Tuesday, 13 December 2016

கோரத்தாண்டவம் ஆடிய வர்தா... சிதறிக்கிடந்த பிராணவாயு உருளைகள் (Oxygen Cylinders)….




2015  டிசம்பர்  மாதம் துவக்கமே பெரிய இடரில் ஆரம்பித்தது… ஊரெங்கும் வெள்ளக்காடு… பாலுக்கும்… உணவுக்கும்…மக்கள் அலைந்து திரிந்தனர்…முதல் நாள் இரவில் மெழுகுவர்த்தி இல்லாததால் பெற்ற அவதியைக் கலைவதற்காக அடுத்தநாள் அதிகாலையில் எழுந்து கடைத்தெருவிற்கு சென்றாலும்… அங்கே கூட்டம் கூட்டமாய் மக்கள்….வரிசையில் நானும் என் முறை வரும் போது பால் தீர்ந்து விடும்… மெழுகுவர்த்தியாவது கிடைக்குமா என்றால்… சென்னை நகருக்குள்ளேயே வண்டி எதுவும் நுழைய இயலவில்லை ஆதலால் இரண்டு நாட்கள் ஆகும் என்று பதில்… நல்லவேளை இரண்டாம் நாள்.. பிரமாண்டமாய் கடை திறக்கப்பட்டது…. மக்களும் பிரமாண்டமாய் பொருட்களை வாங்கி..இல்லையில்லை… அள்ளிச் சென்றனர்… இந்த நினைவலைகள் மெல்ல மெல்ல அசைபோட்டு இந்த வருட திசம்பர் மாதம் துவங்கியது… நவம்பரில் இருந்தே ஏற்பட்ட பண விவகாரங்கள், மூலை முடுக்கெல்லாம் இருந்த ஏடிஎம் மையங்களைத் தான் கண்டெடுக்க முடிந்தது Out of order, பணம் இல்லை, ATM Not Working போன்ற வாசகங்களோடு… வங்கிக்குச் சென்றாலும் வரிசையில் நிற்க வேண்டிய நிலை… அவசரத்திற்கு பணம் எடுக்க வேண்டும் என்றாலும் குறைந்தது அரை நாளாவது விடுப்பு எடுக்க வேண்டிய நிலை… இரண்டாயிரம் எடுக்க அவ்வளவு கெடுபிடிகள்… ஆனால் கேடிகள் வீட்டில் கோடிகளில் புதிய இரண்டாயிரம் நோட்டுக் கட்டுகள்….புரியாமல் முழித்துக் கொண்டிருக்கும் வேளையில்…. டிசம்பர் மாதத்தின் துவக்கமே தமிழ் நாட்டின் முதல் அமைச்சர் இறந்த பேரதிர்ச்சி..!!! செல்பி எடுக்கும் மக்கள் ஒருபுறம்… முகத்தைக் கூட காணமுடியாமல் பதறித் துடிக்கும் மக்கள் மறுபுறம்… தொலைக்காட்சியில் முகத்தை வெகுஅருகில் பார்க்கும் பாக்கியத்துடன் பெருங்கூட்டம் ஒருபுறம் என்று கனத்த இதயத்தோடு நாள் துவங்கியது. குறைந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் என்ற செய்தி…நாடா புயலாம்… வந்ததும் தெரியவில்லை சென்றதும் தெரியவில்லை… பெரிய அளவு பாதிப்பை ஏற்படுத்தாத மழையை இறைத்துச் சென்றது. மனதினை ஆசுவாசப்படுத்திக் கொள்ளலாம் என்று நினைக்கும் போது… திடீரென்று மற்றுமொரு எச்சரிக்கை வர்தா என்ற புயல் எச்சரிக்கை… இந்தப் புயலினையும் ப்பூ.. என்று ஊதித் தள்ளவிடலாம் என்று எப்போதும் போல் ஞாயிற்றுக்கிழமையினை கழித்துக்கொண்டிருக்கும் வேளையில்..பத்தாம் எண் கூண்டு ஏற்றப்பட்டது என்ற எச்சரிக்கை….என்ன இது அவ்வளவு தீவிரமான புயலா வரப் போகிறது? போதுமான ஏற்பாடுகள் ஆயிற்றா? மக்கள் யாரிடமும் பதட்டம் தெரியவில்லை. தொழில்நுட்ப வளர்ச்சியி;ல் புயல் எந்த இடத்தில் இருக்கிறது என்பதனை கையில் குறைந்த அளவு சார்ஜ் கைபேசியில் இருந்தால் அதனை பார்க்கத் துடித்து புயலை வரவேற்கக் காத்திருந்தது சென்னை. மக்கள் குறுஞ்செய்திகளும், வாட்ஸ் அப் செய்திகளும், சமூக வலைத்தளங்களும் தீவிரமாய் தகவல்களை தெறிக்க வி;ட்டுக் கொண்டிருந்தனர். அரசின் கோரிக்கை பேரிடர் மேலாண்மை குழுவி;ற்கு ஒத்துழைக்க வேண்டும் என்று….இதோ வரப்போகிறது…. அதோ வரப் போகிறது என்ற ஓலங்களின் மத்தியில் வந்தே விட்டது….!!! சென்றே விட்டது….!!! வர்தா!!!


காற்றுதானே ஒன்றும் பாதிப்பு வந்துவிடாது… போன வருடம் போல் இந்த வருடம் ஏரிகளில் அந்த அளவிற்கு தண்ணீர் இல்லை அதனால் தண்ணீரால் பாதிப்பு ஏற்படாது… என்று அலட்சியமாக இருந்தவர்கள்…. ஒருகணம் வர்தாவின் கோரத்தாண்டவத்தைக் கண்டு திகைத்துத்தான் நின்றார்கள். பகல் இரவு முழுவதும் மழை கொட்டித் தீர்த்தது. மழை மிக தீவிரமாக இல்லையெனிலும் கொஞ்சம் மிரட்டத்தான் செய்தது. ஜன்னல் அடைத்தாலும் காற்றின் சத்தம் கேட்கத்தான் செய்தது. ஜன்னல் திறந்தாலும் சாரல் வீட்டில் விழத் தான் செய்தது. அன்றுதான் கொசுக்களின் ரீங்காரத்தை முழுமையாய் அனுபவிக்க முடிந்தது. இரவு முழுவதும் எத்தனைக் கொசுக்கள் சுத்தி வருகின்றன என்பதனை எண்ண முடிந்தது. இரவில் பூச்சிகள் எழுப்பும் ஒளியினை காட்டில் தான் கேட்டதுண்டு. அது இப்போது கேட்கிறது. அப்படியானால் என்னைச் சுற்றி பூச்சிகள் இருக்கத்தான் செய்கின்றன. இத்தனை நாட்களாக கொசுவும் ஈயும் மட்டும்தான் சென்னைக்குச் சொந்தம் என்றிருந்தேன். மற்றவை எல்லாம் ஐஐடி கேம்பஸில் மட்டும் தான் இருக்கும் என்றிருந்தேன். மின்சார வாரியத்திற்கு நன்றி…. அவர்களால் மின்சாரம் தர இயலாததால் அவைகளின் சத்தத்தினையும் தவளையும் சத்தத்தினையும் வெகுநாட்களுக்குப் பிறகு அதுவும் சென்னையில் தி.நகரில் கேட்க முடிந்தது.

 விடிந்து எழுந்தவர்கள் விளைவுகளை எதிர்பார்த்திருக்க மாட்டார்கள்..

விடிகாலை 4 மணிக்கு வர வேண்டிய பால் எங்கே இன்னும் வரவில்லை? பேருந்து ஏன் வரவில்லை? இங்கே இருந்த கடை எங்கே? இங்கே ஒரு பேருந்து நிலையம் இருந்ததே எங்கே போயிற்று? தெருவில் வந்து நின்றால்  எங்கும் பச்சை மயம்….. இங்கே இதற்கு முன் மரம் இருந்ததா? இவ்வளவு பெரிய மரமா? சென்னையில் இவ்வளவு மரங்களா என்று அன்று தான் நினைக்கத் தோன்றியது. இத்தனை நாட்களால் கட்டிடத்திற்கு நடுவே குலுங்கிக் கொண்டிருந்த மரங்கள், சாலையில் ஓரங்களில் ஓங்கிய மரங்கள்… மக்களுக்குப் பயன் அளிப்பதே இறுதி மூச்சாகக் கொண்ட மரங்கள், முடிந்த வரை புயலுடன் போராடின… வேகத்தைக் கட்டுப்படுத்த தன் கிளையினை வெட்டிப் போட்டன… அதிலும் முடியாதவைகள் தன்னை வேரோடே சாய்த்தே தடுக்க முயன்றன… ஒருவழியாக அனைத்தும் சேர்ந்து புயலை விரட்டின.. ஆனால் அந்தோ பரிதாபம் தனக்குக் கால்கள் இல்லாத காரணத்தினால் அப்படியே விழுந்தன.. பல கட்டிடங்களில்;…பல வாகனங்களில்;.. பல சாலைகளில்…. என்று எங்கும் மரங்களில் காட்சிகளே வியாபித்திருந்தது. சென்னையில் அன்றுதான் என்னைப் போலவே இவ்வளவு மரங்களைப் பார்த்திருக்க வாய்ப்பிருக்கும். ஆனால்… அந்தோ பரிதாபம் எல்லாமே தன்னுடைய இறுதி நாட்களில் அல்லவா தங்களை வெளிஉலகிற்கு காட்டியிருக்கிறது. உடைந்து கிடந்த ஒவ்வொரு மரங்களும் பிராண வாயு உருளைகளாய் கண்ணிற்கு தென்பட்டன. நாள்தோறும் நான் பிராண வாயுவினை சுவாசிக்கிறேன் அதனால் தான் உயிர் வாழ்கிறேன் என்றாலும்… சமீபத்தில் தான் என் மனைவி டெங்கு காய்ச்சலில் அவதியுற்ற போது பிராண வாயுவின் அவசியத்தினைக் கண்ணாற கண்டேன். இப்போது இவ்வளவு மரங்கள் வீழ்ந்து கிடப்பது பிராண வாயு உருளைகள் உடைந்து சிதறிக்கிடப்பதனைப் போன்றே உணர்ந்தேன். மாநகராட்சியும் தன்னார்வலர்களும் இணைந்து வேகவேமாக மரங்களை அறுத்து அப்புறப்படுத்தும் காட்சியியைப் பார்க்கும் போது போஸ்ட்மார்டம் செய்து பிணவறைக்குத் தூக்கிச் செல்வது போல மரக்கிளைகளை குப்பை வண்டிகளில் அள்ளிக் கொண்டு சென்றனர். ஆனால் சாலையை சரி செய்வதற்காக அவர்கள் எடுத்துக்கொண்ட சிரத்தை பாராட்டுக்குறியது. மின் ஊழியர்களுடைய பங்கும் போற்றுதலுக்குரியதாக இருந்தது.


 சீனாவின் தலைநகர் பெய்ஜிங் நகரம் ஞாபகத்திற்கு வந்து சென்றது. காற்றுமண்டலத்தை மொத்தமாக மாசுப்படுத்தி மாசுவின் அடர்த்தி அதிகமாகி சரியாக சுவாசிக்க இயலாமல் இங்கே எப்படி நாம் ஆறுகளில் உள்ள மணல்களை அள்ளியும், கழிவுகளை இறைத்தும் கற்பழித்து சாகடித்துக் கொண்டிருக்கிறப்பதால் குப்பிகளில் உள்ள தண்ணீரை மட்டுமே நம்பி அருந்துகிறோம்.. அதேபோல் காற்றுமண்டலத்தினை மாசுபடுத்தியதின் விளைவு இப்போது காற்று நிரப்பிய குப்பியினை கனடாவைச் சேர்ந்த வைட்டாலிட்டி ஏர் நிறுவனத்திடம் (ஒரு சுவாசத்திற்கு ரூ.12.50 3 லிட்டர் உள்ள குப்பியின் விலை ரூ.1450) வாங்கி சுவாசிக்க ஆரம்பித்திருக்கிறார்கள். அந்தக் குப்பி இப்போது இந்தியாவின் தலைநகரம் புதுடெல்லி வரை வந்துள்ளது. இனி சென்னையும் அந்தக் குப்பிகளை வாங்க வேண்டிய நிலை வருமா என்ற அச்சம் தொத்திக் கொண்டது. கையில் காசுப் புழக்கமே இல்லையே இந்தக் குப்பியை தொடர்ந்து வாங்கிப் பயன்படுத்தும் அளவிற்கு பொருளாதார உயர்வு அனைவரிடமும் இருக்குமா? ஆங்காங்கே கோடிகளிலில் தனிமனிதன் பிடிபடுவதைப் பார்க்கும் போது அந்தக் கோடிக்குள் எத்தனை மனிதர்களின் வாழ்க்கையும் வாழ்வாதாரம் அழிக்கப்பட்டிருக்கிறது என்பதனை நினைக்கும் போது நெஞ்சு பதறத்தான் செய்கிறது. என்ன செய்வது? நீதி ஒருநாள் கிடைக்கும் போது அது பயனற்றதாக சில சமயம் மாறிவிடும் போது அந்த நீதியினால் என்ன பயன் என்று நினைக்கத் தோன்றுகிறது.

இப்போது காற்று மண்டலம் மாசு படாமல் இருப்பதற்கும் அதிக அளவு பிராண வாயு உற்பத்தி செய்வதற்கும் இப்போது மரங்கள் அவசியத் தேவைகளாக இருக்கின்றன. அதனை  முன்னெடுத்துச் செல்வதற்கு கரங்கள் அதிகம் தேவை. கரங்கள் இணைந்தால் அடுத்த 5 ஆண்டுகளுக்குள் பிராண வாயுவினை எப்போதும் போல் இயற்கையாகவே பெறலாம் அல்லது குப்பி வாயுதான். ஆர்வமுள்ள அன்பர்கள் இணைந்து செயல்பட அழைக்கப்படுகிறார்கள்.
பின்வருபவற்றை அரசு கடைப்பிடித்தால் ஒருவேளை பேரிடர் சமயத்தில் ஓரளவு நிலைமையை கட்டுப்படுத்தலாம் என்று தோன்றுகிறது
முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றால் மக்கள் என்னன்ன நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்ற எச்சரிக்கைகள் தொலைக்காட்சிகள், தினசரிகள் மற்றும் சமூக வலைத்தளங்கள் போன்றவற்றின் மூலம் அறிவித்தல்
பேரிடர் எச்சரிக்கை, அதற்கான முன்னேற்பாடுகள், பின்னேற்பாடுகள் போன்றவற்றை மக்களுக்கு வெளிப்படுத்தும் செயலி (Mobile application)யினை மக்களுக்கு அறிமுகப்படுத்தி செயல்படுத்தல். 
மின்சாரம் முன்கூட்டியே நிறுத்தப் போகிறோம் என்ற அறிவிப்பு
முன்பே கவனிக்கக் கூடிய பேரிடர்களுக்காக ஒரு வாரத்திற்கு முன்னதாகவே போக்குவரத்து வசதிகள்
குடியிருப்பில் இருப்போர்களுக்கு பேரிடர்களை சமாளிப்பதற்கான ஒத்திகைகள்
பாதுகாப்பாக மரம் நடுவதற்கான யுக்திகள்
மரங்களை வேரோடு பிடிங்கி நடும் தொழில்நுட்பம்
நிறுவனங்கள் தங்களுடைய பணியாளர்களுக்கு பேரிடர் மேற்கொள்வதற்கான ஒத்திகைக் கொள்கைகள்
முதலுதவிப் பயிற்சிகள்
யாரிடம்,எவ்வாறு மற்றும் எங்கே தொடர்பு கொள்வது என்ற தகவல்கள்

தயார் நிலையில் இருக்கும் ஆம்புலன்சுகள் மற்றும் மருத்துவ சேவை மையங்கள்.

உணவு மற்றும் மருந்துத் தட்டுப்பாட்டிற்கான முன்னேற்பாடுகள்
காவல்துறை, இராணுவம் மற்றும் தன்னார்வலர்களின் சிறப்பு முகாம்கள் போன்றவை
நன்றி!


Monday, 5 December 2016

சரித்திர மங்கை

















சரித்திரத்தில் படித்ததுண்டு
வீரமங்கை சரிதங்கள்
கோவிலில் தான் உண்டு
தைரிய லெட்சுமி சிற்பங்கள் -நிஜத்தில்
உனை கண்டு வியந்திருந்தேன்!
பன்முகம் கண்டு மதிப்பும் நிறைத்திருந்தேன்!
எதிரியாக இருந்தாலும்-
எட்ட நின்றே
எக்காளம்  இடுவர்!
துரோகம் செய்தோர்
துச்சமாக மாற்றப்படுவர்!
தடைகள் எல்லாம்
தடுமாறியே போகும்!
வறியவர் வறுமைக்கு
புது வாழ்வு பிறந்தது!
புதுத்திட்டங்கள் எல்லாம் - மக்களிடம்
விரைந்ததே  சென்றது!

இத்தனை இருந்தும் ...
ஆளுமையின் அடையாளம்
அந்தோ சரிந்தது ....!
சகாப்தம் முடிந்தது
புது சரித்திரம் துவங்கியது.
உன்னால் இதுவரை ...
அண்ணா நாமம் வாழ்க!
புரட்சி தலைவர் எம்.ஜி .ஆர். நாமம் வாழ்க!
இனி...
ஊர் உரைக்கும்
அம்மா நாமம் வாழ்க ....!

Friday, 2 December 2016

ஸ்வாவ்லம்பன் மாற்று திறனாளிகளுக்கான சுகாதார காப்பீட்டு திட்டம்



இன்று உலகம் முழுவதிலும் மாற்று திறனாளிகள் தினம் அனுசரிக்கப்படுகிறது. மாற்று திறனாளிகள் தங்கள் திறமைகளை பல்வேறு இடங்களில் பல்வேறு விதங்களில் நிரூபித்து வருகின்றனர். அதற்கு உதாரணமாக சமீபத்தில் நிறைவு பெற்ற ரியோ ஒலிம்பிக் போட்டிகளை சொல்லலாம். ஆனால்  அவர்களுடைய திறமைகள் பரவலாக தெரிவதில்லை. மேலும் தங்கள் வீட்டில் இருக்கும் மாற்று திறனாளிகளுக்கு உள்ள திறமைகளையும் பலர் தெரிந்து கொள்வதில்லை. அவர்கள் திறமைகளை பற்றி சொல்ல வேண்டுமெனில், பார்வை திறன் குறைந்தவர்கள் அல்லது பார்வை திறன் அற்றவர்களை எடுத்துக் கொண்டால், அவர்கள் தினம் தினம் பரபரப்பான நகரத்தில் கூட பல்வேறு வாகனங்களை, சாலைகளை கடந்து வந்தாலும் அவர்கள் அதிகம் விபத்துகளை சந்திப்பதில்லை, பல்வேறு மாறுபட்ட குரல்களை நினைவில் நிறுத்தி ஆண்டுகள் கழித்து சென்றாலும் நினைவு படுத்துகின்றனர். மாற்று திறனாளிகளில் பல்வேறு தொழில் செய்பவர்களை நாம் சந்தித்திருப்போம் அரசு பணியாளராக, அலுவலக உதவியாளராக,  தச்சு வேலை செய்பவராக, பொறியாளராக, கட்டிட தொழிலாளியாக, பத்திரம் எழுதுபவராக, தொகுப்பாளராக, இயந்திரம் பழுது நீக்குபவராக, நடனம் ஆடுபவராக, விற்பனையாளராக என்று பல விதங்களில் பார்த்திருப்போம்...!
திறமைகள் பல இருந்தும் வாய்ப்புகள் குறைவாகவே வழங்கப்படுகின்றன. அனைத்து இடங்களிலும் அவர்கள் எளிதாக அணுகுவதற்க்கு ஏதுவாக வாய்ப்புகள் இருந்தால் அவர்களாலும் இன்னும் பல சாதனைகள் புரிய இயலும். பாதுகாப்பு விஷயத்திலும் அப்படிதான்! ஆனால், அவர்களுடைய பாதுகாப்பிற்கு தற்போது ஒரு சுகாதார காப்பீடு திட்டம் வந்துள்ளது.
நம்மால் நேரிடையாக அவர்களுக்கு ஏதேனும் உதவி புரிய வேண்டும் என்று ஒரு வேளை நீங்கள் விரும்பினால், மாற்று திறனாளிகளுக்கான வர பிரசாதமாக தற்போது வந்திருக்கும் ஸ்வாவ்லம்பன் சுகாதார காப்பீட்டு திட்டத்தில் அவர்களை இணைய வைக்கலாம். இந்த திட்டம் மத்திய அரசால் திட்டமிடப்பட்டு நியூ இந்தியா அஸுரன்ஸ் கார்ப்பரேஷன் லிமிடெட் மூலம் செயல் படுத்துகிறது.
இந்த திட்டத்தில் மாற்று திறனாளிகளை இணைத்த அனுபவத்தினை கொண்டு என்னுடைய புரிதலின் அடிப்படையில் திட்டத்தினை குறித்து விளக்கியுள்ளேன். மேலும் விண்ணப்பப் படிவமும் இணைத்துள்ளேன். விருப்பமுள்ளவர்கள் தாங்களோ அல்லது தங்களுக்கு தெரிந்த மாற்று திறனாளிகளுக்கோ இதனை பரிந்துரை செய்து பயன்படுத்தி கொள்ளலாம்.

திட்டத்தின் சிறப்பம்சங்கள்:

  • ரூ. 2,00,000 வரை குடும்ப மிதவை காப்பீடு 
  • காப்பீட்டிற்கு முந்தைய மருத்துவ பரிசோதனைகள் தேவையில்லை.
  • குடும்ப வருமானம் ரூ.3,00,000 வரை இருக்கலாம். சுய உறுதிமொழி போதும். வருமான சான்றிதழ் அளிக்க தேவை இல்லை.
  • காப்பீடு தொகையில் 90 சதவீதம் அரசு செலுத்தி விடுகிறது. மாற்று திறனாளி செலுத்த வேண்டிய ப்ரீமியம் 10 சதவீதம் மட்டுமே.
  • மூட நீக்கியல் சிகிச்சைக்காக ஒரு வருடத்திற்கு புற  நோயாளி பிரிவு சிகிச்சைக்கு ரூ.10,000 வரை பயன்படுத்தி கொள்ளலாம்.
  • மருத்துவமனையின் முந்தைய பிந்தைய செலவுகளும் திட்டத்தில் பொருந்தும்.
காப்பீட்டிற்கு தகுதியானவர்கள்:
இந்தத் திட்டத்தில் மூளை முடக்குவாதம், புறஉலக சிந்தனையற்றவர்கள் மற்றும் ஒன்றுக்கு மேற்பட்ட ஊனம் உடையவர்களை (Cerebral Palsy, Autism, Multiple Disabilities) தவிர அனைத்து மாற்றுத்திறனாளிகளும் தகுதியானவர்கள்.   • பிறந்தது முதல் 65 வயது வரை உடைய மாற்றுத்திறனாளிகள்
மேற்கூறிய தகுதியுடையவர்களின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.3, 00,000 மிகாமல் இருக்க வேண்டும்.
தகுதியுடைய குடும்பம்: 
வகை 1: திருமணமான ஆண் அல்லது பெண் மாற்றுத்திறனாளி மற்றும் அவர்களுடைய முதல் 2 திருமணமாகாத குழந்தைகள் (25 வயதிற்குள் குழந்தைகள் வயது இருக்க வேண்டும்)
வகை 2: 18 வயதிற்கு மேல் திருமணமாகாத மாற்றுத்திறனாளி மட்டுமே பொருந்துவர். அவர்களுடைய குடும்பத்தில் வேறு எவரையும் இணைக்க இயலாது.
வகை 3: 18 வயதிற்குள் இருக்கும் மாற்றுத்திறனாளி மைனர் என்ற அடிப்படையில் அவர்களுடைய பெற்றோர் அல்லது பாதுகாவலரை (பாதுகாவலர் சான்றிதழ் வேண்டும்) இணைக்கலாம்.
2. காப்பீட்டிற்கான பிரீமியத்தொகை ரூ.310 சேவைவரியினைச் (தற்போது ரூ.47) சேர்த்து மொத்தம் ரூ.357 ஒரு குடும்பத்திற்கு கட்டப்பட வேண்டும் . சேவை வரியின் அளவு அவ்வப்போது மாறுபடலாம்.

5. சான்றுகளை கவனமாகப் பார்த்து காப்பீடு திட்டக் குழுவிற்கு நபர்களை அனுப்புதல் நலம். அதாவது சுய கையொப்பமிடப்பட்ட மாற்றுத்திறனாளியின் தேசிய அடையாள அட்டை 3 பக்க நகல்கள், புகைப்பட அடையாள அட்டை (மாற்றுத்திறனாளி மைனராக இருந்தால் அவருடைய பெற்றோர் கையொப்பம் இட வேண்டும்) மற்றும் யாருடைய புகைப்படம் எல்லாம் ஒட்டப்பட்டிருக்கிறதோ அவர்களுடைய புகைப்பட அடையாள அட்டை சுய கையொப்பம் இடப்பட்ட நகல்கள். மற்றும் கூடுதல் புகைப்படங்கள் போன்றவை.

படிவம் பூர்த்தி செய்யும் முறை:
6. படிவத்தில் ஆங்கிலத்தில் மட்டுமே பூர்த்திச் செய்யப்பட வேண்டும்.
7. Name of the Institute என்ற இடத்தில் …..  நிறுவனம் சார்ந்து விண்ணப்பித்தால் நிறுவனத்தின் பெயரைக் குறிப்பிடவும்
8. Camp Location  என்ற இடத்தில், முகாம் நடத்தினால் நடைபெறும் இடம் மற்றும் Date என்று இருக்கும் இடத்தில் முகாம் தேதியினைக் குறிப்பிடவும்

9. DETAILS OF PERSONS TO BE INSURED: என்ற தலைப்பின் கீழ் ஒரு அட்டவணை இருக்கும்.
பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்ப மாதிரியினை பார்த்தால் எளிதாக விளங்கும். அட்டவணையில், S.No> Name> Relation> Sex (M/F)>DOB என்று 5 Column இருக்கும். மேலும் Relation என்ற Column கீழ் PWD> Spouse> child 1> Child 2  என்று இருக்கும்.
S.No. என்ற Column கீழ் வரிசை எண் குறிக்கப்பட்டிருக்கும்.
Name  என்ற Column கீழ் பெயர்கள் எழுதப்பட வேண்டும். முதலில் மாற்றுத்திறனாளியின் பெயர், அதனைத் தொடர்ந்து அவருடைய மனைவி/கணவர் பெயர் குறிக்கப்பட வேண்டும், மூன்றாவதாக முதல் குழந்தை பெயர் நான்காவதாக இரண்டாவது குழந்தையின் பெயர் இடம் பெற வேண்டும்.
ஒரு வேளை மாற்றுத்திறனாளி மைனர் என்றால் முதலில் மாற்றுத்திறனாளியின் பெயர் எழுதி, அடுத்தவதாக தந்தை மற்றும் அதனைத் தொடர்ந்து தாயின் பெயர் எழுதப்பட வேண்டும்.
மாற்றுத்திறனாளி 18 வயதிற்கு மேல் இருந்து திருமணம் ஆகாதவராக இருந்தால் மாற்றுத்திறனாளி பெயர் மட்டும்  குறிப்பிடப்பட வேண்டும். மற்றவர்கள் பெயர்கள் குறிப்பிடப்படக் கூடாது.
Relation என்ற Column கீழ் PWD> Spouse> child 1> Child 2 என்று இருக்கும்.
முதல் வரிசையில் மாற்றுத்திறனாளி பெயர் இருப்பதால் PWD என்பதில் எந்த மாற்றமும் செய்யத் தேவையில்லை.
இரண்டாவது வரிசையில் திருமணமான மாற்றுத்திறனாளியாக இருந்தால் Spouse  என்ற இடத்தில் Husband/Wife எது பொருந்துமோ அதனை குறிப்பிட வேண்டும். இல்லையெனில் Spouse என்றே விட்டு விடலாம்.
ஒருவேளை மாற்றுத்திறனாளி 18 வயதிற்குள் இருக்கும் மைனர் மாற்றுத்திறனாளியாக இருந்தால் இரண்டாவது வரிசையில் Spouse என்பதனை அடித்துவிட்டு Father  என்றும் மூன்றாவது வரிசையில் child  1 என்பதை அடித்துவிட்டு Mother  என்றும் எழுத வேண்டும்.
மாற்றுத்திறனாளி 18 வயது நிரம்பிய மற்றும் திருமணம் ஆகாதவர் என்றால் 2,3,4 வரிசைகள் அவருக்குப் பொருந்தாது.
ஒரு திருமணமான மாற்றுத்திறனாளியின் குடும்பத்தில் இரண்டு மாற்றுத்திறனாளிகள் இருந்தால் அதாவது மனைவியும் முதல் குழந்தையும் மாற்றுத்திறனாளி என்று இருந்தால் மனைவி பெயரினை முதலாவதாகவும், மாற்றுத்திறனாளி குழந்தையினை இரண்டாவதாகவும் குறிப்பிட வேண்டும். அதனைத் தொடர்ந்து கணவர் பெயரும் இரண்டாவது குழந்தையின் பெயரும் குறிப்பிட வேண்டும். முதல் குழந்தை பெயருக்கு நேராகவும் PWD, Child1  என்று குறிப்பிட வேண்டும்.
Sex (M/F)>  என்ற Column  ல்ஆண் என்றால் M  என்றும் பெண் என்றால் F என்றும் குறிப்பிடவும். திருநங்கையாக இருந்தால் TG  என்று குறிப்பிடவும்.
DOB என்று வரும் Column த்தில் தேதி/மாதம் /வருடம். என்ற முறையில் பிறந்த தேதி குறிப்பிடப்பட வேண்டும்.
10. PHOTOGRAPHS OF INSURED PERSONS: என்று தொடர்ந்து புகைப்படம் ஒட்டுவதற்கான இடம் இருக்கும். அதில் மேலே பெயர் எழுதிய வரிசையின் அடிப்படையில் பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஒட்டப்பட வேண்டும். அதாவது வரிசை எண் 1ன் கீழ் உள்ள பெயர் முதலாவதாகவும், அதனைத் தொடர்ந்து 2,3,4 என்று ஒட்டப்பட வேண்டும்.
ஓவ்வொரு புகைப்படத்தின் கீழும் சம்மந்தப்பட்ட நபரின் பெயர் எழுதப்பட்டிருக்க வேண்டும்.
படிவத்தில் ஒட்டப்பட்ட அனைத்துப் புகைப்படத்திற்கும் கூடுதலாக
மற்றொரு புகைப்படம் படிவத்திலேயே இணைத்துக் கொடுக்கப்பட வேண்டும். ஒவ்வொருவரும் மொத்தம் இரண்டு புகைப்படம் சமர்ப்பிக்க வேண்டும். அப்போதுதான் அடையாள அட்டைக்கு தயார் செய்ய இயலும்.
11. Name of the Guardian ………… (in case of minor)  என்று இருக்கும். இந்தப் பகுதியில் மாற்றுத்திறனாளி 18 வயதிற்குக் கீழ் இருந்தால் மட்டும் அவருடைய தந்தை/தாயர்/பாதுகாவலர் பெயர் குறிக்கப்பட வேண்டும்.
12. Residential Address: என்று தொடர்ந்து வீட்டு முகவரி எழுதுவதற்கான இடம் இருக்கும். இதில் வீட்டு முகவரி எழுதும் போது  Claim  சமயத்தில் இந்த முகவரிதான் முக்கியத்துவம் பெறும் என்பதை மனதில் வைத்து எழுத வேண்டும். வாக்காளர் அடையாள அட்டை அல்லது ஆதார் அட்டை எதனை புகைப்பட அடையாள அட்டையாக சமர்ப்பிக்கிறாரோ அதில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரியுடன் ஒத்துப் போதல் நலம். Tel No. மற்றும் E-mail என்று ஒதுக்கப்பட்ட இடத்தில் தொலைபேசி/கைப்பேசி மற்றும் மின்னஞ்சல் முகவரி இருந்தால் வழங்கப்பட வேண்டும். ஏனெனில் Claim Process ன் போது இதன் வழியாகத்தான் தகவல்கள் தெரிவிக்கப்படும்.
13. அடுத்தப்பக்கத்தில் Average Annual Income   என்று உள்ள இடத்தில் குடும்ப ஆண்டு வருமானத்தைக் குறிப்பிட வேண்டும், இதற்காக வருமான சான்றிதழ் வைக்க வேண்டிய அவசியம் இல்லை. இது self declaration மட்டுமே. PAN No. என்ற இடத்தில் குறிப்பிட PAN No. இருந்தால் எண்ணை எழுத வேண்டும். Referred by (Institute Name):: என்ற இடத்தில் ஏதேனும் நிறுவனம் வாயிலாக சென்றிருந்தால் அல்லது பரிந்துரை செய்திருந்தால் மேலே காட்டியவாறு திட்டத்தின் பெயர் மற்றும் மாவட்டம் குறிப்பிடப்பட வேண்டும்.
14. அதனைத்தொடர்ந்து Type of Disability     என்று உள்ள இடத்தில் அதன் கீழே கட்டத்தில் கொடுக்கப்பட்ட வகையினைக் குறிப்பிட வேண்டும். கட்டத்திலும் குறிப்பிட்ட வகையில் டிக் செய்ய வேண்டும்.
15. அதனைத் தொடர்ந்து கையொப்பத்திற்கு இடப்பட்ட இடத்தில் கையொப்பம் அல்லது கைரேகையை பதிவிட வேண்டும். மாற்றுத்திறனாளி 18 வயதிற்கு கீழ் இருந்தால் பெற்றோர் அல்லது பாதுகாவலர் கையொப்பம் இட வேண்டும்.
16. Date :  Place : என்று குறிப்பிடப்பட்டிருக்கும் இடங்களில் தேதி மற்றும் இடம் குறிப்பிட வேண்டும்
படிவத்துடன் இணைக்கப்பட வேண்டிய சான்றுகள்:
மாற்றுத்திறனாளி தேசிய அடையாள அட்டை நகல்
அட்டையில் மாற்றுத்திறன் வகை, சதவீதம், புகைப்படம், மருத்துவர் கையொப்பம் ஆகியவை முக்கியமாக நிரப்பப்பட்டிருப்பதை உறுதி செய்ய வேண்டும்.
வழங்கப்படும் நகலில் மேற்கூறிய விபரங்கள் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.
மாற்றுத்திறனாளி தேசிய அடையாள அட்டையில்  குறிப்பாக ஊனத்தின் சான்றிதழ் இருக்கும் பக்கத்தின் நகல்  அவசியம் இருக்க  வேண்டும்.
சுய கையொப்பம் இடப்பட்ட புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை (வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் கார்டு போன்றவை).
இந்த சுய கையொப்பம் இடப்பட்ட சான்றானது படிவத்தில் யாருடைய புகைப்படம் எல்லாம் ஒட்டுகிறோமோ அவர்கள் அனைவருடைய புகைப்பட அடையாள அட்டை நகல் கொடுக்க வேண்டும்.
பயனாளி மைனராக இருப்பின் அவரது பெற்றோர்/பாதுகாவலர் நகலில்  கையொப்பமிட வேண்டும்.
சமர்ப்பிக்கும் போது  சான்றுகளுக்கான அசலை எடுத்து செல்தல் நல்லது.
நகல்கள் சமர்ப்பிக்கும் பொது யாருடைய நகலை இணைகிறோமோ அவருடைய கையொப்பம் அல்லது கைரேகை அவசியம் இருக்க வேண்டும், 18 வயதிற்கு கீழே இருப்பவருக்கு மட்டும் பெற்றோர் கையொப்பம் இட  வேண்டும்.

கவனிக்க:
1. இந்த காப்பீடு திட்டமானது எந்த மாதம் காப்பீடுத் தொகை கட்டுகிறார்களோ  அதன் அடுத்த மாதம் முதல் தேதியிலிருந்து அவர்களுக்கு நடைமுறைக்கு வரும். அதாவது டிசம்பர் மாதம் 10ம் தேதி காப்பீடு பிரீமியம் கட்டுகிறார் என்றால் ஜனவரி மாதம் 1 ஆம் தேதியில் இருந்து திட்டத்தில் பயனடைவார்.
2. திட்டத்தில் இணைந்த ஒரு மாத அளவில் தோராயமாக பயனாளிகளுக்கான காப்பீடு kit  கிடைத்துவிடும்.
3. இந்த காப்பீடு திட்டம் ஒரு வருடத்திற்கு மட்டும் பொருந்தும் அடுத்த வருடம் காப்பீடினை புதுப்பிக்க வேண்டும்.
4.காப்பீடு திட்டத்தில் இணைந்துள்ள மருத்துவமனைகளின் விபரங்கள் காப்பீடு kit  இல் இருக்கும் . அதில்  குறிப்பிடப்பட்டுள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை மேற்கொண்டால் கட்டணமில்லா சிகிச்சைப்பெறலாம். இல்லையெனில் காப்பீடு அலுவலரை தொடர்பு கொண்டு தாங்கள் பார்க்க இருக்கும் மருத்துவனையை பற்றி குறிப்பிட வேண்டும். அது தகுதியான மருத்துவமனை என்றால் மட்டுமே claim செய்ய இயலும்.
5. சிகிச்சை மேற்கொள்ளும் போது அவசியம் காப்பீடு அடையாள அட்டை மற்றும் மற்றுமொரு புகைப்பட அடையாள அட்டையினை சமர்ப்பிக்க வேண்டும். மேலும், காப்பீடு அலுவலருக்கும் தகவல் தெரிவிக்க வேண்டும்.

இந்த திட்டத்தில் அவர்களை இணைப்பது அவர்களுக்கு இந்த நாளில் பயனுள்ளதாக அமையும்.
மேலும் விபரங்களுக்கு கீழேயுள்ள சுட்டியை சொடுக்கவும்.
http://newindia.co.in/Content.aspx?pageid=6363


நன்றி!


Sunday, 6 November 2016

சுற்றுசூழலும் சாதியப் புனிதமும் -நூல் விமர்சனம்

தோழர். மா. அமரேசன் அவர்கள் சிறந்த கட்டுரையாளர் குறிப்பாக சாதியம் குறித்த கருத்துக்கள், சமூக சிந்தனை,சூழியல்,  மற்றும் பௌத்தம் குறித்த அதிக தகவல்களை தருபவர்.
அவர் நடுங்கும் நிலம் நடுங்காமனம், கண்ணுக்கு புலப்படாத தண்ணீரும் புலப்படும் உண்மைகளும் போன்ற புத்தகங்களை எழுதியுள்ளார். தண்ணீர் அரசியல் என்ற ஒரு கட்டுரை சென்னை எத்திராஜ் கல்லூரியில் பாட புத்தகத்தில் ஒரு கட்டுரையாக வெளியிடப்பட்டுள்ளது.  அவருடைய சமீபத்திய புத்தகமான சுற்றுசூழலும் சாதியப் புனிதமும் என்ற புத்தகம் படித்தேன். அதில் இருந்து சில கருத்துகளை உங்களின் பகிர்ந்து கொள்ள ஆசைப்படுகிறேன். 

சர் ஜகதீஷ் சந்திர போஸ் என்ற இந்திய அறிவியல் அறிஞர்  தாவரங்களுக்கு உயிர் உண்டு என்பதனையும் தாவரங்கள் மனிதர்கள் மற்றும் தாவரங்களும் நம்மைப் போன்றே உணவு உண்டு செறிக்கின்றன; அவைகளும் மனிதர்களைப்போல் இரவில் உறங்கி, காலையில் விழிக்கின்றன; அவையும் பிறக்கின்றன, இறக்கின்றன; அவைகட்கும் நம்மைப் போன்றே மகிழ்ச்சிதுன்பம் ஆகிய உணர்ச்சிகள் உண்டு  என்று படித்த விஷயத்தை  இந்த நூலின் ஆசிரியர் தன்னுடைய அன்பவத்தின் வாயிலாக மக்கள் எவ்வாறு இயற்கையோடு சேர்ந்து வாழ கற்றிருந்தார்கள் என்பதையும். மரம் எவ்வாறு தன்னை வெட்டுவதற்கு அனுமதி வழங்குகிறது. அதனை மனிதர்கள் எவ்விதம் புரிந்து கொண்டு செயல் பட்ட்டார்கள் என்பதையும் நயம்பட விளக்கியுள்ளார். தண்ணீர் தூங்கும் நிலையினை எடுத்து சொன்னது நான் இதுவரை அறிந்திராத தகவலாக இருந்தது.மேலும், பல்வேறு சாதிய  கட்டமைப்பினால் செருப்புக்க கூட போடாத நிலையில் எட்டிவாடி காடானது எவ்வாறு அவருக்கு சுதந்திரத்தினை வழங்கியது என்பதையும் நாமும் அவரோடு கூட நடந்து செல்லும் அனுபவத்தை தருகிறார். 

நமது காட்டு வழி  பயணத்தில் நாம் பாதை தவறாமல் செல்வதற்கு எப்படி செல்ல வேண்டும் என்றும் குறிப்பிடுகிறார். காடுகள் எப்படி மலடானது.  சுற்று சூழலுக்கு தீங்கு விளைவிக்கும் மரங்கள் யாவை?  காடுகளுடன் நமது தொடர்பு அற்று போனதால் நாம் எதிர்கொள்ளக்கூடிய பிரச்சனைகள் என்ன என்பதனை விளக்குகிறார் தோழர் அமரேசன்.

எட்டுமா இயற்கை விவசாயம் என்ற கட்டுரையில் யானை நின்றாலும் மறைக்கும் உயரத்தில் இருக்கும் நெற்பயிர்கள் இப்போது ஏன் இல்லை என்பதை விளக்குகிறார். நம்மாழ்வார் அய்யா அவர்கள் தம்முடைய உரையில் அடிக்கடி சொல்வதுண்டு. விவசாயம் செஞ்சா 'அடி காட்டுக்கு நடு மாட்டுக்கு நுனி வீட்டுக்கு' என்று! அதாவது ஒரு நெல் பயிர் செய்தோம் என்றல் ஆதி பகுதியை நாம் உழுது மண்ணுக்கு உரமாக மாற்றி விடுகிறோம். நடுவில் இருக்கும் வைக்கோலை மாட்டுக்கு உணவாக கொடுத்து விடுகிறோம். நுனியில் முளைத்து நிற்கும் நெல் மணிகளை நாம் பயன்படுத்துகிறோம்.அதேபோல்  மக்கள் இவ்வாறு விவசாயத்தோடும் விலங்குகளோடும் எவ்வாறு இயைந்து வாழ்ந்தனர் என்பதனை அழகாக விளக்கியுள்ளார்.

குப்பை அள்ளும் தொழிலாளர்களின் நிலையையும் குப்பையிலிருந்து வாழ்வாதாரத்தை முக்கியமாக மின்சாரத்தை தயாரிக்கும் தொழில் நுட்பத்தை பயன்படுத்தலாம் என்பது அருமையான யோசனை!

இப்போது பெரும் அரசியலாக நடை பெற்று கொண்டிருக்குக்கும் தண்ணீர் பிரச்னையும் விட்டு விடவில்லை ஆசிரியர் அவர்கள், பொலிவியாவில் செருப்பு தைக்கும் தொழிலாளியின் தலைமையில் நடைபெற்ற போராட்டம் தண்ணீர் முதலாளிகளை நாட்டை விட்டு துரத்தியதையும் தண்ணீர் தருகின்ற கட்சிக்கே ஓட்டு என்ற நிலை வெகு தொலைவில் இல்லை என்பதை அழகாக எடுத்துரைக்கின்றார்.

வேலூர் , ராமநாதபுரம், விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் மட்டும் வெயில் ஏன் இவ்வளவு அதிகமாக  இருக்கின்றது. நாம் இதனை நாட்களும் அலட்சியமாய் கடந்து சென்றவைகளா  இந்த அளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்பதனை ஆசிரியர் திறம்பட உணர வைக்கின்றார். கேரளா மாநிலத்தில் ஒழிக்கப்பட்டது போல சீமை கருவேலம், முள்வேலி, தைலமரம் ஒழிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தி இருப்பது பாராட்டப்பட வேண்டிய ஒன்று. இந்த விடயத்தை கையில் எடுத்தால் தான் வரும் தலைமுறைக்கு தண்ணீர் கொடுக்கிறோமோ இல்லையோ வறட்சியில் இருந்தாவது காப்பாத்தலாம்.

இலவசங்கள் வேண்டாம் தண்ணீர் கொடுங்கள். அப்படி கொடுப்பவர்களுக்கே எங்களது ஓட்டு என்ற சுவரொட்டி வாசகம் வெகு தொலைவில் இல்லை என்று அச்சுறுத்தலையும் கொடுத்துள்ள விடயம் அவசியம் சிந்திக்க வேண்டிய ஒன்று. 


மழையும் மக்களும் எவ்வாறு ஒன்றிணைந்து வாழ்ந்தனர் என்பது குறித்த கட்டுரையினை படிக்கும்போது தான் யோசிக்க வைத்தது முன்பெல்லாம் ஒருவரை பற்றி விசாரிக்கும் போது 3 வது கேள்வியா ஊர்ல  மழை பொழிஞ்சாதான்னு தான் கேட்பாங்க ! ஆனால் இப்போது அந்த விசாரிப்புகள் இல்லையே என்ற ஏக்கத்தை ஏற்படுத்தியது. மேலும் மழையின் வகைகள் நான் இதுவரை அறிந்திடாத ஒன்று. மழை மக்களோடு எப்படி ஒன்றித்து இருந்தது என்பதனை மிக அழகாக எழுதியுள்ளார் தோழர். 
மாதம் மும்மாரி பொழிந்ததா அமைச்சரே என்று அரசர் கேட்பது போல காட்சிகள் ராஜபாட் தெருக்கூத்தில் வரும்போது, என்னய்யா இது ஒரு மழை  வருவது கூடவா ஒரு அரசன் இருப்பான். அரண்மனையை விட்டு வெளியே வராமலா வாழ்ந்து கொண்டிருப்பான் என்று நினைத்ததுண்டு. அனால் மும்மாரி பொழிகிறது என்றால் என்ன என்பதனை மிக நேர்த்தியாக விளக்கியுள்ளார் தோழர்.

கடந்த வாரம் நான் என்னுடைய உயர் அதிகாரியுடன் தலைமை செயலகம் சென்று திரும்பும் வழியில் தும்பிகள் (தட்டான்கள்) சுற்றி திரிவதைப்  பார்த்து இன்னும் ஒரு வாரத்தில் சென்னையில் மழை பொழியும் என்றேன். அவரும் வானிலை அறிக்கையில் சொன்னார்களா? என்று கேட்டார். இல்லை இந்த தும்பிகள் எனக்கு உணர்த்துகின்றன என்றேன். அவ்வாறே நடந்தது. இந்த விடயம் எனக்கு இந்தப் புத்தகத்தைப் படித்ததினாலே தெரிந்தது. 
தோழர் மது விற்பனையையும் சாடுகிறார். அரசின் மதுக்கடைகளில் அயல் நாட்டு மக்களின் தட்ப வெப்ப நிலைக்கேற்ப தயாரிக்கப்படும் மிவிதிலி (Indian Made Foreign Liquor ) தான் விற்கப்படுகிறது. பனை மரத்தில் கிடைக்கும் பொருட்களுக்கு அரசு மதிப்பளிப்பதில்லை என்ற தனது ஆதங்கத்தினையும் வெளிப்படுத்துகிறார்.

சுற்று சூழலும் சாதிய புனிதமும் என்ற கட்டுரையில், உடலுழைப்பு, பூமியினை கீறி செய்யும் உழவு தொழில் எவ்வாறு தீட்டென கருத்தப்பட்டது  அது எவ்விதம் சாதிய புனிதத்தில் வந்ததென்பதையும் நாம் சாதாரணமாக டீ  குடிக்க பயன்படுத்தும் பிளாஸ்டிக் குவளையில் எவ்வளவு சாதிய பின்னணி இருக்கிறது என்பதனை மிக அழகாக விளக்கியுள்ளார்.

நாம் நாள்தோறும் குடித்து புத்துணர்வு பெரும் தேனீர் பற்றிய கட்டுரையில் அதன் வகைகளையும் மரப் பயிராக இருக்கும் தேயிலை ஏன் செடியாகவே பராமரிக்கப்படுகிறது என்பதனை தோழர் தெளிவுபடுத்துகிறார். மேலும் தேனீர் உற்பத்தியினால் நாம் எவ்வளவு பெரிய அபாயத்தினை தாங்கி செல்கிறோம் என்பதனை விளக்கி மாற்று வழிகளையும் தோழர் சிறப்பாக விளக்குகிறார்.

விவாசிகளின் நிலையினையும் நிலங்களை வைத்திருப்போர் அதனை காலைல தெரியாத நிலையினாலும், சாத்திய பின்னணியிலாலும் விவசாயம் எவ்வாறு நலிவடைந்தது. மேலும், அதில் சாதிய தாக்கம் எவ்விதம் இருந்தது என்பதனையும் மிக தெளிவாக விளக்கியிருக்கிறார் தோழர்.
பாரட்டப் பட வேண்டிய புதிய அணுகுமுறை புத்தகம். 
எழுபது ரூபாயில் ஏராளமான தகவல்கள்!


வெளியிட்டோர் :
மேன்மை பதிப்பகம் , இராயப்பேட்டை, சென்னை 
தொலைபேசி: 04428472058

இவரது பிற படைப்புகள்:







Sunday, 16 October 2016

10 ஆம்த மிழக பண்பாட்டுக் கண்காட்சி

இன்று மதியம் சுமார் 2 மணியளவில் என்னுடைய கைபேசியில் உள்ள ஒரு செயலியில் ஒரு செய்தியினை கண்டேன். இந்த செயலியின் தகவலை கண்டவுடன் இனியும் நேரமில்லை தாமதித்தால் வாய்ப்பினை தவற விட்டுவிடுவோம் என்று அவசர அவசரமாக கிளம்பிச் சென்றேன். என் எதிர் பார்ப்பை முழுமையாய் திருப்திபடுத்தியது அந்த நிகழ்வு. ஆம், அது, தமிழகப் பெண்கள் செயற்களம் என்ற அமைப்பின் சார்பில் நடத்தப் பட்ட தமிழக பண்பாட்டுக் கண்காட்சி. அதுவும் 10 ஆம் ஆண்டு கண்காட்சி. 
உள்ளே நுழையும் போதே பிரமாண்டமான வரவேற்பு வைக்கப்பட்டிருந்தது.. புதுமையானதாகவும் பார்ப்பதற்கு அழகாகவும் இருந்தது.
கண்காட்சியின் உள்ளே நுழைகையில் திருவள்ளுவரை கடந்து தான் செல்ல வேண்டும். அவருக்கென்று தனி மரியாதையை போற்றுதற்குரியது.
அதனை தொடர்ந்து உள்ளே சென்றீர்களென்றால், உலகம் தொடங்கியது முதல் தமிழன் முதல் மனிதன் என்பதற்கான ஆதாரங்களும், அவர்களுடைய வாழ்க்கை முறைகள்- வாழிடம், உணவு, மண வாழ்க்கை, தொழில் என்று பலவாறு வகைப்படுத்தி , தமிழகத்தினை ஆண்ட பல்வேறு அரசுகளின் எழுச்சிகள், வீழ்ச்சிகள், என்று வரிசை படுத்தி ஆங்கிலேயர் காலம் வரை வரலாற்றினை தொகுத்துள்ளார். மேலும், இந்தியா என்ற நாடு உருவான விபரங்கள், தமிழ் வரலாற்றில் முக்கியமான ஆளுமைகள், தமிழர் மரபு விளையாட்டுக்கள், தமிழ் மாவட்ட சிறப்புகள், 64 கலைகள், சுற்றுலா தலங்கள் , தமிழ் இலக்கிய, இலக்கண வரலாற்று நூல்கள், மூலிகைகள், தமிழ் இசை கருவிகள், தமிழ் உணவுகள், தானியங்கள், பழங்காலத்தில் பயன்படுத்திய கற்கள் என்று பட்டியல் நீளுகிறது.
மேலும், சிறப்பம்சங்களாக, பார்வையாளர்கள் உணர்ந்து ரசிக்கவும், வாசித்து வியக்கவும் இசை கருவிகள் (சங்கு, கொம்பு, உடுக்கை, இசை கிண்ணம் போன்றவை) வாசிக்க வாய்ப்பளிக்கப்பட்டது. தமிழ் கையெழுத்து மாற்றும் பயிற்சி, சித்த மருத்துவ முகாம், தானியங்கள், மூலிகை விற்பனை அங்காடி, பாரம்பரிய உணவு அங்காடி போன்றவை இடம் பெற்றிருந்தது.
கண்காட்சியில் இடம் பெற்ற வரலாறுகள் தொகுக்கப்பட்டு 4 புத்தகங்களாக விற்பனைக்கு இருந்தன. புத்தகங்களை மகிழ்ச்சியுடன் வாங்கினேன்.
இறுதியில் வரகு-உளுந்தங்களி உண்டு மகிழ்ந்து இல்லத்துக்கு திரும்பினேன்.
இந்த அருமையான நிகழ்வினை ஏற்பாடு செய்த தமிழகப் பெண்கள் செயற்களம் அமைப்பிற்கு வாழ்த்துக்கள்! வரும்காலங்களிலும் இது போன்று பல நிகழ்வுகளை நடத்துவது நமது வரலாற்றின் பெருமைகளை அனைவரும் தெரிந்து கொள்ள ஏதுவாக இருக்கும்.