Monday, 26 February 2024

திருக்குறள் வழிநின்று திருவள்ளுவரை அறிதல்-7

திருக்குறள் வழிநின்று திருவள்ளுவரை அறிதல்-7

திருக்குறளும் சங்க இலக்கியங்களும்
குறுந்தொகை, நற்றிணை, புறநானூறு முதலான சங்க இலக்கியங்களில் திருக்குறள் தொடரும், கருத்துக்களும் கையாளப்பட்டுள்ளன. 
1. குறுந்தொகை:
பழைமை என்னும் அதிகாரத்தில்,
பேதைமை ஒன்றோ பெருங்கிழமை என்றுணர்க
நோதக்க நட்டார் செயின் - 805 
என்று திருவள்ளுவர் குறிப்பிடுகிறார். 

இதே கருத்தினை குறுந்தொகையில் 
பேதை மையால் பெருந்தகை கெழுமி
நோற்கச் செய்ததுஒன்று உடையேன் கொல் - 230 என்று அறிவுடை நம்பி அவர்கள் எழுதுகிறார்.

2. நற்றிணை:
வான்சிறப்பு என்னும் அதிகாரத்தில்
நீரின்றி அமையாது உலகெனின் யார்யார்க்கும்
வானின்று அமையாது ஒழுக்கு – 20
என்று திருவள்ளுவர் குறிப்பிடுகிறார். 

அதேபோல் நற்றிணை முதல் பாடலில் கபிலர் அவர்கள்
நீரின்றி அமையா உலகம் போலத் 
தம்மின்றி அமையா நம்நயந்து அருளி 
என்று திருக்குறளைக் கையாண்டுள்ளார்.

3. புறநானூறு:
செய்நன்றி மறவாமை என்னும் அதிகாரத்தில்
எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை
செய்ந்நன்றி கொன்ற மகற்கு -110 
என்று திருவள்ளுவர் குறிப்பிடுகிறார். 

ஆலத்தூர் கிழார் என்னும் புலவர் திருக்குறளினை அறம் என்று அழைக்கிறார். ஆவர் தனது பாடலில் 
நிலம்புடை பெயர்வது ஆயினும் ஒருவன் 
செய்தி கொன்றோர்க்கு உய்தி இல்லென
அறம் பாடின்றே ஆயிழை கணவ
என்று திருக்குறளின் செல்வாக்கு ஊடுருவி இருப்பதினைக் காணலாம். 

4. சிலப்பதிகாரத்தில் திருக்குறள்:
ஓர்ந்துகண் ணோடாது இறைபுரிந்து யார்மாட்டும் 
தேர்ந்துசெய் வஃதே முறை -541 என்று செங்கோன்மை என்னும் அதிகாரத்தில் திருவள்ளுவர் குறிப்பிடுகிறார். அதாவது செங்கோன்மை என்பது நல்ல முறையில் ஆட்சி செய்தல். ஒரு வழக்கை நன்கு ஆராய்ந்து ஒரு பக்கமே அன்பு செலுத்தி சார்ந்து விடாமல் நடுவுநிலையுடன் இருந்து சாட்சிகளைத் தீர விசாரித்த பிறகு தீர்ப்பு வழங்குவது ஆகும். 
மேற்கண்ட திருவள்ளுவரின் கருத்துக்கள் சிலப்பதிகாரத்தில்
‘சினைஅலர் வேம்பன் தேரான் ஆகி,
ஊர்காப் பாளரைக் கூவி ஈங்குஎன்
தாழ்பூங் கோதை தன்கால் சிலம்பு
கன்றிய கள்வன் கையது ஆகில்
கொன்றுஅச் சிலம்பு கொணர்க ஈங்கு” - என சிலப்பதிகாரம் 16:149&153 இல் வேறு சொற்களில் கூறப்பட்டுள்ளது. வேம்பு சூடிய பாண்டிய மன்னன் சிறிதும் ஆராய்ந்து பாராதவனாகி காவலரைக் கூவி அழைத்து ‘அக்கள்வனைக் கொன்று அச்சிலம்பை இங்குக் கொணர்க” என்றான். இங்கு மன்னன் தீர விசாரிக்காமல் கூறிய வார்த்தைகளால் நீதி தவறிவிட்டான் என்று புலனாகிறது. 

‘எண்பதத்தான் ஓரா முறைசெய்யா மன்னவன்
தண்பதத்தான் தானே கெடும்”-  548 என்று செங்கோன்மை அதிகாரத்தில் திருவள்ளுவர் குறிப்பிடுகிறார். அதாவது அரச தர்மம் என்று கருதப்பட்ட தன்மையுடன் ஆராய்ந்து நீதிநெறி செலுத்தாத மன்னன் தாழ்ந்த நிலையின் நின்று தானே கெடுவான் என்கிறார். இதே கருத்தினை வழக்குரை காதைப் பகுதியில் பாண்டியனின் சால்பை விளக்குகின்ற நோக்கில் கூறப்பட்ட வெண்பா வானது,
‘அல்லவை செய்தார்க்கு அறம்கூற்றம்ஆம் என்னும்
பல்லவையோர் சொல்லும் பழுதன்றே”-1 என எடுத்துரைக்கின்றது. அதாவது அறம் அல்லாதவைகளைச் செய்தவர்களுக்கு அறமே கூற்றாக அமையும்.அறமே எமனாக இருந்து தண்டிக்கும் என்று ஆன்றோர்கள் கூறும் சொற்கள் பொய்யல்ல.

கொடுங்கோன்மை என்னும் அதிகாரத்தில் திருவள்ளுவர் குறிப்பிடும்; 
‘அல்லற்பட்டு ஆற்றாது அழுதகண்ணீர்அன்றே
செல்வத்தைத் தேய்க்கும் படை” -555 என்ற குறளானது மன்னனின் ஆட்சிக் கொடுமையைத் தாங்க முடியாது குடிமக்கள் அழுது வடிக்கும் கண்ணீரே அந்த ஆட்சியை அழிக்கும் கருவியாகும் என்று குறிப்பிடுகிறது. 
இதனையே சிலப்பதிகாரத்தில் 
‘அல்லல்உற்று ஆற்றாது அழுவாளைக் கண்டுஏங்கி
மல்லல் மதுரையார் எல்லாரும் தாம்மயங்கிக்
களையாத துன்பம்இக் காரிகைக்குக் காட்டி
வளையாத செங்கோல் வளைந்தது இதுஎன்கொல்?”- சிலப்பதிகாரம் :19: 15ர&18 இல் இளங்கோவடிகள் குறிப்பிடுகிறார். அதாவது துன்புற்று ஆற்றாது அழுது புலம்பும் கண்ணகியைக் கண்டு ஏங்கி மதுரை நகர் மக்கள் செய்வதறியாது திகைத்தனர். நீக்க முடியாத துன்பத்தினை இக்காரிகைக்குச் செய்து எக்காலத்தும் வளையாத மன்னவனின் செங்கோல் வளைந்ததே என எண்ணித் துன்புற்றனர். 

வெருவந்த செய்யாமை என்னும் அதிகாரத்தில் 
‘இறையடியன் என்றுஉரைக்கும் இன்னாலச்சொல் வேந்தன்
உறைகடுகி ஓல்லைக் கெடும்”- 564 என்று திருவள்ளுவர் குறிப்பிடுகிறார். அதாவது மக்கள் கூறும் தீச்சொல்லுக்கு ஆளாகும் வேந்தனுடைய வாழ்நாளும் குறையும் செல்வமும் விரைந்து கெடும். 
இதே கருத்து வழக்குரைக் காதையில், கண்ணகி பாண்டிய மன்னனைப் பார்த்து, ‘தேரா மன்னனே!” என்று அழைத்தது ‘ஆராய்ச்சி இல்லாத மன்னனே” என்று பொருள்படும். இக்கடின வார்த்தை பாண்டிய மன்னனை கதற வைத்தது.
‘யானோ அரசன்? யானே கள்வன்!
மன்பதை காக்கும் தென்புலம் காவல்
என்முதல் பிழைத்தது; கெடுகஎன் ஆயள்!” - சிலப்பதிகாரம் 20:75ரூ77 இல் தனக்குத் தானே தண்டனை விதித்துக் கொண்டு உயிர் துறக்கச் செய்தது. 

 
வாழ்க்கைத் துணைநலம் என்னும் அதிகாரத்தில்
தெய்வம் தொழஅள் கொழுநன் தொழுதுஎழுவாள்
பெய்எனப் பெய்யும் மழை- 55 என்று திருவள்ளுவர் குறிப்பிடுகிறார். 
அதாவது வேறு தெய்வங்களைத் தொழாதவளாய்த் தன் கணவனையே தெய்வமாகக் கருதி தொழுது உறக்கத்திலிருந்து கண்விழிப்பவள் பெய் என்றால் மழை பெய்யும் என்கிறார். 
இக்கருத்தினை உணர்த்தும் வகையில் மதுரைக் காண்டத்தில் இறுதியில் வரும் வெண்பா வருமாறு:
‘தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுவாளைத் 
தெய்வம் தொழும்தகைமை திண்ணிதால் 


தெய்வமாய்
மண்ணக மாதர்க்கு அணியாய் கண்ணகி
விண்ணகமா தர்க்கு விருந்து” என்று மண்ணக மகளிர்க்கெல்லாம் அணி போன்றவளான கண்ணகி தெய்மாகி விண்ணக மகளிர்க்கு விருந்தாயினள். வேறு தெய்வத்தைத் தொழாது தன் கணவனைத் தொழுவாளைத் தெய்வமும் தொழும் என்று இளங்கோவடிகள் குறிப்பிடுகிறார். 

தொல்காப்பியத்தினைப் பின்பற்றி திருக்குறள்:

எவ்வாறு திருக்குறளினை பின்பற்றி சில இலக்கியங்களில் குறிப்பு உள்ளனவோ அதே போல் திருவள்ளுவர் தொல்காப்பியத்தினை பின்பற்றி திருக்குறளினை அமைத்துள்ளார்.
தொல்காப்பியர் அறம், பொருள், இன்பம் என்னும் மூன்று நிலைகளில் கருத்துக்களைக் கூற வேண்டும் என்று கூறியுள்ளார். இதனை,
அந்நிலை மருங்கின் அறம் முதலாகிய
மும்முதல் பொருட்டும் உரிய என்ப என்று தொல்.1363 நவில்கின்றது. 

‘மந்திரம்” என்பதனைப் பற்றிக் குறிப்பிடும்போது
நுpறைமொழி மாந்தர் ஆணையில் கிளந்த
முறைமொழி தானே மந்திரம் என்ப -1434 என்று தொல்காப்பியர் குறிப்பிடுகிறார்.
திருவள்ளுவரும் தொல்காப்பியரை பின்பற்றி
நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து
மறைமொழி காட்டி விடும் -28 என்று தடம் பதிக்கிறார்.



 

Monday, 19 February 2024

திருக்குறள் வழிநின்று திருவள்ளுவரை அறிதல்-6

திருக்குறள் வழிநின்று திருவள்ளுவரை அறிதல்-6
உரையாசிரியர்கள்:
- திருக்குறளுக்கு உரை செய்தவர்களுள் பதின்மர் குறிப்பிடத்தக்கவர். அவருள் தரும சேனர் என்பவர் முற்பட்டவர் ஆவார். மணக்குடவர் முற்பட்டவர் என்று சொல்பவரும் உண்டு. இவர் உரையில் சமண சமயக் கொள்கைகளே பேசப்பட்டுள்ளன. என்று அபிதான கோசம் என்னும் நூல் கூறுகின்றது. 

திருக்குறள் பகுப்பு முறை:

அறத்துப்பால்:
இயல் பகுப்பு – பாயிரம் - 4 அதிகாரம், இல்லற இயல் - 20 அதிகாரம், துறவற இயல் -13 அதிகாரம், ஊழ் இயல் - 1 அதிகாரம் மொத்தம் 38 அதிகாரம்
பாயிரம் நான்கு இல்லறம் இருபான், பன்மூன்றே
தூயத்துறவறம், ஒன்று ஊழாக – ஆய
அறத்துப்பால் நால்வகையா ஆய்ந்துரைத்தார் நூலின்
திறத்துப்பால் வள்ளுவனார் தேர்ந்து
- எறிச்சலூர் மலாடனார் - திருவள்ளுவ மாலை -25

பொருட்பால்:
இயல் பகுப்பு – அரசு இயல் - 25 அதிகாரம், அமைச்சு இயல் - 10 அதிகாரம், அரண் இயல் - 2 அதிகாரம், கூழ் இயல் - 1 அதிகாரம், படை இயல் - 2 அதிகாரம், நட்பு இயல் - 17 அதிகாரம், குடி இயல் -13 அதிகாரம்  மொத்தம் 70 அதிகாரங்கள்
ஆரசியல் ஐயைந்து, அமைச்சியல் ஈரைந்து
உருவல் அரண்இரண்டு, ஒன்றுஒண்கூழ் - இருஇயல்
திண்படை, நட்புப் பதினேழ், குடிபதின்மூன்று
எண்பொருள் ஏழாம் இவை. 
- போக்கியர்-திருவள்ளுவ மாலை -26

காமத்துப்பால்:
இயல் பகுப்பு - ஆண்பால் இயல் - 7 அதிகாரம், பெண்பால் இயல் -12 அதிகாரம், இருபால் இயல் - 6 அதிகாரம் - மொத்தம் 25 அதிகாரம்
ஆண்பால் ஏழ்: ஆறிரண்டு பெண்பால்: அடுத்துஅன்பு
பூண்பால் இருபால் ஓர்ஆறாக – மாண்பாய 
காமத்துப் பக்கம்ஒரு மூன்றாகக் கட்டுரைத்தார்
நாமத்தின் வள்ளுவனார் நன்கு
- மோசிகீரனார் -திருவள்ளுவமாலை -27

தருமர், மணக்குடவர், தாமத்தர், நச்சர்,
பரிதி, பரிமே லழகர் - திருமலையர்,
மல்லர், பரிப்பெருமாள், கலிங்கர் வள்ளுவர்நூற்கு
எல்லையுரை செய்தார் இவர் 
- தனிப்பாடல்
திருக்குறள் உரையாளர் பதின்மருள் காலத்தால் பிற்பட்டவர் பரிமேலழகர். 
மேற்கூறியவர்கள் திருக்குறளுக்கு நேரே உரை எழுதியவர்கள் போக இளங்கோ அடிகள், சீத்தலைச் சாத்தனார், சேக்கிழார், கம்பர் முதலானோர் தம் நூல்களில் ஆங்காங்கே திருக்குறளை எடுத்தாண்டு விளக்கமும் கூறியுள்ளனர். 
திருக்குறளுக்கு உரை எழுதாமல் வேறு நூல்களுக்கு உரை எழுதியோருள் பலர் தம் உரைகளில் தேவையான பல இடங்களில் திருக்குறளுக்கு உரை எழுதியுள்ளனர். 
மயிலைநாதர், சங்கர நமசிவாயர் ஆகியோரும் தம் உரைகளின் நடுவே திருக்குறளுக்கு விளக்கம் தந்துள்ளனர். 
சிலப்பதிகாரத்தின் அரும்பத உரையாசிரியரும், அடியாருக்கு நல்லாரும் தத்தமது உரைகளில் ஆங்காங்கே திருக்குறளுக்கு உரை கண்டுள்ளனர். 
மணக்குடவர், பரிதியார், பரிப்பெருமாள், காளிங்கர், பரிமேலழகர் ஆகிய ஐவர் உரைகளையும் சேர்த்து தருமை ஆதீனம் ‘ திருக்குறள் உரைவளம்” என்னும் நூலை வெளியிட்டுள்ளது. 
திருக்குறள் வரை வளத்தோடு ஆங்கில மொழி பெயர்ப்புகளையும் தொகுத்து, திருப்பனந்தாள் காசிமடம் ‘திருக்குறள் உரைக்கொத்து” என்னும் தொகுப்பை வெளியிட்டுள்ளது. 
மு. வரதராசனார், நாமக்கல் கவிஞர், புலவர் குழந்தை, கலைஞர் கருணாநிதி, சாலமன் பாப்பையா போன்ற பல அறிஞர்களும் திருக்குறளுக்கு உரை கண்டுள்ளனர். 

Monday, 12 February 2024

திருக்குறள் வழிநின்று திருவள்ளுவரை அறிதல்-5

திருக்குறள் வழிநின்று திருவள்ளுவரை அறிதல்-5
திருக்குறள்:
- மொத்த அதிகாரங்கள் -133
- ஒவ்வொரு அதிகாரத்துக்கும் 10 குறள்கள்
- அறத்துப்பால்  அதாவது அறம் அல்லது கடமை தொடர்புடைய நூற்பகுதி -380 குறட்பாக்கள்
- பொருட்பால் அல்லது செல்வத்தோடு தொடர்புடைய நூற்பகுதி – 700 குறட்பாக்கள்
- காமத்துப்பால் அல்லது புலன் வழி இன்ப நுகர்வு- 250 குறட்பாக்கள்
- இரண்டடிச் செய்யுள் ‘குறள் வெண்பா” என்றழைக்கப்படுகிறது. 
- குறள் - குறுகிய வடிவினை உடையது. முதல் அடியில் நான்கு சீர்களும் இரண்டாம் அடியில் மூன்று சீர்களும் பெற்று குறுகிய வடிவினைக் கொண்டு இருப்பதால் ‘குறள்” எனப்படுகிறது. குறள் என்னும் யாப்பமைதிப் பெயருக்கு முன் ‘திரு” என்னும் அடைமொழி பெற்று ‘ திருக்குறள் என வழங்கப்படுகிறது. 
- தமிழ் நூல்களில் அதிகம் மொழிபெயர்க்கப்பட்ட நூலாகத் திருக்குறள் இருப்பதில் வியப்பு ஒன்றும் இல்லை. இலத்தீன், ஜெர்மன், பிரெஞ்ச், டச், பின்னிஷ், போலிஷ், இரஷியன், சீனம், பிஜி, மலே, பர்மியம், சமஸ்கிருதம், உருது, மராத்தி, வங்காளம், இந்தி மற்றும் மலையாளம் என்று இந்திய மற்றும் வெளிநாட்டு மொழிகளில் திருக்குறள் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. 82 வெளிநாட்டு மொழிகளில் திருக்குறள் மொழிபெயர்ப்புகள் உள்ளன. 
- திருக்குறள் சங்க இலக்கிய வகைப்பாட்டில் பதினெண்கீழ்க்கணக்கு எனப்படும் பதினெட்டு நூல்களின் திரட்டில் இருக்கிறது. 
- திருக்குறள் அகரத்தில் தொடங்கி னகரத்தில் முடிவடைகிறது.
- திருக்குறளில் உள்ள மொத்தச் சொற்கள் -14000
- திருக்குறளில் உள்ள மொத்த எழுத்துக்கள் - 42194
- இவற்றில் மிகச் சிறிய குறட்பாக்கள் (குறள் 833 மற்றும் 1304) 23 எழுத்துக்களைக் கொண்டதாகவும், மிக நீளமான குறட்பாக்கள் (குறள் 957 மற்றும் 1246) 39 எழுத்துக்களைக் கொண்டதாகவும் உள்ளன. 
- திருக்குறளில் தமிழ் எழுத்துக்களில் 37 எழுத்துக்கள் இடம் பெறவில்லை.
- திருக்குறளில் இடம் பெறும் இரு மலர்கள்- அனிச்சம் மற்றும் குவளை
- திருக்குறளில் இடம் பெறும் ஒரே பழம் - நெருஞ்சிப்பழம்
- திருக்குறளில் இடம்பெறும் ஒரே விதை – குன்றிமணி
- திருக்குறளில் பயன்படுத்தாத ஒரே உயிரெழுத்து – ஒள
- திருக்குறளில் இருமுறை வரும் ஒரே அதிகாரம்  - குறிப்பறிதல்
- திருக்குறளில் இடம்பெறும் இரண்டு மரங்கள் - பனை, மூங்கில்
- திருக்குறளில் அதிகமுறைப் பயன்படுத்தப்பட்ட ஒரே எழுத்து – னி (1705 முறை)
- திருக்குறளில் ஒருமுறை மட்டும் பயன்படுத்தப்பட்ட இரு எழுத்துக்கள்- ளீ, ங
- திருக்குறளில் இடம்பெறாத இரண்டு சொற்கள் - தமிழ், கடவுள்
- திருக்குறள் மூலத்தை முதன் முதலில் அச்சிட்டவர் - தஞ்சை ஞானப்பிரகாசர்
- திருக்குறளுக்கு முதன் முதலில் உரை எழுதியவர் - மணக்குடவர்
- திருக்குறளில் இடம் பெறாத ஒரே எண் - ஒன்பது
- திருக்குறள் நரிக்குறவர் மக்கள் பேசும் வக்போலி மொழியிலும் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. 
-
நன்றி- வகைமை நோக்கில் தமிழ் இலக்கிய வரலாறு, முனைவர் பாக்யமேரி,2011, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்



https://www.valaitamil.com/unknown-facts-about-thirukkural_10023.html

Monday, 5 February 2024

திருக்குறள் வழிநின்று திருவள்ளுவரை அறிதல்-4






ஓவியர் திரு. வேணுகோபால் சர்மா அவர்கள், கிட்டத்தட்ட 40 ஆண்டுகளாகப் பல நூறு முறை முயன்று திருவள்ளுவருக்கு உருவம் கொடுத்தார். அப்படத்திற்கு கொடுத்த உருவம் கொடுத்தற்கான காரணங்களையும் நுட்பமாக எழுதி வைத்தார். ஆதனை 2012 ஆம் ஆண்டு சென்னைப் பல்கலைக்கழகம், நூலாகப் பதிப்பித்து விழாவெடுத்து வெளியிட்டிருக்கிறது. திருவள்ளுவரின் உருவத்துக்கான அடிப்படை விடயங்களை அவர் திருக்குறளின் தரவுகளிலிருந்துதான் எடுத்திருக்கிறார் என்பதும் அந்நூலில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டிருக்கிறது. திருவள்ளுவரின் ஒவ்வொரு பாகத்திற்கும், ஏன் அப்படி வரையப்பட்டது என ஓவியர் வேணுகோபால் சர்மா அவர்கள் வழங்கியதாவது,
‘இத்தகு விளக்கங்கண்ட திருவள்ளுவருக்குத் திருமுடி எவ்வாறு அமைந்திருக்கக்கூடும் சிறிதே முன் வழித்துப் பின் வளர்த்தப் பெருங்குடுமியா? நாகரிக ஒப்பனையுடன் வெட்டப் பட்ட சிகையா? இவையனைத்தும் தனித்தனிக் குழுவாரின் அடையாளமாக ஆகிவிட்டமையின், திருவள்ளுவரின் கருத்துக்குப் பொருந்துவன ஆகாவாதலின், திருவள்ளுவருக்குத் திருமுடியும் நீவப்படாத தாடியும் இருத்தல் நன்று என்று கருதப்பட்டது. ஓவிய இலக்கண முறைப்படி உயர்ந்த மதி படைத்தோருக்கு நெற்றி பரந்தும் உயர்ந்தும் இருக்க வேண்டுமென்பதோடு, அவர்கள் நாசியின் நீளத்திற்கொப்பாகவோ அல்லது சற்று அதிகமாகவோ அது இருத்தல் வேண்டுமென்பதால் அற்கொப்ப திருவள்ளுவரின் நெற்றி அமைக்கப்பட்டது. 
அதே முறைப்படி நாசி, ஓணான் முதுகில் எவ்வளவு நுண்ணிய வளைவு தென்படுகிறதோ அவ்வளவு வளைந்திருக்க வேண்டுமென்பதோடு, நாசியின் நுனி மழுங்கியிராமல், அதன் பருமனுக்கேற்ற கூர்மையுடனிருந்தால் புத்திக் கூர்மையும், உண்மையை உய்த்துணரும் ஆற்றலும் உண்டு என்பதோடு, நாசித் துவாரத்தின் இரு பக்கத்து மேல் மூடிகளும் சற்று மேல் நோக்கி அகன்றிருக்க வேண்டும். 
அப்படி இருந்தால் நல்லவற்றைத் தேர்ந்தெடுக்கும் ஆற்றல் உண்டாகிறது என்பதால் திருவள்ளுவரின் நாசி அதற்கொப்ப அமைக்கப்பட்டது. வாய் அகன்றிருக்கக் கூடாது: குறுகியும் இருக்கக் கூடாது: மெல்லியதாய் இருத்தலும் கூடாது. அப்படி இருந்தால் வாய்மைத் திறன் வாய்க்காது. ஆகையால், தமக்கென்று ஏற்படுத்திக் கொண்ட பெரும் பணியை நிறைவேற்றுவதற்கான உறுதியைத் தெளிவாகக் காட்டுமாறு திருவள்ளுவரின் உதடுகள்அமைக்கப்பட்டன. உலகின் மீதுள்ள பெருங் கருணையால்தான் திருவள்ளுவர் திருக்குறள் இயற்றித் தந்தார் என்று கருதப்பட்டதால் ஆழ்ந்த சிந்தனை, கருணை, ஒளி,  பொது நோக்கு இவை நிரம்பிய கண்கள் படைக்கப்பட்டன. சிந்தனையிலுள்ளபோது திருவள்ளுவரின் வலது புருவம் சற்றே உயர்ந்து, உள்ளம் செயல்பட்டுக் கொண்டிருப்பதைக் குறிக்கிறது. 
மனிதன் உலகில் ஒப்புற வாழ்ந்து உயரும் விதியை மாத்திரம் திருக்குறள் உணர்த்துவதால், திருவள்ளுவருக்குச் சமயக் குறிகள், மதச் சின்னங்கள் முதலியவை இல்லாமல் ஆயின. 
அவரது நீணடகன்ற காதுகள் பல ஆண்டுகளாக அவர் பெற்றக் கல்வியினாலும் உலகியல் பயிற்சியினாலும் அவர் எய்திய அறிவுத் திறனையும், தேர்ந்த செவிச் செல்வத்தையும் காட்டுவனவாக உள்ளன. உண்பதை அளவறிந்து உண்டால் நோய் வராமல் தடுக்கலாம் என்றும், மருந்தே தேவையில்லை என்றும், குறைவாக உண்பவனிடத்து இன்பம் போல் நிறைவாக உண்பவனிடத்துத் துன்பமிருக்கும் என்பது போன்ற நல்வழிகளைக் கூறிய திருவள்ளுவர், தானும் அவற்றைக் கடைப்பிடித்திருக்க வேண்டும்.
இதனால் அவருக்கு உடல் நலக்குறைவு, நேர்ந்திருக்காது, அக்காரணத்தால், உடல் தன் ஊட்டத்தினின்றும் இளைத்திருக்காது என்பதாலும், திருவள்ளுவர் உட்பகையை வென்ற பேராண்மை மிக்கவர் என்பதாலும் அவரது திருமேனி நல்ல ரத்தத்துடனும், கட்டுக் கோப்புடனும் பண்பட்டிருத்தலை அமைத்துக் காட்ட தூண்டுதலாயிற்று, உலகப் பற்று, சமயப்பற்று இவற்றிலிருந்து திருவள்ளுவர் விலகித்தான் இருந்திருக்க வேண்டும் என்பதேனெனில், ஏதாவது மதத்தையோ, சமயத்தையோ தழுவிய நன்மொழிகள் திருக்குறளில் எங்கும் தென்படவில்லை. அப்படியிருந்தால் மத, தேச வேறுபாடுகளின்றி, எல்லோரும் அதைத் தத்தம் மொழியில் மொழி பெயர்த்து வருவதும் நிகழாது. மேலும் அந்நாள்களில் வாழ்ந்திருக்கக் கூடிய மத, சமய வெறியர்களிடமாவது கருத்து மாறுபாட்டினையும் கண்டனங்களையும் எழுப்பத் தவறியிருக்காது என்பதில் ஐயமில்லை. மொத்தத்தில் மனிதன் உலகில் ஒப்புற வாழ்ந்து உயரும் விதியை மாத்திரம் திருக்குறள் உணர்த்துவதால், திருவள்ளுவருக்குச் சமயக் குறிகள், மதச் சின்னங்கள் முதலியவை இல்லாமல் ஆயின. 
வலக்கையில் எழுத்தாணியைப் பிடித்துள்ள அழுத்தம், மனித குலத்தின் உயர்வுக்காகத் தன் அறிவாற்றலால் தளராது உழைத்துத் தம் குறிக்கோளை நிறைவேற்றிக் கொள்ளும் வலிய ஊக்கத்தையும் நெஞ்சுறுதியையும் காட்டுவதாகும். 
மார்பிலும், முன்கையிலும் அமைந்துள்ள ரோம வரிசைகள், தாம் ஏற்ற பணியை நிறைவேற்றிக் கொள்ளும் ஆண்மையைக் குறிப்பன, தூய்மை நிறைந்த உள்ளம், தூய்மை நிறைந்த நோக்கு, தூய்மை நிறைந்த வாக்கு, தூய்மை பெற்ற உடல், தூய்மையான குறிக்கோள். இவையிருப்பதால், திருவள்ளுவர் தூய்மையான வெண்ணிற ஆடை புனைந்திருத்தல் நன்று என்று கருதப்பட்டது. வலக்கையில் எழுத்தாணியைப் பிடித்துள்ள அழுத்தம், மனித குலத்தின் உயர்வுக்காகத் தன் அறிவாற்றலால் தளராது உழைத்துத் தம் குறிக்கோளை நிறைவேற்றிக் கொள்ளும் ஊக்கத்தையும் நெஞ்சுறுதியையும் காட்டுவதாகும். 
கலை நலம் நிரம்பப் பெற்றுக் காண்போரின் அழகுணர்ச்சிக்கு விருந்தாகப் பொலியும் இடது கை, உலகப் பொதுப் பணியை ஈடேற்றி வைக்கும் பொறுப்புடன் ஓலையைத் தாங்கி நிற்பதாக அமைக்கப்பட்டது. வலதுகால் பெருவிரல் மட்டும் சற்று முன் வளைந்திருப்பது ஏனெனில், கால் பெருவிரல் அற்ப ஆசைகளைக் குறிப்பது, அந்த ஆசை வெளியில் தூக்கி எறியப்பட்டு விட்டது என்பதை வற்புறுத்த என்றால் நிராசையோடு உலகத்தினிடம் பயனேதும் கருதாது பணி செய்து கிடப்பதே தன் கடனென்று நினைத்தார் என்க. அல்லாமலும், எல்லோருக்குமே சிந்தனை தீவிரமாக இருக்கும் பொழுது கால் பெருவிரல் அடுத்த விரலுடன் நெண்டிக் கொண்டேயிருக்கும். சிந்தனை சீர் பெற முடிந்ததும் ஒரு நிலையில் நின்று விடும். ஆகையால், அதற்கும் ஒப்ப அமைக்கப்பட்டது. ஏற்கனவே எழுதப்பட்ட திருக்குறளின் பல அதிகாரங்கள் அவருக்கு வலப்புறம் குவிக்கப்பட்டிருக்கின்றன. அவற்றைத் தொடர்ந்து, அப்பாலும் பல அதிகாரங்கள் குவிந்திருக்கின்றன என்று ஊகித்துக் கொள்ளும் பொருட்டு, சில சுவடிகளின் சில பகுதிகள் மட்டுமே தெரிவாக வரையப்பட்டுள்ளன. 
கையில் பிடித்துள்ள ஓலையில் ஒன்றும் எழுதாதற்குக் காரணம் தமிழ் இலக்கிய வரம்பிற்குட்பட்டு நயம்பெற மிகச் சுருக்கமாக எப்படி எழுத வேண்டுமென்ற சிந்தனை திருவள்ளுவருக்கு இருந்திருக்க முடியாது. அப்படி சிந்தித்திருந்தால் திருக்குறளில் அவ்வளவு நீரோட்டமும், தெளிவும் இருக்க முடியாது. ஆகவே, குறள்களை எழுத அவர் தம் விரல்களுக்கேத் தெரியும். ஓலையில் எழுத்தாணியை ஊன்றி விட்டால், குறள் முடிந்துதான் எழுத்தாணி இடம் விட்டுப் பெயறும். இந்நிலையில் மக்களுக்கு அடுத்து சொல்லப்பட வேண்டியது யாது என்னும் சிந்தனையிலிருக்கும் நிலையாக உருவகம் செய்து, கண்களை சிந்தனையில் ஆழ்ந்திருக்கச் செய்திருப்பதால், இந்த ஓலையில் ஒன்றும் எழுதாமல் விடப்பட்டது திருவள்ளுவர் தமக்கென வாழாதவர் என ஊகிக்கப்பட்டதால், அவர் ஆசையற்று இருந்திருக்க முடியும். ஆசையற்ற இடத்தில் துக்கம் இருக்க முடியாது, அவர் தூய கருத்துலகில், சிந்தனை வானில் வாழ்ந்தவராதலால், அவரது சூழ்நிலையும் தூய்மை என்பதைக் குறிக்கவே பின்புறம் - இருபக்கங்கள் - இவற்றில் மரம், செடி, கொடிகளோடு- வீடு வாசலோ எவற்றையும் அமைக்காமல், அவரது உருவத்திலிருந்து வெளிப்பட்டுப் பாவி நிற்கும் அறிவுச்சுடர் ஒன்று மட்டுமே இடம் பெறலாயிற்று. 
அநேகமாக மனித சக்திக்கு அப்பாற்பட்ட சக்தி உள்ளவர்களுக்கு சிரத்தைச் சுற்றிலும் ஒளிவட்டம் ஒன்று சித்திரத்தில் அமைப்பது மரபாக இருந்து வருகிறது. ஏனெனில் அவர்களிடத்தில் பேரறிவின் ஒளி வீசுகிறது என்பதைக் காண்பிக்க. ஆனால், திருவள்ளுவருக்கு அந்த ஒளியை வட்டமாக அமைக்காமல் தலையைச் சுற்றிலும் தூய நிறம் ஆரம்பித்து, அது எங்கு போய் முடிகிறது என்பதைக் காட்டாமல், சுற்றிலும் உள்ள மங்கலமான இடங்களில் சென்று பாய்ந்து முடிவு தெரியாமல் விடப்பட்டிருப்பதற்குக் காரணம், வள்ளுவரின் ஒளி மற்றையோர் போல வட்டமாகத் தனக்கு மட்டும் நின்று விடாமல் வெளி உலகிற்கு ஊடுருவிப் பாய்கிறதைக் காட்டுகிறது. மண் தரையில் மரப் பலகையின் மீது வள்ளுவர் அமர்ந்திருத்தல் ஏனெனில், எதையும் உயராது இழுக்கும் பூமியின் ஆற்றலும் அவரது சிந்தனை உயர்வதைத் தடுப்பதற்கில்லை. அத்துடன் உலகத்தோடு ஒட்ட ஒழுகியும். உலகியலுக்குத் தாம் அடிமையாகாமல் தனித்து நின்று தனிப்பெரும் அறநெறியை வகுத்துத் தந்த தனிப்பெருந்தகையான அவர்தம் தூய்மையுற்ற உணர்வு செயல்,ஆடை முதலியனவற்றை எந்த வகையிலும் அழுக்குத் தீண்ட இடந்தருவது இழுக்காகுமெனக் கருதியதாகும். 
நம் நாட்டின் ஒப்பற்ற அறிவுச் செல்வமாகிய பெருந்தகை திருவள்ளுவரின் ஒளி வடிவம் இந்த ஓவியன் உள்ளத்தில் கொண்ட வகையிலேயே நீர்க் கலவை வண்ணக் குழம்பு கலந்து தீட்டிய இந்த வடிவிலும் நிலைபெற்று அமைவதாகும் வாழ்க வள்ளுவரின் அறிவுப் பேரொளி” என்று எழுதி வைத்திருக்கிறார் திரு. ஆர்.கே. வேணுகோபால் சர்மா அவர்கள். 
தற்போது, திருவள்ளுவரின் உருவம் எவ்வாறு வரையப்பட்டு என்பதை அங்குலம் அங்குலமாக ஓவியர் வரைந்ததை அவரே விளக்கியதைக் கண்டோம். இவ்வாறு அவருக்கு உணர்வு ஏற்படுவது திருக்குறளை அவர் உள்வாங்கியதின் வெளிப்பாடே என்பதனை உணர்ந்திருப்பீர்கள். இனி திருவள்ளுவர் ஆளுமையினை உணர்வதற்கு திருக்குறள் வழியாக ஆய்ந்தறிவோம். அதற்கு முன்பு திருக்குறளைப் பற்றி சற்றுத் தெரிந்து கொள்வதுதானே நியாயம். வரும் வாரம் திருக்குறளினைப் பற்றிப் பார்ப்போம்.