திருக்குறள் வழி நின்று திருவள்ளுவரை அறிதல்-91:
ஆள்வினையுடைமை :
திருவள்ளுவர் அவர்கள் உடைமை என்னும் தலைப்பில் எழுதிய அதிகாரங்களைப் பற்றிப் பார்க்கின்றோம். கடந்த வாரங்களில் அன்புடைமை, அறிவுடைமை, அடக்கமுடைமை, ஒழுக்கமுடைமை, பொறையுடைமை, அருளுடைமை மற்றும் ஊக்கமுடைமை பற்றிப் பார்த்தோம். இந்த வாரம் ஆள்வினையுடைமை என்னும் அதிகாரத்தைப் பற்றிப் பார்ப்போம்.
ஆள்வினையுடைமை என்னும் தலைப்பின் மொழியியல் மற்றும் கருத்தியல் பகுப்பாய்வு வள்ளுவரின் தத்துவத்தின் ஆழத்தை வெளிப்படுத்துகிறது. இந்தச் சொல் "ஆள்வினை" மற்றும் "உடைமை" ஆகிய இரண்டு சொற்களின் கூட்டு ஆகும். "உடைமை" என்பது "பெற்றிருத்தல்" அல்லது "கொண்டிருக்கும் நிலை" என்று எளிமையாக மொழிபெயர்க்கப்படுகிறது. சிக்கலானது "ஆள்வினை" என்பதில் உள்ளது. இது பொதுவாக "ஆண்மையான முயற்சிஇ" "விடாமுயற்சிஇ" அல்லது "உழைப்பு" என்று மொழிபெயர்க்கப்பட்டாலும்இ அதன் வேர்கள் ஒரு ஆளுமைமிக்க கருத்தை பரிந்துரைக்கின்றன. "ஆள்" என்பது ஆளுதல் அல்லது நிர்வகித்தலுடன் தொடர்புடையதுஇ மற்றும் "வினை" என்பது செயல் அல்லது வேலையைக் குறிக்கிறது. எனவேஇ ஒரு துல்லியமான பொருள் "ஒருவரின் செயல்களை ஆளும் திறனைக் கொண்டிருத்தல்" என்பதாகும். இது கடினமாக உழைப்பது மட்டுமல்ல; இது ஒருவரின் முயற்சிகள் மீது முழுமையான கட்டுப்பாட்டைச் செலுத்திஇ அவற்றை அதிகாரத்துடனும் அறிவுடனும் வழிநடத்துவதாகும். இது மன உறுதியான "ஊக்கம்" மற்றும் நீடித்த உடல் உழைப்பான "மெய்முயற்சி" ஆகியவற்றின் சக்திவாய்ந்த இணைப்பைக் குறிக்கிறது. 'ஆள்வினையுடைமை' அதிகாரத்தின் பத்து குறள்களும் மனித முயற்சியின் ஆற்றலுக்கான ஒரு தொடர்ச்சியான மற்றும் படிப்படியான வாதத்தை உருவாக்குகின்றன. ஒவ்வொரு குறளும் முந்தைய குறளின் மீது கட்டமைக்கப்பட்டுஇ மனவுறுதியின் உள் உளவியலில் இருந்து வெளிப்புற சமூக-பொருளாதார தாக்கங்கள் வரை நகர்ந்துஇ இறுதியாக விதி என்ற கருத்துடன் நேரடியாக மோதுகிறது.
ஏற்கனவே ‘எண்ணித் துணிக கருமம்..” என்று துவங்கும் திருக்குறள் ஞாபகத்தில் இருக்கும். அக்குறளில் எந்த ஒரு செயலையும் நன்கு ஆராய்ந்து துவங்க வேண்டும், துவங்கிய பிறகு, இந்தச் செயல் நாம் துவங்கியிருக்க வேண்டுமா? அது எதிர்பார்த்த முடிவைத் தருமா? ஏன்பது போன்று ஆராய்ச்சி செய்து கொண்டிருக்கக் கூடாது என்கிறார். அதாவது தீர்;க்கமாக முடிவு செய்து ஒரு செயலில் இறங்க வேண்டும் என்கிறார்.
ஒரு தொழில் முனைவோர் இருக்கிறார் என்று வைத்துக் கொள்வோம். அவர் தீர்க்கமாக முடிவு செய்து தான் தொழிலை துவங்கியுள்ளார். ஆனாலும், அவர் எதிர்பார்த்த வேகத்தில் விற்பனை இல்லை என்றால் என்ன செய்யவேண்டும்? எந்த நிலையில் தொய்வு உள்ளது என்பதைக் கண்டறிந்து அதனை மேம்படுத்த முயற்சிக்க வேண்டும். இதனையே ஆள்வினையுடைமையின் முதல் குறட்பாவில் ஆலோசனை வழங்குகிறார் திருவள்ளுவர்.
அருமை உடைத்தென்று அசாவாமை வேண்டும்
பெருமை முயற்சி தரும் -611 என்கிறார்.
அதாவது, இந்தச் செயலை நம்மாலே செய்ய முடியாது என்று சோர்வு கொள்ளாமல் இருக்க வேண்டும். இடைவிடாத முயற்சியானது அதனைச் செய்து முடிக்கும் வலிமையைத் தரும் என்கிறார்.
அப்படி யார் இடைவிடாமல் முயற்சி செய்து, அதில் வெற்றி பெற்றவரை உலகம் பாராட்டும் அவருடைய முயற்சிகளைப் போற்றத் துவங்கும். அவ்வாறு தொழிலை துவங்கியவர் முயற்சிக்குப் பயந்து இடையிலேயே விட்டுவிட்டால் என்ன ஆகும். திருவள்ளுவரே சொல்கிறார் கேளுங்கள்… வினைக்கண் வினைகெடல் ஓம்பல் வினைக்குறை
தீர்;ந்தாரின் தீர்ந்தன்று உலகு -612 என்கிறார்.
ஒரு செயலைச் செய்து முடிக்காமல் இடையிலேயே கைவிட்டவரை உலகமும் கைவிடும். ஆதலால், செய்யும் செயலினை செய்ய முடியாதுஎன்று முயற்சி இ;ல்லாமல் இருப்பதைக் கைவிட வேண்டும் என்கிறார். ஆகவே, முயற்சி திருவினையாக்கும் என்பதை உணர்ந்து தொடர வேண்டும்.
அவ்வாறு முயற்சி உடையவர்கள் தான் உண்மையில் திருவள்ளுவர் கூறுவது போல் பெருமைக் கொள்ள முடியும்.
தாளாண்மை என்னும் தகைமைக்கண் தங்கிற்றே
வேளாண்மை என்னுஞ் செருக்கு -613
ஏல்லோருக்கும் உதவி செய்தல் என்னும் பெருமித உணர்வானது, விடா முயற்சி என்று சொல்லப்படுகின்ற உயர்ந்த பண்பில் தான் நிலைத்திருக்கிறது என்கிறார். மேலும், எந்த நிலையிலும் பயம் இல்லாமல் தொடர்ந்து முயற்சிக்க வேண்டும் என்பதனை பின்வரும் குறளில் வலியுறுத்துகிறார்.
தாளாண்மை இல்லாதான் வேளாண்மை பேடிகை
வாளாண்மை போலக் கெடும் -614
போருக்கு பயப்படுகின்ற ஒரு பேடியின் கையிலுள்ள வாள் எடுத்தும் ஆளும் தண்மை போல் இல்லாதது போல விடாமுயற்சி இல்லாதவன் உதவுகின்ற தன்மையும் நிறைவேறாமல் போகும்.
ஏல்லா மனிதர்களுமே பொதுவாகவே சுய நலம் இருந்தாலும், தன் நலத்தைக் கருதாமல் மற்றவர்களுக்காக முன் நிற்பவர்களை உலகம் கொண்டாடும். அத்தகையவர்களை திருவள்ளுவர் எவ்வாறு குறிப்பிடுகிறார்.
இன்பம் விழையான் வினைவிழைவான் தன்கேளிர்
துன்பம் துடைத்தூன்றும் தூண் -615
தன்னுடைய இன்பத்தை விரும்பாமல், எடுத்த செயலை முடிப்பதையே விரும்புகிறவன் தன்னுடைய துன்பத்தை மட்டுமல்லாது தன் சுற்றத்தாரின் துன்பத்தையும் போக்கி அவர்களைத் தாங்கும் தூண் போலாவான் என்கிறார். சுருக்கமாக தெளிவுபடுத்த வேண்டும் என்றால், ஒருவன் தன்னார்வமாக , தான் வாழும் பகுதியில் சாக்கடை நிரம்பி வழிகின்றது. அந்தப் பகுதியில் இருப்பவர்கள் மூக்கை மூடிக் கொண்டு கடந்து செல்லும் போது, சம்மந்தப்பட்ட அதிகாரிகள் ஒருவேளை அலட்சியம் காட்டுவார்கள் அலைய விடுவார்கள் என்ற நிலையை உணர்ந்திருந்தாலும், அதற்கு உரிய மனுக்களையும் நடக்கவில்லையென்றால் புகாரையும் அளித்து அந்த செயலினை அவர் செய்யும் போது, அவருடைய பிரச்சனையும் தீருகிறது. அவரைச் சுற்றியுள்ளவர்களின் பிரச்சனையும் தீர்க்கப்படுகிறது.
தொடர்ந்து பார்ப்போம்...
குறிப்பு: இணைக்கப்பட்டுள்ள படங்கள் மற்றும் காணொலி ஆகியவற்றை செயற்கை நுண்ணறிவுத் தொழில் நுட்பத்தில் உருவாக்கியுள்ளேன். பிழையிருப்பின் மற்றும் தாமதத்திற்குப் பொறுத்துக் கொள்க.
நன்றி
https://www.youtube.com/@AAAInfotainment
தோப்பு
No comments:
Post a Comment