Wednesday, 29 October 2025
திருக்குறள் வழி நின்று திருவள்ளுவரை அறிதல்-93:
Wednesday, 22 October 2025
திருக்குறள் வழி நின்று திருவள்ளுவரை அறிதல்-92: ஆள்வினையுடைமை :
ஆள்வினையுடைமை :
கடந்த வாரம் ஆள்வினை உடைமை அதிகாரத்தின் முற்பகுதியைப் பார்த்தோம். இந்த வாரம் அதன் பிற்பகுதியைப் பார்ப்போம். எந்த ஒரு ஊக்குவிப்புப் பயிற்றுனரும் (ஆழவiஎயவழைn வுசயiநெச) முக்கியமாக குறிப்பிடுவது வெற்றியை அல்ல, அதற்கான முயற்சியையே ஆகும். நம்முடைய முயற்சியை எவ்விதம் மேம்படுத்துவது என்பதே பல வித பயிற்றுனர்களும் நமக்கு பயிற்றுவிப்பது. இந்த விடயத்தை, முயற்சி நிச்சயம் நல்ல பலனைத் தரும் என 2000 வருடங்களுக்கு முன்னரே ஆணித்தரமாக குறிப்பிடுகிறார் திருவள்ளுவர் அவர்கள்.
முயற்சி திருவினை ஆக்கும் முயற்றின்மை
இன்மை புகுத்தி விடும் -616
இடைவிடாத தொடர் முயற்சியானது ஒருவனுக்குச் செல்வத்தைப் பெருகச் செய்யும், முயற்சி இல்லாமல் இருப்பதோ அவனிடத்தில் வறுமையைச் கொண்டு போய்ச் சேர்த்து விடும் என்கிறார்.
மடியுளாள் மாமுகடி என்ப மடியிலான்
தாளுளான் தாமரையி னாள் -617
மேற்கூறிய குறளுக்கு கலைஞர் அவர்கள் சொல்லும் விளக்கமானது, திருமகள், மூதேவி எனப்படும் சொற்கள் முறையே முயற்சியில் ஊக்கமுடையவரையும், முயற்சியில் ஊக்கமற்ற சோம்பேறியையும் சுட்டிக் காட்டிப் பயன்படுவனவாகும் என்கிறார். எனக்கு இக்குறளில் மாற்றுக் கருத்து உள்ளது. ஏனெனில் தமிழ்ச் சமூகம் மூதேவி என்னும் மூத்த தேவியை, தவ்வையைதான் முன்னர் வழிபட்டது, பிறகு அது சூழ்ச்சியால் வீழ்த்தப்பட்டுள்ளது என்பது எனது கருத்து. இன்றும் ‘ஜேஸ்டா தேவி ” என்ற பெயரில் இந்தியாவின் பல இடங்களில் அழைக்கப்படுகிறார். திருவானைக்கோவில் ஐம்புகேசுவரர் ஆலயத்திலும் இவருக்கென்று இடமுண்டு. போகரும் இவருக்கென்று தனிப்பாடலை இயற்றியுள்ளார்.
பலரும் சொல்லக் கேட்டிருப்போம் என்னுடைய இந்த நிலைக்கு என்னுடைய முன்னோர் செய்த பாவம் தான், ஆதலால், தான் நான் வறுமை நிலையில் இருக்கின்றேன், ஆதலால் தான் எனது குழந்தை ஊனமுற்ற நிலையில் பிறந்துள்ளது என்று தவறாக எண்ணுவதுண்டு. உண்மையில் பல விடயங்களை அவர்கள் ஆய்ந்து அறிந்தாலே பலவற்றையும் சரி செய்து விட முடியும். குழந்தை கருவுற்ற 2 மாதத்திற்குள்ளேயே அது டௌன் சின்ட்ரோம் என்ற நிலையில் இருக்கிறதா என்று ஆய்ந்தறிந்து அதனைத் தடுப்பதற்கான மருந்துகள் இருக்கின்றன. இப்போது மரபு சார்ந்த பிரச்சனைகள் கருவிலேயே தடுக்கும் அளவிற்கு மருத்துத் துறையில் முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளது. ஆனால், விதியையே குறை சொல்வது ஒருவருடைய ஊக்கமின்மையும் முயற்சியின்மையையும் குறிக்கிறது. இதுதான் ஒருவர் தொடர்ந்து வறுமை நிலையில் இருப்பதற்கும் காரணமாகும், ஒருவர் ஏழையாக பிறப்பது அவர் குற்றமில்லை ஆனால், ஏழையாகவே இறப்பதற்கு அவர்தான் காரணமாக இருக்கிறார் என்பதனை அவர் உணர வேண்டும். அது அவருடைய முயற்சியின்மைதான் என்பதனை வள்ளுவர் இவ்விதம் குறிப்பிடுகிறார்.
பொறியின்மை யார்க்கும் பழியன்று அறிவறிந்து
ஆள்வினை இன்மை பழி -618
நல்லது விளைவிக்கும் விதி இல்லாமல் இருப்பது என்பது யாருக்கும் குற்றம் ஆகாது, அறிய வேண்டியவைகiளா அறிந்து அதற்குரிய முயற்சி செய்யாமல் இருப்பதே ஒருவனுக்கானப் பழி ஆகும் என்கிறார்.
ஒருவனுக்கு உச்சபட்ச ஊக்கம் தருவதென்றால் எப்படித் தரலாம்? இதோ ஐயன் தருகிறார் பாருங்கள்!
தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன்
மெய்வருத்த்க் கூலி தரும் -619 என்கிறார்.
ஒவ்வொருவரும் தன்னால் முடியவில்லை என்று எளிதாக தெய்வத்தின் மீது பழியை அல்லது சுமையை இறக்கி விட்டுச் செல்வார்கள். ஆனால், அந்தத் தெய்வத்தின் அருளாலே கைகூடாது போனாலும் கவலைப் படாதே ஒருவனுடைய முயற்சியானது, தம் உடல் உழைப்பிற்கு ஏற்றப் பலனைத் தப்பாமல் தந்துவிடும் என்கிறார்.
அடுத்தக் குறளில்
ஊழையும் உப்பக்கம் காண்பர் உலைவின்றித்
தாழாது உஞற்று பவர் -620 என்கிறார்.
618 ஆவது குறளினை இக் குறளில் ஆணித்தரமாக விளக்குகிறார்.
ஒருவர் சோர்வும் இல்லாமல் முயற்சியிலும் குறைவும் இல்லாமல் இடைவிடாமல் செய்பவர்கள், கெடுதலான விதியையும் வென்று, புறமுதுகு காட்டி ஓடச் செய்பவர்கள் ஆவார்கள் என்கிறார். இதைவிட ஒருவனுக்கு எப்படி நம்பிக்கையளிப்பது. விதியே என்று உட்கார்ந்திருப்பவர்களுக்கு நீதான்டா விதியை உடைக்கும் சதி என்று அவன் சோம்பலை துவம்சம் செய்து ஆற்றல் அளிக்கும் வீரியமிகுந்த நம்பிக்கையை திருவள்ளுவர் அவர்கள் அளிக்கிறார்கள். சோர்வுடன் இருப்பவர்கள் இக்குறள்களை உரமிக்க வாக்காக எடுக்கக்கடவது.
தொடர்ந்து பார்ப்போம்...
குறிப்பு: இணைக்கப்பட்டுள்ள படங்கள் மற்றும் காணொலி ஆகியவற்றை செயற்கை நுண்ணறிவுத் தொழில் நுட்பத்தில் உருவாக்கியுள்ளேன். பிழையிருப்பின் மற்றும் தாமதத்திற்குப் பொறுத்துக் கொள்க.
நன்றி
https://www.youtube.com/@AAAInfotainment
Wednesday, 15 October 2025
திருக்குறள் வழி நின்று திருவள்ளுவரை அறிதல்-91:
தொடர்ந்து பார்ப்போம்...
குறிப்பு: இணைக்கப்பட்டுள்ள படங்கள் மற்றும் காணொலி ஆகியவற்றை செயற்கை நுண்ணறிவுத் தொழில் நுட்பத்தில் உருவாக்கியுள்ளேன். பிழையிருப்பின் மற்றும் தாமதத்திற்குப் பொறுத்துக் கொள்க.
நன்றி
https://www.youtube.com/@AAAInfotainment
தோப்பு
Tuesday, 7 October 2025
திருக்குறள் வழி நின்று திருவள்ளுவரை அறிதல்-90: ஊக்கமுடைமை:
திருக்குறள் வழி நின்று திருவள்ளுவரை அறிதல்-90:
ஊக்கமுடைமை:
கடந்த வாரம் ஊக்கமுடைமை அதிகாரத்தின் முதல் பகுதியைப் பார்த்தோம். இந்த வாரம் அதன் பிற்பகுதியைக் காண்போம். எண்ணம் போல் வாழ்க்கை என்று கேள்விப்பட்டிருப்போம். பலரும் அதனை உணர்ந்திருப்பர். அதே போல் எதிர்மறை எண்ணங்களைத் தவிர்க்க வேண்டும் என்றும் குறிப்பிடுவர். எதிர்மறையாகப் பேசுவதையும் தவிர்க்க வேண்டும் என்றும் குறிப்பிடுவதுண்டு, ஏனெனில் ‘ஒரு சொல் வெல்லும், ஒரு சொல் கொல்லும்” என்ற நம்பிக்கையின் வெளிப்பாடே அது. ஆதலால், எந்த நிலையிலும் நேர்மறையாக எண்ணும் போதும் செயல்படும் போதும் நமக்கான முன்னேற்றத்தினை கண்கூடாகக் காண முடியும். முன்னேற்றம் என்றால் சிலர் பொருளாதார அளவுகோலையேக் கொள்கின்றனர். எப்போதும் முன்னேற்றம் என்பது தன்னுடைய முயற்சியில் பொருளாதாரத்திலோ, தொழில் ரீதியாகவோ உயர்வினைக் கண்டாலும் மனதளவில் ஏற்படும் முன்னேற்றத்தை அல்லது விளைவுகளை அவர் எவ்வாறு கொள்கிறார் என்பதிலேயே அமைகிறது. ஏனெனில் பணம் நிறைய சேர்ந்தும் மன உளைச்சலுடன் இருப்பவர்களைப் பார்க்க முடிகிறது. இச்சூழலில் இருப்பவர்கள் செந்நாப்போதரின் வார்த்தைகளை புரிந்து கொள்வது சாலச் சிறந்தது. பின்வரும் குறளில் திருவள்ளுவர் குறிப்பிடுவதாவது
உள்ளுவ தெல்லாம் உயர்வுள்ளல் மற்றது
தள்ளினுந் தள்ளாமை நீர்த்து -596
நமக்கெல்லாம் மிகப் பரிச்சயமான இந்தக் குறளில் நினைக்கக்கூடியவற்றை அல்லது எண்ணக்கூடியவை எல்லாம் உயர்ந்த நினைப்பாகவே இருக்க வேண்டும், ஒரு வேளை அந்த நிலை கைகூடாத நிலையிலும், அப்படி நினைப்பதை மட்டும் கைவிடவேக் கூடாது என்கிறார். சாலமன் பாப்பையா அவர்கள் உரையில் குறிப்பிடும் போது ‘எண்ணியபடி வேறு காரணங்களால் நிறைவேறாமல் போனாலும், பெரியோர் நம்மைப் பாராட்டுவார், ஆகவே அது நிறைவேறியதாக கருதப்படும்” என்கிறார். திருவள்ளுவரை இந்த வகையினர் என்று பிரிக்க இயலாதவாறு பலதுறையிலும் சிறந்து விளங்கியவர். அவருடைய குறளில் தான் எத்தனை அணிகள், உவமைகள், கருத்துக்கள், தத்துவங்கள் மற்றும் ஒப்புமைகள் என்று பலவாறு பெருமைப்படும் அளவிற்கு அடுக்கிக் கொண்டே செல்லலாம், ஒருவருடைய ஊக்கம் என்பது எப்படி இருக்க வேண்டும்? சிலர் வாழ்க்கையில் எவ்வளவு வலியைப் பெறுகின்றனர்? எவ்வளவு சோகங்களை அனுபவிக்கின்றனர்? எவ்வளவு துரோகங்களை எதிர்கொள்கின்றனர்? அவற்றை எப்படிக் கடந்து செல்வது. இதோ, கீழே வள்ளுவர் உரைக்கிறார்...
சிதைவிடத்து ஒல்கார் உரவோர் புதையம்பிற்
பட்டுப்பா டூன்றுங் களிறு -597
அதாவது போரில், தன்னுடைய உடம்பில் தன் உடம்பே மறையும் அளவிற்கு அம்புகளால் புண்பட்ட போதும், யானையானது தன் தொடர்ந்து முன்னேறிச் சென்று தன் பெருமையை நிலை நிறுத்தும்; அதுபோல ஊக்கம் உடையவர் அழிவிலும் தளர மாட்டார்கள் என்கிறார். எவ்வளவு இடர் வந்த போதிலும் மனதில் திடமான ஊக்கம் உடையவர் முன்னேறிச் செல்வர் என்பதற்கு எவ்வளவு அருமையான ஒரு உதாரணம்! வள்ளல் என்று ஒருவர் எவ்வாறு போற்றப்படுகிறார். இல்லை என்று ஒருவர் வரும் போது தன்னிடம் இருப்பதில் இருந்து கிள்ளிக் கொடுப்பதல்ல கொடை, அள்ளிக் கொடுப்பதே ஆகும். இந்தக் கதையை நான் கேட்டதுண்டு, ஒரு முறை அர்ஜீனன் கிருஷ்ணரிடம், நான் நிறைய கொடைக் கொடுக்கிறேன். ஆனால், கர்ணனைத்தான் எல்லோரும் புகழ்கின்றனர் என்று வருத்தப்பட்ட வேளையிலே, கிருஷ்ணன் அர்ஜீனனை அஸ்தினாபுரம் பகுதி நோக்கி இரதத்தை விட்டார். அப்போது அவருடைய வலிமையால் அங்கு இருந்த மலையை தங்க மலையாக மாற்றினார், பிறகு, அர்ஜீனரிடம் இப்போது இந்த மலை உனக்குச் சொந்தம், நீ விரும்பும் வகையில் கொடையளிக்கலாம் என்றார், உடனே, அர்ஜீனன், ஊருக்குச் சென்று அனைத்து மக்களையும் வரச் செய்து, இந்த மலையில் இருந்து தங்கங்களை வெட்டி எடுத்துக் கொள்ளச் சொன்னார். உடனே மக்கள் மலை மலையாக அங்குக் குவிந்தனர். அனைவரும் அந்த இடத்தில் தங்கம் வெட்டுவதையே குறியாக இருந்தனர். அங்கு அர்ஜீனன் இருந்ததையோ, கிருஷ்ணன் இருந்ததையோக் குறித்துக் கவலைப் படவில்லை. அவர்களுக்கு தள்ளுமுள்ளு ஏற்படும் பிரச்சனையாகிவிடும் என்று சமமாகப் பகிர்ந்தளிக்க வேண்டும் என்று அர்ஜீனரும் சேர்ந்து அவர்களோடு சேர்ந்து வெட்டி சரிசமமாக பிரிக்க முயன்று களைப்புற்றார். ஆனாலும், அனைவருக்கும் கொடுத்து முடியவில்லை. களைப்போடு கிருஸ்ணரை நோக்கினார். பிறகு, கிருஷ்ணன், கர்ணனை வரவழைத்து, கர்ணனுக்கும் அதே போன்று மலையைப் பரிசளித்தார். கர்ணன் அந்த மலையைப் பார்த்தபிறகு கிருஷ்ணருக்கு நன்றி தெரிவித்து விட்டு வந்து அந்த ஊரில் உணவகம் வைத்திருந்த குடும்பத்தினை வரவழைத்தார். வரவழைத்து இந்த ஊரில் யாரும் பசியோடு இருக்கக்கூடாது. இந்த ஊரைக் கடந்து செல்பவர்களும் வயிறார சாப்பிட வேண்டும் அந்தப் பணியை நீங்கள் தான் செய்ய வேண்டும். இந்தத் தங்க மலை முழுவதும் உங்களுக்குத் தான் உங்கள் சேவைக்கான செலவினத்தை இந்த மலையை வெட்டி மேற்கொள்ளுங்கள் என்று ஆணையிட்டடர். கிருஷ்ணர் அர்ஜீனரைப் பார்த்தார். புhர்த்தாயா, நீ இதை எப்படி பகிர்ந்தளிப்பது என்று உன் அறிவின் மூலம் எண்ணினாய். ஆனால், எந்த வித சிரமம் இல்லாமல் மக்கள் நிலையில் இருந்து நிரந்தத் தீர்வினை உடனே வழங்கி விட்டான்” என்றார். இந்தக் கதை உண்மையில் நடந்ததா என்பது தெரியாது, நான் கேள்விப்பட்டது. அதிலும் நினைவில் இருப்பதை வைத்து எழுதியுள்ளேன். இதில் முக்கியமான விடயம் என்னவென்றால் வள்ளல் தன்மை தான் உடையவன் என்று எண்ணத்தில் கொடுப்பதில்லை. யோசிக்காமல் வருபவருக்குக் கொடுப்பதேயாகும். பல பேரும், தாங்கள் கொடை வழங்குகிறோம் என்ற பெயரில் கடமைக்கு செய்வதுண்டு. ஆனால், பெருமன்னர்கள் இருந்த போதும், ஏன் கடையேழு வள்ளல்கள் பெயர் பெற்றனர், அவர்கள் தானம் வழங்குகையில் எந்தச் சலனமும் மனதில் ஏற்றிக் கொள்ளவில்லை, பார்த்தனர், உணர்ந்தனர், அளித்தனர் அவ்வளவே. சில சமயம் முட்டாள் தனமாகக் கூடத் தோன்றும். ஏன் முல்லைக் கொடிக்கு ஒரு கம்பை நட்டால் அது அதனைப் பற்றி ஏறியிருக்குமே தேரை ஏன் கொடுத்தார் பாரி?, பாடலுக்காக பாணனுக்கு குறும்பொறை நாட்டையா எழுதி கொடுப்பான் ஓரி ? என்றெல்லாம் நமக்குத் தோன்றும், எந்தச் சலனமும் இல்லாமல் கொடுத்ததால் தான் அவர்கள் வள்ளல்கள் எனப் பெயர் பெற்றனர். இதனையே வள்ளுவர் குறிப்பிடுகிறார்.
உள்ளம் இலாதவர் எய்தார் உலகத்து
வள்ளியம் என்னுஞ் செருக்கு -598
கலைஞர் அவர்கள் தம்முடைய உரையில் மேற்கண்ட குறளுக்குக் குறிப்பிடுவதுபோல அள்ளி வழங்கும் ஆர்வம் இல்லாத ஒருவர் தம்மை வள்ளல் எனப் பெருமைப்பட்டுக் கொள்ள வழியே இல்லை என்கிறார். ஊக்கம் என்பது ஒருவருடைய உருவத்தை வைத்து அமையுமா? இல்லை, ஊக்கம் என்பது உள்ளார்ந்த உணர்வு, அது உருவத்தை வைத்து வருவதில்லை. ஆதலால், ஒருவரின் வெளித்தோற்றத்தை வைத்து இவர் ஊக்கமுடையவர் என்று அறுதியிட்டுக் கூற முடியாது. பின்வரும் குறளில் தெளிவாக ஐயன் குறிப்பிடுகிறார்.
பரியது கூர்ங்கோட்டது ஆயினும் யானை
வெரூஉம் புலிதாக் குறின் -599
என்னதான் யானையானது பெரிய உடலையையும் வலிமையான கூர்மையான தந்தங்களைக் கொண்டிருந்தாலும், மனதில் ஊக்கம் உடைய புலி தன்னைத் தாக்க வரும் போது அஞ்சி நிற்கும் என்கிறார்.
அடுத்தக் குறளில்
உரமொருவற்கு உள்ள வெறுக்கை அஃதில்லார்
மரம்மக்க ளாதலே வேறு-600 என்கிறார்.
ஊக்கமே இல்லாமல் வாழும் ஒருவரை எப்படி பொருத்துவது என்ற நிலையில் இந்த உதாரணத்தைக் கொடுத்துள்ளார். எல்லோரும் செல்வம் நோக்கி ஓடிக் கொண்டிருக்கின்றனர். ஆனால், உண்மையான செல்வம் என்பது அவர் கொண்டுள்ள ஊக்கமே ஆகும். அப்படி ஊக்கம் இல்லாமல் இருக்கும் ஒரு நபர் உருவத்தால் மனிதராக இருந்தாலும் அவர்கள் மரங்களைப் போன்றோரே ஆவார்.
தொடர்ந்து பார்ப்போம்...
குறிப்பு: இணைக்கப்பட்டுள்ள படங்கள் மற்றும் காணொலி ஆகியவற்றை செயற்கை நுண்ணறிவுத் தொழில் நுட்பத்தில் உருவாக்கியுள்ளேன். பிழையிருப்பின் மற்றும் தாமதத்திற்குப் பொறுத்துக் கொள்க.
நன்றி
https://www.youtube.com/@AAAInfotainment
தோப்பு