Wednesday, 30 July 2025

திருக்குறள் வழி நின்று திருவள்ளுவரை அறிதல்-80:

திருக்குறள் வழி நின்று திருவள்ளுவரை அறிதல்-80:
அருளுடைமை:
திருவள்ளுவர் அவர்கள் உடைமை என்னும் தலைப்பில் எழுதிய அதிகாரங்களைப் பற்றிப் பார்த்துக் கொண்டிருக்கின்றோம். அவற்றில் கடந்த வாரம் அன்புடைமை என்னும் அதிகாரத்தைப் பார்த்தோம், இந்த வாரம் ‘அருளுடைமை” என்னும் அதிகாரத்தைப் பார்ப்போம். பெரும்பாலான நீதிக் கதைகளில் அருள் நிறைந்தவரே இறைவனாகவோ, புனிதராகவோ, போற்றுதலுக்குரியவராக இருப்பர். அவருடைய தேஜஸை விளக்குவதற்காக ஒளிவட்டங்கள் கூட காட்டப்படுவதுன்டு, கடந்த வாரம் நாம் பார்த்த அன்புடைமையில் அன்புதான் அனைத்திற்கும் ஆதாரமாக இருக்கிறன்றது என்று பார்த்தோம். அந்த அன்பு மிகுந்த மனிதர் மனதில் அருள் நிறைந்தவர் ஆகின்றார். சரி...செந்நாப்போதர் என்ன சொல்கிறார் என்று பார்ப்போமா?
உலகில் பலரும் தன்னிடம் பணம் இருந்தால் நாம் தான் மிகப் பெரிய சக்தி என்ற இறுமாப்புடன் இருப்பதுண்டு. ஆனால், வள்ளுவர் என்ன சொல்கிறார். 
அருட்செல்வம் செல்வத்துள் செல்வம் பொருட்செல்வம்
பூரியார் கண்ணும் உள -241 என்கிறார், அதாவது பொருள்களாகிய செல்வங்கள் இழிந்தவரிடத்திலும் கூட இருக்கிறது ஆனால், (உயர்ந்தவரிடத்தில் மட்டும் உள்ள) அருளாகிய செல்வமே செல்வங்களில் சிறந்த செல்வமாகும். ஆகவே, பொருள் செல்வத்தைக் காட்டிலும் அருட்செல்வமே மேல் என்கிறார். 
நல்லாற்றால் நாடி அருளாள்க பல்லாற்றால்
தேரினும் அஃதே துணை -242
சமுதாயத்தில் முன்னேற்றமான நிலை எப்படி வேண்டுமானாலும் வரலாம். ஆனால் அதுவல்ல வாழ்க்கை, தீய வழியில் செல்வது மானிட குலத்திற்கு அழகல்ல என்பதே மேற்காணும் குறளில் விளக்கியுள்ளார். நல்ல வழியால் ஆராய்ந்து அருளுடையவர்களாக விளங்க வேண்டும். பலவழிகளால் ஆராய்ந்து கண்டாலும் அருளே வாழ்க்கைக்குத் துணையாக உள்ளது என்கிறார். அருளுடன் இருப்பதுதான் சிறந்தது அதுவும் நல்வழியில் இருந்துதான் வரவேண்டும் என்கிறார். 
அருள்சேர்ந்த நெஞ்சினார்க்கு இல்லை இருள்சேர்ந்த
இன்னா உலகம் புகல் -243
காந்தியடிகளின் மிகப் புகழ்பெற்ற வாக்கியம், ‘என் அனுமதியில்லாமல் என்னை யாரும் தொந்தரவு செய்ய முடியாது” என்கிறார். நடிகர் ஒரு படத்தில் கூட சொல்லும் ஒரு டயலாக்கில் இறுதியாக இந்த உலகமே எதிர்த்தாலும், நீயா ஒத்துக்கிற வரைக்கும் உன்னை எங்கேயும் எப்போதும் தோற்கடிக்க முடியாது’ என்பது போல ஒரு வசனம் இருக்கும் இதைத்தான் 2000 வருடங்களுக்கு முன்னரே தத்துவார்த்மாக நமது திருவள்ளுவர் குறிப்பிடுகிறார் மேலே உள்ள குறளில்... அதாவது அறியாமையாகிய இருள் பொருந்திய துன்ப உலகில் இருந்து வாழும் வாழ்க்கை, அருள் பொருந்திய நெஞ்சம் உடையவர்க்கு இல்லை. அருள் நிறைந்த ஒருவருக்கு நெஞ்சத்தில் எந்த நெருடலும் இருப்பதில்லை. மேலே சொன்ன வாக்கியங்கள் பார்த்தால் எளிதாக இருப்பது போல் தோன்றினாலும் அது.. யாருக்குப் பொருந்தும் என்பது சுயநலமில்லாமல் வாழ்பவர்களுக்கு மிகச் சிறந்த தெளிவுள்ள சிந்தனையாளருக்குமே ஏற்புடையதாக இருக்கும். இதைத் தான் அடுத்தக் குறளிலும் தொடர்கிறார். 
மன்னுயிர் ஓம்பி அருள்ஆள்வாற்கு இல்லென்ப
தன்உயிர் அஞ்சும் வினை -244
தன் உயிரின் பொருட்டு அஞ்சி வாழ்கின்ற தீவினையானது உலகில் நிலைபெற்றுள்ள மற்ற உயிர்களைப் போற்றி அருளுடையவனாக இருப்பவனுக்கு இருப்பதில்லை என்கிறார். அதாவது மனிதன் தெய்வமாக முடியும் என்ற நிலை தான் இது. 
நமக்கு எவ்வளவு நெருக்கடிகள் வந்தாலும் துன்பத்தை உணராமல் இருப்பது எப்படி, அருளாளராக இருப்பது எப்படி? அதற்கு யார் சாட்சி ? என்பதனை அடுத்தக் குறளில் சொல்கிறார். 
அல்லல் அருள்ஆள்வார்க்கு இல்லை வாரிவழங்கும்
மல்லல்மா ஞாலம் கரி -245 அதாவது உள்ளத்தில் ஊறி நிற்கும் அருளின் இயக்கத்தினால் துன்பத்தை உணராமல் கடமையாற்றலாம் என்பதற்கு, காற்றின் இயக்கத்தினால் மிக வலிமையுடன் திகழும் இந்தப் பெரிய உலகமே சான்று என்கிறார். இதில் இரண்டு விடயங்கள் உண்டு ஒன்று வாழ்க்கைத் தத்துவம் மற்றொன்று அவருக்குள் இருக்கும் அறிவியல் ஞானம்.
தொடர்ந்து பார்ப்போம்...
குறிப்பு: இணைக்கப்பட்டுள்ள படங்கள் மற்றும் காணொலி ஆகியவற்றை செயற்கை நுண்ணறிவுத் தொழில் நுட்பத்தில் உருவாக்கியுள்ளேன். பிழையிருப்பின் பொறுத்துக் கொள்க.
நன்றி

No comments:

Post a Comment