Sunday, 24 May 2026

திருக்குறள் வழி நின்று திருவள்ளுவரை அறிதல்-121:

திருக்குறள் வழி நின்று திருவள்ளுவரை அறிதல்-121: 
திருக்குறளில் அரசியல்: 
இடன் அறிதல்:
திருக்குறளில் அரசியல் என்ற தலைப்பில் பார்த்து வருகிறோம்,
 அரசியலில் ‘இடன் அறிதல்” என்ற அதிகாரத்தின் முற்பகுதியில் அரசியல் சார்ந்த கருத்துகளை திருவள்ளுவர் என்ன குறிப்பிடுகிறார் என்பதனை கடந்த வாரம் பார்த்தோம். இந்த வாரம் தொடர்ந்த குறட்பாக்களைப் பார்ப்போம். 

“பரமசிவன் கழுத்தில் இருந்த பாம்பு கேட்டது, கருடா சௌக்கியமா?
 யாரும் இருக்கும் இடத்தில் இருந்துவிட்டால் எல்லாம் சௌக்கியமே? கருடன் சொன்னது அதில் அர்த்தம் உள்ளது” என்ற கவியரசர் கண்ணதாசன் அவர்கள் இயற்றிய பாடலைக் கேட்டிருப்பீர்கள். அதாவது ஒவ்வொருவருக்கும் தனக்கென்ற பாதுகாப்பான ஒரு இடம் என்று ஒன்று உள்ளது. அந்த இடத்தில் இருந்தால் தன்னுடைய பலமும் அதிகரிக்கும் ஏனெனில் அந்த இடத்தின் அத்துணை விடயங்களும் நமக்குத் தெரியும். இதனை பின்வரும் குறளில் உவமை மூலம் எளிமையாக விளக்குகிறார் திருவள்ளுவர். 
நெடும்புனலுள் வெல்லும் முதலை அடும்புனலின் 
நீங்கின் அதனைப் பிற -495 என்கிறார். 
அதாவது, ஆழமான நீரில் முதலைக்கு பலம் அதிகம், ஆதலால் எளிதில் மற்ற விலங்குகளை வென்று விடும். ஆனால், நீரை விட்டு வெளியே வந்தால் மற்ற விலங்குகள் முதலையை எளிதில் வென்று விடும் என்கிறார். ஆகவே, தன்னுடைய பலம் எந்த இடத்தில் செல்லுபடியாகும் என்பதனை அரசியலாளர்கள் அறிந்து வைத்திருப்பது அவசியம் ஆகும். 
அடுத்தக் குறளிலும் ஒரு அரசியல்வாதி எந்த ஒரு காரியத்தையும் பொருத்தமான இடத்தில் பொருந்தக்கூடியவற்றை மட்டுமே செய்வது நலம் தரும் என்பதனை எளிய உதாரணம் மூலம் கூறியுள்ளார். 
கடலோடா கால்வல் நெடுந்தேர் கடலோடும் 
நாவாயும் ஓடா நிலத்து -496
பெரிய சக்கரங்களைக் கொண்ட தேர்கள் கடலில் ஓடாது, அதே போன்று கடலில் ஓடும் கப்பல்களும் நிலத்தில் ஓடாது என்கிறார். எது எது எங்கே செயல்பட வேண்டுமோ அது அது அங்கேதான் செயல்பட வேண்டு;ம்என்று உணர்த்துகின்றார். 
அதேபோன்று, அரசியல்வாதி ஆக்கப்பூர்வமான செயலைச் செய்ய வேண்டுமெனில் எப்படி செயல்பட வேண்டும். 
அஞ்சாமை அல்லால் துணைவேண்டா எஞ்சாமை
எண்ணி இடத்தால் செயின் -497
ஒரு செயலுக்குரிய வழிமுறைகளை எல்லாம் நன்கு ஆராய்ந்து பொருத்தமான இடத்திலும் செய்வாரானால், அவருக்கு மனஉறுதியைத் தவிரத் எந்தத் துணையும் வேண்டியதில்லை. மேற்கூறிய குறளுக்கு தமிழ்நாட்டின் அரசியலில் பல உதாரணங்களைக் கூறலாம். முக்கியமாக, இந்திய அரசியலமைச் சட்டத்தை அவமதிக்கும் எவருக்கும் கடுமையான தண்டனை உண்டு என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால், தெரிந்தும் 1957 ஆம் ஆண்டு பெரியார் அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவு 25 இ;ல் மத சுதந்திரத்தை வழங்குகிறது. இந்தப் பிரிவு பாரம்பரிய பழக்கவழக்கங்கள் மற்றும் மத நடைமுறைகளின் பெயரால் தீண்டாமையும், சாதி ஆதிக்கமும் சட்டபூர்வமாகத் தொடர இப்பிரிவு வழிவகை செய்கிறது என்று பெரியார் கருதினார். மேலும், சுதந்திரத்திற்குப் பிறகு, சென்னை மாகாணத்தில் நடைமுறையில் இருந்த வகுப்புவாரி பிரதிநிதித்துவம் (இட ஒதுக்கீடு) அரசியல் சாசனத்திற்கு எதிரானது என்று நீதிமன்றங்கள் தீர்ப்பளித்தன. இது பெரியாருக்கு மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ‘எந்தச் சட்டம் சாதியை ஒழிக்கப் பயன்படாமல்,  பழக்கவழக்கம் என்ற பெயரில் சாதியைக் காப்பாற்றுகிறதோ, அந்தச் சட்டப்பிரிவுகளை எரிப்பதைத் தவிர வேறு வழியில்லை” என்று சாதியைப் பாதுகாக்கும் அரசியல் சாசனப் பிரிவுகளை எரிக்கப் போவதாக அறிவித்தார். இதனைத் தொடர்ந்து 10000 ற்கும் மேற்பட்டோர் இந்த நகலை எரித்தனர். பட்டோர் இந்த நகலை எரித்தனர். 3000ற்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். ஆனால், தொடர் போராட்டங்களின் விளைவால், பின்தங்கிய சமூகத்தினருக்கான சமூக நீதி மற்றும் இடஒதுக்கீட்டைப் பாதுகாக்கும் வகையில் இந்திய அரசியல் சாசனத்தில் திருத்தங்கள் (முதலாவது சட்டத்திருத்தம் உள்ளிட்டவை) கொண்டு வர வழிவகை பிறந்தது. அரசியல் சாசனமே திருத்தப்பட்டதற்கு ஆழமான சிந்தனை வழிமுறைகளும், அஞ்சாமையும் முக்கியக் காரணியாக இருந்தது. 
தொடர்ந்து பார்ப்போம். 

குறிப்பு: இணைக்கப்பட்டுள்ள படங்கள் மற்றும் காணொலி ஆகியவற்றை செயற்கை நுண்ணறிவுத் தொழில் நுட்பத்தில் உருவாக்கியுள்ளேன். பிழையிருப்பின் மற்றும் தாமதத்திற்குப் பொறுத்துக் கொள்க.

நன்றி

https://www.youtube.com/@AAAInfotainment

தோப்பு

No comments:

Post a Comment