திருக்குறள் வழி நின்று திருவள்ளுவரை அறிதல்-77:
கடந்த வாரம் கல்லாமை குறித்து திருவள்ளுவர் எவ்வாறு இடித்துரைக்கிறார் என்று பார்த்தோம். உலக அளவில் தமிழர்கள் கல்வியறிவு பெற்றிருந்த விடயத்தை கல்வெட்டுகள், ஓலைச் சுவடிகள் போன்றவற்றில் எல்லாம் பத்திரப்படுத்தி வைத்திருந்த பெருமை உடையவர்கள். ஆதலால் தான் பல்வேறு மூடநம்பிக்கைளினால் நமது முன்னோர்கள் எழுதிய ஓலைச் சுவடிகள் எரியூட்டப்பட்டும் ஆற்றில் விசிறியடிக்கப்பட்டும் அழிக்கப்பட்டாலும் எஞ்சி நிற்பது உலகம் வியந்து பார்க்கும் அளவிற்கு நிற்கிறது. அதனால், செம்மொழி அங்கீகாரமும் பெற முடிந்தது. ஆனால், நடுவில் கொஞ்சம் பக்கத்தைக் காணோம் என்பது போல பல்வேறு அரசியல் காரணங்களால் கல்வி நிலை பாதிப்படைந்து, பின்வந்த ஆங்கிலேயர்கள் கல்வி புகட்டியது போல மாயை ஏற்பட்டுள்ளது. அவர்கள் அந்த முயற்சி எடுக்கவில்லையெனில் அது அவர்களின் தேவைக்கு உருவாக்கிய போதிலும் அதுவும் மறுமலர்ச்சியைத் தான் தமிழகத்தில் ஏற்படுத்தியது. முன்னாளில் பெற்ற கல்வியறிவானது டிஎன்ஏவில் பொதிந்து நிறைந்துள்ளதால், இன்றும் உலகளவில் தமிழர்கள் அசாத்திய திறமைசாலிகளாக இருந்து வருகின்றதைப் பார்க்க முடிகிறது. இதை எதற்குச் சொல்ல வருகிறேன் என்றால், கல்லாதவர்களைக் குறித்து திருவள்ளுவர் அவர்கள் இகழ்ந்துரைத்தாலும் அதற்கும் மாற்று வழிகளைச் சொல்கிறார்.
கற்றிலன் ஆயினும் கேட்க அஃதொருவற்கு
ஒற்கத்தின் ஊற்றாம் துணை- 415
நூல்களைக் கற்கவில்லை என்றாலும், கற்றறிந்தவரிடம் கேடடுத் தெரிந்து கொள்ள வேண்டும். அது ஒருவனுக்கு வாழ்க்கையில் தளர்ச்சி வந்தபோதும் ஊன்றுகோல் போல் துணையாக இருக்கும் என்கிறார். மேலும், கற்க கசறட என்று நமக்கு சொல்லிக் கொடுத்த பெருநாவலர் திருவள்ளுவர் அவர்கள், கற்றதிலும் கற்றபடி நின்றவர்களிடம் கற்றுத் தெளிய வேண்டும் அதுதான் உபயோகமாக இருக்கும் என்கிறார். ஏனெனில் ஒரு வரலாற்றினை யார் வேண்டுமானாலும் எழுதலாம், கல்வெட்டில் என்ன இருந்ததோ அதனை அப்படியே எழுதுபவர்களும் உண்டு, அதற்கான விளக்கத்தினை தனது விருப்பத்திற்கேற்ப இட்டு கட்டி எழுதுபவர்களும் உண்டு. ஆகவே கற்றபடி ஒழுக்கமாக நிற்பவர்களிடம் கேட்பதே உபயோகமானதாக இருக்கும் என்கிறார். பின்வரும் குறளில்,
இழுக்கல் உடையுழி ஊற்றுக்கோல் அற்றே
ஒழுக்கம் உடையார்வாய்ச் சொல் -415 என்கிறார்.
அதாவது, ஒழுக்கமுடைய சான்றோரின் வாய்ச்சொற்களானது வழுக்கல் உடைய சேற்றுநிலத்தில் நடந்து செல்லும் போது விழுந்துவிடாமல் தாங்கிநிற்கும் ஊன்றுகோல்போல் வாழ்க்கையில் உதவும் என்கிறார். அதேபோல், அறிவானது எப்படி இருக்க வேண்டும் என்றால்,
ஏப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு- 423 என்கிறார்.
எப்பொருளை யார்யாரிடம் கேட்டாலும் (கேட்டவாறே கொள்ளாமல்)அப்பொருளின் மெய்யான பொருளைக் காண்பதே அறிவாகும் என்று விளக்குகிறார் திருவள்ளுவர் பெருமான். மேலும், கல்வியறிவும் உலகஅறிவும் பெற்றவர்களுக்கு பல விடயங்களை முன்னரே யூகிக்க முடியும். ஆதலால், பல துன்பங்களை வராமல் தடுத்துவிட முடியும். இதனை நாம் வீட்டில் பட்ஜெட் போடுவதைக் கூட உதாரணமாகக் கொள்ள முடியும். இந்த மாதம் என்னுடைய வரவு என்ன, நிச்சய செலவுகள் என்னென்ன, சேமிப்பு என்ன? எதிர்பாராத செலவுகள் என்ன என்ன? வரவுக்கு மீறிய செலவுகள் வரும் என்றால் அதனை எதிர்கொள்வதற்கு என்ன செலவுகளைக் குறைக்க முடியும் மற்றும் வருவாயை அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் என்ன என்று கொண்டால், எதிர்பாராமல் விபத்தோ, மருத்துப் பிரச்சனையோ வராமல் காத்துக் கொள்ள அல்லது திடீர் பெரும் செலவைக் கையாள காப்பீடு போன்றவையும் வைத்திருப்பது, எதிர்காலத்தில் வரும் எதிர்பாராத இடர்பாடுகளில் இருந்து நம்மைத் தற்காத்துக் கொள்ள உதவும் என்று ஆணித்தரமாக சொல்லுகிறார் தெய்வப்புலவர் திருவள்ளுவர்.
எதிரதாக் காக்கும் அறிவினார்க்கு இல்லை
அதிர வருவதேர் நோய் - 429
வரப்போவதை முன்னே அறிந்து காத்துக் கொள்ளவல்ல அறிவுடையார்க்கு, அவர் நடுங்கும்படியாக வரக்கூடிய துன்பம் ஒன்றும் இல்லை.
மேலும், பெரியாரைத் துணைக் கோடல் என்ற அதிகாரத்தில் கல்வியறிவு பெற்றதால் அறிஞர் ஆனவரின் சிறப்பினைக் குறிப்பிடுகிறார்.
சூழ்வார்கண் ணாக ஒழுகலான் மன்னவன்
சூழ்வாரைச் சூழ்ந்து கொளல் -445 என்கிறார்.
தக்க வழிகளை ஆராய்ந்து கூறும் அறிஞரையே உலகம் கண்ணாகக் கொண்டு நடத்தலால், மன்னவனும் அத்தகையாரை ஆராய்ந்து நட்புக் கொள்ள வேண்டும். என்கிறார். அதனைத் தொடர்ந்து,
இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன்
கெடுப்பார் இலானுங் கெடும் -448 என்கிறார்.
அதாவது கடிந்து அறிவுரை கூறும் பெரியாரின் துணை இல்லாத காவற்ற அரசன், தன்னைக் கெடுக்கும் பகைவர் எவரும் இல்லாவிட்டாலும் கெடுவான் என்கிறார்.
தொடர்ந்து பார்ப்போம்...
குறிப்பு: இணைக்கப்பட்டுள்ள படங்கள் மற்றும் காணொலி ஆகியவற்றை செயற்கை நுண்ணறிவுத் தொழில் நுட்பத்தில் உருவாக்கியுள்ளேன். பிழையிருப்பின் பொறுத்துக் கொள்க.
நன்றி
No comments:
Post a Comment