Tuesday, 2 September 2025

திருக்குறள் வழி நின்று திருவள்ளுவரை அறிதல்-85:

திருக்குறள் வழி நின்று திருவள்ளுவரை அறிதல்-85:
பொறையுடைமை:

திருவள்ளுவர் அவர்கள் உடைமை என்னும் தலைப்பில் எழுதிய அதிகாரங்களைப் பற்றிப் பார்க்கின்றோம். கடந்த வாரங்களில் அன்புடைமை;, அறிவுடைமை, அடக்கமுடைமை மற்றும்  ஒழுக்கமுடைமை பற்றிப் பார்த்தோம். இந்த வாரம் பொறையுடைமை என்னும் அதிகாரத்தைப் பற்றிப் பார்ப்போம். பொறுமையின் அறம் அல்லது பொறுமையாக இருத்தலைக் குறித்து இந்த அதிகாரம் பேசுகிறது. ‘பொறுத்தார் பூமி ஆள்வார்” என்று சொல்லக் கேட்டிருக்கிறோம். பொறுமைக்கும் மிகப் பெரிய வலிமை தேவைப்படுகிறது. ஆகவே, பொறுமையினையும் உடைமையாக நமக்கு எடுத்துக் காட்டுகிறார் வள்ளுவர் பெருமான். 
வாழ்வின் அனைவருமே இன்ப துன்பங்களை கடந்து தான் வருகின்றோம், அதனை நம்மால் தவிர்க்க இயலாது, அதில் பெரும்பாலான இன்ப துன்பங்களுக்கு பெரும் பொறுப்பு நமக்கே உரியது. இதனைத் தான் 2000 வருடங்களுக்கு முன்னரே ‘தீதும் நன்றும் பிறர்தர வாரா” என்கிறார் கணியன் பூங்குன்றனார். 
அப்படியானால் நிதானமும் பொறுமையும் நமக்கு பல நன்மைகளைத் தருவதை நாம் பார்த்திருக்கின்றோம். பலபேர் செய்யும் தவறுகளுக்கு அவர்களுடைய பொறுமையற்றத் தன்மை காரணமாக இருக்கிறது. அதனால் தான் நமக்கு கோபத்தில் இருக்கும் போதோ பதட்டத்தில் இருக்கும்போதோ ‘தண்ணீர் குடி” என்று நமது பெரியவர்கள் நம்மை ஆசுவாசப்படுத்துவதுண்டு. 
‘என்ன சொல்கிறீர்கள்? எவ்வளவு பெரிய பிரச்சனை இருக்கிறது? எவ்வளவு காரியங்கள் செய்ய வேண்டியுள்ளது? பொறுமையாக இருந்தால் அவ்வளவுதான்...” என்று சொல்வது காதில் விழுகிறது. ஆனால், செந்நாப்போதர் என்ன சொல்கிறார் என்று கொஞ்சம் பாருங்கள், ஒருவர் எந்த மாதிரி பொறுமையாக இருக்க வேண்டும் என்று சொல்கிறார் பாருங்கள் பின்வரும் குறட்பாவில்...
அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை
இகழ்வார்ப் பொறுத்தல் தலை. -151 என்கிறார். 
நமது கையில் ஒரு நபர் தெரியாமல் கீறி விட்டால் என்ன ஆகும். சடாரென்று கோபம் கொண்டு நமது கோபத்தைக் காட்டுவதற்கு முயல்வோம். சிலர் மற்றவர் தங்களை நெருங்கி வருவதைக் கூட விரும்புவதில்லை. ஆனால், நிலமானது எப்படி தன்னையே தோண்டினாலும் தோண்டுபவர் விழுந்து விடாதபடி தாங்கும் நிலம் போலத், தன்னை வார்த்தைகளால் இகழ்ந்து பேசுகிறவர்களையும் அவமதிப்பவர்களையும் மதித்துப் பொறுத்துக் கொள்வதே தலைசிறந்த பண்பாகும் என்கிறார். நிலத்தை கிட்டத்தட்ட தாய்க்கு இணையாக பார்க்கிறார். தாய் மட்டுமே தன் மகன் தன்னைத் துன்பத்தில் ஆழ்த்தினாலும் அவர் மீது அக்கறையுடனேயே இருப்பார். நிலமும் அவ்வாறு இருக்கிறது. அதுபோல பொறுமை இருக்க வேண்டும் என்கிறார். 
அடுத்தக் குறளில், 
பொறுத்தல் இறப்பினை என்றும் அதனை
மறத்தல் அதனினும் நன்று - 152  என்கிறார். 
இன்றும் சமூக வலைத்தளங்களில் பலரும் பலரை மிகக் கேவலாமாக பேசுவதை பார்த்துக் கொண்டிருக்கிறோம். விவாதங்களில் உச்சபட்ச கோபம் வரும் அளவிற்கு பேசினாலும் வார்த்தையை சிலர் கவனமாகவும் பொறுப்பாகவும் கையாளுவதை பார்க்க முடியும். அப்படிக் கையாள்பவர்கள் மதிக்கப்படுவதையும் பொறுமையற்று பேசுபவர்களை பார்வையாளர்கள் வசை பாடுவதையும் பார்க்க முடிகிறது. இது போன்ற நீடித்த பொறுமையை அப்போதே சொல்லியிருக்கிறார் திருவள்ளுவர். அதாவது மேற்கண்ட குறளில், பிறர் அளவு கடந்து செய்த தீங்கையும் எப்போதும் பொறுத்துக் கொள்ள வேண்டும்; என்கிறார் மேலும் அதனை நினைத்துக் கொண்டிருக்காமல் அதனை மறந்து விடுதல் அதனிலும் நன்மையாகும்  என்கிறார்.  ஒரு பொன்மொழி ஒன்ற ஞாபகத்திற்கு வருகின்றது. ‘மகிழ்ச்சியை தலைக்குக் கொண்டு செல்லாதே, துக்கத்தை இதயத்திற்கு அனுப்பாதே” என்று, அதாவது கெடுதல் ஏற்படுத்துவதை உள்வாங்கி அவதிப்பட வேண்டாம் என்பதும் இதன் அர்;த்தமாகும். நீங்கள் உங்கள் ஆழ்மனதிற்குக் கொண்டு செல்லாமல் பொறுமை காப்பது உங்களுக்கு நலமாக இருக்கும் என்பதை உணர்த்துகிறார். அடுத்தக் குறளில்
இன்நம்யுள் இன்மை விருந்தொரால் வன்மையுள்
வன்மை மடவார்ப் பொறை. – 153 என்று சொல்கிறார்.  வறுமையிலே மிகக் கொடுமையான வறுமை, வந்த விருந்தினரை உபசரிக்காமல் போகும் நிலையாகும் அதுபோல வலிமையிலும் மிகச் சிறந்த வலிமை என்பது ஒருவர் அறிவு கெட்டத் தனமாக ஆத்திரமூட்டும் வகையில் நடந்து கொள்ளும் போது அறிவிலாதவரின் செயலை பொறுத்துக் கொள்வது ஆகும். இந்த காலத்திற்கு அவசியம் தேவைப்படும் ஆலோசனையாகும் இது. 
கீழ்வரும் குறளில்,
நிறையுடைமை நீங்காமை வேண்டின் பொற்யுடைமை
போற்றி யொழுகப் படும்.- 154 என்கிறார்.
நிறைகுடம் நீர் தளும்புவது இல்லை என்பது போல தான் சான்றாண்மை விலகாமல் நிறை உடையவனாக இருக்கும் தன்மை தன்னை விட்டு விலகாமல் இருக்க வேண்டும் என்று ஒருவர் விரும்பினால், அவன் பொறுமையைப் பின்பற்றி வாழ வேண்டும் என்கிறார். 
ஒறுத்தாரை ஒன்றாக வையாரே வைப்பர்
பொறுத்தாரைப் பொன்போற் பொதிந்து. - 155
விருமாண்டி படத்தில் நடிகர் கமல்ஹாசன் ஒரு டயலாக் சொல்லுவார், ‘மன்னிக்கிறவன் பெரிய மனுஷன்” என்று, அதேபோல், விவிலியத்தில் ஒருமுறை இயேசுவின் சீடராக இருக்கும் பேதுரு ஒருமுறை அவரிடம், ‘என் சகோதர சகோதரிகள் எனக்கு எதிராக பாவம் செய்தால், நான் எத்தனை முறை மன்னிக்க வேண்டும்? ஏழு முறை மட்டுமா? ஏனக் கேட்கிறார். அதற்கு இயேசு ‘ஏழு முறை மட்டுமல்ல, எழுபது தடைவ ஏழுமுறை என நான் உனக்குச் சொல்கிறேன்” என்று பதிலளிக்கிறார். அதாவது, மன்னிப்பதற்கு எண்ணிக்கை இருக்க வேண்டியதில்லை என்பதை உணர்த்துகிறார். நீடித்த பொறுமையை வலியுறுத்துகிறார். இந்தக் கருத்தை முன்னரே மேற்கண்ட குறளில் சொல்லியிருக்கிறார் திருவள்ளுவர். தமக்குத் தீமை செய்தவரை பொறுமையிழந்து தண்டித்தவரை ஒரு பொருட்டாக எவரும் மதிக்க மாட்டார்கள், ஆனால், பொறுத்தவர்களை பொன் போல மதித்துப்  போற்றுவார்கள் என்கிறார் திருவள்ளுவர் அவர்கள். 

தொடர்ந்து பார்ப்போம்...
குறிப்பு: இணைக்கப்பட்டுள்ள படங்கள் மற்றும் காணொலி ஆகியவற்றை செயற்கை நுண்ணறிவுத் தொழில் நுட்பத்தில் உருவாக்கியுள்ளேன். பிழையிருப்பின் பொறுத்துக் கொள்க.
நன்றி

No comments:

Post a Comment