திருக்குறள் வழி நின்று திருவள்ளுவரை அறிதல்-89:
ஊக்கமுடைமை:
திருவள்ளுவர் அவர்கள் உடைமை என்னும் தலைப்பில் எழுதிய அதிகாரங்களைப் பற்றிப் பார்க்கின்றோம். கடந்த வாரங்களில் அன்புடைமை;, அறிவுடைமை, அடக்கமுடைமை, ஒழுக்கமுடைமை, பொறையுடைமை மற்றும் அருளுடைமை பற்றிப் பார்த்தோம். இந்த வாரம் ஊக்கமுடைமை என்னும் அதிகாரத்தைப் பற்றிப் பார்ப்போம்.
‘ஊக்கம்” என்பதை வெறும் ‘ஆற்றல்”அல்லது ‘முயற்சி” என்று விளக்கம் கொடுப்பது அதனுடைய முழுப் பரிமாணத்தையும் உணர்த்தாது. இவ்வதிகாரத்தில் ஐயன் வள்ளுவர் உணர்த்துவது போல ‘ஊக்கம்” என்பது மன எழுச்சி, உள்ளார்ந்த உந்துதல், அசைக்க முடியாத மனத்திடம் மற்றும் ஒரு செயலைச் செய்து முடிக்க வேண்டும் என்ற துடிப்பு ஆகியவற்றை உள்ளடக்கிய ஒரு பன்முகக் கருத்தாகும்.
இவ்வதிகாரத்தின் மையக்கருத்து இந்த உள்ளார்ந்த உந்துதலே ஒரு மனிதன் கொண்டிருக்கக்கூடிய ஒரே உண்மையான, நிலையான மற்றும் வரையறுக்கும் ‘உடைமை” என்பதாகும். மற்ற எல்லாப் பொருள்சார் உடைமைகளும் இரண்டாம் பட்சமானவை மற்றும் இந்த ஊக்கத்தைச் சார்ந்தே அவற்றின் மதிப்பும் இருப்பும் அமைகின்றன.
ஊக்கமுடைமை அதிகாரத்தை ‘அரசியல்” என்ற இயலில் வைத்ததன் மூலம் திருவள்ளுவர் ஒரு ஆழமான அரசியல் தத்துவத்தை முன்வைக்கிறார். ஒரு தலைவனின் அதன் விளைவாக ஒரு அரசின் உண்மையான பலம், கருவூலத்திலோ, படையிலோ அல்லது நிலப்பரப்பிலோ இல்லை. மாறாக, அதன் ஆட்சியாளரின் அசைக்க முடியாத மனவுறுதியிலும் ஊக்கத்திலுமே தங்கியுள்ளது. ஒரு அரசினுடைய மற்ற அனைத்து அதிகார வடிவங்களும் இந்த முதன்மையான பண்பின் விளைவுகளே. ஊக்கமில்லாத ஒரு தலைவன், தன்னிடம் உள்ள செல்வத்தையே காக்கும் ஆற்றல் இல்லாதவனாக இருப்பான், எனவே அவனால் நாட்டின் செல்வத்தையும் பாதுகாக்க இயலாது. ஆக, ஊக்கமுடைமை என்பது தனிமனித முன்னேற்றத்திற்கான ஒரு பண்பு மட்டுமல்ல, அது அரசாளுகையின் அடிப்படைக் கருவியுமாகும்.
உடையர் எனப்படுவது ஊக்கம் அஃதி;ல்லார்
உடையது உடையரோ மற்று -591 என்கிறார். மேலே சொல்லிய உதாரணம் இந்தக் குறளுக்குப் பொருந்தும். ஒருவர் பெற்றிருக்கின்றார் என்று சொல்லத்தக்க சிறப்புடையது ஊக்கமாகும், ஊக்கம் இ;ல்லாதவர் வேறு எதைப் பெற்றிருந்தாலும் அதை உடையவர் ஆவரோ என்கிறார் திருவள்ளுவர். அடுத்தக் குறளில் ஊக்கமுடையே பிரதானம் என்பதை வலியுறுத்துகிறார்.
உள்ளம் உடைமை உடைமை பொருளுடைமை
நில்லாது நீங்கி விடும் -592
ஒருவருக்கு அவர் கொண்டிருக்கும் ஊக்கமே நிலையான செல்வம் ஆகும், மற்றைய செல்வங்கள் எல்லாம் நிலைத்திருக்காமல் ஒரு காலத்தில் நீங்கி விடக் கூடியது என்கிறார்.
எவர் ஒருவர் மிகுந்த ஊக்கத்துடன் இருக்கிறாரோ, அவர் தன்னுடைய எந்த இழப்பையும் கடந்து செல்ல இயலும். மிகுந்த ஊக்கம் உடையவன், துணிந்து முடிவு எடுக்கக் கூடியவராக இருப்பார். தான் பணிபுரியும் இடத்தில், தனக்கு உகந்தது அல்ல என்பதை உணர்ந்தார் என்றால், துணிந்து தனக்குப் பிடித்த இடத்திற்கு தற்போது வாங்கும் ஊதியத்தை விட அதிக ஊதியத்திற்கு செல்லக் கூடும். அல்லது தொழில் துவங்கக் கூடும். துவண்டு உட்கார்ந்து விட மாட்டார். தான் அனைத்தையும் இழந்து விட்டோம் என்று தலையில் கை வைத்துக் கொண்டும் உட்கார மாட்டார். வெகுவிரைவில் எப்படி முன்னேற வேண்டும் என்று அதற்காக உழைப்பவராக இருப்பார். இக்கருத்தை வலியுறுத்தி ஐயன் அடுத்தக் குறளி;ல் வலியுறுத்துகிறார்.
ஆக்கம் இழந்தேமென்று அல்லாவார் ஊக்கம்
ஒருவந்தம் கைத்துடை யார் -593 என்கிறார்.
உறுதியான ஊக்கத்தையே தம்முடைய கைப்பொருளாகப் பெற்றவர்கள், தன்னுடைய செல்வத்தை இழந்த போதும், எல்லாவற்றையும் இழந்து விட்டோமே என்று நினைத்து வருந்த மாட்டார்கள்.
அடுத்தக் குறளில் சொல்வது போல, ஒருவர் மிகுதியான ஊக்கம் இருக்கிறது என்றால், அவர் துணிந்து முடிவெடுப்பார், துணிந்து முடிவெடுப்பவருக்கு, வெற்றி எளிதில் வயப்படும், ஏனெனில், அவர் சொல்லிய வண்ணம் செயல்வீரராக இருப்பர் என்பதை வலியுறுத்துகிறார்.
ஆக்கம் அதர்வினாய்ச் செல்லும் அசைவிலா
ஊக்க முடையா னுழை -594 என்கிறார். அதாவது தளராத ஊக்கம் உடையவர்களிடத்தினிலே ஆக்கம் தானே வந்து அவர் இருக்கும் இடத்திற்கு வழி கேட்டுக் கொண்டு போய் அவரிடம் சென்று நிலையாகச் சேர்ந்திருக்கும் என்கிறார்.
அடுத்து வருவது, நமக்கு நன்கு பரிச்சயமான குறள்
வெள்ளத் தனைய மலர்நீட்டம் மாந்தர்தம்
உள்ளத் தனையது உயர்வு -595 என்கிறார். தாமரைக் குளத்தில் நீரின் அளவு எந்த அளவிற்கு அதிகமாகிக் கொண்டிரக்கிறதோ அதே அளவு, நீர்ப்பூக்களின் தண்டின் நீளமும் உயரமும், அது போலவே, மக்களுடைய உயர்வின் அளவும் அவருடைய ஊக்கத்தின் அளவினதே ஆகும் என்கிறார்.
தொடர்ந்து பார்ப்போம்...
குறிப்பு: இணைக்கப்பட்டுள்ள படங்கள் மற்றும் காணொலி ஆகியவற்றை செயற்கை நுண்ணறிவுத் தொழில் நுட்பத்தில் உருவாக்கியுள்ளேன். பிழையிருப்பின் மற்றும் தாமதத்திற்குப் பொறுத்துக் கொள்க.
நன்றி
https://www.youtube.com/@AAAInfotainment
தோப்பு
No comments:
Post a Comment