இன்று 'உலக பல்லுயிர் பெருக்க நாள் (22, May, World Biodiversity Day)' இந்த நாளில் அதெற்கென்று பொருத்தமான ஒரு நபரை பற்றி எழுத வேண்டும் என்று நினைத்தேன். அப்படி யோசித்தபோது இவரை பற்றி எழுதுவது தான் பொருத்தமாக இருக்கும் என்று Forest Man of India என்று அழைக்கப்படுபவரை பற்றி சில விஷயங்கள் தொகுத்துள்ளேன்.
'பாம்பென்றால் படை நடுங்கும்' என்பர். ஆனால் அப்படிப்பட்ட பாம்பினை பார்த்தால் முதல் வேளையாக அதனை அடிப்பதற்கு கல்லையும் குச்சியினையும் தேடுவதாக இருக்கும் நபர்கள் அதிகம்.. ஆனால் பாம்புகள் இறந்ததினால் ஒரு பெரிய அடர் வனம் உருவானதினை நாம் கேள்விப்பட்டிருப்போமா? அதுவும் 1360 ஏக்கர் நிலப்பரப்பில்!
ஆம், அஸாம் மாநிலத்தில் ஜோர்ஹட் மாவட்டத்தில் உருவாக்கப்பட்டது.
அதுவும் ஒரு தனி மனிதனால்!!? அவர் தான் , 'இந்திய வன மனிதர் (forest man of India' என்று பெருமைப்படுத்தப்படும் 'mishing' பழங்குடி இனத்தை சார்ந்த பத்மஸ்ரீ ஜாதவ் பயேங்.
1978 ஆம் ஆண்டில் தனது 10 ஆம் வகுப்பினை அப்போதுதான் முடித்திருந்த ஜாதவ் தனது சொந்த ஊருக்கு திரும்பி கொண்டிருந்தார். அப்போது கண்ட காட்சி அவ்வளவு பெரிய வனத்தினை உருவாக்கும் என்று எதிர்பார்க்கவில்லை. பாம்புகள் உலர் நிலத்தில் இறந்து கிடந்தன. பக்கத்தில் உள்ள கிராம மக்களிடம் சென்று விசாரித்ததில் பிரம்மபுத்திரா நதியின் வெள்ளத்தில் அடித்துவரப்பட்டு இந்த வறண்ட நிலத்தில் தள்ளப்பட்ட பாம்புகள் அவை என்றும் மரங்கள் எதுவும் இல்லாததால் நிழலும் உணவும் கிடைக்கப் பெறாது இறந்து கிடக்கின்றன என்று தெரிவித்தனர்.
அதற்கான மாற்றத்தை ஏற்படுத்த அவர் விரும்பியதனை கண்ட அவர்கள் 50 விதைகளையும் மூங்கில் நாற்றுகளையும் வழங்கினர்.அவற்றை அவர் விதைத்தும் 200 மூங்கில் கன்றுகளையும் நட்டு வளர்த்தார். ஆனால் அவைகள் மறுபடியும் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது. ஆனாலும் மனம் தளராது அவர் விதைக்க ஆரம்பித்தார்.
அதனை தொடர்ந்து 1979 ஆம் ஆண்டு வனத்துறையால் Aruna Chapori என்ற இடத்தில 200 ஹெக்டேர் நிலப்பரப்பில் நடத்தப்பட்ட சமூக காடுகள் வளர்ப்பு திட்டத்தில் பணிபுரிந்தார். 5 ஆண்டுகளில் திட்டம் முடிந்தாலும், அத்திட்டத்தில் வளர்க்கப்பட்ட மரக்கன்றுகளை பார்த்துக்கொள்வதற்காக அங்கேயே தங்கி பணிபுரிய ஒப்புதல் பெற்றார். அவர் அங்கேயே தங்கி மரக்கன்றுகளை பாதுகாத்தல் மட்டும் செய்யவில்லை. மரக்கன்றுகளையும் நட ஆரம்பித்தார். நட்டுக்கொண்டே இருந்தார். பின்னர் வனத்துறையும் இந்த இடத்தினை மறந்து விட்டனர் . 2008 ஆம் வருடம் தற்செயலாக 115 யானைகள் இந்த காட்டு பகுதிக்குள் புகுந்து விட்டது. அதனை துரத்தி சென்ற வனத்துறையினர் காட்டை பார்த்து ஆச்சரியம் அடைந்துள்ளனர். அரசு பதிவேட்டில் இல்லாத இந்த காடு எப்படி உருவாகியிருக்கும் என்று விசாரித்து ஜாதவ்வை சந்தித்து அவரை பாராட்டி ஒத்துழைப்பு வழங்கி வருகின்றனர்.
ஜாதவுடன் அவருடைய மனைவி மற்றும் மூன்று குழந்தைகளும் (2 மகன் மற்றும் 1 மகள்) இணைந்து அவருக்கு உதவி புரிகின்றனர்.
மூங்கிலில் துவக்கிய அவருடைய பயணம், படிப்படியாக புழு, பூச்சிகளை கொண்டு வந்து சேர்த்து, பறவைகளை தங்க வைத்தது, விலங்குகளை வரவழைத்தது. இறுதியாக வறண்டு வெள்ளை நிறமாக காட்சியளித்த மண் வளம் தரும் பழுப்பு நிறமாக மாறியது.
மூங்கில் என்பது புல் வகையை சார்ந்த தாவரமாகும். அப்படியென்றால் புல்லினை வைத்து பெரிய கானகத்தினை உருவாக்கிய இவருக்கு
'வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்' என்ற பதம் சரியாகவே பொருந்துகிறது அல்லவா?
அவருடைய 35 வருடங்களுக்கு மேலான உழைப்பின் விளைவு:
- 100 க்கும் மேற்பட்ட யானைகள் வலசை வரும் இடம்.
- காசிராங்கோ வனவிலங்கு சரணாலயத்தில் இருந்து வெள்ளத்தில் வெளியேறிய 3 காண்டாமிருகங்கள் வாழும் இடம்.
- கார்பி அங்கிலோங் பகுதியில் இருந்து துப்பாக்கி முனையில் இருந்து தப்பியோடி வந்த 5 வங்க புலிகளின் சரணாலயம்.
- தேக்கு, ஆலமரம், மூங்கில், புளியமரம், மாமரம், பலாமரம் போன்ற பலவித தாவர வகைகளின் சரணாலயம்
- பல கழுகுகள், வல்லூறுகள், பெலிக்கன்கள், நாரைகள், வாத்துக்கள் வாழும் இடம்.
- கௌர் வகை மான்கள், கிப்பன் வகை குரங்குகள், முயல்கள் போன்ற பல விலங்குகளின் வாழிடம்.
- முக்கியமாக பல வகை பாம்புகள் வரத்தொடங்கின . அவை அங்கும் இங்கும் நெளிந்து வாழ்ந்து வருகின்றன. அவற்றை முதலில் பார்த்தவர் மகிழ்ச்சியில் ஆனந்த கண்ணீர் வடித்தார்.
- கொம்புகளுக்காக காண்டாமிருகத்தினை கொல்ல வந்தவர்களை வனத்துறைக்கு தகவல் தெரிவித்து தவறு நிகழாமல் தடுத்தார்.
- அந்த வனம் ஜாதவின் செல்ல பெயரான 'முலாய் (molai)' என்ற பெயரிலேயே 'முலாய் காடு' என்று அழைக்கப்படுகிறது.
தன்னுடைய வாழ்வாதாரத்திற்காக மாடுகள் வளர்த்து அதன் மூலம் கிடைக்கும் பாலினை விற்று குடும்பத்தினை கவனித்து கொள்கிறார்.
2012 இல் ஜவஹர்லால் பல்கலைக்கழகம் இவருக்கு 'Forest Man of India' என்ற பட்டம் வழங்கியது.
மறைந்த முன்னாள் இந்திய ஜனாதிபதி மதிப்பிற்குரிய அப்துல் கலாம் அய்யா அவர்கள் இவரை பாராட்டி பணமுடிப்பு வழங்கியுள்ளார்.
இந்திய அரசு 2015 ஆம் ஆண்டு இவருக்கு 'பத்ம ஸ்ரீ' பட்டம் வழங்கி கௌரவித்தது.
சரி! இவர் நம்மிடம் ஏதேனும் கேட்டு கொள்வது என்ன?
'நமது கல்வி முறையில் ஒவ்வொரு மாணவரும் இரண்டு மரங்களை நட வைக்க வேண்டும்' என்பதுதான்.
ஒரு தனிமனிதனால் 1360 ஏக்கர் அடர் வனத்தை உருவாக்கப்படும் போது நம்மாலும் இயன்ற இடத்தில் பல்லுயிர் பெருக்கத்தை உருவாக்க இயலும் அல்லது பாதுகாக்கவாவது இயலும் என்பதில் மாற்றமில்லை. குறைந்தது உணவு சங்கிலியாவது அறுபடாமல் பார்த்துக்கொள்வது. இந்த உலக பல்லுயிர் பெருக்க நாளில் ஜாதவ்வின் வாழ்விலிருந்து குறைந்தது நல்மாற்றங்கள் வருவது ஒரு விதையில்/செடியில் இருந்துதான் ஆரம்பமாகிறது என்பதையாவது உணர்ந்து செயல் படுவது புவிக்கும், நமக்கும் நன்மை பயக்கும் என்று நம்புகிறேன்.
நன்றி!