Wednesday, 19 November 2025

திருக்குறள் வழி நின்று திருவள்ளுவரை அறிதல்-96:

திருக்குறள் வழி நின்று திருவள்ளுவரை அறிதல்-96:
 நாணுடைமை:
கடந்த வாரம் நாணமுடைமை என்னும் அதிகாரத்தின் முற்பகுதியைப் பார்த்தோம். இந்த வாரம் அதன் பிற்பகுதியைப் பார்ப்போம். 
உயர்ந்தோர் என்பவர் யார்? தமக்கென வாழாது பிறர் துயரையும் தன் துயரை போல நினைப்பவர் ஆவார். தன்னுடைய நலனுக்காக பிறரை துயரத்திற்கு உள்ளாக்குபவர் அல்ல. திருவள்ளுவர் உயர்ந்தோர் என்று யாரைக் குறிப்பிடுகிறார்? 
நாண்வேலி கொள்ளாது மன்னோ வியன்ஞாலம்
பேணலர் மேலா யவர் -1016 என்கிறார். 
அதாவது, உயர்ந்தோர் என்பவர்கள் தமக்குப் பாதுகாப்பாக நாணத்தைத் தான் கைக் கொள்வார்களே தவிர, பரந்து விரிந்த இந்த உலகில் வாழும் வாழ்க்கை விரும்பி மேற்கொள்ள மாட்டார் என்கிறார். இதன் மூலம் எந்தளவிற்கு நாணமுடைமைக்கு திருவள்ளுவர் முக்கியத்துவம் வழங்கியுள்ளதைக் காணலாம். 
மேற்கூறிய குறளின் அடுத்த உயர்ந்த நிலை, இதன் மூலம் திருவள்ளுவர் வாழ்ந்த காலத்தில் நாணத்திற்காக எந்த ஒரு நிலையில் இருந்திருப்பர் என்று அறியலாம். திருக்குறள், திருவள்ளுவர் நமக்குத் தந்த வாழ்வியல் நெறி என்பதோடு நிறுத்த முடியாது. அந்த காலத்தில் எந்தளவுக்கு மக்கள் ஒழுக்க நெறியை மதித்து வாழ்ந்தனர் என்பதை திருவள்ளுவர் படம் பிடித்துக் காட்டியுள்ளார் என்று அறியலாம். ‘மானமா? ஊயிரா?” ஏன்று கேள்வி கேட்டால், இந்த காலத்தில்  பெரும்பாலும் உயிர்தான் என்ற நிலையினைக் காண முடிகிறது. ஒழுக்கக் கொள்கைகள் பற்றி பேசுபவர்கள் புறக்கணிக்கப்படுகின்றனர் அல்லது பழமைவாதிகளாகவும் பார்க்கப்படுகின்றனர். பின்வரும் குறளில், 
நாணால் உயிரைத் துறப்பர் உயிர்ப்பொருட்டால்
நாண்துறவார் நாணாள் பவர் -1017 என்று குறிப்பிடுகிறார். 
அதாவது, நாணத்தின் சிறப்பை அறிந்து அதன் அடிப்படையில் வாழ்பவர்கள் நாணமா?  அல்லது உயிரா? ஏன்ற நெருக்கடி வரும்போது நாணத்தைக் காக்கும் பொருட்டு உயிரை துறப்பர். ஏந்த சூழலிலும் உயிரைக் காக்கும் பொருட்டாக நாணத்தைக் கை விட மாட்டார் என்கிறார். 
‘தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும், தர்மம் மறுபடியும் வெல்லும்” ‘அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும்” என்று சொல்லாடல்களைக் கேட்டிருப்போம். எவர் ஒருவர் ஒழுக்கநெறிகளைத் தீவிரமாக கடைப்பிடிக்கிறாரோ அவர் சிரமப்பட்டாலும், இறுதியில் அவர்களுக்குரிய நீதி கிடைக்கும் என்றும் நீதி தவறுபவர்களுக்கு அறமே தக்க சமயத்தில் தண்டனையை வழங்கும் என்றும் கூற்று உண்டு. அதாவது, எந்த நிலையிலும் நீதி நெறியுடன் வாழ்வதே சாலச்சிறந்தது என்பதுதான் அதன் அர்த்தமாகும். அவ்வாறு இல்லையென்றால்  என்ன ஆகும்?
பிறர்நாணத் தக்கது தான்நாணா னாயின்
அறம்நாணத் தக்கது உடைத்து -1018 
மேற்காணும் குறளில், ஒருவன் கேட்டவரும் கண்டவரும் வெட்கப்படும் ஒன்றிக்குத் தான் வெட்கப்படாமல் இருந்தால், அவனை விட்டு அறநெறியே வெட்கப்பட்டு அகன்று விட்டதாகக் கருத வேண்டும் என்கிறார். 
பெரும்பாலான படங்களில் காணும் காட்சி உங்களுக்கு நினைவிருக்கும். வில்லனுடைய தவறான செயல்பாடுகளால், தன்னுடைய குடும்பத்தைப் பாதிப்பிற்கு உள்ளாக்கி பிறகு தானும் கெடும் நிலையினை இறுதியில் அடைவார், இறுதியில் சிலர் திருந்துவர் சிலர் எந்த நிலையிலும் திருந்துவதில்லை. இதுபோன்று வாழ்பவர்களை 2000 வருடத்திற்கு முன்னரே எச்சரித்துள்ளார்.
குலஞ்சுடும் கொள்கை பிழைப்பின் நலஞ்சுடும்
நாணின்மை நின்றக் கடை -1019
ஒருவனுடைய ஒழுக்கக் கேட்டால் அவன் குலத்திற்கு இழுக்கு நேரிடும், அதற்கு நாணாமல் பிறர் பழிக்கும் செயல் புரிந்தால் அவனுக்கும் கேடு உண்டாகும் நலமனைத்தும் கெடும் என்கிறார். 
வயல்வெளிகளில் பறவைகள் பயிரை சேதம் செய்யாமல் இருப்பதற்காக, மனிதரைப் போன்ற பொம்மைகளை செய்து வைப்பதுண்டு. சோலைக்கொல்லை பொம்மை என்று வழங்கப்படும். சில பறவைகள் உண்மையான மனிதர் நிற்கின்றான் என்று நினைத்து வராமல் போவதுண்டு. ஆனால், அந்த பொம்மையானது உண்மையான உயிருள்ள மனிதருக்கு ஒப்பாகாது. பின்வரும் குறளில்,
நாண்அகத் தில்லார் இயக்கம் மரப்பாவை 
நாணால் உயிர்மருட்டி அற்று -1020 என்கிறார். 
மனதினுள் வெட்கம் இல்லாதவர்களின் நடமாட்டமானது, மரத்தால் செய்த பொம்மை உயிர் ஊட்டியிருப்பதாகக் கூறி மயக்குவது போலாகும் என்கிறார். 
இத்துடன் உடைமை என்னும் தலைப்பில் உள்ள அதிகாரங்கள் முடிகிறது. 

No comments:

Post a Comment