திருக்குறள் வழி நின்று திருவள்ளுவரை அறிதல்-87:
அருளுடைமை:
திருவள்ளுவர் அவர்கள் உடைமை என்னும் தலைப்பில் எழுதிய அதிகாரங்களைப் பற்றிப் பார்க்கின்றோம். கடந்த வாரங்களில் அன்புடைமை;, அறிவுடைமை, அடக்கமுடைமை, ஒழுக்கமுடைமை மற்றும் பொறையுடைமை பற்றிப் பார்த்தோம். இந்த வாரம் அருளுடைமை என்னும் அதிகாரத்தைப் பற்றிப் பார்ப்போம்.
அருள் என்பது கருணை, இரக்கம், பரிவு மற்றும் அன்பு ஆகியவற்றை உள்ளடக்கிய ஒரு ஆழமான குணமாகும். இது தம்முடையவர்களுக்கு மட்டுமல்லாமல், அனைத்து உயிர்களிடத்தும் பாகுபாடின்றி காட்டப்படுவதாகும்.
வள்ளுவர் இதனை "அன்பு" என்பதிலிருந்து கவனமாக வேறுபடுத்துகிறார். அன்பு என்பது குடும்பம் மற்றும் உறவினர்களிடம் காட்டப்படும் அடிப்படையான பாசமாகும். அருள் என்பது அன்பின் முதிர்ச்சியும், அதன் உலகளாவிய விரிவாக்கமும் ஆகும்; குறிப்பிட்ட அன்புஇ அனைத்து உயிர்களையும் அரவணைக்கும் எல்லையற்ற கருணையாக மலர்வதே அருள்.
மரபுப்படி, அருளுடைமை திருக்குறளின் 25-வது அதிகாரமாக, அறத்துப்பாலில், துறவறவியல் என்னும் இயலின் கீழ் அமைந்துள்ளது. இதன் இடம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. கருணை அனைவருக்கும் இன்றியமையாதது என்றாலும், அதன் முழுமையான வடிவம் ஒரு உயர் அறம் என்பதையும், அறநெறியிலும் ஆன்மீகத்திலும் முதிர்ச்சி பெற்றவர்களின் அடையாளமாகவும் இது விளங்குகிறது என்பதை இது காட்டுகிறது.
செல்வம் என்றால் பலரும் நினைத்துக் கொள்வது பணம் சார்ந்த விடயங்களைப் பலரும் நினைத்துக் கொள்வதுண்டு, அதனை பல இடங்களில் திருவள்ளுவர் அவர்கள் மறுத்துள்ளார். இந்த அருளுடைமை அதிகாரத்திலும் அதனை மீண்டும் வலியுறுத்துகிறார். முதல் குறளில்,
அருட்செல்வம் செல்வத்துள் செல்வம் பொருட்செல்வம்
பூரியார் கண்ணும் உள - 241
என்கிறார்.
அதாவது, கொடிய உள்ளம் கொண்ட இழிமக்களிடம் கூடக் பொருள்களாகிய செல்வங்கள் குவிந்திருக்கிறது. ஆனால், உயர்ந்தவரிடத்தில் மட்டுமே உள்ள அருளாகிய செல்வமே செல்வங்களில் சிறந்த செல்வமாகும் என்கிறார். இது, பொருளைச் சேர்ப்பதையே நோக்கமாகக் கொண்ட ஒரு வாழ்க்கைஇ இந்த உயர் அறநெறித் தரத்தின்படி, ஒரு ஆழ்ந்த வறுமையான வாழ்க்கை என்பதைக் குறிக்கிறது. ஒரு நபரின்இ அதன்மூலம் ஒரு சமூகத்தின் செழிப்பின் உண்மையான அளவுகோல்இ அவர்களின் அருளுடைமையே ஆகும்.
அடுத்தக் குறளில்,
நல்லாற்றாள் நாடி அருளாள்க பல்லாற்றால்
தேரினும் அஃதே துணை - 242
நல்ல நெறியில் வாழ்ந்து, நமக்கு உதவும் அறம் எது என ஆராய்ந்து அருளுடன் வாழ வேண்டும். பலவழிகளால் ஆராய்ந்து கண்டாலும் அருளே நமது வாழ்க்கைக்குத் துணையாக இருக்கும். இங்கே, வள்ளுவர் அருளை குறிப்பிட்ட மதக் கோட்பாடுகளைக் கடந்த ஒரு மீநெறிமுறையாக நிலைநிறுத்துகிறார். இக்குறள்இ குறளின் புகழ்பெற்ற சமயச்சார்பற்ற மற்றும் உலகளாவிய தன்மையின் சான்றாகும். அருள் என்பது ஒரு மதத்திற்கு மட்டும் உரிய கோட்பாடாக முன்வைக்கப்படவில்லைஇ மாறாக பகுத்தறிவின் மூலம் அணுகக்கூடிய ஒரு உலகளாவிய உண்மையாகவும், ஒரு அறநெறி மாறிலியாகவும் முன்வைக்கப்படுகிறது. மதங்கள் அவற்றின் மீபொருண்மை நம்பிக்கைகளிலும், சடங்கு முறைகளிலும் வேறுபடலாம்இ ஆனால் அவற்றின் அறநெறிக் கரு, உண்மையானதாகக் கருதப்பட வேண்டுமானால், அது கருணைக் கோட்பாட்டில் ஒன்றிணைய வேண்டும் என்று இது மறைமுகமாக வாதிடுகிறது. அருள் என்பது மனித வளர்ச்சிக்கு வழிவகுக்கும் அனைத்து உண்மையான பாதைகளின் பொதுவான காரணியாகும்.
அருள்சேர்ந்த நெஞ்சினார்க் கில்லை இருள்சேர்ந்த
இன்னா உலகம் புகல் – 243
மேலே குறிப்பிட்ட குறட்பாவில், அறியாமையாகிய இருள் பொருந்திய துன்ப உலகில் இருந்து வாழும் வாழ்க்கை, அருள் பொருந்திய நெஞ்சம் உடையவர்களுக்கு இல்லை என்கிறார். சில கிராமங்களில் முன்பெல்லாம் கட்ட பஞ்சாயத்துகள் நடப்பதுண்டு, இன்று ஆங்காங்கே ஊர் கட்டுப்பாடு என்ற பெயரில் இது போன்று சம்பவங்கள் இருக்கத்தான் செய்கின்றன. ஏதேனும், ஒரு பிரச்சனை என்று வந்துவிட்டால், சிலர் சாராயத்திற்கும், பணத்திற்கும் ஆசைப்பட்டு எளியவருக்கு எதிராக அவர் பாதிக்கப்பட்டிருந்தாலும் தெரிந்தே தவறான தண்டனைகள் வழங்கப்படுவதுண்டு. ஆனால், உண்மையான நீதிமான்கள் தனது குடும்பமே இருந்தாலும், தான் கொண்டுள்ள நியாயத்தன்மையும் நீதியையும் நிலைநாட்ட வேண்டும் என்று இருப்பர். இவர்கள் சுற்றியுள்ளவர்கள் என்ன சொல்வார்கள் என்று கவலைப்படுவதில்லை. இதுபோன்ற அருளுடையவர்கள் நீதியின் வழிதான் நடப்பார்கள் என்று எண்ணத்தில் தான் மக்கள் இன்றும் கடைசிநிலையில் நீதிமன்றத்தின் மீது அதீத நம்பிக்கைக் கொண்டுள்ளனர்.
மன்னுயிர் ஓம்பி அருளாள்வார்க்கு இல்லென்ப
தன்னுயிர் அஞ்சும் வினை- 244
ஏல்லா உயிர்களிடத்திலும் கருணைக் கொண்டு அவைகளைக் காத்திடுவதையே கடமையாகக் கொண்டு வாழும் சான்றோர்களை அருளுடையவர்கள் என்றும் தன் உயிரைக் குறித்துப் பயப்படமாட்டார்கள் என்றும் குறிப்பிடுகிறார். ஒருவர் நாய் வளர்க்கிறார் என்று வைத்துக்கொள்வோம், அதன் மீது அவர் அதீத பிரியம் கொண்டிருக்கும் போது, அவர் அந்நாய்க்கு திடீரென்று உடம்பு சரியில்லையென்றால், இவரும் பட்டினி கிடப்பதைப் பார்த்திருப்போம். உண்மையான அக்கறையும் எண்ணமும் கொண்டவர்கள் எல்லா உயிர்களிடத்திலும் ஒரே மாதிரியான நிலைப்பாட்டில் இருப்பர். பின்வரும் குறளில் அருளை உடைமையாகக் கொண்டவர்களை எவ்வாறு ஒப்பிடுகிறார் என்று அறியும் போது, எந்தளவிற்கு அவர்களை மேன்மைப்படுத்துகிறார் என்பதனை அறியலாம்.
அல்லல் அருளாள்வார்க்கு இல்லை வளிவழங்கும்
மல்லன்மா ஞாலங் கரி – 245
அருளை உடைமையாகக் கொண்டு வாழ்பவர்களுககு எந்தத் துன்பமும் இல்லை, இதற்கு காற்று உயிர் வழங்குவதால் வாழும் வளமான பெரிய உலகமேச் சிறந்த உதாரணம் ஆகும் என்கிறார்.
தொடர்ந்து பார்ப்போம்...
குறிப்பு: இணைக்கப்பட்டுள்ள படங்கள் மற்றும் காணொலி ஆகியவற்றை செயற்கை நுண்ணறிவுத் தொழில் நுட்பத்தில் உருவாக்கியுள்ளேன். பிழையிருப்பின் பொறுத்துக் கொள்க.
நன்றி
https://www.youtube.com/@AAAInfotainment
No comments:
Post a Comment