திருக்குறள் வழி நின்று திருவள்ளுவரை அறிதல்-88:
அருளுடைமை:
கடந்த வாரம் அருளுடைமை என்னும் அதிகாரத்தின் முதல் 5 குறட்பாக்களுக்கு விளக்கத்தினைப் பார்த்தோம். இந்த வாரம் பிற்பகுதியைப் பார்க்கலாம்.
பொருள்நீங்கிப் பொச்சாந்தார் என்பர் அருள்நீங்கி
அருள்நீங்கி அல்லவை செய்தொழுகுவார் - 246
தன் மனிதில் அருள் இல்லாதவர் எத்தகையர் என்பதனை இக்குறளில் குறிப்பிடுகிறார். அதாவது, அருள் இல்லாமல் தீமைகளைச் செய்து வாழ்பவரைப் பொருளையும் இழந்து தாம் துன்பம் அடைந்ததையும் மறந்தவர்களாக ஆவார் என்றுக் குறிப்பிடுகிறார்.
இந்தப் பூமியான பொருள் ஆசையால் சூழ்ந்துள்ளது, ஆகவே பொருள் சேர்ப்பதற்காக பலரும் எந்த ஒரு எல்லைக்கும் சென்று விடுகின்றார். அவ்வாறு செல்வதின் உச்சக்கட்டம் அதிகப்படியான பணத்தையோ அல்லது சொத்துக்களையோ சேர்ப்பதற்கேயல்லாமல் வேறில்லை. இந்தத் தத்துவத்தை உணர்ந்தவராய் கீழ்க்காணும் குறளை வெளிப்படுத்துகிறார்.
அருளில்லார்க்கு அவ்வுலகம் இல்லை பொருளில்லார்க்கு
இவ்வுலகம் இல்லாகி யாங்கு -247
பொருள் இல்லாமல் இருப்பவர்களுக்கு இவ்வுலகத்தில் இன்பமான வாழ்க்கை இல்லாதது போலவே, அருள் இல்லாதவர்களுக்க மேலுலகத்து வாழ்வும் இல்லையாகும் (கலைஞர் மு. கருணாநிதி அவர்கள் குறிப்பிடுகையில் கருணை உள்ளம் இல்லாதவர்களின் துறவற வாழ்க்கையும் சிறப்பாக அமையாது) என்கிறார்.
அடுத்தக் குறட்பாவில்,
பொருளற்றார் பூப்பர் ஒருகால் அருளற்றார்
அற்றார்மற் றாதல் அரிது-248
பொருள் இல்லாமல் வறுமையில் ஏழையாக மாறியவர் திரும்பவும் ஒரு காலத்தில் பொருள் வளம் பெற்று விளங்கலாம். அருள் இல்லாமல் போனவரோ, அருளை இழந்தது இழந்ததுதான். மீண்டும் அருள் உள்ளவராய் மாறுவது கடினம் என்று குறிப்பிடுகிறார்.
அடுத்தபடியாக, நாம் பலஇடங்களில் பார்த்திருக்கிறோம், தான் தானம் செய்கின்றேன் பேர்வழி என்று தான் செய்யும் தானத்தை, தான் செய்யும் தானத்தை விட அதனை ஆவணப்படுத்துவதில் புகைப்படம் அல்லது காணொலி எடுத்து பொதுவெளியில் வெளியிடுவதற்கு பலர் நிறைய செலவு செய்வதைக் காணலாம். சுய பகட்டிற்காக இவ்வாறு செய்பவர்கள் பலரைக் கண்டிருக்கிறேன். சிலர் உண்மையிலே சேவை செய்து, இதுபோல் பலரும் செய்ய முன்வர வேண்டும் என்ற நோக்கி;ல் பதிவிடுவார். ஆனால், அம்மாதிரியான செயலைச் செய்பவர் தானத்திற்குத்தான் அதிகம் செலவு செய்வார் பகட்டிற்கு அல்ல, இதுபோல பகட்டிற்காக செயல்களைச் செய்பவர்களை நமது ஆசான் எவ்வாறு விளிக்கிறார்?
தெருளாதான் மெய்ப்பொருள் கண்டற்றால் தேரின்
அருளாதான் செய்யும் அறம் -249 என்கிறார்.
அதாவது, அறிவு தெளிவு இல்லாதவன் ஒரு புத்தகத்தைப் படித்து அதன் உண்மைத்தன்மையை அர்த்தத்தை உணர முடியுமா? அதுபோல் தான,; அருள் இல்லாதவன் செய்கின்ற தருமத்தை ஆராய்ந்து பார்த்தோமென்றால் இருக்கும் என்கிறார்.
அடுத்து,
வலியார்முன் தன்னை நினைக்கதான் தன்னின்
மெலியார்மேல் செல்லு மிடத்து -250 என்கிறார். சிலர் வெறும் எண்ணிக்கையை வைத்து தான் பலம் மிகுந்தவராக நினைத்துக் கொள்வதுண்டு. தன்னைவிட எண்ணிக்கையில் மிகுந்தவரோ அல்லது தன்னை விட அதிகாரம் மிகுந்தவரிடம் பணிந்தும், தன்னிடம் இருப்பவர்களைவிட எண்ணிக்கையில் குறைவாக இருப்பவரிடமோ அல்லது அதிகாரம் அற்றவர் போலத் தெரிபவரிடமோ தன்னுடைய வீரத்தைக் காட்ட நினைப்பதுண்டு. ஆனால், மகாபாரதம் போன்ற இதிகாசங்களைப் பார்க்கும் போதும், செங்கிஸ்கான், அலெக்சாண்டர் போன்ற உண்மையாக வாழ்ந்த வீரர்களின் கதைகளைப் படிக்கும் போது, எண்ணிக்கையை விட அவர்கள் வகுக்கும் உத்தியே அவர்களை உலகப் புகழ் பெறச் செய்தது. எவரேனும், எண்ணிக்கையையும் தனக்குள் உள்ள அதிகாரத்தையும் மட்டும் வைத்துக் கொண்டு சிறியாரை மட்டமாகவோ அல்லது எளிதாகவோ நினைத்துக் கொண்டால், அவர்கள்தான் பிறகு வருத்தமடைய நேரிடும், இந்நிகழ்வினை பல்லாண்டுகளுக்கு முன்னரே, திருவள்ளுவர் தெளிவுபடுத்தியுள்ளார். எப்போதும், யாரையும் இளக்காரமாக எள்ளி நகையாடாமல், சுய பரிசோதனை செய்து கொள்ளும் போது, மனிதர்களை சமமாகவும் சக மனிதனாகவும் மதிக்கும் மனோபாவம் ஏற்படும் என்பதை மேற்கண்ட குறளில் உணர்த்துகிறார். அதாவது, அருள் இல்லாதவன் தன்னை விட எளிய மனிதரைத் துன்புறுத்த நினைக்கும் போது, தன்னை விட பலசாலி முன்னால் அஞ்சி நிற்கும் நிலைமை தனக்கு இருக்கு என்பதனை மறந்துவிடக் கூடாது என்கிறார்.
தொடர்ந்து பார்ப்போம்...
குறிப்பு: இணைக்கப்பட்டுள்ள படங்கள் மற்றும் காணொலி ஆகியவற்றை செயற்கை நுண்ணறிவுத் தொழில் நுட்பத்தில் உருவாக்கியுள்ளேன். பிழையிருப்பின் பொறுத்துக் கொள்க.
நன்றி
https://www.youtube.com/@AAAInfotainment
தோப்பு
No comments:
Post a Comment