திருக்குறள் வழி நின்று திருவள்ளுவரை அறிதல்-78:
உடைமை:
கடந்த வாரங்களில் பெருநாவலர் அவர்கள் கல்வி குறித்துக் கூறியவற்றைப் பார்த்தோம். இந்த வாரம் அவர் நமக்கான உடைமைகளாகத் திருக்குறளில் என்னவெல்லாம் சொல்லியிருக்கிறார் என்று பார்ப்போம்.
திருக்குறளில் உடைமை என்னும் பெயரில் 10 அதிகாரங்களை இயற்றியுள்ளார். அவையாவன.
1. அடக்கமுடைமை
2. அருளுடைமை
3. அறிவுடைமை
4. அன்புடைமை
5. ஆள்வினை யுடைமை
6. ஊக்கம் உடைமை
7. ஒழுக்கமுடைமை
8. நாண் டைமை
9. பண்புடைமை மற்றும்
10. பொறையுடைமை
இதில் அறத்துப்பாலின் உள்ளடக்கமான இல்லறவியலில் அன்புடைமை, அடக்கமுடைமை, பொறை உடைமை மற்றும் ஒழுக்கமுடைமை ஆகியனவும்,
துறவறவியலில் அருள் உடைமையும் அடங்கியுள்ளன.
பொருட்பாலின் உள்ளடக்கமான அரசியலில் அறிவுடைமை, ஊக்கம் உடைமை
மற்றும் ஆள்வினையுடைமை ஆகியவை அடங்கியுள்ளன. மேலும், ஒழிபியலில் பண்புடைமை மற்றும் நாண் உடைமை ஆகியவகை உள்ளன.
இதில் ஒவ்வொரு பாயிரவியலில் இருக்கும் உடைமைகளைப் பார்ப்போம். முதலில் இல்லறவியலில் உள்ள உடைமை அதிகாரங்களைப் பார்ப்போம்.
அன்புடைமை:
இவ்வதிகாரத்தில் அன்பின் தன்மையினையும் தேவையினையும் குறித்து திருவள்ளுவர் குறிப்பிடுகிறார். இன்று உலகில் நாம் எதிர்கொள்ளும் பலவகையான பூசல்களுக்கும் முக்கியக் காரணம் அன்பில் ஏற்படும் வறட்சியேயாகும். ஒருவருக்கொருவர் பூசல் கொண்டவர் நேருக்கு நேர் வெகுநாள்கழித்து சந்திக்கிறார் என்றால், உண்மையாகப் பாசம் கொண்டவராக இருப்பின் அவரைப் பார்த்த கணத்திலேயே கண்களில் நீர் எட்டிப்பார்க்கும்.
அன்பைப் பூட்டி வைக்கமுடியாது, அது எப்படியாவது வெளிப்பட்டுவிடும் அன்பே பிரதானம் என்கிறார்.
அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ்? ஆர்வலர்
புன்கண்நீர் பூசல் தரும் -71
அன்பிற்கும் அடைத்து வைக்கும் தாழ் உண்டோ? அன்புடையவரின் சிறு கண்ணீரே உள்ளே இருக்கும் அன்பை பலரும் அறிய வெளிப்படுத்திவிடும்.
மனிதன் என்பவன் தெய்வமாகலாம்.. வாரி வாரி வழங்கும் போது வள்ளல் ஆகலாம்.. வாழைப் போல தன்னைத் தந்து தியாகி ஆகலாம்.. உருகி ஓடும் மெழுகு போல ஒளியை வீசலாம்.. என்ற கவியரசு கண்ணதாசன் அவர்களின் பாடலை ‘சுமைதாங்கி” என்ற படத்தில் நாம் கேட்டிருக்கலாம். அப்படி மனிதன் என்பவன் நம்முடைய முன்னோர் வழிபாட்டில் தெய்வங்களாக மாறி சாத்தன் வழிபாட்டையும் மூதாதையர் வழிபாட்டையும் நாம் பார்க்கிறோம். அவர்கள் எல்லோரும் தன் இனத்தைக் காப்பதற்காக முன் நின்றவர்கள் தங்களை போர்களத்தில் அல்லது ஏதோ ஒரு வகையில் நின்று இறந்தவர்கள். ஆகவே அவர்களுக்கு நடுகற்கள் வைத்தும், கோயில்கள் கட்டப்பட்டும், கோட்டங்கள் அமைத்தும் வணங்கப்படுகின்றனர். அத்தகையோர் அந்தச் சிறப்பினைப் பெறுவதற்கு தாங்கள் கொண்டிருந்த மிகுதியான அன்பே ஆகும். இதைத்தான் திருவள்ளுவர்
அன்பிலார் எல்லாம் தமக்குரியர்; அன்புடையார்
என்பும் உரியர் பிறர்க்கு- 72 என்று குறிப்பிடுகிறார். அதாவது அன்பு இல்லாதவர் எல்லாப் பொருளையும் தமக்கே உரிமையாகக் கொண்டு வாழ்வர். அன்பு உடையவர் தம் உடம்பையும் பிறர்க்கு உரிமையாக்கி வாழ்வர் என்று குறிப்பிடுகிறார்.
தொடர்ந்து பார்ப்போம்...
குறிப்பு: இணைக்கப்பட்டுள்ள படங்கள் மற்றும் காணொலி ஆகியவற்றை செயற்கை நுண்ணறிவுத் தொழில் நுட்பத்தில் உருவாக்கியுள்ளேன். பிழையிருப்பின் பொறுத்துக் கொள்க.
நன்றி
No comments:
Post a Comment