Tuesday, 16 May 2017

2070 இல் எழுதப்பட்ட ஒரு கடிதம்:

2070 இல் எழுதப்பட்ட ஒரு கடிதம்:
சென்னையில் கடந்த வாரம் ஒருநாள் இரவு சுமார் 9.30 மணியளவில் கடைத்தெருவிற்கு சென்று வந்தேன். ஒரு 300 மீட்டர் தூரம் தான் சென்று வந்திருப்பேன். தொப்பலாக நனைந்திருந்தேன். மழையால் அல்ல...
வியர்வையால்....
அப்படியெனில் ...
உயர் இரத்த அழுத்தமா? இல்லை
வேகமாக நடந்தேனா? அல்லது ஓடி வந்தேனா? இல்லை இல்லை
பிறகு....???
அதிக வெப்பம்!!! உணரப்பட்டது.
இப்போதும் நான் எழுதிக்கொண்டிருக்கும் இந்நேரத்திற்கு (இரவு மணி 1.30) முன்பு சுமார் ஒரு மணி நேரம் தான் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது.
வெப்பத்தின் தாக்குதலில் தூங்கமுடியவில்லை. நானும் எனது மனைவியும் எனது மகளுக்கு விசிறிக்கொண்டிருக்கிறோம்.
என்னுடைய 21 மாதமே ஆன எனது மகள் எழுந்து வந்து எங்கேயாவது இயற்கையாக காற்று கிடைக்குமா என்று வீட்டில் எல்லா அறைக்கும் சென்று நடந்து பார்க்கிறாள். அவளுக்கு சொல்ல தெரியவில்லை சிணுங்குகிறாள் (whining). தண்ணீர் அருந்துகிறாள். மறுபடியும் நடக்கிறாள். தண்ணீர் அருந்துகிறாள். மறுபடியும் சிணுங்குகிறாள். அந்த காட்சியினை பார்க்கையில் கலைஞர் மு. கருணாநிதி அவர்கள் தன் சிறையில் வாடும் தன் மகளை பார்த்துவிட்டு வந்து சிறையின் வெப்ப கொடுமையினை விளக்குவது ஞாபகத்திற்கு வந்து சென்றது. அதாவது, 'அந்த சிறையின் சூழல் எப்படி இருக்குமென்றால் ஒரு பூவினை கொண்டு வைத்தால் அது உடனே கருகிவிடும்' என்பதுதான்.
குழந்தையின்சி ணுங்கல் அதிகபட்ச அழுகையாக மாறிவிடக்கூடாது என்பதற்காக தூக்கிக்கொண்டு தெருவிற்கு வந்தால் அங்கே தூங்க முடியாமல் பலரும் நின்று கொண்டும் பேசி கொண்டும் இருந்தனர். மின்வாரிய அலுவலகத்திற்கு தொடர்பு கொண்டால் அழைப்பு சென்ற அடுத்த வினாடியே தொடர்பு முடிவடைகிறது. வாடிக்கையாளர் சேவை மையத்திற்கு தொடர்பு கொண்டால் தொடர்ந்து busy யாகவே இருக்கிறது.
புவி வெப்பமயமாதலில் நமக்கு இப்படியெல்லாம் பாதிப்பு ஏற்படுமோ என்று நினைக்கையில் 10 வருடத்திற்கு முன்னர் பார்த்த ஒரு powerpoint presentation .pps வடிவில் பார்த்தது ஞாபகம் வந்தது. அது 2070 இல் எழுதப்பட்ட ஒரு கடிதம் போன்று அமைக்கப்பட்டிருந்தது. அது ஏப்ரல் 2002 இல் Cronicas de los Tiempos என்ற ஸ்பானிஷ் பத்திரிகையில் வெளிவந்ததாக தகவல் தெரிவிக்கிறது. அது நீரின் அருமையினை விளக்கும் ஒரு விழிப்புணர்வு பரப்புரை.
அதின் முக்கிய சாராம்சம்:
2070 இல் 50 வயதில் வாழும் ஒரு நபர் 85 வயதினை ஒத்த தோற்றமுடையவராக இருக்கிறார். அவரே அதிக பட்ச வயதினை உடையவராகவும் இருக்கிறார்.
நீர் பற்றாக்குறையால் நாம் என்னென்ன நோய் தாக்கத்தை பெற முடியுமோ அதெல்லாம் பெற்றிருந்தார். அதாவது. சிறுநீரக பிரச்சினைகள்
தன்னுடைய இளமை காலத்தில் தோட்டங்கள், பூங்காக்கள் அரைமணி நேரமாக குளிக்கும் காட்சியெல்லாம் போன்றவற்றை நினைத்து பார்க்கிறார். அவர் தற்போது வாழும் காலத்தில் (2070) அவருடைய உடலினை கழுவுவதற்கு mineral oil மற்றும் துண்டு வழங்கப்படுகிறது.
முன்பு பெண்கள் அழகான கேசத்துடன் இருந்தனர், ஆனால் தற்போது தண்ணீர் இல்லாததால் சுத்தமாக இருப்பதற்காக தலையினை சுத்தமாக மழித்து கொள்ளவேண்டும்.
தன்னுடைய இளமை காலத்தில் 'தொலைக்காட்சிகளிலும், வானொலியிலும், சுவரொட்டிகளில் போன்றவற்றிலும் வலியுறுத்தப்பட்ட 'நீரை சேமிப்போம்' என்ற வார்த்தையினை யாரும் கண்டுகொள்ளாதிருந்ததை நினைவு கொள்கிறார்.
தற்போது அனைத்து ஆறுகள், ஏரிகள், குளங்கள், அணைகள் அனைத்தும் வறண்டோ அல்லது மாசுபட்டோ இருக்கிறது.
தொழிற்சாலைகளில் தொழிலாளர்கள் தங்களுடைய சம்பளத்தின் ஒரு பகுதியாக நீரை வாங்கி செல்கின்றனர்.
80 சதவீத உணவுகள் செயற்கையானவையாக இருக்கின்றது.
தண்ணீருக்காக கொள்ளை சம்பவங்கள் ஆங்காங்கே நடந்தேறுகின்றன.
ஒருவருக்கு ஒரு நாளைக்கு அரை தம்பளர் தண்ணீரே குடிப்பதற்கு அனுமதிக்கப்படுகிறது.
மக்கள் தண்ணீர் இல்லாததால் கசிவு நீர் தொட்டியினையும் (Septic Tank ) பயன்படுத்த ஆரம்பிக்கின்றனர்.
ஆராய்ச்சியாளர்கள் எவ்வளவோ ஆராய்ச்சிகள் செய்தும் முடிவுகள் கிடைக்கவில்லை
தண்ணீர் தங்கம், வைரத்தினை விட மிக மதிப்பு மிகுந்த பொக்கிஷமாக கருதப்படுகிறது. உலகில் எங்கேனும் சுத்தமான நீர் நிலைகள் காணப்பட்டால் அங்கே ஆயுத பாதுகாப்புடன் படை வீரர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர்.
குழந்தை கேட்கிறது 'இப்போது ஏன் தண்ணீர் இல்லை'?
இவ்வாறு நாம் இப்போது வீணடிக்கும், குறைத்து கொண்டிருக்கும் தண்ணீரின் நிலையினை, தண்ணீரில்லாத நிலையினை மிக அழகாக விளக்கியிருக்கிறது இந்த powerpoint presentation இதனை தயாரித்தவர் மறைந்த மதிப்பிற்குரிய முன்னாள் ஜனாதிபதி அய்யா அப்துல் கலாம் என்று நிறைவடைகிறது. ஆனால் இது Ria Ellwanger என்பவர் Lopez Chavez Ariel
என்பவரும் இணைந்து உருவாக்கியதாக ஒரு வலைப்பதிவு குறிப்பிடுகிறது.
http://philosophyrecycled.blogspot.in/…/letter-written-in-y…
எது எப்படி இருப்பினும் நீரின் அருமையினை உணர்த்திய இந்த powerpoint presentation ஐ உருவாக்கியவர்களுக்கு மனமார்ந்த பாராட்டுக்களை உரித்தாக்குகிறேன்.
இதனை காணொலியாக பார்ப்பதற்கு கீழேயுள்ள சுட்டியினை சொடுக்குக:
https://www.youtube.com/watch?v=0ReVrONNvoQ
இப்போதே நாம் நம்முடைய பல ஆறுகளையும், ஏரிகளையும், குளங்கள், குட்டைகள் என அனைத்து நீர் நிலைகளையும் கொன்று கொண்டு இருக்கிறோம். இவைகள் மீட்டெடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றோம். இதற்கு ஆதாரமாக உள்ள மழை பொழிய வேண்டும். அதற்கு அதிக அளவில் மரக்கன்றுகள் நடுவதும் நமக்கு அவசியமாக இருக்கிறது.
சுருக்கமாக சொல்லவேண்டும் என்றால்:
மரக்கன்று நடல்
நீர் சேமிப்பு
நீர்நிலைகள் மீட்டெடுப்பு
ஏனெனில் 'நீரின்றி அமையாது உலகு'
இந்த நேரத்தில் நான் பதிவிட்டு உங்கள் தூக்கத்தினை கெடுத்திருந்தால் மன்னிக்கவும், ஏனெனில் அகக்கண் முழிக்க வேண்டிய தருணமிது. நன்றி!

No comments:

Post a Comment