திருக்குறள் வழி நின்று திருவள்ளுவரை அறிதல்-102:
திருக்குறளில் அரசியல்:
அரசியலில் ஒரு தலைவரின் சொல்வன்மை என்பது அவரது ஆளுமையை பிரதிபலிக்கிறது. திருவள்ளுவர் ‘அறம்” என்பதனை ஒரு தத்துவமாக மட்டும் கூறாமல், அதனைச் செயல்முறை அரசியலில் எவ்வாறு பொருத்துவது என்பதையும் விளக்குகிறார். அரசியல் சூழலில் ‘புறங்கூறாமை’ என்பது மற்றவர்களின் நற்பெயருக்குப் பின்னால் களங்கம் விளைவிப்பதைக் குறிக்கிறது. இது இன்றைய காலத்து ‘Character Assassination’’ எனப்படும் ஆளுமைச் சிதைவிற்கு ஒப்பானது. ஒரு நாட்டின் அமைச்சரவையில் இருக்கும் உறுப்பினர்களுக்கு இடையே பரஸ்பர நம்பிக்கையும் மரியாதையும் இருக்க வேண்டும். ஆந்த நம்பிக்கை சிதையும்போது, நிர்வாகம் நிலைகுலையும் என்று திருவள்ளுவர் எச்சரிக்கிறார்.
இனி குறள்களுக்குச் செல்வோம். பின்வரும் குறளில்,
செருக்குஞ் சினமும் சிறுமையும் இல்லார்
பெருக்கம் பெருமித நீர்த்து -431 என்கிறார். அதாவது, தான் என்னும் அகங்காரம், கோபம் மற்றும் இழிவான நடத்தைகள் இல்லாத ஆட்சியாளர்களின் செல்வம்தான் மேன்மையானது என்கிறார்.
ஆட்சியாளருக்கு எவையெல்லாம் கேடானவைகள், எந்த சிந்தனைகள் அவர்களிடத்தில் இருக்கக்கூடாது என்பதனை திருவள்ளுவர் கூறுகிறார் பின்வரும் குறளில்
இவறலும் மாண்பிறந்த மானமும் மாணா
உவகையும் ஏதம் இறைக்கு -432
அதாவது, நியாயமாக ஒருவருக்கு தேவைப்படுவதை கொடுக்காமல் இருப்பது, பெரியோர் என்று தெரிந்திருந்தும் தம்முடைய பதவிப் பெருமைக்காக வணங்காமல் இருப்பது மற்றும் இழிவான நடத்தைகள் ஆகியவற்;றில் மகிழ்ந்திருப்பது போன்றவை ஆட்சியாளருக்கு உரிய குற்றங்களாகும்.
அடுத்தக் குறளில், தலைவனானவன் எந்தளவிற்கு உண்மைத் தன்மையானவராக இருக்க வேண்டும், நீதியானவராக இருக்க வேண்டும் என்று குறிப்பிடுகிறார். அதாவது பழிபாவங்களுக்கு அஞ்சி நடப்பவர் சிறுதானிய வகைகளில் ஒன்றான தினையளவு குற்றம் வரும் என்றால் அதனை பனை அளவு பெரியது என்று கருதி வருந்துவார்.
தினைத்துணையாங் குற்றம் வரினும் பனைத்துணையாக்
கொள்வர் பழிநாணு வார் -433
அப்படி என்றால் பழிச் சொல் வரும் செயலை தவிர்த்து விடுவர் என்று புரிந்து கொள்ளலாம். உதாரணமாக இலஞ்சம் வாங்குதல், போதைப் பழக்கத்திற்கு ஆளாதல் போன்ற செயல்களில் இருந்து விலகிச் செல்வர் எனலாம்.
ஒருவர் எத்தகைய நல்ல செயல்களில் ஈடுபட்டவராக இருந்தாலும் பல தான தர்மங்கள் செய்திருந்தாலும் அவர் செய்யும் ஒரு குற்றம் அவருடைய வாழ்வையே மாற்றிவிடும் நிலைக்குக் கொண்டு வந்துவிடும். ஆகவே, குற்றச் செயல்களைத் தவிர்ப்பது சாலச் சிறந்தது என்று குறிப்பிடுகிறார் திருவள்ளுவர்.
குற்றமே காக்க பொருளாகக் குற்றமே
அற்றந் த்ரூஉம் பகை -434
குற்றமே ஒருவனுக்கு அழிவை உண்டாக்கும் பகையாகும், ஆகையால் குற்றம் செய்யாமல் இருப்பதையே நோக்கமாகக் கொண்டு தன்னை எப்போதும் காத்துக் கொள்ள வேண்டும் என்கிறார்.
ஏந்த ஒரு செயலைச் செய்தாலும் திட்டமிட்டு செய்தல் சிறந்தது, உதாரணமாகச் சொல்ல வேண்டும் என்றால் மருத்துக் காப்பீடிற்கான தொகை குறைவு ஆனால், அந்த தொகை பெருஞ்செலவாகக் கருதி தவிர்த்து, அதில் ஆர்வம் காட்டாது செல்லும் நிலையானது திடீரென்று அக்குடும்பத்தில் சம்பாதிப்பவருக்கு அறுவை சிகிச்சை என்ற நிலை வந்தால் அவதிப்படும் நிலை ஏற்பட்டு விடுகிறது. பொருளாதார இழப்பு ஏற்படு;ம் நிலை உருவாகிறது. சில சமயம் அதிக வட்டிக்கு கடன் வாங்கும் நிலை, நகையை இழக்கும் நிலை, வீடு அல்லது நிலத்தினை அடமானம் அல்லது விற்கும் நிலையளவு சென்று விடுகிறது. ஆனால், உரிய மருத்துக் காப்பீடு எடுத்திருப்பார்களேயானால் இந்த நிலையினை அவர்கள் தவிர்த்திருக்க முடியும். இதனையே திருவள்ளுவர்.
வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர்
வைத்தூறு போலக் கெடும் - 435 என்று குறிப்பிடுகிறார்.
பிற்காலத்தில் வரக்கூடிய துன்பத்தை முன்கூட்டியே எண்ணித் தற்காத்துக் கொள்ளாதவருடைய வாழ்க்கைஇ நெருப்பின் முன்னால் வைக்கப்பட்ட வைக்கோல் போர் போல அழிந்துவிடும் என்கிறார். ஆகவே, நாமும் வருகின்ற புத்தாண்டிலும் நம்முடைய முன்னேற்றத்தினை அது ஆரோக்கியமாக இருந்தாலும், பொருளாதாரமாக இருந்தாலும், குடும்ப நலமாக இருந்தாலும் தொலை நோக்குத் திட்டத்துடன் செயல்படும் போது, நமக்கான முடிவுகள் மகிழ்ச்சியை நமக்கு கொண்டு வந்து சேர்க்கிறது. அனைவரும் வரும் ஆங்கிலப் புத்தாண்டு நலமாகவும், வளமாகவும், மகிழ்வாகவும் அமைய வாழ்த்துக்கள். அனைவருக்கும் ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துகள்.
தொடர்ந்து பார்ப்போம்...
குறிப்பு: இணைக்கப்பட்டுள்ள படங்கள் மற்றும் காணொலி ஆகியவற்றை செயற்கை நுண்ணறிவுத் தொழில் நுட்பத்தில் உருவாக்கியுள்ளேன். பிழையிருப்பின் பொறுத்துக் கொள்க.
நன்றி
https://www.youtube.com/@AAAInfotainment
தோப்பு
No comments:
Post a Comment