Wednesday, 22 October 2025

திருக்குறள் வழி நின்று திருவள்ளுவரை அறிதல்-92: ஆள்வினையுடைமை :

திருக்குறள் வழி நின்று திருவள்ளுவரை அறிதல்-92:
ஆள்வினையுடைமை :
கடந்த வாரம் ஆள்வினை உடைமை அதிகாரத்தின் முற்பகுதியைப் பார்த்தோம். இந்த வாரம் அதன் பிற்பகுதியைப் பார்ப்போம். எந்த ஒரு ஊக்குவிப்புப் பயிற்றுனரும் (ஆழவiஎயவழைn வுசயiநெச) முக்கியமாக குறிப்பிடுவது வெற்றியை அல்ல, அதற்கான முயற்சியையே ஆகும். நம்முடைய முயற்சியை எவ்விதம் மேம்படுத்துவது என்பதே பல வித பயிற்றுனர்களும் நமக்கு பயிற்றுவிப்பது. இந்த விடயத்தை, முயற்சி நிச்சயம் நல்ல பலனைத் தரும் என 2000 வருடங்களுக்கு முன்னரே ஆணித்தரமாக குறிப்பிடுகிறார் திருவள்ளுவர் அவர்கள்.
முயற்சி திருவினை ஆக்கும் முயற்றின்மை
இன்மை புகுத்தி விடும் -616
இடைவிடாத தொடர் முயற்சியானது ஒருவனுக்குச் செல்வத்தைப் பெருகச் செய்யும், முயற்சி இல்லாமல் இருப்பதோ அவனிடத்தில் வறுமையைச் கொண்டு போய்ச் சேர்த்து விடும் என்கிறார்.
மடியுளாள் மாமுகடி என்ப மடியிலான்
தாளுளான் தாமரையி னாள் -617
மேற்கூறிய குறளுக்கு கலைஞர் அவர்கள் சொல்லும் விளக்கமானது, திருமகள், மூதேவி எனப்படும் சொற்கள் முறையே முயற்சியில் ஊக்கமுடையவரையும், முயற்சியில் ஊக்கமற்ற சோம்பேறியையும் சுட்டிக் காட்டிப் பயன்படுவனவாகும் என்கிறார். எனக்கு இக்குறளில் மாற்றுக் கருத்து உள்ளது. ஏனெனில் தமிழ்ச் சமூகம் மூதேவி என்னும் மூத்த தேவியை, தவ்வையைதான் முன்னர் வழிபட்டது, பிறகு அது சூழ்ச்சியால் வீழ்த்தப்பட்டுள்ளது என்பது எனது கருத்து. இன்றும் ‘ஜேஸ்டா தேவி ” என்ற பெயரில் இந்தியாவின் பல இடங்களில் அழைக்கப்படுகிறார். திருவானைக்கோவில் ஐம்புகேசுவரர் ஆலயத்திலும் இவருக்கென்று இடமுண்டு. போகரும் இவருக்கென்று தனிப்பாடலை இயற்றியுள்ளார்.
பலரும் சொல்லக் கேட்டிருப்போம் என்னுடைய இந்த நிலைக்கு என்னுடைய முன்னோர் செய்த பாவம் தான், ஆதலால், தான் நான் வறுமை நிலையில் இருக்கின்றேன், ஆதலால் தான் எனது குழந்தை ஊனமுற்ற நிலையில் பிறந்துள்ளது என்று தவறாக எண்ணுவதுண்டு. உண்மையில் பல விடயங்களை அவர்கள் ஆய்ந்து அறிந்தாலே பலவற்றையும் சரி செய்து விட முடியும். குழந்தை கருவுற்ற 2 மாதத்திற்குள்ளேயே அது டௌன் சின்ட்ரோம் என்ற நிலையில் இருக்கிறதா என்று ஆய்ந்தறிந்து அதனைத் தடுப்பதற்கான மருந்துகள் இருக்கின்றன. இப்போது மரபு சார்ந்த பிரச்சனைகள் கருவிலேயே தடுக்கும் அளவிற்கு மருத்துத் துறையில் முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளது. ஆனால், விதியையே குறை சொல்வது ஒருவருடைய ஊக்கமின்மையும் முயற்சியின்மையையும் குறிக்கிறது. இதுதான் ஒருவர் தொடர்ந்து வறுமை நிலையில் இருப்பதற்கும் காரணமாகும், ஒருவர் ஏழையாக பிறப்பது அவர் குற்றமில்லை ஆனால், ஏழையாகவே இறப்பதற்கு அவர்தான் காரணமாக இருக்கிறார் என்பதனை அவர் உணர வேண்டும். அது அவருடைய முயற்சியின்மைதான் என்பதனை வள்ளுவர் இவ்விதம் குறிப்பிடுகிறார்.
பொறியின்மை யார்க்கும் பழியன்று அறிவறிந்து
ஆள்வினை இன்மை பழி -618
நல்லது விளைவிக்கும் விதி இல்லாமல் இருப்பது என்பது யாருக்கும் குற்றம் ஆகாது, அறிய வேண்டியவைகiளா அறிந்து அதற்குரிய முயற்சி செய்யாமல் இருப்பதே ஒருவனுக்கானப் பழி ஆகும் என்கிறார்.
ஒருவனுக்கு உச்சபட்ச ஊக்கம் தருவதென்றால் எப்படித் தரலாம்? இதோ ஐயன் தருகிறார் பாருங்கள்!
தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன்
மெய்வருத்த்க் கூலி தரும் -619 என்கிறார்.
ஒவ்வொருவரும் தன்னால் முடியவில்லை என்று எளிதாக தெய்வத்தின் மீது பழியை அல்லது சுமையை இறக்கி விட்டுச் செல்வார்கள். ஆனால், அந்தத் தெய்வத்தின் அருளாலே கைகூடாது போனாலும் கவலைப் படாதே ஒருவனுடைய முயற்சியானது, தம் உடல் உழைப்பிற்கு ஏற்றப் பலனைத் தப்பாமல் தந்துவிடும் என்கிறார்.
அடுத்தக் குறளில்
ஊழையும் உப்பக்கம் காண்பர் உலைவின்றித்
தாழாது உஞற்று பவர் -620 என்கிறார்.
618 ஆவது குறளினை இக் குறளில் ஆணித்தரமாக விளக்குகிறார்.
ஒருவர் சோர்வும் இல்லாமல் முயற்சியிலும் குறைவும் இல்லாமல் இடைவிடாமல் செய்பவர்கள், கெடுதலான விதியையும் வென்று, புறமுதுகு காட்டி ஓடச் செய்பவர்கள் ஆவார்கள் என்கிறார். இதைவிட ஒருவனுக்கு எப்படி நம்பிக்கையளிப்பது. விதியே என்று உட்கார்ந்திருப்பவர்களுக்கு நீதான்டா விதியை உடைக்கும் சதி என்று அவன் சோம்பலை துவம்சம் செய்து ஆற்றல் அளிக்கும் வீரியமிகுந்த நம்பிக்கையை திருவள்ளுவர் அவர்கள் அளிக்கிறார்கள். சோர்வுடன் இருப்பவர்கள் இக்குறள்களை உரமிக்க வாக்காக எடுக்கக்கடவது.
தொடர்ந்து பார்ப்போம்...

குறிப்பு: இணைக்கப்பட்டுள்ள படங்கள் மற்றும் காணொலி ஆகியவற்றை செயற்கை நுண்ணறிவுத் தொழில் நுட்பத்தில் உருவாக்கியுள்ளேன். பிழையிருப்பின் மற்றும் தாமதத்திற்குப் பொறுத்துக் கொள்க.

நன்றி

https://www.youtube.com/@AAAInfotainment

No comments:

Post a Comment