திருக்குறள் வழி நின்று திருவள்ளுவரை அறிதல்-68:
திருக்குறளில் தொழிலாளர் மேலாண்மை-தொடர்ச்சி:
ஒழுங்கமைத்தல்:
மேலாண்மையில் ஒழுங்கமைத்தல் என்பது. ஒரு அமைப்பின் வளங்களை, செயல்பாடுகளை, பணிகளைத் துறைகளாகப் பிரித்து, ஒழுங்குபடுத்தி, அவற்றின் இடையே சரியான தொடர்புகளை ஏற்படுத்தி, குறிக்கோள்களை எளிதாக அடையும் வகையில் பணியாற்றுவதைக் குறிக்கிறது. இதன் மூலம், ஒரு நிறுவனத்தின் ஒட்டுமொத்த செயல் பாட்டையும் கட்டமைக்க முடியும். ஒரு செயலைச் செய்யத் தேவையான பணியாட்கள், கருவிகள், பொருள் ஆகியவற்றை ஆராய்ந்து பணியாற்ற வேண்டும் என்ற கோட்பாட்டைத் திருவள்ளுவர் பின்வரும் குறள்களில் குறிப்பிட்டுள்ளார்.
பொருள்கருவி காலம் வினையிடனொடு ஐந்தும்
இருள்தீர எண்ணிச் செயல் (குறள் 675)
ஒரு செயலைத் தொடங்கும்பொழுது அதற்கு வேண்டிய பொருள் தேவையான கருவி, தக்க காலம், செயல், ஏற்ற இடம் ஆகிய ஐந்தைப் பற்றியும் தெளிவாகச் சிந்தித்துப் பிறகு அச்செயலைத் தொடங்கவேண்டும்.
இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்து
அதனை அவன்கண் விடல் (517)
இந்தத்தொழிலை இக்கருவியால் இன்னவன் முடிப்பான் என்று ஆராய்ந்த பிறகு அத்தொழிலை அவனிடம் ஒப் படைக்க வேண்டும்.
தூங்குக தூங்கிச் செயற்பால தூங்கற்க
தூங்காது செய்யும் வினை ( 672)
திருவள்ளுவரின் தொழிலியற் சிந்தனைகள்
காலந்தாழ்த்தி செய்யத் தக்கவற்றைக் காலந்தாழ்ந்தே செய்ய வேண்டும், காலந்தாழ்த்தாமல் விரைந்து செய்ய வேண்டிய செயல்களைச் செய்யக் காலந்தாழ்த்தக் கூடாது.
ஒழுங்கமைத்தலின் மூலம் ஒரு நிறுவனம் தன் திட்டங்களைத் திறம்பட செயல்படுத்த முடியும் என்பதை இக்குறள்கள் உணர்த்துகின்றன.
ஒருங்கிணைத்தல்:
மேலாண்மையில் ஒருங்கிணைத்தல் என்பது, ஒரு நிறுவனத்தின் அனைத்து செயல்பாடுகளையும், பல பிரிவுகளையும், பல்வேறு பணியாளர்களையும் ஒரே நோக்கத்தை நோக்கி இணைத்துச் செயல்படுதலாக விளக்கப்படுகின்றது. சீரான ஒத்துழைப்பு,சரியான தகவல் பரிமாற்றம், நிர்வாகத் தின் செயல்திறன் ஆகியவற்றின் மூலம், நிறுவனத்தின் வளங்களை முழுமையாகப் பயன்படுத்துவதற்கும்,அதன் குறிக்கோள்களை விரைவில் அடைவதற்கும் ஒருங்கிணைத்தல் உதவுகிறது. ஒருங்கிணைத்தலின் முக்கியத்துவத்தை பின்வரும் குறள்கள் விளக்குகின்றன.
பொதுநோக்கான் வேந்தன் வரிசையா நோக்கின்
அதுநோக்கி வாழ்வார் பலர்-528
அரசன் எல்லோரையும் பொதுவகையாக நோக்காமல் அவரவர் சிறப்புக்கு ஏற்றவாறு நோக்கினால், அதை விரும்பிச் சுற்றமாக வாழ்கின்றவர் பலர் ஆவர். அதைப்போலவே,ஊழியர்களின் தகுதியினை ஆராய்ந்து,அவர்களைத் தகுந்த நேரத்தில் சிறப்பித்து ஊக்கப்படுத்தும் தலைமையின் கீழ் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்படுவர்.
தன் கருத்தினைச் சொல்லும்போது கேட்டவரைத் தன்வயப்படுத்தும் பண்புகளுடன்,கேட்காதவரும் கேட்க விரும்புமாறு கூறும் ஆற்றல் கொண்டவனாகத் தலைவன் விளங்க வேண்டும் என வள்ளுவர் (குறள்.643) உரைப்பதும், இதனையே தலைமைப் பண்பின் முக்கியத்துவம் வாய்ந்த மேலாண்மை வல்லுனர்கள்எடுத்துரைப்பதும் குறிப்பிடத்
கட்டுப்படுத்துதல்:
கட்டுப்படுத்துதல் என்பது, ஒரு நிறுவனத்தின் செயல் யாடுகனை செயல்திட்டங்களை, குறிக்கோன்களை அடையத் தேவையான வழிமுறைகளை முறையாகக் கண்காணிக்கும் ஒரு முக்கியமான மேலாண்மை செயல்பாடாகும். இது நிறுவனத்தின் நோக்கங்களை அடைவதற்காக அதன் செயல் பாடுகளை மதிப்பிடுவதற்கும், திருத்துவதற்கும் உதவுகிறது.
எல்லார்க்கும் எல்லாம் நிகழ்பவை எஞ்ஞான்றும்
வல்லறிதல் வேந்தன் தொழில் -582
எல்லாரிடத்திலும் நிகழ்கின்றவை எல்லாவற்றையும் எக் காலத்திலும் (ஒற்றரைக் கொண்டு) விரைந்து அறிதல் அரசனுக்குரிய தொழிலாகும்.
நாடொறும்நாடி முறைசெய்யா மன்னவன்
நாடொறும் நாடு கெடும்- 553
நான் தோறும் தன் ஆட்சியில் நன்மை தீமைகளை ஆராய்ந்து முறை செய்யாத அரசன், நான் தோறும் (மெல்ல மெல்லத்) தன் நாட்டை இழந்து வருவான்.
தெரிதலும் தேர்ந்து செயலும் ஒருதலையாச்
சொல்லலும் வல்லது அமைச்சு- 634
நிர்வாகச் சிக்கல்குறித்து நன்றாக ஆராய வேண்டும். அதனை முடிக்கும் வழிகளைச் சிந்தித்துச் செய்தல் வேண்டும். எடுக்கும் முடிவினை மற்றவரின் ஐயத்திற்கு இடமின்றித் துணிந்து கூறுதல் வேண்டும். இத்தகைய பண்புள்ள தலைவன் எடுக்கும் முடிவு சிறப்பானதாக அமையும், வள்ளுவர் அன்று மன்னனுக்குக் கூறிய அறிவுரைகள் இன்றைய நிறுவன மேலாளருக்கும் பொருந்தும்!
நன்றி: திருமிகு. மேனகாநரேசு, க்ளைன்ஸ்போரோ, நியூஜெர்சி
தொடர்ந்து பார்ப்போம்...
குறிப்பு: இணைக்கப்பட்டுள்ள படங்கள் மற்றும் காணொலி ஆகியவற்றை செயற்கை நுண்ணறிவுத் தொழில் நுட்பத்தில் உருவாக்கியுள்ளேன். பிழையிருப்பின் பொறுத்துக் கொள்க.
நன்றி
No comments:
Post a Comment