவதுபோன்று என்னை உள் இழுத்துக் கொண்டாயா அல்லது கொசுவினை உள்ளே விடாது காக்கும் வலை போல உன் பார்வையில் இருந்து என்னை விலக்கிவிட்டாயா? என்பது போன்று பின்வரும் குறளை நினைக்கத் தோன்றுகிறது.


கண்களவு கொள்ளும் சிறுநோக்கம் காமத்தில்

செம்பாகம் அன்று பெரிது -1092

நான் பார்க்காத போது என்னைக் களவாக பார்க்கும் இவளின் சிறு பார்வையானது, காதலில் சரி பாதி அன்று அதற்கும் மேலாம் என்கிறார் திருவள்ளுவர்.

யான்நோக்கும் காலை நிலன்நோக்கும் நோக்காக்கால்

தான்நோக்கி மெல்ல நகும் -1094

நான் அவளைப் பார்க்கும் போது தலைகுனிந்து நிலத்தினைப் பார்ப்பாள். நான் பார்க்காதபோதோ என்னைப் பார்த்து மெல்ல தனக்குள்ளே சிரிப்பாள். மேற்கண்ட குறளினைப் பார்க்கும் போது வாழ்க்கைப் படகு என்னும் திரைப்படத்தில் கவியரசு கண்ணதாசன் அவர்களின் கைவண்ணத்தில் ஸ்ரீநிவாஸ் அவர்கள் பாடியநேற்றுவரை நீ யாரோ நான் யாரோ என்ற பாடலின் கீழ்க்கண்ட வரிகளை நினைவு படுத்துகின்றதோ பாருங்கள்...

உன்னை நான் பார்க்கும் போது மண்ணை நீ பார்க்கின்றாயே

விண்ணை நான் பார்க்கும் போது என்னை நீ பார்க்கின்றாயே

குறிக்கொண்டு நோக்காமை அல்லால் ஒருகண்

சிறக்கணித்தாள் போல நகும் -1095

அவள் என்னை நேராக உற்றுப் பார்க்கவில்லையே தவிர, ஒரு கண்ணைச் சுருக்கி வைத்துக் கொண்டதைப் போன்று என்னை நோக்கியவாறு தனக்குள் மகிழ்கிறாள்.

கள்ளச் சிரிப்பழகி என்று வைத்துக் கொள்ளலாமா? அல்லது மேற்கண்ட திருக்குறளை காணும் போது,

ஒரு பார்வையிலே என்னை உறைய வைத்தாய்..

சிறு புன்னகையால் என்னை உருக வைத்தாய்

அட நான் என்ற ஆணவம் அழிய வைத்தாய்

உன் பார்வையிலே என்னை பணிய வைத்தாய் என்று பாடத் தோன்றுகிறதா?

குறிப்பு: இணைக்கப்பட்டுள்ள படங்களை செயற்கை நுண்ணறிவுத் தொழில் நுட்பத்தில் உருவாக்கியுள்ளேன். பிழையிருப்பின் பொருத்துக் கொள்க.
நன்றி