Monday, 29 April 2024

திருக்குறள் வழி நின்று திருவள்ளுவரை அறிதல்- 16:

திருக்குறள் வழி நின்று திருவள்ளுவரை அறிதல்- 16:
தற்போது கோடைக் காலமாக இருப்பதால் ஏற்கனவே வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் திருக்குறளிலும் உங்களை தீவிர ஆராய்ச்சியில் ஆழ்த்தாமல், கொஞ்சம், அய்யன் திருவள்ளுவரின் தத்துவங்களைப் 







பார்க்கலாமா?
நாம் இக்காலங்களில் நிறைய மீம்ஸ் பார்க்கிறோம், நிறைய தத்துவங்களைப் பகிர்கிறோம், சில சமயங்களில் நமக்குப் பிடித்த புகழ் பெற்ற மேதைகள் சொல்லாத வார்த்தைகளைக் கூட நமக்குத் தெரிந்த தத்துவத்தை அவர் சொன்னதுபோல் சொல்லக் கேட்டிருக்கிறோம். எல்லாவற்றிற்கும் தன்னிடம் தரவுகளும் தகவல்களும் வைத்திருக்கும் வள்ளுவரிடம் தத்துவங்கள் இல்லாமல் போகுமா? தமிழாசிரியர்கள் பலரும் அரசியலாளர்கள் பலரும் தத்துவம் சொல்லும் போது அவர்களே அறிந்தும் அறியாமலும் திருக்குறளில் இருந்து மேற்கோள் காட்டுவதண்டு அவ்வாறான சில தத்துவங்களை அல்லது பொன்மொழிகளைப் பார்ப்போமா?
1. நீரின்றி அமையாது உலகு -20
2. செயற்கரிய செய்வார் பெரியர் - 26
3. அறத்தினூங்கு ஆக்கமும் இல்லை – 32
4. அறத்தான் வருவதே இன்பம்  - 39
5. அறனெனப் பட்டதே இல்வாழ்க்கை- 49
6. வளத்தக்காள் வாழ்க்கைத் துணை- 51
7. மங்கலம் என்ப மனைமாட்சி -60
8. தம்பொருள் என்ப தம் மக்கள் - 63
9. அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ் - 71
10. அன்பிலார் எல்லாம் தமக்குரியர் - 72
11. அன்புஈனும் ஆர்வம் உடைமை-74
12. அன்பின் வழியது உயிர்நிலை – 80
13. செல்விருந்து ஓம்பி வருவிருந்து பார்த்திருப்பான் -86
14. உடைமையுள் இன்மை விருந்தோம்பல் - 89
15. மோப்பக் குழையும் அனிச்சம் -90
16. முகத்தான் அமர்ந்துஇனிது நோக்கி – 93
17. இனிய உளவாக இன்னாத கூறல் - 100
18. மறவற்க மாசற்றார் கேண்மை -106
19. நன்றி மறப்பது நன்றன்று -108
20. நன்றல்ல தன்றே மறப்பது நன்று -109
21. உய்வில்லை செய்ந்நன்றி கொன்ற மகற்கு -110
22. அடக்கம் அமரருள் உய்க்கும் - 121
23. யாகாவாரார் ஆயினும் நாகாக்க -127
24. ஆறாதே நாவினால் சுட்ட வடு -129
25. ஒழுக்கம் உயிரினும் ஓம்பப் படும் - 131
26. நன்றிக்கு வித்தாகும் நல்லொழுக்கம் - 138
27. உலகத்தோ டொட்ட ஒழுகல் - 140
28. பிறன்மனை நோக்காத பேராண்மை – 148
29. அகழ்வாரைத் தாங்கும் நிலம் போல – 151
30. பொருத்தார்கும் பொன்றும் துணையும் புகழ் -156
31. வேண்டற்க வெஃகியாம் ஆக்கம் - 177
32. ஒருவன் புறங்கூறான் என்றல் இனிது – 181
33. சொல்லற்க முன்இன்று பின்நோக்காச் சொல் - 184
34. அறிவினார் சொல்லார் பெரும்பயன் இல்லாத சொல் -198
35. சொல்லுக சொல்லிற் பயனுடைய – 200
36. சொல்லற்க சொல்லில் பயனிலாச் சொல் -200
37. மறந்தும் பிறன்கேடு சூழற்க – 204
38. இலன்என்று தீயவை செய்யற்க -205
39. கைம்மாறு வேண்டா கடப்பாடு  - 211
40. ஒத்த தறிவான் உயிர்வாழ்வான் - 214
41. ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம் - 215
42. வறியார்க் கொன்று ஈவதே ஈகை -221
43. சாதலின் இன்னாதது இல்லை – 230
44. ஈதல் இசைபட வாழ்தல் - 231
45. தோன்றின் புகழொடு தோன்றுக – 236
46. வசைஒழிய வாழ்வாரே வாழ்வார் - 240
47. அருளில்லார்க்கு அவ்வுலகம் இல்லை – 247
48. பொருளில்லார்க்கு இவ்வுலகம் இல்லாகி யாங்கு – 247
49. உண்ணாமை உள்ளது உயிர்நிலை – 255
50. உள்ளத்தால் உள்ளலும் தீதே -    282
இன்னும் பார்ப்போம்...

Monday, 22 April 2024

திருக்குறள் வழி நின்று திருவள்ளுவரை அறிதல்- 15 நீர் மேலாண்மையில் வள்ளுவர்:

                             திருக்குறள் வழி நின்று திருவள்ளுவரை அறிதல்- 15

நீர் மேலாண்மையில் வள்ளுவர்:

விண்இன்று பொய்ப்பின் விரிநீர் வியனுலகத்து

உள்நின்று உடற்றும் பசி -13 என்று திருக்குறளில் திருவள்ளுவர் மழையானது பெய்கின்ற காலத்தில் பெய்யாது, பொய்த்துப் போகும் என்றால், கடல் நீரால் சூழ்ந்துள்ள இப்பரந்த உலகினுள் பசி நிலைபெற்று உயிர்களை வாட்டும் என்று குறிப்பிடுகிறார். அதாவது இந்த பரந்த உலகம் முழுமையும் கடலால் சூழப்பட்டாலும் மழையில்லையெனில் அதன் கொடுமை அதனை நேரடியாக விவசாயத்தில் பருவமழை தவறியதால் ஏற்பட்ட இழப்பினை சந்தித்தவரும், கோடையில் கொடும் வெயிலில் நீர் கிடைக்காமல் தவித்தவருக்கும் எளிதில் புரியும். கடந்த வாரம் கூட இப்படிபட்ட வறட்சியில் எல்லீசன் அவர்கள் கிணறு வெட்டியது கூடப் பார்த்தோம்!

மழைநீரானது நிலவளம், கடல்வளம், மக்களின் மனவளம் மற்றும் உலக ஒழுங்கு ஆகிய அனைத்திற்கும் முக்கியக் காரணமாக அமைகிறது என திருவள்ளுவர் உரைத்துள்ளார்.

உதாரணமாகக் குறிப்பிட வேண்டுமெனில் வாழ்க்கைத் துணைநலம் என்னும் அதிகாரத்தில் மழையினால் உலகம் எவ்வாறு நிலைபெறுகிறதோ அதேபோல் கற்புடைய பெண்களாலும் உலகம் நிலைபெறுகிறது என்பதை குறிக்கவே கணவனை மனதில் நினைத்து வணங்கி நித்திரையில் இருந்து எழும் கற்புடைய பெண் கணவன் மற்றும் அனைவரின் நலம் வேண்டிக் கடவுளை வழிபாடு செய்பவள். எல்லோரும் விரும்பியபோது பெய்த மழையாவாள் என்று குறிப்பிடுகிறார்.

தெய்வம் தொழாஅள் கொழுநற் றொழுதெழுவாள்

பெய்யெனப் பெய்யும் மழை – 55 என்ற குறளில் பெண்ணை உருவகமாகக் குறிப்பிட்டுள்ளார்.

அதேபோன்று, ஆட்சி அதிகாரமும் மழையினைப் போன்று காலத்தே சரியானதொரு சேவைகளையும், திட்டங்களையும், குடிமக்களை கவலையின்றியும் வைத்திருக்க வேண்டும் என்பதனை செங்கோன்மை அதிகாரத்தில் திருவள்ளுவர்கள் குறிப்பிடுகையில்,

வானோக்கி வாழும் உலகெல்லாம்; மன்னவன்

கோல்நோக்கி வாழுங் குடி- 542

உலகத்தின் உயிர்கள் அனைத்தும் மழைநீரையை எதிர்பார்த்துக் காத்திருக்கும் அதுபோன்று மன்னவனின் செங்கோலாட்சியை எதிர்பார்த்து குடிமக்கள் காத்திருப்பர் என்று செங்கோலாட்சி மழைநீர் அளவிற்கு முக்கியமானதாக அமைய வேண்டும் என்று ஆள்பவர்களுக்கு அறிவுரை பகர்கிறாh.

மேலும் ஒரு நாட்டிற்கு முக்கியமாக நல்ல அரணாக விளங்குவது பற்றிக் குறிப்பிடுகையில், அரண் என்னும் அதிகாரத்தில்:

மணிநீரும் மண்ணும் மலையும் அணிநிழற்

காடும் உடைய தரண் -742 என்று குறிப்பிடுகிறார். அதாவது மணிபோல் தெளிந்தநீரும், வெட்ட வெளியான நிலமும், மலையும், அழகிய நிழல் உடைய காடும் ஆகிய நான்கும் உள்ளதே ஒரு நாட்டிற்கு அரணாகும் என்றுக் குறிப்பிடுகிறார். நீரைத் தவிர்த்து நாட்டிற்கு அரண் எதுவும் இல்லை என்பது நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

 

1784 ஆம் ஆண்டு ஹென்றி கேவண்டிஷ் என்பவர் நீரானது இரண்டு ஹைட்ரஜனை ஆக்சிஜனுடன் எரித்து தண்ணீர் உருவாக்க முயற்சி செய்தார். ஆனால், அது எதிர்பார்த்த மாதிரி நிகழவில்லை. பிறகு, 1811 ஆம் ஆண்டு இத்தாலி நாட்டு இயற்பியலாலர் அமீடோ அவகாட்ரோ என்பவர் நீருக்கான சூத்திரத்தை வகுத்தார்.

மேற்கூறியவர்கள் நாம் கையாளும் நீரானாது எந்த வேதி வினைகளால் நடைபெறுகிறது என்பதை ஆய்வதில் தீவிரமாக இருந்து ஆய்வினை வெளியிட்டவர்கள். ஆனால், நமது அய்யன் திருவள்ளுவரோ அனைத்து உயிர்களுக்கும் வான்நீரே ஆதாரம் என்று தீர்க்கமாகக் கூறியுள்ளார்.

வான்சிறப்பின் முதல் இரண்டு குறட்பாக்களும் உணவும் நீரும் வழங்கும் மழையின் வள்ளண்மையினையும் மற்ற பாடல்கள்கள் மழையின்மையால் உலகில் ஏற்படும் மாறுபாடுகளையும் விளக்குகின்றன.

மழைநீரே சங்க இலக்கியங்களில் பின்வருமாறு குறிப்பிட்டுள்ள நீர் நிலைகளுக்கும் ஆதாரமாக உள்ளது.

சங்க இலக்கியங்களில் நீர் நிலைகளின் வகைகள் :

1.           அகழி (Moat) – கோட்டையின் புறத்தே அகழ்ந்தமைக்கப்பட்ட நீர் அரண்

2.           அருவி (Water falls)

3.           ஆழிக் கிணறு (Well in Sea-shore)

4.           ஆறு (River)

5.           இலஞ்சி (Reservoir for drinking and other purposes)

6.           உறை கிணறு (Ring well)

7.           ஊருணி (Drinking water tank)

8.           ஊற்று (Spring)

9.           ஏரி (irrigation Tank)

10.         ஓடை (Brook)

11.         கட்டுங்கிணக் கிணறு (Build-in Well)

12.         கடல் (Sea)

13.         கண்மாய் (Irrigation tank)

14.         கலிங்கு (Sluice with many Venturis)

15.         கால் (Channel)

16.         கால்வாய் (Supply channel to tank)

17.         குட்டம் (Large Pond)

18.         குட்டை (Small Pond)

19.         குண்டம் (Small Pool)

20.         குண்டு (Pool)

21.         குமிழி (Rock cut well)

22.         குமிழி ஊற்று (Artesian Fountain)

23.         குளம் (Bathing Tank)

24.         கூவம் (Abnormal Well)

25.         கூவல் (Hollow)

26.         வாளி (Stream)

27.         கேணி (Large Well)

28.         சிறை (Reservoir)

29.         சுனை (Mountain Pool)

30.         சேங்கை (Tank with Duck weed)

31.         தடம் (Beautifully constructed bathing tank)

32.         தளிக்குளம் (Tank surrounding a temple)

33.         தாங்கல் (Irrigation Tank)

34.         திருக்குளம் (Temple Tank)

35.         தெப்பக்குளம் (Temple tank inside pathway along  Parapet wall)

36.         தொடு கிணறு (Dig well)

37.         நடைகேணி (Large well wih steps on one side)

38.         நீராவி (Bigger tank with center Mantapam)

39.         பிள்ளைக் கிணறு (Well in middle of a tank)

40.         பொங்கு கிணறு (Well with bubling spring)

41.         பொய்கை (Lake)

42.         மடு (Deep place in a river)

43.         மடை (Small sluice with singleventuri)

44.         மதகு (Sluice with many venturis)

45.         மறு கால் (Surplus water channel)

46.         வலயம் (Round tank)

47.         வாய்க்கால் (Small water course)

 

 

Monday, 15 April 2024

திருக்குறள் வழி நின்று திருவள்ளுவரை அறிதல்- 14

திருக்குறள் வழி நின்று திருவள்ளுவரை அறிதல்- 14
நீர் மேலாண்மையில் வள்ளுவர்:
கடந்த வாரம் திருக்குறளில் நீர்ச்சுழற்சியின் இன்றியமையாதனக் குறித்துப் பார்த்தோம். 
ஒரு திருக்குறள் ஒரு அதிகாரியை கிணறு தோண்டி மக்களின் தாகத்தைத் தீர்க்க உதவியது என்றால் உங்களால் நம்ப முடிகிறதா?. எல்லீசன் என்று தமிழின் மரபுப்படி தனது பெயரை மாற்றிக்கொண்ட Francis Whyte Ellis என்ற பிரித்தானிய அரசின் கீழ் பணியாற்றிய ஒரு அதிகாரி ஆவார். 
திருக்குறள் மீது மிகுந்த பற்றுக் கொண்ட இவர், சென்னையில் 1818 இல் கடும் வறட்சி ஏற்பட்டது. அப்போது சென்னைக் கலெக்டராக இருந்த எல்லீசன் 27 கிணறுகளை வெட்டினார். அவற்றில் ஒன்று இராயப்பேட்டை பெரிய பாளையத்தம்மன் கோயிலில் இன்றும் உள்ளது. இவற்றின் கைப்பிடிச் சுவரில் பதிக்கப்பட்டிருந்த ஒரு கல்லில் எல்லீசனின் நீண்ட கவிதை ஒன்று இருந்தது. 
அதில்
...சாயங்கொண்ட தொண்டிய சாணுறு நாடெனும்
ஆழியில் இழைத்த வழகுறு மாமணி
புனகடல் முதலாக புடகலளவு
நெடுநிலந்தாழ நிமிர்ந்திரு சென்னப் 
பட்டணத் தெல்லீசன்னென்பவன் யானே  
பண்டார காரிய பாரஞ்சுமக்கையிற்
தெய்வப் புலமை திருவள்ளுவனார் 
திருக்குறடன்னிற் றிருவுளம் பற்றிய 
‘இரு புனலும் வாய்ந்த மலையும் வருபுனலும்
வல்லரணு நாட்டிற் குறுப்பு 
என்பதின் பொருளை யென்னுளாய்ந்து..
என்று எழுதியுள்ளார் எனில் மேற்கூறிய திருக்குறள் அவரை எந்தளவு மேலாண்மையில் அதுவும் நீர் மேலாண்மையில் ஆளுகை செய்ய

வைத்துள்ளது என்பதை அறிய முடிகிறது. 
எல்லீசன் அவர்கள் குறிப்பிட்டுள்ள திருக்குறளின் பொருள் பின்வருமாறு:
ஆறு மற்றும் கடல் என்னும் இரு புனலும், வளர்ந்தோங்கி நீண்டு அமைந்த மலைத் தொடரும், வரு புனலாம் மழையும் வலிமை மிகு அரணும் ஒரு நாட்டின் சிறந்த உறுப்புகளாகும் என்று குறிப்பிடுகிறார். ஆக, நமது ஆட்சியமை வலிமையாக இருக்கவேண்டும் எனில் அவசியம் நீர் இருத்தல் அவசியம் என்பதையுணர்ந்த எல்லீசன் அவர்கள் மேற்கண்ட கவிதையினை வடித்து கல்வெட்டில் பதித்துள்ளார். 
என்னே ஒரு தமிழ் பற்று! திருக்குறள் பற்று! மற்றும் பொருள் உணர்ந்து அதனைக் கடைபிடிக்கும் தன்மை!
திருவள்ளுவர் நீரின் முக்கியத்துவம் குறித்துப் பேசுகையில் மழைநீருக்குத்தான் அதிக முக்கியத்துவம் அளித்துப் பேசுகிறார். ஆகவே, வான்சிறப்பு என்ற அதிகாரத்தினையே இயற்றியுள்ளார். 
இதில் மிகவும் பிரசித்தி பெற்றக் குறளான,
துப்பார்க்கு துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத் 
துப்பாய தூஉம் மழை – 12

இதில் துத்தற்சொல் நான்குமுறை வந்தது சொற்பொருட் பின்வருநிலையணியாகும். துப்பாய துப்பாக்கி என்பது சொற்பின் வருநிலையணி. துப்பாய தூஉம் என்பது இசைநிறை அளபெடை என்னும்  அமைப்பில் இயற்றப்பட்ட இப்பாடல் மழைநீரின் தன்மையினைக் குறிப்பிடுகிறது. அதுமட்டுமல்லாது மனிதர்களுக்கு இருக்க வேண்டிய இரக்கக் குணத்தினையும் இது குறிப்பிடுகிறது. மழை நீரானது உண்பருக்குத் தகுந்த பொருட்களை விளை வித்துத் தந்து அவற்றைப் பருகுவோர்க்குத் தானும் ஒர் உணவாக (பருகும் நீராக) விளங்குவது மழையே ஆகும் என்று திருக்குறளில் குறிப்பிடுகிறார். இந்தத் தன்மையினை மனிதர்களுக்


கு வேண்டிய கொடைத் தன்மைக்கும் சான்றாகக் குறிப்பிடலாம்.
தற்போது தேர்தல் நேரமாக இருக்கிறது. இதில் பல சந்தர்ப்பவாதிகள் தங்களுடைய அறிவினை தான் எங்கு சேர்ந்துள்ளாரோ அதற்கேற்ப மாற்றிக் கொள்வதுண்டு. பல்வேறு மனிதர்களும் அவ்வாறே தன்னுடைய அறிவினை தான் சேர்ந்துள்ள இனத்திற்கேற்ப மாற்றிக் கொள்கின்றனர். இதனையே அரசியல் என்னும் அதிகாரத்தில் வள்ளுவர் இவ்விதம் குறிப்பிடுகிறார். 
நிலத்தியல்பால் நீர்திரிந் தற்றாகும் மாந்தர்க்கு 
இனத்தியல்ப தாகும் அறிவு- 452. 
அதாவது நிலத்தில் சேர்ந்தவுடன் நீர் தான் சேர்ந்த நிலத்தின் தன்மையால் நீர் இயல்பை இழந்து, அந்த நிலத்தின் இயல்பாக மாறிவிடும். அதுபோல மக்களின் அறிவும், தாங்கள் சேர்ந்த இனத்தின் இயல்பாகவே மாறிவிடும் என்பதாகும். 
தொடர்ந்து பார்ப்போம். 



Thursday, 11 April 2024

திருக்குறள் வழிநின்று திருவள்ளுவரை அறிதல்-13

திருக்குறள் வழிநின்று திருவள்ளுவரை அறிதல்-13




நீர் மேலாண்மையில் வள்ளுவர்:
நீரின் இன்றியமையாயைக் குறித்துப் பேச வேண்டும் என்றாலே கீழ் வரும் திருக்குறளின் வரிகள் 
‘நீரின்றி அமையாது உலகு” என்ற வாக்கியமே அத்தனை அர்த்தங்களையும் உள்ளடக்கிவிடும். இதற்கு மேல் நீரினைப் பற்றி பேச ஒன்றுமே இல்லை எனலாம். அத்தகைய சொல் வல்லமை பொருந்தியவர் நமது திருவள்ளுவர். சொல் வல்லமை மட்டுமல்லாது கருத்துச் செறிவு நிறைந்வை அவருடைய வார்த்தைகள். இனி நமது ஐயன் நீரின் மகிமையினை எவ்விதம் கையாண்டுள்ளார் என்றுக் காணலாம். 
வள்ளுவப் பெருந்தகை நீரினை பல்வேறு வடிவங்களில் வான்நீராகவும், நிலநீராகவும் குறிப்பிட்டுள்ளார். நீர் என்ற வார்;த்தை மட்டுமே திருக்குறளில் 25 முறை இடம் பெற்றுள்ளது. 
தற்போதைய சூழலில் பலருடைய கருத்தும் பின்வருமாறு இருப்பதை நீங்கள் ஒருவேளை எதிர் கொண்டிருக்கலாம், அல்லது நீங்களே உணர்ந்திருக்கலாம்.
இப்போது பாருங்கள், வெயில் எப்படி சட்டெரிக்கிறது? மழை அடித்தபோது எவ்வளவு நீர் வீணாகக் கடலில் கலந்தது? அதனைக் கடலில் கலக்காமல் திருப்பி பாசனத்திற்கும், குடி தண்ணீருக்கு சேமித்தும் வைத்திருந்தால் எவ்வளவு பயனுள்ளதாக இருந்திருக்கும்? நமது அரசு ஏன் இதைச் செய்ய மாட்டேன் என்கிறது? சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் ஏன் அபத்தமாக ஆற்று நீர் கடலில் கலப்பதை தடுக்காதே என்கிறார்கள்? நமக்காக ஈந்த மழைநீர் வீணாக அல்லவா போய் விட்டது? 
இதற்கு நம் அறிஞர் ஆசான் திருவள்ளுவர் அவர்கள் வான்சிறப்பு என்னும் அதிகாரத்தில் குறிப்பிடுவது இதுதான், 
நெடுங்கடலும் தன்நீர்மை குன்றும் தடிந்தெழிலி
தான்நல்கா தாகி விடின் - குறள் -17
அதாவது மேகமானது கடல் நீரை முகந்து கொண்டு சென்று, மீண்டும் மழையாகப் பெய்யாவிட்டால் அப்பெரிய கடலும் தன் வளமையில் குறைந்து போகும் என்கிறார். 

பெர்னார்டு பாலிசி என்பவரே முதன் முதலில் நீர்ச்சுழற்சி குறித்த கோட்பாட்டினை கி.பி. 1580 ஆம் ஆண்டு வெளியிட்டார். ஆனால் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே நமது அய்யன் திருவள்ளுவர் இக்கருத்தினை இந்த குறளில் வெளியிட்டுள்ளார் என்பது எவ்வளவு வியப்பிற்குரியது!
மேலும், இக்குறளின் அடிப்படையில் என்ன பெரிய கடலும், வளமையில் குன்றுமா? வாய்ப்பேயில்லை என்று ஒருவேளை நினைத்தால் நாம் 
கொஞ்சம் அறிவியல் பேசுவோம், ஏனெனில் நம் ஆசான், சகலத்தையும் உணர்ந்தவர் அவர் என்ன உணர்த்த வருகிறார் என்று தெரிய வேண்டுமெனில் கொஞ்சம் அறிவியலும் அறிய வேண்டும். பொதுவாக நீர்மங்களின் அமிலம் மற்றும் காரத் தன்மைகளை Pர் என்று அளவுகளில் தீர்மானிக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் கடல் நீரின் Pர் மதிப்பு 7.4 முதல் 8.3 வரை இருக்கும். இது அதிகமானால் கடல் வாழ் உயிர்களின் வாழ்க்கை பாதிப்புக்கு உள்ளாகி அழிந்து மடியும். இந்த மாறுபாடுகள் நிகழ்வது கடலில் ஆறுகளால் கொண்டு வந்து சேர்க்கப்படும் உப்பு மற்றும் தனிமங்களால் தான். 
கடலுக்கு அடியில் சென்று பார்ப்போமானால் கடலடியில் உள்ள புவி மேலோட்டிலிருக்கும் வெடிப்புகள் வழியாக உள்ளே செல்லும் கடல் நீர் அங்கே சூடாகி அங்குள்ள தனிமங்களைச் சேர்த்துக் கொண்டு மறுபடியும் வெந்நீர் ஊற்றுகள் வழியாக மீண்டும் கடலில் சேர்கிறது. இது மட்டுமல்லாமல் கடலுக்கும் இருக்கும் எரிமலைகள் வெளியிடும் சூடான பாறைகளின் வேதிப்பொருட்களும் கடலில் கலக்கின்றன. மேலும் காற்றின் வழியாகவும் நிலத்திலிருந்து துகள்கள் கடலில் சேருகின்றன. இப்படிச் சேரும் பல வகை உப்புக்கள் கடல் வாழ் உயிரிகளால் உறிஞ்சப்படுகின்றன. உதாரணமாக பவழ பாலிப்புகள், மெல்லுடலிகள், ஓட்டுடலிகள் ஆகியவை உப்பிலுள்ள கால்சியத்தை உட்கொள்கின்றன. இதை உபயோகித்து தங்கள் ஓடுகளையும் எலும்புக் கூடுகளையும் அவை உருவாக்குகின்றன. இது போலவே மற்றைய உயிர்களும் உப்புகளை எடுத்துக் கொள்கின்றன. இப்படியே ஒரு சுழந்சி நடைபெற்றுக் கொண்டே இருக்கிறது. ஆறுகள் நன்னீரைக் கொண்டு கடலில் சேர்க்காவிட்டால் உப்புத்தன்மை அதிகமாகிவிடும். 
‘தடிந்தெழிலி தான்நல்கா தாகி விடின்” எழிலி என்றால் மேகம், தடித்து என்றால் திரண்டு இருத்தல், மின்னல் என இரண்டு பொருட்களையும் சொல்கிறது. என்றால் திரண்டு எழுந்த மின்னலடிக்கிற மேகம் என்று பொருளை உணர்த்துகிறது. ‘நல்குதல்” எனில் பெருங்கொடை. ‘தடிந்தெழிலி”யால் தான் கடலில் நீர்கொண்டு சேர்க்கும் பெருங்கொடையாகிப் பெருமழையைத் தரமுடியும். சிறுமேகங்கள் பொழிந்தால் நிலத்தோடு மழை நின்று விடும். நிலத்தின் உப்புகளை கடலில் சேர்க்க முடியாமல் போகும். 
பெருமழை பெய்து ஆறுகள் வழியாக உப்பும் நீரும் கடலில் கலக்காவிடின் கடலில் நீர்மை குன்றிவிடும். அடர்த்தியல்ல நீர்மை குறையும் என்கிறார். நீர்மை குறைந்தால் அடர்த்தி அதிகமாகும். அதுவே உயிர்கள் வாழ்க்கையை சிக்கலாக்கும். மேலும், ஆறுகள் உருவாக்கும் நிலப்பகுதி உயர்ந்து வரும் கடல் மட்டத்தைச் சமன் செய்து கடலோரப் பகுதிகளை காப்பாற்றும். , மேலும் கடல் நீர் நிலத்தடி நீருடன் கலப்பதையும் தடுக்கும். ஆறுகளால் கழிமுகப் பகுதியில் உருவாகும் வண்டல் மண் பகுதி வளமானது. 8 கோடி ஆண்டுகள் முன் கடல் திருச்சி அருகே இருந்தது. ஏந்தத் தடையும் அணையும் இல்லாத போது பிரம்மபுத்திராவை விட வலிமையான காவிரியின் வண்டல் மண் மூலம் உருவாக்கிய நிலப்பகுதி தஞ்சை, நாகை, திருவாரூர், கடலூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்கள் ஆகும். 
நாகப்பட்டினம் மற்றும் திருவாரூரில் நீர் உப்பானதற்குக் காரணம் குறைவான ஆற்று நீர் வரத்து மற்றும் கடல் நீர் உட்புகுதல் ஆகும். மேலும், ஆற்றின் கழிமுகப் பகுதிகளில், கடல் மற்றும் ஆறுகள் கலக்கும் இடத்தில் வாழும் மீன்கள் மற்றும் நண்டுகள் போன்ற உயிரினங்களுக்கு அலையாத்திக் காடுகளில் உள்ள சில தாவர வகைகளுக்கு ஆறுகள் மூலம் கிடைக்கும் நன்னீர் மிகவும் அவசியமாகும். கடல்வாழ் உயிரினங்களின் உணவுச் சங்கிலியின் அடிப்படை உணவான பைட்டோ பிளாங்டன் உற்பத்திக்கு ஆற்று நீர் கொண்டு வரும் வண்டல் அவசியமாகும். பைட்டோ பிளாங்டன் ஆக்சிஜனை உற்பத்தி செய்து கடல் நீரில் உயிர்வளியை நிலைப்படுத்தும். மேற்கூறியவை ஆறுகள் எவ்வளவு முக்கியம் என்று உணர்ந்திருக்க உதவும் என்று நம்புகிறேன். ஆனால், தற்போது ஆந்திர அரசு பாலற்றின் குறுக்கே பல்வேறு தடுப்பணைக் கட்டுவது, ஒரு ஆற்றில் பல்வேறு அணைகளை அமைத்து நீரின் ஓட்டத்தை சுத்தமாக நிறுத்த முனைவது அறிவியல் வளர்ச்சி அல்லது நீர் மேலாண்மை என்று நாம் மார்தட்டிக் கொள்ள முடியாது. இதற்கு சிறந்த உதாரணத்தை நாம் காணலாம். 

ஏரல் கடலின் தற்போதைய நிலை:
 
ஏரல் கடல் என்பது கசகஸ்தான் மற்றும் உஸ்பெகிஸ்தான் இடையே அமைந்துள்ள நிலத்தால் சூழப்பட்ட கடலாகும், இதன் நிலப்பரப்பினைக் கருத்தில் கொண்டு உலகின் மிகப் பெரிய நான்காவது ஏரி என்று கூட சொல்வதுண்டு. 1960 ஆம் 68000 சதுர கிலோமீட்டர் பரப்பளவைக் கொண்ட இந்நீர்நிலை மனிதர்களின் நடவடிக்கையால் இப்போது 85 சதவீத நீர் நிலையினை இழந்துள்ளது. இதற்குக் காரணம் இந்தக் கடலிற்குச் சென்று கொண்டிருந்த ஆமூதாரியா மற்றும் சிர்தாரியா என்னும் ஆறுகளை நீர்ப்பாசன தேவைக்காக இரசிய அரசால் திசைத் திருப்பப்பட்டதே இதற்குக் காரணமாகும்.  இதன் விளைவாக நீர் இல்லாததாலும் உள்ள நீரும் ஆவியாதலாலும் உப்புப் படிகங்கள் உருவாக ஆரம்பித்தன. மீன்பிடித் தொழில் மற்றும் இந்நீர் நிலையை உள்ளடக்கிருந்த தொழில்கள் நலிவடைந்தன. உயிரினங்கள் அழியத் தொடங்கின. இந்தப் பகுதியில் பெரிய வெட்ட வெளியில் வீசும் காற்று தூசி புயல்களை உருவாக்குகிறது. இது உப்பு, உரம் மற்றும் பூச்சி;க் கொல்லிகளால் மாசுபடுத்தப்பட்ட நச்சுத் தூசியால் அப்பகுதியைத் தாக்கிறது. இதன் விளைவால் அப்பகுதியில் வசிப்பவர்கள் வழக்கத்திற்கு மாறாக அதிக விகிதத்தில் உடல் நலப் பிரச்சினைகளை சந்தித்துள்ளனர். தொண்டை புற்றுநோய் முதல் இரத்த சோகை மற்றும் சிறுநீரக நோய்கள் வரை மற்றும இப்பகுதியில் குழந்தை இறப்பு உலகிலேயே மிகவும் அதிகமாக உள்ளது. 
தற்போது அறிந்திருப்பீர்கள் என்று கருதுகிறேன். ஆறுகளை கடலுக்குச் செல்லவிடாமல் தடுத்தால் என்ன நிகழும் என்பதை! 
இன்னும் பார்ப்போம்…

Monday, 1 April 2024

திருக்குறள் வழிநின்று திருவள்ளுவரை அறிதல்-12 குண்டலகேசியில் திருக்குறள் கருத்துக்கள்:

திருக்குறள் வழிநின்று திருவள்ளுவரை அறிதல்-12
குண்டலகேசியில் திருக்குறள் கருத்துக்கள்:






தமிழ் இலக்கியங்களில் ஐந்து பெரும் காப்பியங்களில் சிலப்பதிகாரம், மணிமேகலை, சீவக சிந்தாமணி மற்றும் வளையாபதியில் திருக்குறளின் தாகக்கங்களையும் திருவள்ளுவரின் சிந்தனைகளையும் எவ்வாறு உள்வாங்கி சேர்த்திருக்கிறார்கள் என்பதை கடந்த வாரங்களில் கண்டோம். இன்று ஐம்பெரும் காப்பியங்களில் ஒன்றான குண்டலகேசியில் திருவள்ளுவர் எவ்விதம் ஆளுகை செலுத்தியிருக்கிறார் என்பதைக் காண்போம். 
இது ஒரு பௌத்த இலக்கியமாகும். இந்நூலை இயற்றியவர் நாதகுத்தனார் என்னும் பௌத்தர். சீவக சிந்தாமணிக்கும் வளையாபதிக்கும் காலத்தால் முற்பட்டது. சமண சமயக் கொள்கைகளை மறுத்தற்பொருட்டு எழுந்த காவியமாக நீலகேசி உரையின் மூலம் அறியப்படுகிறது. குண்டலகேசி முழுமையும் கிடைக்கப்பெறவில்லை. ஆனால் உரைகளில் 
வந்தவை 19 செய்யுள்கள்.  நூல் முழுதும் கிடைக்கப் பெறாததால், மேற்கோள் நூல்களின் மூலமே இதன் கதையை அறிய முடிகிறது. வீர சோழிய உரை, புறத்திரட்டு, நீலகேசி ஆகிய நூல்களில் குண்டலகேசி பற்றிய குறிப்புகள் இருக்கின்றது. 
குண்டலகேசி காப்பியத்தைத் தழுவி கலைஞர் மு. கருணாநிதி அவர்களால் எழுதப்பட்ட நாடகம் 1950 ஆம் ஆண்டு வெளிவந்த மந்திரி குமாரி என்ற திரைப்படமாகும். 

குண்டலகேசியில் திருவள்ளுவரின் கருத்துக்கள் பொதிந்தவற்றைக் காண்போம்.
அறன் வலியுறுத்தல் அதிகாரத்தில் திருவள்ளுவர்
மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்துஅறன் 
ஆகுல நீர பிற – 34 என்று குறிப்பிடுகிறார். 
முனதில் மாசற்றவனாக இருப்பதே அனைத்து அறன்களுக்கும் அடித்தளமாகும். மற்ற நெறிகள் வெறும்ஆரவாரமே ஆகும்.  இதே போன்று குண்டலகேசியில் 
'தீயவினை நோக்கும் இயல்சிந்தனையு மில்லாத் 
தூயவினை நோக்கி யுளதுப்புரவும் எல்லாம்'-குண். 8 என குறிப்பிடப்படுகிறது. 
அதாவது உலகிலே தூய்மை என்பது தீய வினைகளைப் பார்க்கும் நெறிகளில் செல்லும் சிந்தனையே இல்லாத தூயவனிடம் மட்டும் உள்ள சிறந்த குணம். அத்தகைய தூயவனிடமே துப்புரவும் உள்ளது என்கின்றார். ஆகவே மனத்தூய்மையே அறம் என்பதை வலியுறுத்துகிறார் நாதகுத்தனார். 

தவம் என்னும் அதிகாரத்தில் 
உற்றநோய் நோன்றல் உயிர்க்குறுகண் செய்யாமை
அற்றே தவத்திற் குரு. – 261 என்று திருவள்ளுவர் குறிப்பிடுகிறார்.
பிறர் செய்யும் துன்பங்களைத் தாங்குதலும் தான் பிறர்க்குத் துன்பம் செய்யாமையும்தான் தவம் எனப்படும் எனக் குறிப்பிடுகிறார். இதில் உற்ற நோய் நோன்றல் என வள்ளுவர் கூறியதை விரித்துக் குண்டலகேசியில் 

போர்த்தல் உடைநீக்குதல் பொடித்துகண் மெய்பூசல் 
கூர்த்த பணியாற்றுதல் குளித்து அழலுள்நிற்றல்
சாத்தரிடு பிச்சையர் சடைத்தலை யராதல் 
வார்த்தை இவைசெய்தவம் மடிந்தொழுக வென்றார் - குண். 4
குளிராலும் பனியாலும் உடலுக்கு வரும் நோயை போக்க போர்த்திக் கொள்ளுதல் முதலியவற்றாலும் உடல் நடுக்கத்தை வெண்ணீறணிவதாலும் வெப்பத்தைக் குளித்தலாலும் போக்கிக் கொள்வது மரபு. குளிர்காலத்தும் மழைகாலத்தும் பனிக்காலத்தும் ஆடையணியாமல் நீருள் குளித்தலும் வேனிற் காலத்து வெயிலில் நிற்றலும் அழல் நடுவில் நிற்றலும் உற்ற நோய் தோன்றலாவன என விளக்குகிறார். 

காம சிந்தனையானது மிகவும் கொடியது. தீப் போல உள்ளிருந்து காந்துவது. அதனை நுகர்ந்து நுகர்ந்து உவர்ப்புண்டாகித் துடைப்போம் என்பது நெருப்பை நெய்யால் அவிக்க எண்ணுவது போலாகும் என்கிறது குண்டலகேசி.
வகையெழில் தோள்கள்என்றும் மணிநிறக்குஞ்சி என்றும் 
புகழ்எழ விகற்பிக்கின்ற பொருள்இல் காமத்தைமற்றோர் 
தொகைஎழுங் காதல்தன்னால் துய்துயாம் துடைத்தும் என்பார் 
அகையழல் அழுவந்தன்னை நெய்யினால் அவிக்கலாமே – குண். 5 என்ற செய்யும் கீழ்க்காணும் வள்ளுவத்தின் நீட்சியாகும். 
நெய்யால் எரிநுதுப்பேம் என்றற்றால் கௌவையால்
காமம் நுதுப்போம் எனல் - 1148 அலர் அறிவுறுத்தல் என்னும் அதிகாரத்தில் திருவள்ளுவர் குறிப்பிடுகிறார். அதாவது நெய்யை ஊற்றி நெருப்பை அணைக்க முடியுமா? அதுபோல பழிச் சொல்லால் காதல் தீயை அணைக்க முயல்வதும் அப்படித்தான் என்கிறார். இது மேற்கூறிய குண்டலகேசி செய்யுளிற்கு ஏற்கனவே முன்னுரை எழுதியது போல் அல்லவா இருக்கிறது!

திருவள்ளுவர் நிலையாமை அதிகாரத்தில் 
நில்லாத வற்றை நிலையின என்றுணரும் 
புல்லறி வாண்மை கடை – 331 என்று குறிப்பிடுகிறார். 

நிலையில்லாதவற்றை நிலையானது என்று உணரும் அறியாமை புல்லின் அறிவிற்கு ஒப்ப கீழ்நிலையானதாகும் என்கிறார். மேற்கூறிய கருத்தில் ஒத்தமைந்த குண்டலகேசி பாடல் பின்வருமாறு:
போதர உயிர்த் ஆவி புகவுயிர்க் கின்றதேனும்
ஊதியம் என்று கொள்வர் உணர்வினான் மிக்கநீரர்
ஆதலால் அழிதன் மாலைப் பொருள்களுக்கு அழிதல் வேண்டா 
காதலால் அழுதும் என்பார் கண்நனி களைய லுற்றார் - குண்.7
அதாவது தோன்றிய அனைத்தும் அழியக் கூடியன. அழியும் பொருட்களுக்காக நாம் வருந்த வேண்டாம். அப்படி வருந்துபவர்கள் ‘ நாங்கள் அப்பொருள் மீது வைத்த காதலால் அழுகிறோம்” என்று கூறுவார் என்றால் அவர்கள் அழுது அழுது கண்களை வீணாக வருத்துபவரே ஆவார் என்று குறிப்பிடப்படுகிறது. மேற்கூறிய குறளுக்கு எவ்வளவு பொருத்தமாக உள்ளது என்று கண்டீரா?

ஊழ் என்னும் அதிகாரத்தில் திருவள்ளுவர் குறிப்பிடுகிறார் பரியினும் ஆகாவாம் பாலல்ல உய்த்துச் சொரியினும் போகா தம-376 
முயன்று முயன்று தேடினாலும் நமக்குப் பொருந்தாதன உண்டு. வாரி வாரி ஈந்தாலும் நம்மைவிட்டுப் போகாதனவும் உண்டு என்கிறார். 
இதனையே ‘நல்வழி”யில் அவ்வையார்
வருந்தி அழைத்தாலும் வாராத வாரா
பொருந்துவன போமின் என்றால் போக -  இருந்து ஏங்கி
நெஞ்சம் புண்ணாக நெடுந்தூரம் தாம் நினைத்து
துஞ்சுவதே மாந்தர் தொழில் என்கிறார். அதாவது வருத்தப்பட்டு முயன்று அழைத்தாலும் நமக்கு சேரவேண்டியவை அல்லாதன வந்து சேர்வதில்லை. நம்மிடம் பொருத்த வேண்டியவை நம்மை விட்டுப் போக வேண்டும் என்றால் போவதும் இல்லை. அப்படி இருக்கும் போது ஒன்றை அடைய வேண்டும் என்பதற்காக நெஞ்செமெல்லாம் புண்ணாகும்படி நெடுந்தூரம் திட்டமிட்டு கொண்டிருந்து சாவதே இந்த மாந்தரின் தொழிலாக இருக்கிறது என்று கூறுகிறார். 
இதனையே குண்டலகேசியில்,
ஆதலும் அழித்தலும்
மறிப மறியும் மலிர்ப மலிரும்
பெறுப பெறும் பெற்று இழப்ப இழக்கும்
அறிவது அறிவார் அழுங்கார் உவவார்
உறுவது உறும் என்று உரைப்பது நன்று – குண். 18
அதாவது அழியும் பொருளெல்லாம் அழிந்தே தீரும்,  ஆவன ஆகும்,  வருவன வந்தே தீரும், போவன போகும், இவற்றையெல்லாம் மாற்றியமைக்க முடியாது. ஆதலால், உண்மையுணர்ந்தோர் உவத்தலும் வெறுத்தலும் அழுதலும் களித்தலும் செய்ய மாட்டார்கள். இவையணைத்தும் ஊழால் உருவானவை நன்றும் தீதும் பிறர் தரவ hரா என்று உணர்ந்து செயல்படுவர் என்று குறிப்பிடுகிறது. திருவள்ளுவரின் வார்த்தைகள் எங்ஙனம் பிறதிபலிக்கிறது என்பதை அறிய முடிகிறதா? மேற்கூறியவற்றை இன்னும் எளிமையாகக் கூற வேண்டும் எனில் முத்து என்னும் தமிழ் திரைப்படத்தில் நடிகர் ரஜினிகாந்த் பேசுவது போல் அமைந்த வசனத்தைச் சொல்லலாம். ‘ கிடைக்கிறது கிடைக்காம இருக்காது. கிடைக்காம இருக்கிறது கிடைக்காது”. மேற்கூறியவற்றில் இருந்து எளிமையாகச் சொல்ல வேண்டும் என்றால் திருவள்ளுவர் சிந்தனை எக்காலத்திலும் சிறந்து விளங்கும் என்பது தெளிவாகிறது அன்றோ?