திருக்குறள் வழி நின்று திருவள்ளுவரை அறிதல்- 27:
ஒவ்வொரு பகுதியிலும் தன்னை வேளாண் நிபுணராய், இயற்கை ஆர்வலராய், கல்வியாளராய், உளவியல் அறிஞராய், பண்புமிக்கவராய், அன்புடையவராய், பகுத்தறிவாதியாளராய், கோபம் கொண்டவராய், வறியவருக்குக் குரல் கொடுப்பவராய், மேலாண்மை நிபுணராய், பழுத்த அனுபமும், ஆழ்ந்த புலமை, நிறைந்த அறிவு போன்றவராக தம்மை வெளிப்படுத்திய திருவள்ளுவர், காமத்துப்பாலில் தன்னை மிகச் சிறந்த உணர்ச்சிக் கவிஞராக, காதல் கவிஞராக, குடும்பநல ஆலோசகராக தன்னை அடையாளம் காட்டியுள்ளார்.
சங்ககாலத்தில் இருந்து இன்றும் கூட பல கவிதைகள் இவருடைய குறளின் தாக்கத்தினால் ஏற்பட்டிருக்கலாம் என்பதில் ஐயமில்லை.
காமத்துப்பாலில் நுழைவதற்கு முன்பு தமிழ் இலக்கியத்தின் அகத்திணைப் பற்றி அறிந்து கொள்வது இன்னும் உங்கள் புரிதலை எளிதாக்கும் என்று எண்ணுகிறேன்.
அகத்திணை:
அகத்திணையை தொல்காப்பியம் ஏழு திணைகளாக (ஒழுக்கங்களாக) பகுத்துள்ளது. அவை கைக்கிளை,குறிஞ்சி, முல்லை,மருதம், நெய்தல், பாலை, பெருந்திணை என்று ஏழு திணைகளாகப் பகுத்துள்ளது.
குறிஞ்சி முதலான ஐந்தும் ஒத்த காமத் தன்மையால் ஒன்றாயினும், ஒழுக்க வகையால் தனிநிலை குறிப்பிப்பதற்காக ‘ஐந்திணை” என்று பெயர் பெற்றன. இதனை
புணர்தல்புரிதல் இருத்தல் இரங்கல்
ஊடல் அவற்றின் நிமித்தம் என்றவை
தேறுங்கலைத் திணைக்குரிப் பொருளே – தொல். பொருள் இளம் நூ.16
என்று தொல்காப்பியர் குறிப்பிடுகிறார். இந்த ஐந்து ஒழுக்கங்களும் எல்லா நிலத்து மக்களிடம் நிகழும் பொதுவான நிகழ்ச்சிகளே என்றாலும், மலை நாட்டில் புணர்தல் நிகழ்வதாகவும், பாலை நிலத்தில் பிரிதல் நிகழ்வதாகவும், மருத நிலத்தில் ஊடல் நிகழ்வதாகவும், நெய்தல் நிலத்தில் இரங்கல் நிகழ்வதாகவும் கூறுவது மரபு.
குறிஞ்சி போன்றவை நாம் ஐவகை நிலங்களாகப் படித்திருப்போம். இதில்
குறிஞ்சி எனப்படுவது மலையும் மலை சார்ந்த இடமும் புணர்ச்சிக்குரியதாகத் தேர்ந்தெடுத்துள்ளனர். குறிஞ்சி இயற்கை வளம் நிறைந்து காணப்படும். கூதிர் காலம் என்ற பெரும் பொழுதையும் யாமம்என்ற சிறு பொழுதையும் புணர்ச்சிக்குரிய காலமாகக் கூறுவர். இங்கு வாழும் மக்கள் குறவர் ஆவர்.
முல்லை என்பது காடும் காடு சார்ந்த இடமும் ஆகும். முல்லை நிலத்திற்குரிய ஒழுக்கம் இருத்தல் ஆகும். முல்லை மலர்கள் இப்பகுதியில் அதிகம் காணப்படும். இந்நிலத்திற்குரிய பெரும் பொழுது கார்காலம். சிறுபொழுது மாலை நேரமாகும். முல்லை நிலத்தில் வாழும் மக்கள் ஆயர் ஆவார்.
மருதம் என்பது வயலும் வயல் சார்ந்த இடம் ஆகும். வற்றாத நீரையுடைய ஆறு கால்வாய்களாகப் பிரியும் நிலத்தை உடையது இப்பகுதி. பெரும் பொழுதுகள் ஆறும் ஐவகறை, விடியல் என்ற சிறுபொழுதுகள் இரண்டும் இரதற்கு உரியவை. உழவர், உழத்தியர் இப்பகுதியில் வாழ்பவர்கள்.
நெய்தல் என்பது கடலும், கடல் சார்ந்த இடமும் ஆகும். பெரும்பொழுது அனைத்தும் இதற்கு உரியவை. நுளையர், நுளைச்சியர் இப்பகுதியில் வாழ்பவர்கள்.
பாலை என்பது இயற்கை மாறுபட்டால் பருவ மழை பெய்யாது வளங்குன்றிய காலத்தில் முல்லை நிலமும் குறிஞ்சி நிலமும் தம் இயல்பை இழந்து புதியதொரு தன்மையைப் பெறும். இத்தன்மையுடைய நிலத்தைத் தமிழர்கள் பாலை என்று அழைத்தனர். தார் பாலைவனம், சஹாரா பாலைவனம் போன்ற பகுதியை இதோடு ஒப்பிட்டுப் பார்க்க வேண்டாம். காதலால் கூடிக் கலந்த இருவரது பிரிவு ஒழுக்கத்தினைக் குறிப்பது பாலைத் திணை ஆகும். பெரும் ;பொழுது இளவேனில், முதுவேனில் ஆகும் சிறுபொழுது
நண்பகல், இதற்குப் பின்பனியும் உரித்து எனத் தொல்காப்பியர் கூறுகிறார்.
இதில் கைக்கிளை மற்றும் பெருந்திணை ஆகியவற்றை நான் குறிப்பிடவில்லை. ஏனெனில் சங்க இலக்கியங்களில் அறிஞர்கள் பலரும் அகத்திணையில் உள்ள ஏழு பிரிவுகளில் கைக்கிளை மற்றும் பெருந்திணை என்ற ஒருதலைக் காமத்தையும், பொருந்தாக் காமத்தையும் (பிறன்மனை நோக்குதல், தன் வயதைவிட அதிகம் உள்ளவர் மீது ஈர்ப்புக் கொள்ளுதல் போன்றவை) பெருமைக்கு உரியனவாகக் கருதுவது இல்லை.
தொடர்ந்து பார்ப்போம் ...