Wednesday, 10 December 2025

திருக்குறள் வழி நின்று திருவள்ளுவரை அறிதல்-99:

திருக்குறள் வழி நின்று திருவள்ளுவரை அறிதல்-99:
திருக்குறளில் அரசியல்: 

திருக்குறளில் அரசியல் என்னும் தலைப்பில் பார்த்துக் கொண்டிருக்கின்றோம். கடந்த வாரம், நல்ல அரசனுக்கு என்னவெல்லாம் பௌதிக ரீதியாக இருக்க வேண்டும் என்று பார்த்தோம். 
அடுத்தபடியாக, அரசின் பௌதிகச் சொத்துகளை நிர்வகிக்கத் தேவையான உளவியல் மற்றும் நடத்தைப் பண்புகளை திருவள்ளுவர் உடனடியாகக் குறிப்பிடுகிறார்.  
அஞ்சாமை ஈகை அறிவூக்கம் இந்நான்கும்
எஞ்சாமை வேந்தர்க் கியல்பு - குறள் 382
இன்றியமையாத குணங்களாக அஞ்சாமை , ஈகை (கொடை), அறிவு (ஞானம்) மற்றும் ஊக்கம் (விடாமுயற்சி) ஆகியவற்றைக் குறிப்பிடுகிறார். இதில் 
அஞ்சாமை என்பது வெறும் போர்களத் துணிவினை மட்டுமல்லாது, கடினமான சூழல்களில் முடிவுகளை எடுப்பது குறித்த தார்மீகத் துணிவு மற்றும் எந்த மாதிரியான விமர்சனங்களையும் எதிர்கொள்ளும் அறிவுசார்ந்த துணிவைக் குறிப்பிடுகிறார். பயந்து நடுங்கும் தலைவர் தன்னுடைய அரசு முடங்குவதற்குக் காரணமாகி விடுகிறார். 
ஈகை என்று பார்க்கையில் செல்வம் மற்றும் நலத்திட்டங்களைப் பகிர்ந்தளிக்கும் மனப்பான்மையினைக் குறிப்பிடுகிறார். நவீன காலக்கட்டத்தில், இது சமூக நலம் மற்றும் பொருளாதார வளர்ச்சியின் சமமான பகிர்ந்தளித்தலையும் அர்த்தப்படுத்துகிறது. 
அறிவு (!ஞானம் ) என்பது விமர்சனச் சிந்தனை, கற்றல் மற்றும் பொய்யிலிருந்து உண்மையை அறியும் திறன் ஆகியவற்றினைக் குறிக்கிறது. திருக்குறள் முழுமையையும் பார்த்தால் திருவள்ளுவர் அறிவுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பது தெரியவரும். இது நிர்வாக அடிப்படையில் ஒரு அறிவுசார் செயல்பாடு என்பதனைக் காட்டுகிறது. 
ஊக்கம் அல்லது விடாமுயற்சி அல்லது ஆற்றல் என்பது சோர்வற்ற உற்சாகம் மற்றும் உழைப்பினைக் குறிக்கிறது. அரசு என்பது ஒழுங்கின்மையைக் குறைக்கும் ஒரு இயந்திரம், தலைவரிடமிருந்து தொடர்ந்து ஆற்றல் அடிநிலை வரை எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கும். தலைவரிடமிருந்து தொடர்ந்து ஆற்றல் கிடைக்கவில்லை என்றால், ஒழுங்கு குழப்பமாக மாறும் ஆதலால் தொடர் ஊக்கமானது முக்கியமான ஒன்றாகும். 

மேலே அரசனின் தலையாயக் குணநலன்களைக் குறிப்பிட்ட திருவள்ளுவர் அடுத்தக் குறளில் அரசனின் பண்புகளாக இருக்க வேண்டியவற்றைத் தெளிவுபடுத்துகிறார். 
தூங்காமை கல்வி துணிவுடைமை இம்மூன்றும் 
நீங்கா நிலனான் பவர்க்கு -383 என்கிறார். 
‘தூங்காதே தம்பித் தூங்காதே...” என்ற பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் அவர்களின் பாடலைக் கேட்டிருப்போம். அதில் தனது கடமைகளை தாமதப்படுத்துவதால் என்னென்ன விளைவுகள் ஏற்படும் என்பதனை ‘தூங்காதே” என்று விவரித்திருப்பார். இங்கேயும் திருவள்ளுவர் முன்னரே அவ்விதம் கூறிவிட்டார். நாட்டை ஆளும் மன்னவருக்கு காலம் தாழ்த்தாத தன்மை (தூங்காமை), அனைத்தையும் அறியும் கல்வி, தீயவற்றை எதிர்க்கின்ற போதிலும் நல்லவற்றை செய்வதற்கு ஏற்ற துணிவு ஆகியவை நாட்டை ஆளும் மன்னவரை விட்டு நீங்காமல் எப்போதும் நீடித்து இருக்க வேண்டும் என்கிறார். 
அத்தோடு நில்லாமல் சிறந்த அரசன் எனப்படுபவன் யார்? ஏன்று அடுத்தக் குறளில் விளக்குகிறார். 
அறனிழுக்கா தல்லவை நீக்கி மறனிழுக்கா
மானம் உடைய தரசு-384
அதாவது ஆட்சி முறைக்கு உரிய அறத்தில் (மக்களின் நலனை முதன்மையாக வைத்து செயல்படுதல்) இருந்து விலகாமல், அறமற்ற கொடுமைகள் தன் நாட்டில் நடைபெறாமல் விலக்கியும் (மதுவிலக்கு, மதத் தூண்டுதல்கள் போன்றவை) வீரத்தில் குறைபடாத மானத்தையும் உடையவனே சிறந்த அரசன் என்கிறார். மேற்கூறிய குறளின் மூலம் அறத்தையும், மறத்தையும் ஒருங்கே வலியுறுத்துகிறார் திருவள்ளுவர். 

தொடர்ந்து பார்ப்போம்...

குறிப்பு: இணைக்கப்பட்டுள்ள படங்கள் மற்றும் காணொலி ஆகியவற்றை செயற்கை நுண்ணறிவுத் தொழில் நுட்பத்தில் உருவாக்கியுள்ளேன். பிழையிருப்பின்  மற்றும் தாமதத்திற்குப் பொறுத்துக் கொள்க.

நன்றி

https://www.youtube.com/@AAAInfotainment

தோப்பு


No comments:

Post a Comment