அன்புடைமை
நாம் தற்போது திருவள்ளுவர் அவர்களால் உடைமை என்ற தலைப்பில் எழுதியுள்ள குறள்களைப் பார்த்து வருகின்றோம். இந்த வாரம் அன்புடைமை அதிகாரத்தின் தொடர்ச்சியினைக் காண்போம்.
அன்போடு இயைந்த வழக்கென்ப ஆருயிர்க்கு
ஏன்போடு இயைந்த தொடர்பு -73
உயிருக்கு எப்படி உடம்போடு உறவு பொருந்தி இருக்கின்றதோ, அதைப்போல அன்போடு பொருந்தி வாழும் வாழ்க்கைத் தான் பயனுள்ளது என்று கூறுவர் என்கிறார். ஒரு மனிதனுக்கு அன்பு என்ற ஒன்று இல்லையென்றால் அது உயிர் இல்லாத உடம்பிற்கு ஒப்பானதாகக் குறிப்பிடுகிறார். ஆகவே வாழ்க்கையின் அம்சமாக அன்பு இருக்க வேண்டும் என்கிறார்.
அன்புஈனும் ஆர்வம் உடைமை அதுஈனும்
நண்புஎன்னும் நாடாச் சிறப்பு -74 எனக் குறிப்பிடுகிறார். அதாவது அன்பு என்ற ஒன்றுதான் எல்லோரோடும் பழகுவதற்கு வாய்ப்பினை உருவாக்குகிறது. திருவள்ளுவர் குறிப்பிடுகிறார் அன்பு பிறரிடம் விருப்பம் உடையவராக வாழும் தன்மையைத் தரும், அது எல்லோரிடத்தும் நட்பு என்று சொல்லப்படும் அளவற்ற சிறப்பைத் தரும் என்கிறார். மனிதர்களால் பிறருடன் தகவல் தொடர்பு கொள்ளாமல் வாழ்வது அரிது, அப்படி பிறரிடம் பழக வேண்டும் என்றால் நட்பு கொள்ள வேண்டும் என்றால் அன்பானது இருக்க வேண்டும். அடுத்தக் குறளில்
அன்புற்று அமர்ந்த வழக்கென்ப வையகத்து
இன்புற்றார் எய்தும் சிறப்பு – 75 என்கிறார். ஒருவர் சிறப்பு வாழ்கிறவர் என்பது என்ன? ‘உலகத்திலே இன்புற்று வாழ்கின்றவர் அடையும் சிறப்பு என்பது அன்பு உடையவராகிப் பொருந்து வாழும் வாழ்க்கையின் பயன் என்று கூறுவர் எனச் சொல்கிறார். 73, 75 குறள்களில் வழக்கென்ப என்று அவர் குறிப்பிடும்போது, இது என் கருத்தல்ல ஏற்கனவே மக்கள் இப்படித்தான் வழங்கி வருகின்றனர், அதனைத்தான் நான் குறிப்பிடுகிறேன் என்பது போல அவர் சொல்வதாக உணர்கிறேன். ஆப்படியென்றால் அவர் காலத்தில் அப்படிப்பட்ட அறத்துடன் மக்கள் இயல்பாகவே வாழ்ந்து வருகின்றனர் என்று அர்த்தம் கொள்ளலாம். அதற்கு வலுசேர்க்கும் வகையில் அடுத்த குறள் உள்ளது.
அறத்திற்கே அன்புசார்பு என்ப அறியார்
மறத்திற்கும் அஃதே துணை- 76 . அகத்திணை புறத்திணை இரண்டு வகையாக இலக்கியங்கள் தமிழர்களின் ஒழுக்கத்தினைப் பிரித்து கொடுத்தாலும், திருக்குறளிலுமே கூட, அறம் பொருள் என்று பிரிக்கப்பட்டுள்ளது. ஆனால் அன்பு என்று எடுத்துக் கொண்டால், அறத்திற்கு மட்டும் பொதுவானது அல்லது அது வீரத்திற்குமே பொதுவானது என்கிறார் திருவள்ளுவர்.
என்பு இலதனை வெயில்போலக் காயுமே
அன்பு இலதனை அறம் -77
சிலப்பதிகாரத்தில் அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும் என்ற கருப்பொருள் உண்டு. சிலப்பதிகாரத்திலும் திருக்குறள் கருத்துக்கள் ;இழையோடுவது உண்டு. மேற்கூறிய குறலிலும் திருவள்ளுவர் அதனையே குறிப்பிடுகின்றார். எலும்பு இல்லாத புழுப்போன்ற உயிரினங்கள் வெயிலில் இருந்தால் அது அவற்றை வருத்தும் அதுபோல் அன்பு இல்லாத மனிதர்களை அறம் வருத்தும் என்கிறார். அடுத்தக் குறளில்
அன்பகத்து இல்லா உயிர்வாழ்க்கை வன்பாற்கண்
வற்றல் மரம்தளிர்த் தற்று -78
ஒருவன் அன்பு இல்லாதவனனாக இருந்தால் அவனுடைய குடும்ப வாழ்க்கையானது பட்டுப்போன மரத்தில் பூப்பூத்தது போன்று யாரும் பயனளிக்காது என்கிறார்.
புறத்துறுப்பு எல்லாம் எவன்செய்யும் யாக்கை
அகத்துறுப்பு அன்பி லவர்க்கு -79
நாம் ஏற்கனவே திருக்குறளின் கல்வியின் பெருமையைப் பற்றி திருவள்ளுவர் குறிப்பிடும்போது கல்வியறிவற்றவர்களின் கண்களானது கண்கள் அல்ல அது புண்கள் என்றார் அதுபோல மேற்கூறிய குறளில் உள்ளத்தில் அன்பு இல்லாதவன் உடம்பின் புறத்து உறுப்புகள் எல்லாம் என்ன பயன் செய்யும் என்கிறார்.
அன்பின் வழியது உயிர்நிலை அஃதுஇலார்க்கு
என்புதோல் போர்த்த உடம்பு -80
அன்பையும் அறனையும் திருக்குறள் முழுமையும் சிதறவிட்டிருக்கிறார் பொய்யாமொழிப்புலவர், இந்தக் குறளிலும் அன்பு வழியில் இயங்கும் உடம்புதான் உயிர் இருக்கின்ற உடம்பு அப்படி அவர் மனதில் அன்புக் குடியில்லையெனில் அது வெறுமனே எலும்பும் தோல் கொண்டு போர்த்திய வெற்று உடம்பு என்கிறார்.
தொடர்ந்து பார்ப்போம்...
குறிப்பு: இணைக்கப்பட்டுள்ள படங்கள் மற்றும் காணொலி ஆகியவற்றை செயற்கை நுண்ணறிவுத் தொழில் நுட்பத்தில் உருவாக்கியுள்ளேன். பிழையிருப்பின் பொறுத்துக் கொள்க.
நன்றி
No comments:
Post a Comment