Tuesday, 1 April 2025

திருக்குறள் வழி நின்று திருவள்ளுவரை அறிதல்-63:






திருக்குறள் வழி நின்று திருவள்ளுவரை அறிதல்-63:

திருவள்ளுவர் சுட்டும் தொழில்கள்:
‘பிறப்பினால் எவர்க்கும் -உலகில் பெருமை வாராதப்பா! சிறப்பு வேண்டுமெனில் -நல்ல செய்கை வேண்டுமப்பா!”என்கிறார் கவிமணி தேசிக விநாயகம் அவர்கள் இவர் திருக்குறளின் கீழ்க்கண்ட வரிகளில் உந்தப்பட்டு எழுதியிருக்க வேண்டும். 
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா
செய் தொழில் வேற்றுமையான் -972 
அதாவது பிறப்பினால் அனைவரும் சமம், அவர்களில் செய்தொழில் நேர்த்தியால்தான் அவர்களின் சிறப்பு வேறுபடும் என்கிறார். 
நான் ஏற்கனவே திருக்குறளில் 65 வகையான தொழில்களை குறிப்பிட்டுள்ளார் என்று தெரிவித்திருந்தேன். அவற்றில் சிலவற்றைக் காண்போமா?
ஆசானில் இருந்து ஆரம்பிப்போம்...
உவப்பத் தலைக்கூடி உள்ளப் பிரிதல்
அனைத்தே புலவர் தொழில் -394.
புலவரின் தொழிலினைக் குறிப்பிடுகிறார். எல்லோருடனும் மகிழ்ந்திருந்து ஒன்று சேர்ந்து இனி எப்போது இவ்வாறு உள்ளம் மகிழ பேசிக் களித்திருப்போம் என்று ஏங்க வைத்து பிரிவதுதான் புலவர் தொழிலாகக் குறிப்பிடுகிறார். 
வேந்தன் தொழில்:
குடிபுறங் காத்தோம்பிக் குற்றம் கடிதல்
வடுவன்று வேந்தன் தொழில் -549
குடிகளைப் பகைவர்களிடமிருந்து காத்தும், அவர்களுக்கு நன்மை செய்து பேணியும், குற்றங்களை நீக்கியும் முறை செய்தால் வேந்தனுக்குக் குற்றம் இல்லை. அதுவே அவன் தொழில் என்கிறார் திருவள்ளுவர். 
மேலும்
எல்லார்க்கும் எல்லாம் நிகழ்பவை எஞ்ஞான்றும் 
வல்வறிதல் வேந்தன் தொழில் - 582
எல்லோருக்கும் நிகழ்கின்ற எல்லாவற்றையும் எல்லாக் காலத்திலும், மிகவும் விரைவாக ஒற்றர்மூலம் அறிந்து கொள்ளுதல் வேந்தனுக்கு உரிய தொழிலாகும் என்கிறார். 
அறுதொழில்:
ஆபயன் குன்றும் அறுதொழிலோர் நூல்மறப்பர் 
காவலன் காவான் எனின் -560
இதில் அறுதொழில் என்பதற்கு பலரும் பல்வேறுக் கருத்துக்களைக் குறிப்பிடுகின்றனர். சிந்தனைச் செம்மல் திரு.கு.ச. ஆனந்தன் அறுதொழில் என்பதற்கு உழவு, வாணிகம், ஓவியம், சிற்பம் (கல், உலோகம், மரம், சுதை, மண், தந்தம், சுண்ணம், வண்ணம்), கல்வி (வித்தை, அறிவியல், சாத்திரங்கள் மற்றும் நுண்கலைகள் மெழுகு போன்றவற்றால் செய்யப்படுபவை) எனக் குறிக்கின்றார். திருக்குறளார் வீ. முனிசாமி, உழவர், வாணிகர், ஆசிரியர், கம்மியர், கலைஞர், மருத்துவர் எனக் குறிப்பிடுகிறார். திரு. மழபாடி. ஆறு. இளங்கோவன் அவர்கள் அறுதொழில் என்பது துணிநெய்தல் தொழிலைக் குறிப்பிடுகிறார். குறைந்து துணி நெய்வோர் கூட நெசவுத் தொழிலின் அடிப்படையாம் நூலைக் கூட மறந்து விடுவர் என்று குறிப்பிடுகிறார்.
பேதைத் தொழில்:
நாணாமை நாடாமை நாரின்மை யாதொன்றும்
பேணாமை பேதை தொழில் -833
பழிக்கு நாணாதிருத்தல், நோக்கத்துடன் செயல்படாதிருத்தல், எவரிடத்தும் அன்பற்று இருத்தல் என எதையும் ஒழுங்காகப் பேணாமலிருத்தல் பேதைகளின் தொழில் என்கிறார் திருவள்ளுவர்.
கும்கி:
வினையான் வினையாக்கிக் கோடல் நனைவுகள்
யானையால் யானையாத் தற்று – 678
ஒரு செயலைச் செய்யும் போதோ மற்றொரு செயலையும் செய்து முடிக்கும் திறன் யானையால் யானையைப் பிடிப்பது போன்றது என்கிறார். 
கப்பல் ஓட்டுதல் தேர் ஓட்டுதல்:
கடலோடா கால்வல் நெடுந்தேர் கடலோடும்
நாவாயும் ஓடா நிலத்து -496 என்கிறார்.
கடலில் நாவாய் செலுத்துல், நிலத்தில் பெருந்தேர் இயக்குதலையும் தொழிலெனக் குறிப்பிடுpறார். 
கொல்லுதல் கொல்லாமைதலை (35) கொல்லாமை கோறல் (321) வாணிகம் செய்தல் (120) பறவை வேட்டையாடல் வேட்டுவன் (274) மழித்தல் (280) மரம் ஏறுதல் (476) பாடுதல் இசைக் கருவிகள் இசைத்தல் (573) நகை செய்தல் (888) மருத்துவம் (950) விலங்குகளை வேட்டையாடுதல் (771) திருடுதல் (283,284) கூத்தாடுதல் (332), கேடான செயல்களை செய்தல் (201), உழவு அதிகாரம் 104 மற்றும் (212,14,872) நூல் நூற்றல் (1273), பறையறைதல் (1076, 1180) மரக்கலம் செய்தல் (1068), புணை (306), உளப்பணி (581), கள் இறக்குதல் விற்றல் (கள்ளுண்ணாமை அதிகாரம் 94), தேர் செய்தல் (667) களை எடுத்தல் (550), மண் சிற்பம் செய்தல் (407) ஆநிரை மேய்த்தல் (1228) இரும்பை வெட்டுதல் (821) வரைதல் எழுதுங்கால் (1285) ஆகிய தொழில்களும் திருக்குறளில் குறிப்பிடப்பட்டுள்ளன. 

தொடர்ந்து பார்ப்போம்...
குறிப்பு: இணைக்கப்பட்டுள்ள படங்கள் செயற்கை நுண்ணறிவுத் தொழில் நுட்பத்தில் உருவாக்கியுள்ளேன். பிழையிருப்பின் பொறுத்துக் கொள்க.
நன்றி


No comments:

Post a Comment