Friday, 2 December 2016

ஸ்வாவ்லம்பன் மாற்று திறனாளிகளுக்கான சுகாதார காப்பீட்டு திட்டம்



இன்று உலகம் முழுவதிலும் மாற்று திறனாளிகள் தினம் அனுசரிக்கப்படுகிறது. மாற்று திறனாளிகள் தங்கள் திறமைகளை பல்வேறு இடங்களில் பல்வேறு விதங்களில் நிரூபித்து வருகின்றனர். அதற்கு உதாரணமாக சமீபத்தில் நிறைவு பெற்ற ரியோ ஒலிம்பிக் போட்டிகளை சொல்லலாம். ஆனால்  அவர்களுடைய திறமைகள் பரவலாக தெரிவதில்லை. மேலும் தங்கள் வீட்டில் இருக்கும் மாற்று திறனாளிகளுக்கு உள்ள திறமைகளையும் பலர் தெரிந்து கொள்வதில்லை. அவர்கள் திறமைகளை பற்றி சொல்ல வேண்டுமெனில், பார்வை திறன் குறைந்தவர்கள் அல்லது பார்வை திறன் அற்றவர்களை எடுத்துக் கொண்டால், அவர்கள் தினம் தினம் பரபரப்பான நகரத்தில் கூட பல்வேறு வாகனங்களை, சாலைகளை கடந்து வந்தாலும் அவர்கள் அதிகம் விபத்துகளை சந்திப்பதில்லை, பல்வேறு மாறுபட்ட குரல்களை நினைவில் நிறுத்தி ஆண்டுகள் கழித்து சென்றாலும் நினைவு படுத்துகின்றனர். மாற்று திறனாளிகளில் பல்வேறு தொழில் செய்பவர்களை நாம் சந்தித்திருப்போம் அரசு பணியாளராக, அலுவலக உதவியாளராக,  தச்சு வேலை செய்பவராக, பொறியாளராக, கட்டிட தொழிலாளியாக, பத்திரம் எழுதுபவராக, தொகுப்பாளராக, இயந்திரம் பழுது நீக்குபவராக, நடனம் ஆடுபவராக, விற்பனையாளராக என்று பல விதங்களில் பார்த்திருப்போம்...!
திறமைகள் பல இருந்தும் வாய்ப்புகள் குறைவாகவே வழங்கப்படுகின்றன. அனைத்து இடங்களிலும் அவர்கள் எளிதாக அணுகுவதற்க்கு ஏதுவாக வாய்ப்புகள் இருந்தால் அவர்களாலும் இன்னும் பல சாதனைகள் புரிய இயலும். பாதுகாப்பு விஷயத்திலும் அப்படிதான்! ஆனால், அவர்களுடைய பாதுகாப்பிற்கு தற்போது ஒரு சுகாதார காப்பீடு திட்டம் வந்துள்ளது.
நம்மால் நேரிடையாக அவர்களுக்கு ஏதேனும் உதவி புரிய வேண்டும் என்று ஒரு வேளை நீங்கள் விரும்பினால், மாற்று திறனாளிகளுக்கான வர பிரசாதமாக தற்போது வந்திருக்கும் ஸ்வாவ்லம்பன் சுகாதார காப்பீட்டு திட்டத்தில் அவர்களை இணைய வைக்கலாம். இந்த திட்டம் மத்திய அரசால் திட்டமிடப்பட்டு நியூ இந்தியா அஸுரன்ஸ் கார்ப்பரேஷன் லிமிடெட் மூலம் செயல் படுத்துகிறது.
இந்த திட்டத்தில் மாற்று திறனாளிகளை இணைத்த அனுபவத்தினை கொண்டு என்னுடைய புரிதலின் அடிப்படையில் திட்டத்தினை குறித்து விளக்கியுள்ளேன். மேலும் விண்ணப்பப் படிவமும் இணைத்துள்ளேன். விருப்பமுள்ளவர்கள் தாங்களோ அல்லது தங்களுக்கு தெரிந்த மாற்று திறனாளிகளுக்கோ இதனை பரிந்துரை செய்து பயன்படுத்தி கொள்ளலாம்.

திட்டத்தின் சிறப்பம்சங்கள்:

  • ரூ. 2,00,000 வரை குடும்ப மிதவை காப்பீடு 
  • காப்பீட்டிற்கு முந்தைய மருத்துவ பரிசோதனைகள் தேவையில்லை.
  • குடும்ப வருமானம் ரூ.3,00,000 வரை இருக்கலாம். சுய உறுதிமொழி போதும். வருமான சான்றிதழ் அளிக்க தேவை இல்லை.
  • காப்பீடு தொகையில் 90 சதவீதம் அரசு செலுத்தி விடுகிறது. மாற்று திறனாளி செலுத்த வேண்டிய ப்ரீமியம் 10 சதவீதம் மட்டுமே.
  • மூட நீக்கியல் சிகிச்சைக்காக ஒரு வருடத்திற்கு புற  நோயாளி பிரிவு சிகிச்சைக்கு ரூ.10,000 வரை பயன்படுத்தி கொள்ளலாம்.
  • மருத்துவமனையின் முந்தைய பிந்தைய செலவுகளும் திட்டத்தில் பொருந்தும்.
காப்பீட்டிற்கு தகுதியானவர்கள்:
இந்தத் திட்டத்தில் மூளை முடக்குவாதம், புறஉலக சிந்தனையற்றவர்கள் மற்றும் ஒன்றுக்கு மேற்பட்ட ஊனம் உடையவர்களை (Cerebral Palsy, Autism, Multiple Disabilities) தவிர அனைத்து மாற்றுத்திறனாளிகளும் தகுதியானவர்கள்.   • பிறந்தது முதல் 65 வயது வரை உடைய மாற்றுத்திறனாளிகள்
மேற்கூறிய தகுதியுடையவர்களின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.3, 00,000 மிகாமல் இருக்க வேண்டும்.
தகுதியுடைய குடும்பம்: 
வகை 1: திருமணமான ஆண் அல்லது பெண் மாற்றுத்திறனாளி மற்றும் அவர்களுடைய முதல் 2 திருமணமாகாத குழந்தைகள் (25 வயதிற்குள் குழந்தைகள் வயது இருக்க வேண்டும்)
வகை 2: 18 வயதிற்கு மேல் திருமணமாகாத மாற்றுத்திறனாளி மட்டுமே பொருந்துவர். அவர்களுடைய குடும்பத்தில் வேறு எவரையும் இணைக்க இயலாது.
வகை 3: 18 வயதிற்குள் இருக்கும் மாற்றுத்திறனாளி மைனர் என்ற அடிப்படையில் அவர்களுடைய பெற்றோர் அல்லது பாதுகாவலரை (பாதுகாவலர் சான்றிதழ் வேண்டும்) இணைக்கலாம்.
2. காப்பீட்டிற்கான பிரீமியத்தொகை ரூ.310 சேவைவரியினைச் (தற்போது ரூ.47) சேர்த்து மொத்தம் ரூ.357 ஒரு குடும்பத்திற்கு கட்டப்பட வேண்டும் . சேவை வரியின் அளவு அவ்வப்போது மாறுபடலாம்.

5. சான்றுகளை கவனமாகப் பார்த்து காப்பீடு திட்டக் குழுவிற்கு நபர்களை அனுப்புதல் நலம். அதாவது சுய கையொப்பமிடப்பட்ட மாற்றுத்திறனாளியின் தேசிய அடையாள அட்டை 3 பக்க நகல்கள், புகைப்பட அடையாள அட்டை (மாற்றுத்திறனாளி மைனராக இருந்தால் அவருடைய பெற்றோர் கையொப்பம் இட வேண்டும்) மற்றும் யாருடைய புகைப்படம் எல்லாம் ஒட்டப்பட்டிருக்கிறதோ அவர்களுடைய புகைப்பட அடையாள அட்டை சுய கையொப்பம் இடப்பட்ட நகல்கள். மற்றும் கூடுதல் புகைப்படங்கள் போன்றவை.

படிவம் பூர்த்தி செய்யும் முறை:
6. படிவத்தில் ஆங்கிலத்தில் மட்டுமே பூர்த்திச் செய்யப்பட வேண்டும்.
7. Name of the Institute என்ற இடத்தில் …..  நிறுவனம் சார்ந்து விண்ணப்பித்தால் நிறுவனத்தின் பெயரைக் குறிப்பிடவும்
8. Camp Location  என்ற இடத்தில், முகாம் நடத்தினால் நடைபெறும் இடம் மற்றும் Date என்று இருக்கும் இடத்தில் முகாம் தேதியினைக் குறிப்பிடவும்

9. DETAILS OF PERSONS TO BE INSURED: என்ற தலைப்பின் கீழ் ஒரு அட்டவணை இருக்கும்.
பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்ப மாதிரியினை பார்த்தால் எளிதாக விளங்கும். அட்டவணையில், S.No> Name> Relation> Sex (M/F)>DOB என்று 5 Column இருக்கும். மேலும் Relation என்ற Column கீழ் PWD> Spouse> child 1> Child 2  என்று இருக்கும்.
S.No. என்ற Column கீழ் வரிசை எண் குறிக்கப்பட்டிருக்கும்.
Name  என்ற Column கீழ் பெயர்கள் எழுதப்பட வேண்டும். முதலில் மாற்றுத்திறனாளியின் பெயர், அதனைத் தொடர்ந்து அவருடைய மனைவி/கணவர் பெயர் குறிக்கப்பட வேண்டும், மூன்றாவதாக முதல் குழந்தை பெயர் நான்காவதாக இரண்டாவது குழந்தையின் பெயர் இடம் பெற வேண்டும்.
ஒரு வேளை மாற்றுத்திறனாளி மைனர் என்றால் முதலில் மாற்றுத்திறனாளியின் பெயர் எழுதி, அடுத்தவதாக தந்தை மற்றும் அதனைத் தொடர்ந்து தாயின் பெயர் எழுதப்பட வேண்டும்.
மாற்றுத்திறனாளி 18 வயதிற்கு மேல் இருந்து திருமணம் ஆகாதவராக இருந்தால் மாற்றுத்திறனாளி பெயர் மட்டும்  குறிப்பிடப்பட வேண்டும். மற்றவர்கள் பெயர்கள் குறிப்பிடப்படக் கூடாது.
Relation என்ற Column கீழ் PWD> Spouse> child 1> Child 2 என்று இருக்கும்.
முதல் வரிசையில் மாற்றுத்திறனாளி பெயர் இருப்பதால் PWD என்பதில் எந்த மாற்றமும் செய்யத் தேவையில்லை.
இரண்டாவது வரிசையில் திருமணமான மாற்றுத்திறனாளியாக இருந்தால் Spouse  என்ற இடத்தில் Husband/Wife எது பொருந்துமோ அதனை குறிப்பிட வேண்டும். இல்லையெனில் Spouse என்றே விட்டு விடலாம்.
ஒருவேளை மாற்றுத்திறனாளி 18 வயதிற்குள் இருக்கும் மைனர் மாற்றுத்திறனாளியாக இருந்தால் இரண்டாவது வரிசையில் Spouse என்பதனை அடித்துவிட்டு Father  என்றும் மூன்றாவது வரிசையில் child  1 என்பதை அடித்துவிட்டு Mother  என்றும் எழுத வேண்டும்.
மாற்றுத்திறனாளி 18 வயது நிரம்பிய மற்றும் திருமணம் ஆகாதவர் என்றால் 2,3,4 வரிசைகள் அவருக்குப் பொருந்தாது.
ஒரு திருமணமான மாற்றுத்திறனாளியின் குடும்பத்தில் இரண்டு மாற்றுத்திறனாளிகள் இருந்தால் அதாவது மனைவியும் முதல் குழந்தையும் மாற்றுத்திறனாளி என்று இருந்தால் மனைவி பெயரினை முதலாவதாகவும், மாற்றுத்திறனாளி குழந்தையினை இரண்டாவதாகவும் குறிப்பிட வேண்டும். அதனைத் தொடர்ந்து கணவர் பெயரும் இரண்டாவது குழந்தையின் பெயரும் குறிப்பிட வேண்டும். முதல் குழந்தை பெயருக்கு நேராகவும் PWD, Child1  என்று குறிப்பிட வேண்டும்.
Sex (M/F)>  என்ற Column  ல்ஆண் என்றால் M  என்றும் பெண் என்றால் F என்றும் குறிப்பிடவும். திருநங்கையாக இருந்தால் TG  என்று குறிப்பிடவும்.
DOB என்று வரும் Column த்தில் தேதி/மாதம் /வருடம். என்ற முறையில் பிறந்த தேதி குறிப்பிடப்பட வேண்டும்.
10. PHOTOGRAPHS OF INSURED PERSONS: என்று தொடர்ந்து புகைப்படம் ஒட்டுவதற்கான இடம் இருக்கும். அதில் மேலே பெயர் எழுதிய வரிசையின் அடிப்படையில் பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஒட்டப்பட வேண்டும். அதாவது வரிசை எண் 1ன் கீழ் உள்ள பெயர் முதலாவதாகவும், அதனைத் தொடர்ந்து 2,3,4 என்று ஒட்டப்பட வேண்டும்.
ஓவ்வொரு புகைப்படத்தின் கீழும் சம்மந்தப்பட்ட நபரின் பெயர் எழுதப்பட்டிருக்க வேண்டும்.
படிவத்தில் ஒட்டப்பட்ட அனைத்துப் புகைப்படத்திற்கும் கூடுதலாக
மற்றொரு புகைப்படம் படிவத்திலேயே இணைத்துக் கொடுக்கப்பட வேண்டும். ஒவ்வொருவரும் மொத்தம் இரண்டு புகைப்படம் சமர்ப்பிக்க வேண்டும். அப்போதுதான் அடையாள அட்டைக்கு தயார் செய்ய இயலும்.
11. Name of the Guardian ………… (in case of minor)  என்று இருக்கும். இந்தப் பகுதியில் மாற்றுத்திறனாளி 18 வயதிற்குக் கீழ் இருந்தால் மட்டும் அவருடைய தந்தை/தாயர்/பாதுகாவலர் பெயர் குறிக்கப்பட வேண்டும்.
12. Residential Address: என்று தொடர்ந்து வீட்டு முகவரி எழுதுவதற்கான இடம் இருக்கும். இதில் வீட்டு முகவரி எழுதும் போது  Claim  சமயத்தில் இந்த முகவரிதான் முக்கியத்துவம் பெறும் என்பதை மனதில் வைத்து எழுத வேண்டும். வாக்காளர் அடையாள அட்டை அல்லது ஆதார் அட்டை எதனை புகைப்பட அடையாள அட்டையாக சமர்ப்பிக்கிறாரோ அதில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரியுடன் ஒத்துப் போதல் நலம். Tel No. மற்றும் E-mail என்று ஒதுக்கப்பட்ட இடத்தில் தொலைபேசி/கைப்பேசி மற்றும் மின்னஞ்சல் முகவரி இருந்தால் வழங்கப்பட வேண்டும். ஏனெனில் Claim Process ன் போது இதன் வழியாகத்தான் தகவல்கள் தெரிவிக்கப்படும்.
13. அடுத்தப்பக்கத்தில் Average Annual Income   என்று உள்ள இடத்தில் குடும்ப ஆண்டு வருமானத்தைக் குறிப்பிட வேண்டும், இதற்காக வருமான சான்றிதழ் வைக்க வேண்டிய அவசியம் இல்லை. இது self declaration மட்டுமே. PAN No. என்ற இடத்தில் குறிப்பிட PAN No. இருந்தால் எண்ணை எழுத வேண்டும். Referred by (Institute Name):: என்ற இடத்தில் ஏதேனும் நிறுவனம் வாயிலாக சென்றிருந்தால் அல்லது பரிந்துரை செய்திருந்தால் மேலே காட்டியவாறு திட்டத்தின் பெயர் மற்றும் மாவட்டம் குறிப்பிடப்பட வேண்டும்.
14. அதனைத்தொடர்ந்து Type of Disability     என்று உள்ள இடத்தில் அதன் கீழே கட்டத்தில் கொடுக்கப்பட்ட வகையினைக் குறிப்பிட வேண்டும். கட்டத்திலும் குறிப்பிட்ட வகையில் டிக் செய்ய வேண்டும்.
15. அதனைத் தொடர்ந்து கையொப்பத்திற்கு இடப்பட்ட இடத்தில் கையொப்பம் அல்லது கைரேகையை பதிவிட வேண்டும். மாற்றுத்திறனாளி 18 வயதிற்கு கீழ் இருந்தால் பெற்றோர் அல்லது பாதுகாவலர் கையொப்பம் இட வேண்டும்.
16. Date :  Place : என்று குறிப்பிடப்பட்டிருக்கும் இடங்களில் தேதி மற்றும் இடம் குறிப்பிட வேண்டும்
படிவத்துடன் இணைக்கப்பட வேண்டிய சான்றுகள்:
மாற்றுத்திறனாளி தேசிய அடையாள அட்டை நகல்
அட்டையில் மாற்றுத்திறன் வகை, சதவீதம், புகைப்படம், மருத்துவர் கையொப்பம் ஆகியவை முக்கியமாக நிரப்பப்பட்டிருப்பதை உறுதி செய்ய வேண்டும்.
வழங்கப்படும் நகலில் மேற்கூறிய விபரங்கள் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.
மாற்றுத்திறனாளி தேசிய அடையாள அட்டையில்  குறிப்பாக ஊனத்தின் சான்றிதழ் இருக்கும் பக்கத்தின் நகல்  அவசியம் இருக்க  வேண்டும்.
சுய கையொப்பம் இடப்பட்ட புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை (வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் கார்டு போன்றவை).
இந்த சுய கையொப்பம் இடப்பட்ட சான்றானது படிவத்தில் யாருடைய புகைப்படம் எல்லாம் ஒட்டுகிறோமோ அவர்கள் அனைவருடைய புகைப்பட அடையாள அட்டை நகல் கொடுக்க வேண்டும்.
பயனாளி மைனராக இருப்பின் அவரது பெற்றோர்/பாதுகாவலர் நகலில்  கையொப்பமிட வேண்டும்.
சமர்ப்பிக்கும் போது  சான்றுகளுக்கான அசலை எடுத்து செல்தல் நல்லது.
நகல்கள் சமர்ப்பிக்கும் பொது யாருடைய நகலை இணைகிறோமோ அவருடைய கையொப்பம் அல்லது கைரேகை அவசியம் இருக்க வேண்டும், 18 வயதிற்கு கீழே இருப்பவருக்கு மட்டும் பெற்றோர் கையொப்பம் இட  வேண்டும்.

கவனிக்க:
1. இந்த காப்பீடு திட்டமானது எந்த மாதம் காப்பீடுத் தொகை கட்டுகிறார்களோ  அதன் அடுத்த மாதம் முதல் தேதியிலிருந்து அவர்களுக்கு நடைமுறைக்கு வரும். அதாவது டிசம்பர் மாதம் 10ம் தேதி காப்பீடு பிரீமியம் கட்டுகிறார் என்றால் ஜனவரி மாதம் 1 ஆம் தேதியில் இருந்து திட்டத்தில் பயனடைவார்.
2. திட்டத்தில் இணைந்த ஒரு மாத அளவில் தோராயமாக பயனாளிகளுக்கான காப்பீடு kit  கிடைத்துவிடும்.
3. இந்த காப்பீடு திட்டம் ஒரு வருடத்திற்கு மட்டும் பொருந்தும் அடுத்த வருடம் காப்பீடினை புதுப்பிக்க வேண்டும்.
4.காப்பீடு திட்டத்தில் இணைந்துள்ள மருத்துவமனைகளின் விபரங்கள் காப்பீடு kit  இல் இருக்கும் . அதில்  குறிப்பிடப்பட்டுள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை மேற்கொண்டால் கட்டணமில்லா சிகிச்சைப்பெறலாம். இல்லையெனில் காப்பீடு அலுவலரை தொடர்பு கொண்டு தாங்கள் பார்க்க இருக்கும் மருத்துவனையை பற்றி குறிப்பிட வேண்டும். அது தகுதியான மருத்துவமனை என்றால் மட்டுமே claim செய்ய இயலும்.
5. சிகிச்சை மேற்கொள்ளும் போது அவசியம் காப்பீடு அடையாள அட்டை மற்றும் மற்றுமொரு புகைப்பட அடையாள அட்டையினை சமர்ப்பிக்க வேண்டும். மேலும், காப்பீடு அலுவலருக்கும் தகவல் தெரிவிக்க வேண்டும்.

இந்த திட்டத்தில் அவர்களை இணைப்பது அவர்களுக்கு இந்த நாளில் பயனுள்ளதாக அமையும்.
மேலும் விபரங்களுக்கு கீழேயுள்ள சுட்டியை சொடுக்கவும்.
http://newindia.co.in/Content.aspx?pageid=6363


நன்றி!


No comments:

Post a Comment