இன்று காமராஜர் அவர்களின் நினைவு நாள்
காமராஜ் அவர்களின் வார்த்தைகள்
"நம்மால் நிலையான அரசு அமைக்க முடியாவிட்டாலும் பரவாயில்லை. எப்படியாவது யாரோடு சேர்ந்தாவது ஆட்சியில் பங்கு பெற முயற்சிக்கக்கூடாது "
"ஏழைகளுக்குச் சாப்பாடு போட்டால் அவன் பரம்பரையாகச் சாப்பிட்டானா என்று கேட்பது நியாயமா? ஏழைகளின் குழந்தைகளை வாட விடுவது முறையா? அவர்களைப் படிக்க வைத்தால் தானே முன்னுக்கு வருவார்கள். பணக்காரப் பையன்கள் படிக்கவா நான் முதல் மந்திரியாக இருந்து ராஜாங்கம் நடத்தறேன்?”
”மக்களுடைய மனதில் அரசாங்கம் என்று ஒன்று தனியாக இருக்கிறது. அரசாங்கமே எல்லாப் பொறுப்புக்களையும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற எண்ணமும் அவர்களுக்கு இருக்கிறது. இந்த எண்ணம் மாற்றப்பட வேண்டும்.”
”நம் தாய்மார்கள் படித்துவிட்டால், நாட்டிலுள்ள தொந்தரவுகள் நீங்கி விடும். நாம் சம்பாதித்த சுதந்திரமும் நல்ல முறையில் பாதுகாக்கப்படும்.”
"நாட்டிலே பெண்கள் விழிப்பு அடைந்தால் குடும்பம் முன்னேறும். கிராமங்ள் முன்னேறும். ஏன், தேசமே முன்னேறும்"
”ஒருவன் பட்டினியாக இருக்கிறான் என்றால் அவன் யார்? என்ன சாதி? என்றெல்லாம் பார்த்துக் கொண்டு இருக்க முடியுமா?
திராவிடன் பசி ஒருவிதமாகவும் ஆரியன் பசி வேறுவிதமானதாகவுமா இருக்கும்? பட்டினி எல்லோருக்கும் ஒரே மாதிரி தான் இருக்கும். ஆகவே பாரபட்சமின்றி எல்லோரது பட்டினியையும் போக்க வேண்டும்.”
”சுதந்திரம் வந்தால் நாட்டில் மக்கள் நிலை உயரும் என்பதை அறிந்தே பலர் சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்காகவே மகாத்மா காந்தியின் தலைமையில் பலர் ஜெயிலுக்குச் சென்றனர். ஆனால் யாரும் மந்திரியாவதற்கு ஜெயிலுக்குப் போகவில்லை.”
"பதவி என்பது யாருக்கும் சொந்தமானதல்ல. அது என்ன தனி உடைமையா? கிடையவே கிடையாது. மந்திரி பதவி பரம்பரைப் பாத்தியதை அல்ல. மகாராஜாக்கள் பதவி போன்றதும் அல்ல. மக்கள் ஒத்துழைக்கும் வரை மட்டுமே பதவி நீடிக்கும்"
ஒரு கிராமத்துக்குச் சென்றார் முதலமைச்சர் காமராஜர். அந்த ஊர்த் தலைவர்கள் அவரிடம் வந்து,
”ஐயா! எங்களுக்குச் சுடுகாட்டுக்குச் செல்வதற்குப் பாதை அமைத்துத் தந்திட வேண்டும்” – என்றார்கள்.
காமராஜர் இதைக் கேட்டுச் சிரித்துக் கொண்டே,
” நான் நீங்களெல்லாம் நன்றாக வாழ்வதற்குப் பாதை தேடுகிறேன். நீங்கள் செத்தவனுக்குப் பாதை கேட்கிறீர்கள்!” என்றார்.
காமராசர் மேடையில் இருக்கும் போதே ஒரு பேச்சாளர்,
”காங்கிரஸ் ஆட்சிக்கு வருமானால், உழுபவனுக்கு நிலம் சொந்தமாகும்” என்று பேசினார்.
அடுத்துப் பேசிய காமராஜர்,
” நடக்கிறதைச் சொல்லணும். நாங்கள் நம்புகிறதைச் சொல்லணும். உழுபவனுக்கு நிலம் சொந்தமாகனுமின்னு சொல்லுறீங்க. சரி… காங்கிரஸ் ஆட்சிக்கு வந்ததும், அப்படியே தந்து விடுவதா வச்சுக்குவோம்.
அப்புறம் நெல் அறுக்கிறவன், அறுக்கிறவங்களுக்கே நெல் சொந்தம் என்பான். அதை அரைக்கிறவன், அரைக்கிறவனுக்கே அரிசி சொந்தமின்னு சொல்லுவான்” – என்றார்.
‘உழுபவனுக்கே நிலம் சொந்தம் என்று பேசியவரும், ஏன் கேட்டுக் கொண்டு இருந்த பொது மக்களும் அசந்து போனார்கள்.
1971 – ஆம் ஆண்டு நடந்த பொதுத் தேர்தலில் இந்திரா காங்கிஸ் அமோக வெற்றி பெற்றது. காமராஜர் சார்ந்திருந்த பழைய காங்கிரஸ் படுதோல்வி அடைந்திருந்தது.
தொண்டர்கள் காமராஜரிடம் வந்து,
”ஜயா! அவர்கள் வெற்றிக்கு காரணம் ”ரஷ்ய மை” வைத்து ஏமாற்றி விட்டார்கள். வாக்குச் சீட்டில் ரஷ்ய மை தடவிவிட்டார்கள்” என்று கூறினார்கள்.
இதைக் கேட்ட காமராஜர்,
”ஜனநாயகத்திலே நம்பிக்கை உள்ளவர்களின் பேச்சா இது. நாம் தேர்தலிலே தோற்றதிற்குக் காரணம் ‘மை’ என்கிறீர்களே! அதுவா உண்மை? இல்லை. நம்மை மக்கள் ஏற்றுக் கொள்ளவில்லை என்பதுதான் உண்மை” – என்றார்.
அமெரிக்க அதிபர் நிக்ஸன் இந்தியாவுக்குச் சுற்றுப் பயணம் வந்திருந்தார். அவர் பெருந்தலைவர் காமராஜரைச் சந்திக்க விரும்பினார். புது டெல்லியிலிருந்து தேதி மற்றும் நேரம் கேட்டுத் தகவல் வந்திருந்தது. இதைக் காமராஜரிடம் கூறினார்கள்.
”பார்க்க முடியாதுன்னேன்” – என்று காமராஜர் பதில் சொல்லி விட்டார். ஏன் இப்படிச் சொல்கிறார்? வந்து பார்க்க விரும்புவதோ அமெரிக்க அதிபர். குழப்ப மடைந்தார்கள் கூடியிருந்தவர்கள்.
அவர்களைப் பார்த்துக் காமராஜர் சொன்னார். அண்ணாத்துரை அமெரிக்கா சென்றிருந்தார். அப்போது அவர்அமெரிக்கா அதிபர் நிக்ஸனைச் சந்திக்க விரும்பினார். பார்க்க மறுத்திவிட்டாராம் நிக்ஸன். அப்படிப்பட்டவரை நான் ஏன் பார்க்க வேண்டும்” என்றார் காமராஜர்.
இ. ஆரோன் ஜோஷ்வா ரூஸ்வெல்ட்
No comments:
Post a Comment