Wednesday, 29 October 2025

திருக்குறள் வழி நின்று திருவள்ளுவரை அறிதல்-93:

திருக்குறள் வழி நின்று திருவள்ளுவரை அறிதல்-93:

பண்புடைமை: 
திருவள்ளுவர் அவர்கள் உடைமை என்னும் தலைப்பில் எழுதிய அதிகாரங்களைப் பற்றிப் பார்க்கின்றோம். கடந்த வாரங்களில் அன்புடைமை;, அறிவுடைமை, அடக்கமுடைமை, ஒழுக்கமுடைமை, பொறையுடைமை, அருளுடைமை, ஊக்கமுடைமை மற்றும் ஆள்வினையுடைமை பற்றிப் பார்த்தோம். இந்த வாரம் பண்புடைமை என்னும் அதிகாரத்தைப் பற்றிப் பார்ப்போம்.
பண்புடைமை என்னும் இந்த அதிகாரம் 100 ஆவது அதிகாரமாக திருக்குறளில் அமைந்துள்ளது. இதை ஆங்கிலத்தில் ‘ஊழரவநளல” என்று மொழி பெயர்த்தாலும், அது மூலத் தமிழின் ஆழத்தையும் தத்துவத்தையும் முழுமையாக வெளிபடுத்துவதில்லை. ‘பண்பட்ட மனிதநேயத்தைக் கொண்டிருத்தல்” அல்லது ‘குணத்தின் தகைமை” என்பதே மிகவும் துல்லியமான மொழி பெயர்ப்பாக இருக்கும். இந்த விளக்கம் , ‘பண்பு” என்பது ஒரு தனிநபரின் உள்ளார்ந்த இயல்பு, குணம் மற்றும் தரத்தைக் குறிக்கிறது. மேலும் ‘உடைமை” என்பது அதைக் கொண்டிருக்கும் நிலையையும் குறிக்கிறது. ஆகவே பண்புடைமை என்பது ஒருவரின் உள்ளார்ந்த குணத்தை சமூக நடத்தைக்கு இசைவாக மாற்றும் ஒரு உள்ளார்ந்த, பண்பட்ட நிலையாகும். இந்த பண்பட்ட மனித நேயமே சமூக நல்லிணக்கத்திற்கு அடித்தளமாக அமைகிறது. நூகரிகத்தின் கட்டமைப்பையே தாங்கி நிற்கிறது. மேலும், அறிவு, அதிகாரம் மற்றும் செல்லவத்திற்கு உண்மையான அர்த்தத்தையும் சட்டபூர்வத் தன்மையையும் வழங்கும் இறுதித் தகுதியாக விளங்குகிறது என்று திருவள்ளுவர் வாதிடுகிறார். இது ஒரு மனிதனை வெறுமனே ஒரு உயிரியில் நிலையில் இருந்து உண்மையான சமூக மற்றும் அறநெறி உயிரினமாக உயர்த்தும் வரையறுக்கும் பண்பாகும். 
இனி குறளுக்குச் செல்வோம். 
பொதுவாகவே, ஒருவர் அணுகக் கூடிய நிலையில் இல்லையென்றால், ஒன்று அவரை மக்கள் பார்ப்பதை தவிர்த்து விடுவர், ஆனால், அதே வேளையில் ஒருவர் அனைவரிடம் எளிதாக பேசுகிறார். எவராலும் அவரை அணுக முடியும் பேச முடியும் என்ற நிலையில் இருந்தால், மக்கள் அவரை மிகவும் பண்புடையவர், எளியவர், நல்லவர் என்ற எண்ணத்திற்கு மிக எளிதாக வந்து விடுகின்றனர். இதுவே, பண்புடையவர் என்பதற்கான எளிதான வழியாக இருக்கிறது என்று வள்ளுவர் குறிப்பிடுகிறார் பின்வரும் குறளில்...
எண்பதத்தால் எய்தல் எளிதென்ப யார்மாட்டும்
பண்புடைமை என்னும் வழக்கு -991 என்கிறார். அதாவது, யாராயிருந்தாலும் அவர்களிடத்தில் எளிதாகக் கண்டுப் பேசும் நிலையில் வாழ்ந்தால், அதுவே பண்புடைமை என்கிற சிறந்த ஒழுக்கத்தைப் பெறுவதற்கு எளிய வழியாக அமையும் என்கிறார். 
‘அந்தப் பையன் ஏன் இப்படி இருக்கமாட்டான்..? அவனுடைய அப்பா எப்பேர்பட்ட பண்புடையவர் தெரியுமா? புலிக்குப் பிறந்தது பூனையாகுமா?” என்று கூறுவதுண்டு. கீழ்க்காணும் குறளில், எல்லோர் மீதும் அன்புள்ளவராக வாழ்வது, உலகத்தோடு ஒத்து வாழும் குடும்பத்தில் பிறந்திருத்தல் இவை இரண்டும் பண்புடைமை என்னும் நல்ல வழிகள் என்று கூறுகிறார்.  
அன்புடைமை ஆன்ற குடிப்பிறத்தல் இவ்விரண்டும்
பண்புடைமை என்னும் வழக்கு -992
நிறையக் காட்சிகளைக் கொண்டு தவறுதலான புரிதல் ஏற்படுவது உண்டு. சமீப காலங்களில் ஊடகங்களில் பொய்யை உண்மைப் போல புனையும் சம்பங்கள் நிறைய அரங்கேறி வருகின்றன. சிலர் திரைப்படங்களிலும் சின்னத்திரைத் தொடர்களிலும் பார்த்து அதில் நடிப்பவர்கள் உண்மையிலே அப்படிப்பட்ட ஆட்கள் தான் என்று நம்பி விடுகின்றனர். வில்லன்களாக நடித்த நிறைய நடிகர்களை பொதுமக்கள் விரட்டுவதும் அவர்களை வசைபாடுவதும் அரங்கேறியதனை நாம் அறிவோம். ஆனால், நிறைய வில்லன்கள் உண்மையில் தனிப்பட்ட வாழ்க்கையில் பண்புடையவர்களா அவர்களை அறிந்த வட்டாரங்களில் உள்ளவர்களுத் தெரியும். அதேபோன்று, கதாநாயகர்களை மிகச் சிறந்த உத்தமர்களாக மக்கள் நினைப்பதுண்டு, மாறாக அவர்கள் பல வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டு தண்டனை பெறும் நிகழ்வுகளையும் பார்க்கின்றோம். ஆகவே, யார் நல்ல மக்கள் என்று பின்வரும் குறளில் திருவள்ளுவர் சொல்கிறார் என்றால்,
உறுப்பொத்தல் மக்களொப்பு அன்றால் வெறுத்தக்க
பண்பொத்தல் ஒப்பதாம் ஒப்பு -993 என்கிறார். 
நற்பண்பு இல்லாதவர்களை அவர்களின் உடல் உறுப்புகளின் தோற்றத்தால் மட்டுமே ஒப்பிட்டுப் பார்ப்பது சரியாகாது, நற்பண்புகளால் உள்ளத்துடன் இணையும் பண்பால் பிறருடன் ஒத்திருப்பதே மக்கள் எனப்படுவர் என்கிறார். 
அடுத்தக் குறளில், இந்தக் காலத்தில் கொள்ளை என்பது கால ஓட்டத்தில் மிக சாதாரணமாக நடக்கிறது, சிலர் ஊழல் செய்வதையே கௌரவமாக தாங்கள் கையும் களவுமாக பிடிபடும் வரை நினைப்பதுண்டு. சிலருக்கு அந்த சொரணையும் பிடிபட்டாமல், நான் செய்த தவறு என்ன என்று தான் மக்களுக்கு பல்வேறு துரோகங்களை செய்துள்ளோம் என்று கொஞ்சம் கூட வருந்தாமல் இருப்பவர்களும் உண்டு. ஆனால், இவர்கள் மத்தியில் எவ்வளவு இடையூறு வந்தாலும் நேர்மையுடனும், மற்றவர்கள் வாழ்வில் நன்மை கிடைப்பதனை இலட்சியமாகவும் வாழ்பவர்கள், அதில் அவர்கள் பணம் பெருக்கவில்லையெனினும் விவரம் இல்லாதவன் என்று இகழப்பட்டாம் மன மகிழ்ச்சி குறையாது திருப்தியான நிலையில் வாழ்வார்கள். அவரால் பயன் பெற்றவர்கள் மனதிலும் நேர்மையாளர்கள் பண்பாளர்கள் மத்தியில் அவர் எப்போதும் உயர்வானவராகவே போற்றப்படுவார். இதனையே, 
நயனொடு நன்றி புரிந்த பயனுடையார்
பண்புபா ராட்டும் உலக -994 திருவள்ளுவர் குறிப்பிடுகிறார். அதாவது, நீதியையும் நன்மையையும் விரும்பிப் பிறருக்குப் பயன்பட வாழும் பண்பினை உலகத்தார் போற்றிக் கொண்டாடுவர் என்கிறார். 
அடுத்தக் குறளில், 
நகையுள்ளும் இன்னா திகழ்ச்சி பகையுள்ளும்
பண்புள பாடறிவார் மாட்டு -995 என்கிறார். 
பலமுறை நாம் சொல்வதுண்டு, விளையாட்டை விளையாட்டாகப் பார்க்க வேண்டும். அதாவது, விளையாட்டுதான் பலர் கூடி விளையாடுவதால் ஒற்றுமையை வளர்க்கும,; பல விதிகள் இருப்பதால் ஒழுக்கத்தையும் வளர்க்கும் நற்பண்பை வளர்க்கும் ஒரு வாய்ப்பு.  அதனால் தான் ‘நாம் அடிக்கடி விளையாட்டுக்குத் தானே சொல்கிறாய், உண்மையாக இல்லை தானே?”  என்று ஒரு உணர்வுபூர்வமான வார்த்தைகள் வெளிவரும் போது அவசரப்பட்டு வார்த்தை விட்டுவிடக் கூடாது என்று சுதாரிப்பாக வார்த்தைகளைப் பயன்படுத்துகிறோம். அதன் அர்த்தம், விளையாட்டு என்பது வினையல்ல என்பதுதான். ஆனால், அதனை அரசியலாகவும், பிறரை இகழ்ச்சியாகப் பார்க்கும் ஒரு இடமாகவும் சிலர் மாற்றுவதுண்டு. மேற்காணும் குறளில் திருவள்ளுவர், ‘ஒருவரை இகழ்ந்து பேசுதல் விளையாட்டிலும் துன்பம் தருவதாக இருக்கும், பிறருடைய இயல்பை அறிந்து நடப்பவரிடத்தில் பகைமையில் கூட நல்லப் பண்புகள் இருக்கின்றன என்கிறார். 

தொடர்ந்து பார்ப்போம்...

குறிப்பு: இணைக்கப்பட்டுள்ள படங்கள் மற்றும் காணொலி ஆகியவற்றை செயற்கை நுண்ணறிவுத் தொழில் நுட்பத்தில் உருவாக்கியுள்ளேன். பிழையிருப்பின்  மற்றும் தாமதத்திற்குப் பொறுத்துக் கொள்க.

நன்றி

https://www.youtube.com/@AAAInfotainment

தோப்பு

No comments:

Post a Comment