Wednesday, 12 November 2025

திருக்குறள் வழி நின்று திருவள்ளுவரை அறிதல்-95:

திருக்குறள் வழி நின்று திருவள்ளுவரை அறிதல்-95:
 நாணுடைமை:
திருவள்ளுவர் அவர்கள் உடைமை என்னும் தலைப்பில் எழுதிய அதிகாரங்களைப் பற்றிப் பார்க்கின்றோம். கடந்த வாரங்களில் அன்புடைமை, அறிவுடைமை, அடக்கமுடைமை, ஒழுக்கமுடைமை, பொறையுடைமை, அருளுடைமை, ஊக்கமுடைமை, ஆள்வினையுடைமை மற்றும் பண்புடைமை பற்றிப் பார்த்தோம். இந்த வாரம் நாணுடைமை என்னும் அதிகாரத்தைப் பற்றிப் பார்ப்போம். இதுவே உடைமை என்னும் அதிகாரத்தில் எழுதிய கடைசி அதிகாரம் ஆகும். 
இந்த அதிகாரத்தின் தலைப்பே, அதன் ஆழமான தத்துவார்த்த முக்கியத்துவத்தை உணர்த்துகிறது. ‘நாணம்” என்பது வெட்கம், ‘உடைமை” என்பது அதனைக் கொண்டிருக்கும் பண்பு. ஆனால், திருவள்ளுவர் இங்கு குறிப்பிடும் ‘நாணம்” என்பது பொதுவாகப் புரிந்து கொள்ளப்படும் சாதாரண வெட்கம் (shyness) அன்று. இது ஒரு ஆழமான, தீவிரமான தார்மீக உணர்வைக் (ethical conscience) குறிக்கிறது. 
திருவள்ளுவரின் பார்வையில் 'நாணுடைமை' என்பது, தகாத செயல்களைச் செய்யும்போது அல்லது அத்தகைய செயல்களைப் பற்றி சிந்திக்கும்போது ஒருவரின் மனசாட்சியில் எழும் கூச்சம், அருவருப்பு மற்றும் தார்மீக உறுத்தல் ஆகும். இது ஒரு செயலற்ற குணம் அல்ல; மாறாக, தீமையை விலக்கும் ஒரு தீவிரமான, அகக் காவல் (internal deterrent) ஆகும். இது ஒருவரின் நடத்தையைக் கட்டுப்படுத்தும் உள்மனத் தடையாகும்.
'நாணுடைமை' அதிகாரத்தை திருவள்ளுவர் 'அறத்துப்பாலில்' (தனிமனித அறம்) வைக்கவில்லை. மாறாகஇ 'பொருட்பாலில்' (பொது வாழ்வு, அரசு, சமூகம்) வைத்துள்ளார். இது ஒரு நுட்பமான மற்றும் ஆழமான philosophical-political தேர்வாகும்.
இந்த அதிகாரத்தை 'குடியியலில்' வைப்பதன் மூலம், திருவள்ளுவர் ஒரு ஆணித்தரமான கருத்தை முன்வைக்கிறார்: 'நாணுடைமை' என்பது ஒரு தனிப்பட்ட குணம் மட்டுமல்ல, அது ஒரு அத்தியாவசியமான பொது மற்றும் சமூக நற்பண்பு (public and social virtue) ஆகும். ஒரு நிலையான, அறம் சார்ந்த சமுதாயமும் அரசும், திறமை அல்லது செல்வத்தை விட, இத்தகைய தார்மீகப் பொறுப்புணர்வும், தவறுகளுக்கு வெட்கப்படும் மனப்பாங்கும் கொண்ட குடிமக்களாலேயே சாத்தியமாகும். சுருக்கமாகச் சொன்னால், 'நாணுடைமை' என்பது ஒரு சிறந்த குடிமகனின் அஸ்திவாரம்; அதுவே ஒரு சிறந்த சமூகத்தின் ஆணிவேர்.
சரி, இனி குறளுக்குச் செல்வோம். 
முன்னுரையில் குறிப்பிட்டுள்ளபடி, முதல் குறளிலேயே திருவள்ளுவர் நாணுடைமைக்கு விளக்கத்தை அளிக்கிறார். பெரும்பாலான இடங்களில் திருவள்ளுவர் தலைப்பிற்கான வரையறையை முதல் குறளிலேயே வைத்துவிடுகிறார். பின்வரும் குறளிலும் அப்படித்தான் வைத்திருக்கிறார். 
கருமத்தால் நாணுதல் நாணுந் திருநுதல்
நல்லவர் நாணுப் பிற -1011 என்கிறார். 
அதாவது, நல்ல பெண்களுக்கு இயல்பாக ஏற்படும் வெட்கமானது நாணமில்லை, ஒருவர்  தனது தகாத செயல் காரணமாக கூனிக்குறுகும் செயலே நாணுதல் ஆகும் என்கிறார். 
பலரும் உணர்வதில்லை, இந்த பூமிக்கு மற்ற உயிர்கள் எப்படியோ அப்படித்தான் மனிதனும், இயற்கையை பொறுத்தவரை மனிதரும் மற்ற விலங்கினங்களைப் போல ஒரு பிராணியே! ஆனால், நாம் எப்படி மற்ற விலங்கினங்களில் இருந்து வேறுபடுகிறோம்? திருவள்ளுவரிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளலாம். 
ஊணுடை எச்சம் உயிர்க்கெல்லாம் வேறல்ல 
நாணுடைமை மாந்தர் சிறப்பு -1012
எல்லா உயிர்களுக்கும் உணவும், உடையும் எஞ்சி நிற்கும் மற்ற எல்லா உயிரினங்களுக்கும் பொதுவானவை. ஆனால், நல்ல மனிதருக்கு, சிறப்புக்குரிய தேவையாக இருப்பது, பிறரால் பழிக்கப்படும் செயல்களை தவிர்த்து வாழக்கூடிய நாணுடைமைதான் என்கிறார். இங்கே, திருவள்ளுவர், மனிதர்களுக்கு தார்மீக மனசாட்சியை பிரகனப்படுத்துகிறார். 
அடுத்தக் குறளில், 
ஊனைக் குறித்த உயிரெல்லாம் நாண்என்னும்
நன்மை குறித்தது சால்பு -1013 என்கிறார்.
இதன் உட்பொருள் என்னவென்றால், உடம்பு இல்லாமல் உயிர் இவ்வுலகில் இயங்க முடியாது, அதுபோலவே, ‘நாணம்” என்ற தார்மீக மனசாட்சி இல்லாமல், ‘சால்பு” அதாவது ‘சான்றாண்மை” என்ற மேன்மை ஒருவரிடம் இருக்கவோ, வெளிப்படவோ, இயங்கவோ முடியாது. ‘நாணம்” என்பது சான்றாண்மையின் பல குணங்களில் ஒன்று அல்ல் அதுவே சான்றாண்மை தங்கியிருக்கும் அடிப்படை ஆதாரம் ஆகும். 
பல இடங்களில் நாம் பார்த்திருக்கின்றோம், தன்னுடைய சுயநலத்திற்காக பிறரை கெடுத்து பெருமை பீற்றுபவர்களை குறிப்பாக அரசியலில், தன்னுடைய பெயருக்காக, தான் அரசியலில் வெற்றியடைய வேண்டும் என்பதற்காக, கொலை நிகழ்த்துவது, சாதிய வன்மத்தை தூண்டிவிடுவது, மதக் கலவரத்தை கட்டமைப்பது, நிற பேதத்தை வகுப்பது, என்று பலவிதங்களில் பழிபாவச் செயல்களை செய்துவிட்டு தான் பெருமைக்குரியவர்கள் போல காட்டிக் கொள்பவர்களை இடித்துரைக்கிறார் திருவள்ளுவர். 
அணிஅன்றோ நாணுடைமை சான்றோர்க்கு அஃதின்றேல்
பிணி அன்றோ பீடுநடை -1014 என்கிறார். 
கலைஞர் அவர்களின் உரையில் இருந்து, ‘நடந்த தவறு காரணமாகத் தமக்குள் வருந்துகிற நாணம் எனும் உணர்வு, பெரியவர்களுக்கு அணிகலன் ஆக விளங்கும் அந்த அணிகலன் இல்லாமல் என்னதான் பெருமிதமாக நடை போட்டாலும், அந்த நடையை ஒரு நோய்க்கு ஒப்பானதாகவே கருத முடியும்” என்று விளக்குகிறார். 
அடுத்தக் குறளில், 
பிறர்பழியம் தம்பழியம் நாணுவார் நாணுக்கு
உறைபதி என்னும் உலகு -1015 என்கிறார். இதனை ஒரு நல்ல தலைவனுக்கு உரிய பண்பாகக் கொளலாம், ஏனென்றால், அரசியல்வாதிகள் சிலர், தங்களுடைய சுயநலத்திற்காக, தான் எதிர்கொண்ட பிரச்சனையில் இருந்து தப்பிப்பபதற்காக தன்னை நம்பியிருக்கும் ஒட்டு மொத்த மக்களையும் குழியில் தள்ளிவிட தயாராக இருக்கும் போக்கைக் காணலாம். ஆனால், எல்லா அரசியல் வாதிகளும் இவ்வாறு இருப்பதில்லை, தலைவராக இருப்பவர் தனக்கு ஏற்படக் கூடிய பழியைப் பற்றி மட்டும் அல்லாமல் பிறருக்கு ஏற்படும் பழியையும் தம்முடைய பழியாக சமமாக மதித்து நாணுபவரை, உலகத்தார் ‘நாணத்திற்கே உறைவிடம் இவர் தான்” என்று சிறப்பித்துச் சொல்வார்கள் என்கிறார். 
தொடர்ந்து பார்ப்போம்...

குறிப்பு: இணைக்கப்பட்டுள்ள படங்கள் மற்றும் காணொலி ஆகியவற்றை செயற்கை நுண்ணறிவுத் தொழில் நுட்பத்தில் உருவாக்கியுள்ளேன். பிழையிருப்பின்  மற்றும் தாமதத்திற்குப் பொறுத்துக் கொள்க.

நன்றி

https://www.youtube.com/@AAAInfotainment

தோப்பு

No comments:

Post a Comment