Wednesday, 19 February 2025

திருக்குறள் வழி நின்று திருவள்ளுவரை அறிதல்- 57:

திருக்குறள் வழி நின்று திருவள்ளுவரை அறிதல்- 57:
புலவி
கடந்த வாரம் நெஞ்சோடு புலத்தல்அதிகாரத்தில் இருந்து பார்த்தோம். இந்த வாரம்; புலவி அதிகாரத்தில் இருந்து பார்ப்போம்.; புலவி என்பது விலகுதல், பிணக்கு, ஊடுதல் போன்றவற்றைக் குறிக்கிறது. சரி இப்போது, புலவி அதிகாரத்தில் என்ன புலவிகள் இருக்கின்றது என்று பார்ப்போம்...
.
புல்லா திராஅப் புலத்தை அவருறும்
அல்லல்நோய் காண்கம் சிறிது -1301
ஏங்க வைத்த கண்டு கொள்ளாமல் இருந்து மன வருத்தத்தை ஏற்படுத்திய தலைவன் நெடுநாள் கழித்து வந்து சேரும்போது தலைவியின் மனநிலை என்ன? தலைவியானவள் தனக்குள்ளே சொல்லிக் கொள்கிறாள், ‘நாம் ஊடும் போது அவர் அடையும் காதல் வேதனையை நாமும் கொஞ்சம் பார்க்கலாம், அதற்காக அவர் வந்ததும், அவரைத் தழுவாமல் இருந்து பிணங்கியிருப்பாயாக” என்று சொல்வது போல் அமைத்துள்ளார் திருவள்ளுவர். 
உப்பமைந் தற்றால் புலவி அதுசிறிது
மிக்கற்றால் நீள விடல் -1302
உப்பை மிகுதியாகச் சேர்த்தால் என்னாகும்? உண்ண முடியாது, ஆதலால் அதனால் பயனில்லாமல் போகும்! ‘உப்பு, உணவில் அளவோடு அமைந்திருப்பதைப் போன்றது ஊடல்,  ஊடலுக்கும் கூடலுக்கும் இடையில் உள்ள கால அளவானது உணவில் இடும் உப்பு போல் ஓரளவு இருக்க வேண்டும், ஊடலை அளவு கடந்து கொஞ்சம் நீட்டினாலும், உப்பின் மிகுதி போல அது கெட்டு விடும்”என்கிறார் ஐயன். ஏன்னே ஒரு ஒப்புமை!
அலந்தாரை அல்லல்நோய் செய்தற்றால் தம்மைப் 
புலந்தாரைப் புல்லா விடல் -1303
பிணங்கி கொண்டிருக்கும் மனைவியை கண்டு கொள்ளாமல் சென்றால் மனைவியின் நிலை என்ன? இதோ வள்ளுவரே சொல்கிறார். ‘தன்னுடன் ஊடல் கொண்ட மனைவியின் ஊடலை நீக்கிக் கூடாமல் போவது, ஏற்கனவே துன்பத்தினால் வருந்தியவரை மேலும் துன்ப நோய்க்கு ஆளாக்கியது போன்ற கொடுமையாகும்” என்கிறார். 
ஊடி யவரை உணராமை வாடிய
வள்ளி முதலரிந் தற்று -1304
அடுத்த நிலையாக பிணங்கிக் கொண்டிருக்கும் மனைவியை கண்டுக்கொள்ளாமல் இருப்பது எப்படிப் பட்டது என்று திருவள்ளுவர் சொல்கிறார்? ‘தன்னுடன் ஊடல் கொண்ட மனைவியிடம் அன்பு செலுத்திடாமல் அவளுடன் கூடாமல் போவது, ஏற்கனவே நீர் இல்லாமல் வாடிய செடியை அடியோடு அறுத்தது போலாகும்” என்கிறார். 
நலத்தகை நல்லவர்க் கேஎர் புலத்தகை
பூவன்ன கண்ணார் அகத்து -1305
காதலர்க்கு எது அழகு சேர்க்கும்? ‘ நல்ல பண்புகள் அமைந்த நல்ல ஆடவருக்கு அழகு சேர்ப்பது, மலர் போன்ற கண்களை உடைய மகளிரின் நெஞ்சில் உண்டாகும் ஊடலின் சிறப்பே ஆகும்” என்கிறார். ஊடல் தான் காதலின் அழகு என்பதின் சிறப்பை உணர்ந்தவர் மட்டுமே சொல்ல முடியும். மாபோதகர் இதை தெரிந்து வைத்திருப்பதில் ஆச்சிரியப்படுவதிற்கில்லை…
துனியும் புலவியும் இல்லாயின் காமம்
கனியும் கருக்காயும்அற்று -1306
வாழ்க்கையில் சண்டை சச்சரவுகள் இல்லையென்றால் உப்புச்சப்பு இல்லாததாக மாறிவிடும் என்பதை அழகாக மேற்கூறிய குறளில் விளக்குகிறார். ‘பெரும் பிணக்கும், சிறுபிணக்கும் ஏற்பட்டு இன்பம் தரும் காதல் வாழ்க்கை இல்லாமற் போனால், மிகக் கனிந்த கனியும், பழுக்காத கருக்காயும் போலப் பயனற்றது ஆகும்” என்கிறார்.
ஊடலின் உண்டாங்கோர் துன்பம் புணர்வது 
நீடுவ தன்றுகொல் என்று -1307
சிலர் மிகுந்த சந்தோசத்தில் இருக்கும் போதே அடுத்து என்ன ஆகுமோ? அல்லது அந்தத் துன்பம் என்னை எப்போது ஆட்கொள்ளுமோ? ஏப்படி ஆட்கொள்ளுமோ? ஏன்று வருமுன்னமே யோசித்து வருத்தப்படுவதுண்டு. ‘கூடியிருக்கும் இன்பம் இனிமேலும் நீட்டிக்காதோ என்று ஏங்கி எண்ணுவதால், ஊடியிருத்தலினும் காதலர்க்கு ஒருவகைத் துன்பம் உண்டு” என்கிறார் திருவள்ளுவர். 
நோதல் எவன்மற்று நொந்தாரென் றஃதறியும் 
காதலர் இல்லா வழி -1308
மேற்கூறிய குறள் தற்காலத்தில் தான் பொதுவாக இருக்கிறது என்று நினைத்தேன். ஆனால், அப்போதே இதன் வலியினை அழகாக உணர்த்தியுள்ளார் திருவள்ளுவர். ‘நம்மால் இவர் வருந்தினால் என்று அந்த வருத்தத்தை அறியும் காதலர் இல்லாதபோது, வீணாக வருத்தம் அடைவதனால் என்ன பயன்?” என்று எதார்த்தமாகக் கேட்கிறார். 
நீரும் நிழல தினிதே புலவியும்
வீழுநர் கண்ணே இனிது -1309
மேற்கூறிய கோபம் உள்ள இடத்தில் தான் குணம் இருக்கும் என்ற பதத்தை விட மேலாக எப்படிச் சொல்ல வேண்டும் என்பதுபோல சொல்கிறார் திருவள்ளுவர். ‘நிழலுக்கு அருகில் உள்ள நீர்தான் குளிர்ந்து இனிமையாக இருக்கும், ஊடலும் கூட அன்புள்ளவரிடம் மட்டுமே இனிமை ஆனது” என்கிறார். 
ஊடல் உணங்க விடுவாரோ டென்னெஞ்சம்
கூடுவேம் என்ப தவா -1310
‘ஊடல் கொண்ட போது அதனை சரி செய்து கூடாமல் வாட விடுகின்றவரோடும் கூடுவோம் என்று என் நெஞ்சம் முயல்வதற்குக் காரணம் அது கொண்டுள்ள ஆசையே ஆகும்” என்கிறார் தலைவி வழி நின்று. 

தொடர்ந்து பார்ப்போம்...
குறிப்பு: இணைக்கப்பட்டுள்ள படங்கள் மற்றும் காணொலி ஆகியவற்றை செயற்கை நுண்ணறிவுத் தொழில் நுட்பத்தில் உருவாக்கியுள்ளேன். பிழையிருப்பின் பொறுத்துக் கொள்க.
நன்றி

No comments:

Post a Comment