Tuesday, 13 December 2016

கோரத்தாண்டவம் ஆடிய வர்தா... சிதறிக்கிடந்த பிராணவாயு உருளைகள் (Oxygen Cylinders)….




2015  டிசம்பர்  மாதம் துவக்கமே பெரிய இடரில் ஆரம்பித்தது… ஊரெங்கும் வெள்ளக்காடு… பாலுக்கும்… உணவுக்கும்…மக்கள் அலைந்து திரிந்தனர்…முதல் நாள் இரவில் மெழுகுவர்த்தி இல்லாததால் பெற்ற அவதியைக் கலைவதற்காக அடுத்தநாள் அதிகாலையில் எழுந்து கடைத்தெருவிற்கு சென்றாலும்… அங்கே கூட்டம் கூட்டமாய் மக்கள்….வரிசையில் நானும் என் முறை வரும் போது பால் தீர்ந்து விடும்… மெழுகுவர்த்தியாவது கிடைக்குமா என்றால்… சென்னை நகருக்குள்ளேயே வண்டி எதுவும் நுழைய இயலவில்லை ஆதலால் இரண்டு நாட்கள் ஆகும் என்று பதில்… நல்லவேளை இரண்டாம் நாள்.. பிரமாண்டமாய் கடை திறக்கப்பட்டது…. மக்களும் பிரமாண்டமாய் பொருட்களை வாங்கி..இல்லையில்லை… அள்ளிச் சென்றனர்… இந்த நினைவலைகள் மெல்ல மெல்ல அசைபோட்டு இந்த வருட திசம்பர் மாதம் துவங்கியது… நவம்பரில் இருந்தே ஏற்பட்ட பண விவகாரங்கள், மூலை முடுக்கெல்லாம் இருந்த ஏடிஎம் மையங்களைத் தான் கண்டெடுக்க முடிந்தது Out of order, பணம் இல்லை, ATM Not Working போன்ற வாசகங்களோடு… வங்கிக்குச் சென்றாலும் வரிசையில் நிற்க வேண்டிய நிலை… அவசரத்திற்கு பணம் எடுக்க வேண்டும் என்றாலும் குறைந்தது அரை நாளாவது விடுப்பு எடுக்க வேண்டிய நிலை… இரண்டாயிரம் எடுக்க அவ்வளவு கெடுபிடிகள்… ஆனால் கேடிகள் வீட்டில் கோடிகளில் புதிய இரண்டாயிரம் நோட்டுக் கட்டுகள்….புரியாமல் முழித்துக் கொண்டிருக்கும் வேளையில்…. டிசம்பர் மாதத்தின் துவக்கமே தமிழ் நாட்டின் முதல் அமைச்சர் இறந்த பேரதிர்ச்சி..!!! செல்பி எடுக்கும் மக்கள் ஒருபுறம்… முகத்தைக் கூட காணமுடியாமல் பதறித் துடிக்கும் மக்கள் மறுபுறம்… தொலைக்காட்சியில் முகத்தை வெகுஅருகில் பார்க்கும் பாக்கியத்துடன் பெருங்கூட்டம் ஒருபுறம் என்று கனத்த இதயத்தோடு நாள் துவங்கியது. குறைந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் என்ற செய்தி…நாடா புயலாம்… வந்ததும் தெரியவில்லை சென்றதும் தெரியவில்லை… பெரிய அளவு பாதிப்பை ஏற்படுத்தாத மழையை இறைத்துச் சென்றது. மனதினை ஆசுவாசப்படுத்திக் கொள்ளலாம் என்று நினைக்கும் போது… திடீரென்று மற்றுமொரு எச்சரிக்கை வர்தா என்ற புயல் எச்சரிக்கை… இந்தப் புயலினையும் ப்பூ.. என்று ஊதித் தள்ளவிடலாம் என்று எப்போதும் போல் ஞாயிற்றுக்கிழமையினை கழித்துக்கொண்டிருக்கும் வேளையில்..பத்தாம் எண் கூண்டு ஏற்றப்பட்டது என்ற எச்சரிக்கை….என்ன இது அவ்வளவு தீவிரமான புயலா வரப் போகிறது? போதுமான ஏற்பாடுகள் ஆயிற்றா? மக்கள் யாரிடமும் பதட்டம் தெரியவில்லை. தொழில்நுட்ப வளர்ச்சியி;ல் புயல் எந்த இடத்தில் இருக்கிறது என்பதனை கையில் குறைந்த அளவு சார்ஜ் கைபேசியில் இருந்தால் அதனை பார்க்கத் துடித்து புயலை வரவேற்கக் காத்திருந்தது சென்னை. மக்கள் குறுஞ்செய்திகளும், வாட்ஸ் அப் செய்திகளும், சமூக வலைத்தளங்களும் தீவிரமாய் தகவல்களை தெறிக்க வி;ட்டுக் கொண்டிருந்தனர். அரசின் கோரிக்கை பேரிடர் மேலாண்மை குழுவி;ற்கு ஒத்துழைக்க வேண்டும் என்று….இதோ வரப்போகிறது…. அதோ வரப் போகிறது என்ற ஓலங்களின் மத்தியில் வந்தே விட்டது….!!! சென்றே விட்டது….!!! வர்தா!!!


காற்றுதானே ஒன்றும் பாதிப்பு வந்துவிடாது… போன வருடம் போல் இந்த வருடம் ஏரிகளில் அந்த அளவிற்கு தண்ணீர் இல்லை அதனால் தண்ணீரால் பாதிப்பு ஏற்படாது… என்று அலட்சியமாக இருந்தவர்கள்…. ஒருகணம் வர்தாவின் கோரத்தாண்டவத்தைக் கண்டு திகைத்துத்தான் நின்றார்கள். பகல் இரவு முழுவதும் மழை கொட்டித் தீர்த்தது. மழை மிக தீவிரமாக இல்லையெனிலும் கொஞ்சம் மிரட்டத்தான் செய்தது. ஜன்னல் அடைத்தாலும் காற்றின் சத்தம் கேட்கத்தான் செய்தது. ஜன்னல் திறந்தாலும் சாரல் வீட்டில் விழத் தான் செய்தது. அன்றுதான் கொசுக்களின் ரீங்காரத்தை முழுமையாய் அனுபவிக்க முடிந்தது. இரவு முழுவதும் எத்தனைக் கொசுக்கள் சுத்தி வருகின்றன என்பதனை எண்ண முடிந்தது. இரவில் பூச்சிகள் எழுப்பும் ஒளியினை காட்டில் தான் கேட்டதுண்டு. அது இப்போது கேட்கிறது. அப்படியானால் என்னைச் சுற்றி பூச்சிகள் இருக்கத்தான் செய்கின்றன. இத்தனை நாட்களாக கொசுவும் ஈயும் மட்டும்தான் சென்னைக்குச் சொந்தம் என்றிருந்தேன். மற்றவை எல்லாம் ஐஐடி கேம்பஸில் மட்டும் தான் இருக்கும் என்றிருந்தேன். மின்சார வாரியத்திற்கு நன்றி…. அவர்களால் மின்சாரம் தர இயலாததால் அவைகளின் சத்தத்தினையும் தவளையும் சத்தத்தினையும் வெகுநாட்களுக்குப் பிறகு அதுவும் சென்னையில் தி.நகரில் கேட்க முடிந்தது.

 விடிந்து எழுந்தவர்கள் விளைவுகளை எதிர்பார்த்திருக்க மாட்டார்கள்..

விடிகாலை 4 மணிக்கு வர வேண்டிய பால் எங்கே இன்னும் வரவில்லை? பேருந்து ஏன் வரவில்லை? இங்கே இருந்த கடை எங்கே? இங்கே ஒரு பேருந்து நிலையம் இருந்ததே எங்கே போயிற்று? தெருவில் வந்து நின்றால்  எங்கும் பச்சை மயம்….. இங்கே இதற்கு முன் மரம் இருந்ததா? இவ்வளவு பெரிய மரமா? சென்னையில் இவ்வளவு மரங்களா என்று அன்று தான் நினைக்கத் தோன்றியது. இத்தனை நாட்களால் கட்டிடத்திற்கு நடுவே குலுங்கிக் கொண்டிருந்த மரங்கள், சாலையில் ஓரங்களில் ஓங்கிய மரங்கள்… மக்களுக்குப் பயன் அளிப்பதே இறுதி மூச்சாகக் கொண்ட மரங்கள், முடிந்த வரை புயலுடன் போராடின… வேகத்தைக் கட்டுப்படுத்த தன் கிளையினை வெட்டிப் போட்டன… அதிலும் முடியாதவைகள் தன்னை வேரோடே சாய்த்தே தடுக்க முயன்றன… ஒருவழியாக அனைத்தும் சேர்ந்து புயலை விரட்டின.. ஆனால் அந்தோ பரிதாபம் தனக்குக் கால்கள் இல்லாத காரணத்தினால் அப்படியே விழுந்தன.. பல கட்டிடங்களில்;…பல வாகனங்களில்;.. பல சாலைகளில்…. என்று எங்கும் மரங்களில் காட்சிகளே வியாபித்திருந்தது. சென்னையில் அன்றுதான் என்னைப் போலவே இவ்வளவு மரங்களைப் பார்த்திருக்க வாய்ப்பிருக்கும். ஆனால்… அந்தோ பரிதாபம் எல்லாமே தன்னுடைய இறுதி நாட்களில் அல்லவா தங்களை வெளிஉலகிற்கு காட்டியிருக்கிறது. உடைந்து கிடந்த ஒவ்வொரு மரங்களும் பிராண வாயு உருளைகளாய் கண்ணிற்கு தென்பட்டன. நாள்தோறும் நான் பிராண வாயுவினை சுவாசிக்கிறேன் அதனால் தான் உயிர் வாழ்கிறேன் என்றாலும்… சமீபத்தில் தான் என் மனைவி டெங்கு காய்ச்சலில் அவதியுற்ற போது பிராண வாயுவின் அவசியத்தினைக் கண்ணாற கண்டேன். இப்போது இவ்வளவு மரங்கள் வீழ்ந்து கிடப்பது பிராண வாயு உருளைகள் உடைந்து சிதறிக்கிடப்பதனைப் போன்றே உணர்ந்தேன். மாநகராட்சியும் தன்னார்வலர்களும் இணைந்து வேகவேமாக மரங்களை அறுத்து அப்புறப்படுத்தும் காட்சியியைப் பார்க்கும் போது போஸ்ட்மார்டம் செய்து பிணவறைக்குத் தூக்கிச் செல்வது போல மரக்கிளைகளை குப்பை வண்டிகளில் அள்ளிக் கொண்டு சென்றனர். ஆனால் சாலையை சரி செய்வதற்காக அவர்கள் எடுத்துக்கொண்ட சிரத்தை பாராட்டுக்குறியது. மின் ஊழியர்களுடைய பங்கும் போற்றுதலுக்குரியதாக இருந்தது.


 சீனாவின் தலைநகர் பெய்ஜிங் நகரம் ஞாபகத்திற்கு வந்து சென்றது. காற்றுமண்டலத்தை மொத்தமாக மாசுப்படுத்தி மாசுவின் அடர்த்தி அதிகமாகி சரியாக சுவாசிக்க இயலாமல் இங்கே எப்படி நாம் ஆறுகளில் உள்ள மணல்களை அள்ளியும், கழிவுகளை இறைத்தும் கற்பழித்து சாகடித்துக் கொண்டிருக்கிறப்பதால் குப்பிகளில் உள்ள தண்ணீரை மட்டுமே நம்பி அருந்துகிறோம்.. அதேபோல் காற்றுமண்டலத்தினை மாசுபடுத்தியதின் விளைவு இப்போது காற்று நிரப்பிய குப்பியினை கனடாவைச் சேர்ந்த வைட்டாலிட்டி ஏர் நிறுவனத்திடம் (ஒரு சுவாசத்திற்கு ரூ.12.50 3 லிட்டர் உள்ள குப்பியின் விலை ரூ.1450) வாங்கி சுவாசிக்க ஆரம்பித்திருக்கிறார்கள். அந்தக் குப்பி இப்போது இந்தியாவின் தலைநகரம் புதுடெல்லி வரை வந்துள்ளது. இனி சென்னையும் அந்தக் குப்பிகளை வாங்க வேண்டிய நிலை வருமா என்ற அச்சம் தொத்திக் கொண்டது. கையில் காசுப் புழக்கமே இல்லையே இந்தக் குப்பியை தொடர்ந்து வாங்கிப் பயன்படுத்தும் அளவிற்கு பொருளாதார உயர்வு அனைவரிடமும் இருக்குமா? ஆங்காங்கே கோடிகளிலில் தனிமனிதன் பிடிபடுவதைப் பார்க்கும் போது அந்தக் கோடிக்குள் எத்தனை மனிதர்களின் வாழ்க்கையும் வாழ்வாதாரம் அழிக்கப்பட்டிருக்கிறது என்பதனை நினைக்கும் போது நெஞ்சு பதறத்தான் செய்கிறது. என்ன செய்வது? நீதி ஒருநாள் கிடைக்கும் போது அது பயனற்றதாக சில சமயம் மாறிவிடும் போது அந்த நீதியினால் என்ன பயன் என்று நினைக்கத் தோன்றுகிறது.

இப்போது காற்று மண்டலம் மாசு படாமல் இருப்பதற்கும் அதிக அளவு பிராண வாயு உற்பத்தி செய்வதற்கும் இப்போது மரங்கள் அவசியத் தேவைகளாக இருக்கின்றன. அதனை  முன்னெடுத்துச் செல்வதற்கு கரங்கள் அதிகம் தேவை. கரங்கள் இணைந்தால் அடுத்த 5 ஆண்டுகளுக்குள் பிராண வாயுவினை எப்போதும் போல் இயற்கையாகவே பெறலாம் அல்லது குப்பி வாயுதான். ஆர்வமுள்ள அன்பர்கள் இணைந்து செயல்பட அழைக்கப்படுகிறார்கள்.
பின்வருபவற்றை அரசு கடைப்பிடித்தால் ஒருவேளை பேரிடர் சமயத்தில் ஓரளவு நிலைமையை கட்டுப்படுத்தலாம் என்று தோன்றுகிறது
முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றால் மக்கள் என்னன்ன நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்ற எச்சரிக்கைகள் தொலைக்காட்சிகள், தினசரிகள் மற்றும் சமூக வலைத்தளங்கள் போன்றவற்றின் மூலம் அறிவித்தல்
பேரிடர் எச்சரிக்கை, அதற்கான முன்னேற்பாடுகள், பின்னேற்பாடுகள் போன்றவற்றை மக்களுக்கு வெளிப்படுத்தும் செயலி (Mobile application)யினை மக்களுக்கு அறிமுகப்படுத்தி செயல்படுத்தல். 
மின்சாரம் முன்கூட்டியே நிறுத்தப் போகிறோம் என்ற அறிவிப்பு
முன்பே கவனிக்கக் கூடிய பேரிடர்களுக்காக ஒரு வாரத்திற்கு முன்னதாகவே போக்குவரத்து வசதிகள்
குடியிருப்பில் இருப்போர்களுக்கு பேரிடர்களை சமாளிப்பதற்கான ஒத்திகைகள்
பாதுகாப்பாக மரம் நடுவதற்கான யுக்திகள்
மரங்களை வேரோடு பிடிங்கி நடும் தொழில்நுட்பம்
நிறுவனங்கள் தங்களுடைய பணியாளர்களுக்கு பேரிடர் மேற்கொள்வதற்கான ஒத்திகைக் கொள்கைகள்
முதலுதவிப் பயிற்சிகள்
யாரிடம்,எவ்வாறு மற்றும் எங்கே தொடர்பு கொள்வது என்ற தகவல்கள்

தயார் நிலையில் இருக்கும் ஆம்புலன்சுகள் மற்றும் மருத்துவ சேவை மையங்கள்.

உணவு மற்றும் மருந்துத் தட்டுப்பாட்டிற்கான முன்னேற்பாடுகள்
காவல்துறை, இராணுவம் மற்றும் தன்னார்வலர்களின் சிறப்பு முகாம்கள் போன்றவை
நன்றி!


No comments:

Post a Comment