பண்புடைமை:
கடந்த வாரம் பண்புடைமை அதிகாரத்தில் இருந்து முதற்பகுதி குறட்பாக்களைப் பார்த்தோம். இந்த வாரம் அதன் பிற்பகுதியைப் பார்ப்போம்.
உலகம் எவ்விதம் இயங்கிறது? அறிவியல் விளக்கம் வேறு, ஆனால், மானிடவியலின் அடிப்படையில் பார்த்தோமானால், இந்த உலகம் அமைதியாக இயங்கிக் கொண்டிருப்பதற்குக் காரணம் என்னவென்று திருவள்ளுவர் குறிப்பிடுகிறார்?
பண்புடையார்ப் பட்டுண்டு உலகம் அதுஇன்றேல்
மண்புக்கு மாய்வது மன் -996 என்கிறார். அதாவது, பண்புடையவர்கள் வாழ்வதால் தான் மக்கள் வாழ்க்கையானது எப்போதும் நிலைத்து இருக்கின்றது. ஆவர்கள் மட்டும் வாழாது போவார்கள் எனில், மனித வாழ்க்கை மண்ணுக்குள் புகுந்து மடிந்து போகும் என்கிறார். அதாவது, உலக நடைமுறைகள் பண்பாளர்களைச் சார்ந்து இயங்க வேண்டும், இல்லையெனில் அந்த நடைமுறைகள் நாசமாகிவிடும் என்கிறார்.
அடுத்தக் குறளினை பார்ப்பதற்கு முன்பு எனக்கு கௌதம புத்தர் அவர்களின் புகழ்பெற்ற வாக்கியம் ஞாபகத்திற்கு வருகிறது. ‘கருணையே இல்லாமல் மிகச் சிறந்த அறிவுடன் இருப்பதைக் காட்டிலும், அறிவே இல்லாமல் கருணையாளராக இருப்பது சிறந்தது” என்கிறார். அதாவது பண்பற்றவர் பெற்றிருக்கும் அறிவினால் மக்களுக்குப் பலன் கிட்டாது என்பதை நாம் உணரலாம். இந்தக் கருத்து பின்வரும் குறளில் பிரதிபலிக்கிறது.
அரம்போலும் கூர்மைய ரேனும் மரம்போல்வர்
மக்கட்பண்பு இல்லா தவர்-997 என்கிறார்.
அதாவது, நன் மக்களுக்கு உரிய பண்பு இல்லாதவர்கள், மரத்தை அறுக்கும் அரம் போன்று கூர்மை உடையவராக இருந்தாலும், ஓரறிவு கொண்ட மரத்தைப் போன்றவர்கள் ஆவர் என்கிறார். இதில் மரத்தினால் நிறையப் பயன் உள்ளதே என்று நினைத்துக் கொள்ள வேண்டாம், ஆரறிவு மனிதன் ஓரறிவு மரத்தைப் போல சிந்தனையுடன் தான் அவனுடைய செயல்பாடு பண்பற்று இருந்தால் விளங்கும் என்கிறார்.
நாம், நமது மத்தியில் நிறையப் பண்பாளர்களை பார்த்து வருகிறோம். உதாரணமாக நல்லக்கண்ணு ஐயா அவர்களை எடுத்துக் கொண்டோம் என்றால், எவ்வளவு தீமைகள் தான் எதிர்கொண்ட போதிலும் பொறுமையாக அனைத்தையும் கையாண்டார். ஏந்தச் சூழலில் தன்னிடம் இருந்த மேலான பண்பை அவர் கைவிட வில்லை. இதனையே தம்முடைய அடுத்தக் குறளில்,
நண்பாற்றார் ஆகி நயமில செய்வார்க்கும்
பண்பாற்றார் ஆதல் கடை -998 காட்டியுள்ளார் திருவள்ளுவர்.
நட்புக்கு ஏற்றவராக இல்லாமல் தீமைகளையேச் செய்து கொண்டிருப்பவரிடத்தில் கூட, நாம் பொறுமை காட்டிப் பண்புடையவராக நடந்து கொள்ளாவிட்டால் அது இழிவான செயலாகக் கருதப்படும் என்கிறார்.
‘தனிமையிலே இனிமை காண முடியுமா? நள்ளிரவினிலே சூரியனும் தெரியுமா?” என்ற பாடலைக் கேள்விப் பட்டிருப்போம். ஒருவர் மக்களோடு பேசிப் பழகும் பண்பில்லாதவர்களாக இருக்கிறார் என்றால், அவர் வாழ்வு இருள் சூழ்ந்த வாழ்வாகவே இருக்கும். ஒருவருடன் பேசுவதன் மூலம் தான் அவர் மனதில் என்ன நினைக்கிறார் என்று தெரிய வரும். இல்லையென்றால், அவர் இப்படி நினைத்திருப்பாரோ?, அல்லது அப்படி நினைத்திருப்பாரோ? ஏன்ற ஐயமே மிகுதியாக இருக்கும். அதுவே ஒவ்வொருவரையும் தவராகவும் நினைக்கவும் தோன்றும். பின்வரும் குறளில் திருவள்ளுவர் பின்வருமாறு குறிப்பிடுகிறார்.
நகல்வல்லர் அல்லார்க்கு மாயிரு ஞாலம்
பகலும்பாற் பட்டன்று இருள் -999
அதாவது, நல்லப் பண்பு இல்லாததால் மற்றவர்களுடன் கலந்து பேசி மனம் மகிழும் இயல்பு இல்லாதவருக்கு, இந்தப் பெரிய உலகம் இருள் இல்லாமல் இருக்கும் பகல் பொழுதில் கூட இருட்டிலேயே இருப்பது போலவாம் என்று குறிப்பிடுகிறார்.
ஒரு படத்தில் நகைச்சுவைக் காட்சி ஒன்று பார்த்தேன், அதில் கதாநாயகன் சொல்கிறார் ‘வுடு மச்சான், உனக்கு நேரமே சரியில்லைடா” என்கிறார். அதற்கு பதிலளித்த நகைச்சுவை நடிகர் ‘நேரம்லாம் நல்லாதான் இருக்கு, ஆனா, சரியில்லைடா” என்பார். அதுபோல, ஒரு பேரல் நிறையப் பால் இருந்தாலும் ஒரு துளி விடமானது அதனைக் கெடுத்துவிடும். ஒரு வேளை அழுக்கான பாத்திரத்தில் வைக்கப்பட்டப் பாலும் பயன்படாமல் கெட்டுவிடுகிறது. இதனையே உதராணமாகப் பின்வரும் குறளில் குறிப்பிடுகிறார் திருவள்ளுவர்.
பண்பிலான் பெற்ற பெருஞ்செல்வம் நன்பால்
கலந்தீமை யால்திரிந் தற்று -1000
நல்ல பண்பு இல்லாத ஒருவன் பெற்ற பெரும் செல்வமானது, அழுக்குப்பிடித்தப் பாத்திரத்தில் வைக்கப்பட்டிருக்கும் போது, பாத்திரத்தின் அழுக்குத் தன்மையால் பால் திரிந்து ஒருவருக்கும் பயன்படாமல் போவது போல, அவனுடைய செல்வமும் ஒருவனுக்கும் பயன்படாமல் வீணாக்போகும் என்கிறார்.
தொடர்ந்து பார்ப்போம்...
குறிப்பு: இணைக்கப்பட்டுள்ள படங்கள் மற்றும் காணொலி ஆகியவற்றை செயற்கை நுண்ணறிவுத் தொழில் நுட்பத்தில் உருவாக்கியுள்ளேன். பிழையிருப்பின் மற்றும் தாமதத்திற்குப் பொறுத்துக் கொள்க.
நன்றி
https://www.youtube.com/@AAAInfotainment
தோப்பு
No comments:
Post a Comment