தோழர். மா. அமரேசன் அவர்கள் சிறந்த கட்டுரையாளர் குறிப்பாக சாதியம் குறித்த கருத்துக்கள், சமூக சிந்தனை,சூழியல், மற்றும் பௌத்தம் குறித்த அதிக தகவல்களை தருபவர்.
அவர் நடுங்கும் நிலம் நடுங்காமனம், கண்ணுக்கு புலப்படாத தண்ணீரும் புலப்படும் உண்மைகளும் போன்ற புத்தகங்களை எழுதியுள்ளார். தண்ணீர் அரசியல் என்ற ஒரு கட்டுரை சென்னை எத்திராஜ் கல்லூரியில் பாட புத்தகத்தில் ஒரு கட்டுரையாக வெளியிடப்பட்டுள்ளது. அவருடைய சமீபத்திய புத்தகமான சுற்றுசூழலும் சாதியப் புனிதமும் என்ற புத்தகம் படித்தேன். அதில் இருந்து சில கருத்துகளை உங்களின் பகிர்ந்து கொள்ள ஆசைப்படுகிறேன்.
சர் ஜகதீஷ் சந்திர போஸ் என்ற இந்திய அறிவியல் அறிஞர் தாவரங்களுக்கு உயிர் உண்டு என்பதனையும் தாவரங்கள் மனிதர்கள் மற்றும் தாவரங்களும் நம்மைப் போன்றே உணவு உண்டு செறிக்கின்றன; அவைகளும் மனிதர்களைப்போல் இரவில் உறங்கி, காலையில் விழிக்கின்றன; அவையும் பிறக்கின்றன, இறக்கின்றன; அவைகட்கும் நம்மைப் போன்றே மகிழ்ச்சி, துன்பம் ஆகிய உணர்ச்சிகள் உண்டு என்று படித்த விஷயத்தை இந்த நூலின் ஆசிரியர் தன்னுடைய அன்பவத்தின் வாயிலாக மக்கள் எவ்வாறு இயற்கையோடு சேர்ந்து வாழ கற்றிருந்தார்கள் என்பதையும். மரம் எவ்வாறு தன்னை வெட்டுவதற்கு அனுமதி வழங்குகிறது. அதனை மனிதர்கள் எவ்விதம் புரிந்து கொண்டு செயல் பட்ட்டார்கள் என்பதையும் நயம்பட விளக்கியுள்ளார். தண்ணீர் தூங்கும் நிலையினை எடுத்து சொன்னது நான் இதுவரை அறிந்திராத தகவலாக இருந்தது.மேலும், பல்வேறு சாதிய கட்டமைப்பினால் செருப்புக்க கூட போடாத நிலையில் எட்டிவாடி காடானது எவ்வாறு அவருக்கு சுதந்திரத்தினை வழங்கியது என்பதையும் நாமும் அவரோடு கூட நடந்து செல்லும் அனுபவத்தை தருகிறார்.
நமது காட்டு வழி பயணத்தில் நாம் பாதை தவறாமல் செல்வதற்கு எப்படி செல்ல வேண்டும் என்றும் குறிப்பிடுகிறார். காடுகள் எப்படி மலடானது. சுற்று சூழலுக்கு தீங்கு விளைவிக்கும் மரங்கள் யாவை? காடுகளுடன் நமது தொடர்பு அற்று போனதால் நாம் எதிர்கொள்ளக்கூடிய பிரச்சனைகள் என்ன என்பதனை விளக்குகிறார் தோழர் அமரேசன்.
எட்டுமா இயற்கை விவசாயம் என்ற கட்டுரையில் யானை நின்றாலும் மறைக்கும் உயரத்தில் இருக்கும் நெற்பயிர்கள் இப்போது ஏன் இல்லை என்பதை விளக்குகிறார். நம்மாழ்வார் அய்யா அவர்கள் தம்முடைய உரையில் அடிக்கடி சொல்வதுண்டு. விவசாயம் செஞ்சா 'அடி காட்டுக்கு நடு மாட்டுக்கு நுனி வீட்டுக்கு' என்று! அதாவது ஒரு நெல் பயிர் செய்தோம் என்றல் ஆதி பகுதியை நாம் உழுது மண்ணுக்கு உரமாக மாற்றி விடுகிறோம். நடுவில் இருக்கும் வைக்கோலை மாட்டுக்கு உணவாக கொடுத்து விடுகிறோம். நுனியில் முளைத்து நிற்கும் நெல் மணிகளை நாம் பயன்படுத்துகிறோம்.அதேபோல் மக் கள் இவ்வாறு விவசாயத்தோடும் விலங்குகளோடும் எவ்வாறு இயைந்து வாழ்ந்தனர் என்பதனை அழகாக விளக்கியுள்ளார்.
குப்பை அள்ளும் தொழிலாளர்களின் நிலையையும் குப்பையிலிருந்து வாழ்வாதாரத்தை முக்கியமாக மின்சாரத்தை தயாரிக்கும் தொழில் நுட்பத்தை பயன்படுத்தலாம் என்பது அருமையான யோசனை!
இப்போது பெரும் அரசியலாக நடை பெற்று கொண்டிருக்குக்கும் தண்ணீர் பிரச்னையும் விட்டு விடவில்லை ஆசிரியர் அவர்கள், பொலிவியாவில் செருப்பு தைக்கும் தொழிலாளியின் தலைமையில் நடைபெற்ற போராட்டம் தண்ணீர் முதலாளிகளை நாட்டை விட்டு துரத்தியதையும் தண்ணீர் தருகின்ற கட்சிக்கே ஓட்டு என்ற நிலை வெகு தொலைவில் இல்லை என்பதை அழகாக எடுத்துரைக்கின்றார்.
வேலூர் , ராமநாதபுரம், விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் மட்டும் வெயில் ஏன் இவ்வளவு அதிகமாக இருக்கின்றது. நாம் இதனை நாட்களும் அலட்சியமாய் கடந்து சென்றவைகளா இந்த அளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்பதனை ஆசிரியர் திறம்பட உணர வைக்கின்றார். கேரளா மாநிலத்தில் ஒழிக்கப்பட்டது போல சீமை கருவேலம், முள்வேலி, தைலமரம் ஒழிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தி இருப்பது பாராட்டப்பட வேண்டிய ஒன்று. இந்த விடயத்தை கையில் எடுத்தால் தான் வரும் தலைமுறைக்கு தண்ணீர் கொடுக்கிறோமோ இல்லையோ வறட்சியில் இருந்தாவது காப்பாத்தலாம்.
இலவசங்கள் வேண்டாம் தண்ணீர் கொடுங்கள். அப்படி கொடுப்பவர்களுக்கே எங்களது ஓட்டு என்ற சுவரொட்டி வாசகம் வெகு தொலைவில் இல்லை என்று அச்சுறுத்தலையும் கொடுத்துள்ள விடயம் அவசியம் சிந்திக்க வேண்டிய ஒன்று.
மழையும் மக்களும் எவ்வாறு ஒன்றிணைந்து வாழ்ந்தனர் என்பது குறித்த கட்டுரையினை படிக்கும்போது தான் யோசிக்க வைத்தது முன்பெல்லாம் ஒருவரை பற்றி விசாரிக்கும் போது 3 வது கேள்வியா ஊர்ல மழை பொழிஞ்சாதான்னு தான் கேட்பாங்க ! ஆனால் இப்போது அந்த விசாரிப்புகள் இல்லையே என்ற ஏக்கத்தை ஏற்படுத்தியது. மேலும் மழையின் வகைகள் நான் இதுவரை அறிந்திடாத ஒன்று. மழை மக்களோடு எப்படி ஒன்றித்து இருந்தது என்பதனை மிக அழகாக எழுதியுள்ளார் தோழர்.
மாதம் மும்மாரி பொழிந்ததா அமைச்சரே என்று அரசர் கேட்பது போல காட்சிகள் ராஜபாட் தெருக்கூத்தில் வரும்போது, என்னய்யா இது ஒரு மழை வருவது கூடவா ஒரு அரசன் இருப்பான். அரண்மனையை விட்டு வெளியே வராமலா வாழ்ந்து கொண்டிருப்பான் என்று நினைத்ததுண்டு. அனால் மும்மாரி பொழிகிறது என்றால் என்ன என்பதனை மிக நேர்த்தியாக விளக்கியுள்ளார் தோழர்.
கடந்த வாரம் நான் என்னுடைய உயர் அதிகாரியுடன் தலைமை செயலகம் சென்று திரும்பும் வழியில் தும்பிகள் (தட்டான்கள்) சுற்றி திரிவதைப் பார்த்து இன்னும் ஒரு வாரத்தில் சென்னையில் மழை பொழியும் என்றேன். அவரும் வானிலை அறிக்கையில் சொன்னார்களா? என்று கேட்டார். இல்லை இந்த தும்பிகள் எனக்கு உணர்த்துகின்றன என்றேன். அவ்வாறே நடந்தது. இந்த விடயம் எனக்கு இந்தப் புத்தகத்தைப் படித்ததினாலே தெரிந்தது.
தோழர் மது விற்பனையையும் சாடுகிறார். அரசின் மதுக்கடைகளில் அயல் நாட்டு மக்களின் தட்ப வெப்ப நிலைக்கேற்ப தயாரிக்கப்படும் மிவிதிலி (Indian Made Foreign Liquor ) தான் விற்கப்படுகிறது. பனை மரத்தில் கிடைக்கும் பொருட்களுக்கு அரசு மதிப்பளிப்பதில்லை என்ற தனது ஆதங்கத்தினையும் வெளிப்படுத்துகிறார்.
சுற்று சூழலும் சாதிய புனிதமும் என்ற கட்டுரையில், உடலுழைப்பு, பூமியினை கீறி செய்யும் உழவு தொழில் எவ்வாறு தீட்டென கருத்தப்பட்டது அது எவ்விதம் சாதிய புனிதத்தில் வந்ததென்பதையும் நாம் சாதாரணமாக டீ குடிக்க பயன்படுத்தும் பிளாஸ்டிக் குவளையில் எவ்வளவு சாதிய பின்னணி இருக்கிறது என்பதனை மிக அழகாக விளக்கியுள்ளார்.
நாம் நாள்தோறும் குடித்து புத்துணர்வு பெரும் தேனீர் பற்றிய கட்டுரையில் அதன் வகைகளையும் மரப் பயிராக இருக்கும் தேயிலை ஏன் செடியாகவே பராமரிக்கப்படுகிறது என்பதனை தோழர் தெளிவுபடுத்துகிறார். மேலும் தேனீர் உற்பத்தியினால் நாம் எவ்வளவு பெரிய அபாயத்தினை தாங்கி செல்கிறோம் என்பதனை விளக்கி மாற்று வழிகளையும் தோழர் சிறப்பாக விளக்குகிறார்.
விவாசிகளின் நிலையினையும் நிலங்களை வைத்திருப்போர் அதனை காலைல தெரியாத நிலையினாலும், சாத்திய பின்னணியிலாலும் விவசாயம் எவ்வாறு நலிவடைந்தது. மேலும், அதில் சாதிய தாக்கம் எவ்விதம் இருந்தது என்பதனையும் மிக தெளிவாக விளக்கியிருக்கிறார் தோழர்.
பாரட்டப் பட வேண்டிய புதிய அணுகுமுறை புத்தகம்.
எழுபது ரூபாயில் ஏராளமான தகவல்கள்!
மேன்மை பதிப்பகம் , இராயப்பேட்டை, சென்னை
தொலைபேசி: 04428472058இவரது பிற படைப்புகள்:
No comments:
Post a Comment