Wednesday, 10 September 2025

திருக்குறள் வழி நின்று திருவள்ளுவரை அறிதல்-86:

திருக்குறள் வழி நின்று திருவள்ளுவரை அறிதல்-86:
பொறையுடைமை:
கடந்த வருடம் பொறையுடைமை அதிகாரத்தின் முற்பகுதியைப் பார்த்தோம், 
இந்த வாரம் அதன் பிற்பகுதியைப் பார்ப்போம்.
விவிலியத்தில் குறிப்பிடப்படுவதுபோல, இயேசுவை சிலுவையில் அறைய வேண்டும் என்று நினைத்தவர்கள், அன்று ஒருநாள் மட்டுமே அவர் இறப்பதைக் கண்டு மகிழந்தனர், ஆனாலும், அவர் உயிர்த்தெழுவார் என்று உரைத்ததால் மகிழ்ச்சி அவர்களுக்கு நீடிக்க வில்லை, ஒருவித உளைச்சலிலேயே இருந்தனர். ஆனால், இவர்கள், இயேசுவை கசையால் அடித்தாலும், முள்முடி சூட்டினாலும், சிலுவையில் அறைந்தாலும் எல்லாவற்றையும் பொறுத்துக் கொண்டார். ஆதலே, அவர் உலகம் புகழும் புனிதராக மதிக்கப்படுகிறார். இக்கருத்தையே பின்வரும் குறளில் திருவள்ளுவர் குறிப்பிடுகிறார். 
ஒறுத்தார்க்கு ஒருநாளை இன்பம் பொறுத்தார்க்குப்
பொன்றுந் துணையும் புகழ்.   - 156 
ஒருவரை துன்புறுத்துபர்களுக்கு அல்லது தீமையை உண்டாக்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு, அந்தத் தீமையை உண்டாக்குபவருக்கு அன்று மட்டுமே இன்பத்தை அனுபவிப்பர். ஆனால், அதனைப் பொறுத்துக் கொண்டவருக்கு உலகம் அழியும் வரையுமே புகழ் உண்டு என்கிறார். 
அடுத்தக் குறளில், சிலர் அறைகுறையாகப் புரிந்து கொண்டோ அல்லது முழுமையாக விடயத்தை அறியாமலோ, மற்றவர்களைப் புரிந்து கொள்ளாமலோ அல்லது தனக்கு எல்லாம் தெரியும் என்ற மமதையிலோ பிறரை புரிந்து கொள்ள முயற்சி செய்வதில்லை. அதனாலேயே பல தவறுகள் ஏற்படுவதுண்டு. பலருக்கு தீங்கிளைப்பதற்கும் அதுவே காரணமாகின்றது. ஆனால், உண்மையறிந்தவர்கள் கண்ணால் காண்பதும் பொய், காதால் கேட்பதும் பொய் தீர விசாரிப்பதே மெய் என்று உண்மைக்காக பொறுமையாக தன் பக்கத்து நியாயத்தை விளக்குவர், அல்லது வெளிக் கொண்டு வருவர், அந்த நிலையில் கோபமேற்படுத்தும் வகையில் எதிரில் இருப்பவர் செயல்பட்டாதும் பொறுமையாக இருப்பது நல்லது என்று வள்ளுவர் குறிப்பிடுகிறார். 
திறனல்ல தற்பிறர் செய்யினும் நோநொந்து
அறனல்ல செய்யாமை நன்று.   - 157 என்கிறார். 
அதாவது, தகுதியில்லாதவற்றைப் பிறர் தனக்குச் செய்தாலும், அதனால் மிகவும் மனம் நொந்து அவருக்குத் தீமை செய்யாதிருத்தல் நல்லது  என்கிறார். 
நாம் முன்னரே குறிப்பிட்டபடி மமதையில் செருக்கு மிகுதியில் சிலர் தான் தான் பெரியவர் என்ற ஆணவத்தில் தீங்கிழைப்பது உண்டு. அவர்களை பொறுமையாக கையாள வேண்டும். இதனை பின்வரும் குறளில் முன்னரே தெளிவுபடுத்தியுள்ளார் ஐயன். 
மிகுதியான் மிக்கவை செய்தாரைத் தாந்தம்
தகுதியான் வென்று விடல். - 158 என்கிறார்.
அதாவது, செருக்கு மிகுதியால் தீமை செய்தவர்களை தாம், தம்முடைய பொறுமை என்னும் தகுதியினால் வென்று விட வேண்டும் என்கிறார். இன்றும் தான் எல்லா வகையிலும் உயர்ந்தவன் என்ற செருக்கில் பலரும் வலம் வருதைக் காண்கிறோம். இவர் அடுத்து, தன்னைக் காத்துக் கொள்வதற்காக எந்த எல்லைக்கும் செல்வார். இதனை நாம் பல்வேறு அரசியல் நிகழ்வுகளில் பார்த்திருக்கிறோம். இதனையே அடுத்தக் குறளில் குறிப்பிடுகிறார்.  
துறந்தாரின் தூய்மை உடையர் இறந்தார்வாய்
இன்னாச்சொல் நோற்கிற் பவர். - 159  என்கிறார். 
எல்லை மீறி நடப்பவரின் வாயிற் பிறக்கும் கொடிய சொற்களைப் பொறுத்துக் கொள்பவர்கள், இல்லற வாழ்க்கையில் இருந்தாலும் துறவியர் போலத் தூய்மையாளர் ஆவார் என்கிறார். 
அடு;த்தக் குறட்பாவில், எந்தத் தாய்;க்கும் தன் குழந்தை உண்ணாமல் இருப்பதைத் தாங்கிக் கொள்ள முடியாது, அரசியல் காரணமாக இருந்தாலும் சரி, சமூக நீதிக்கான தேவை இருந்தாலும் சரி, முக்கிய  செயல்பாடாக உண்ணாவிரதம் இருக்கிறது. அவ்வாறு இருப்பவர், தியாகத்தில் திருவுருவாக போற்றப்படுகின்றனர். உண்ணா விரதம் இருப்பதால் பல அரசியல் மாற்றங்கள் ஏற்பட்டிருப்பதையும் உணர முடிகிறது. துறவறம் இருப்பவர்களும் உண்ணா நோன்பைக் கடைப்பிடிப்பதை பிராதானமாகக் கையாளுகிறார்கள். வடக்கிருத்தல் என்பது கூட உண்ணாமல் இருந்து இறப்பதைத் தான் குறிப்பிடுகிறது. ஆனால், திருவள்ளுவர் என்னக் குறிப்பிடுகிறார்?
உண்ணாது நோற்பார் பெரியர் பிறர்சொல்லும்
இன்னாச்சொல் நோற்பாரின் பின்- 160 என்கிறார். 
அதாவது, உணவு உண்ணாமல் நோன்பு கொள்பவர், பிறர் சொல்லும் கொடுஞ்சொற்களைப் பொறுப்பவர்க்கு அடுத்த நிலையிலே தான் போற்றப்படுவார்கள் என்று குறிப்பிடுகிறார். 

தொடர்ந்து பார்ப்போம்...
குறிப்பு: இணைக்கப்பட்டுள்ள படங்கள் மற்றும் காணொலி ஆகியவற்றை செயற்கை நுண்ணறிவுத் தொழில் நுட்பத்தில் உருவாக்கியுள்ளேன். பிழையிருப்பின் பொறுத்துக் கொள்க.
நன்றி

No comments:

Post a Comment