Tuesday, 1 July 2025

திருக்குறள் வழி நின்று திருவள்ளுவரை அறிதல்-76:

திருக்குறள் வழி நின்று திருவள்ளுவரை அறிதல்-76:
கல்லாமை
எந்த ஒரு விடயத்தைப் பற்றி யோசித்தாலும், பேசினாலும், செயல்படுத்தினாலும் அதன் நன்மை தீமைகள் இரண்டைப் பற்றியும் கவனத்தில் கொண்டு வருவதே ஆக்கப்பூர்வமான முடிவுகள் எடுப்பதற்கு செயல்படுத்துவதற்கு உதவும். ஆகவே, கற்றலின் பெருமை மட்டும் சொல்வதோடு திருவள்ளுவர் பெருந்தகை நிறுத்திவிடவில்லை. கல்லாமல் இருப்பதைக் குறித்தும் பேசுகிறார். 2000 ஆண்டுகளுக்கு முன்னரே கல்வியின் அவசியம் பேசியிருப்பது இன்றும் தேவைப்படும் என்றும் தேவைப்படும் என்று உணர்ந்தே வைத்திருக்கிறார். ஆதலால் அவர் தெய்வப்புலவர் என்றும் அழைக்கப்படும் அழகையும் உணரலாம். 
அரங்குஇன்றி வட்டுஆடி யற்றே நிரம்பிய
நூல்இன்றின் கோட்டி கொளல் -401
என்கிறார். நீங்கள் தாயம் அல்லது சதுரங்கம் விளையாடுகிறீர் என்று வைத்துக் கொள்ளுங்கள் தாயம் விளையாடுவதற்கு தாயக்கட்டைகளும் காய்களும் இருக்கின்றன. அதுபோல சதுரங்கத்திற்கு காய்கள் உள்ளன. ஆனால், இரண்டு ஆட்டத்திற்கும் கட்டங்கள் வரையப்படவில்லையெனில் எப்படி விளையாடுவீர்கள்? இதைத்தான் வள்ளுவரும் குறிப்பிடுகிறார். நிறைந்த நூல்களைக் கற்காமல் அறிஞர்க் அவையில் பேசுவது, அரங்கம் அமைக்காமல் வட்டுக்காய் உருட்டி விளையாடுவது போன்றது என்கிறார். என்னே அருமையானதொரு ஒப்புமை!
ஏப்போதும், நமக்கு ஒரு விடயம் தெரியவில்லை என்றால் அமைதியாக இருப்பது தான் சாலச் சிறந்தது. அதை விடுத்து, தெரியாததை தெரிந்தது போல் கூறினார் நமக்கான நம்பிக்கை என்பது இல்லாமல் போய் விடும். அதேபோல் தான் பின்வரும் குறளிலும் குறிப்பிடுகிறார். 
கல்லா தவரும் நனிநல்லர் கற்றார்முன்
சொல்லாது இருக்கப் பெறின் - 403 என்கிறார்.
 அதாவது கற்ற அறிஞர் முன்னர் பேசாமல் அமைதியாக இருக்கப் பெற்றால், கல்லாதவர்களும் நல்லவர்களே ஆவார்கள் என்கிறார். அடுத்தக் குறளில், 
கல்லாதான் ஒட்பம் கழியநன்று ஆயினும்
கொள்ளார் அறிவுடை யார் -404 என்கிறார். அதாவது கல்லாதவன் சொற்கள் சில சமயம் நன்மையானதாக இருந்தாலும், அறிவுடையார் அவற்றை ஏற்க மாட்டார்கள் ;என்கிறார். அப்படியானால் இரண்டாயிரம் வருடத்திற்கு முன்பே கற்கவில்லையென்றால் உனக்கு மதிப்பில்லை என்பதனை உணர்த்துகிறார். ஆதலால் கற்றல் என்பது எவ்வளவு அவசியம் என்பது நாம் அனைவருக்கும் உணர்த்த வேண்டியது அவசியமாகிறது. 
ஏன்னதான் புத்திசாலியாகத் தன்னைக் காட்டிக்கொண்டாலும், கற்றவர் முன்பு அது எடுபடாது என்பதை
கல்லா ஒருவன் தகைமை தலைப்பெய்து 
சொல்லாடச் சோர்வு படும் -405 என்ற குறளில் குறிப்பிடுகிறார். அதாவது, கல்லாதவன் தன்னை அறிஞன் என்று மதித்துக் கொள்வது;, கற்றவருடன் உரையாடும் போது கெட்டு விடும் என்கிறார். 
நம்மைப் பார்த்து எவராவது ‘பொறம்போக்கு” என்று திட்டினால், நமக்குக் கோபம் வரும் அவர்கள் அந்த வார்த்தை குறிப்பிடும் போது தரிசு நிலத்தை அர்த்தமாக வைத்து திட்டுவதுண்டு அதாவது விளைச்சலுக்குப் பயன்படாது அல்லது வேளாண்மை செய்யப்படாத நிலம் என்று பொருள்படும். இதனை அப்போதே திருவள்ளுவர் எடுத்துரைத்திருக்கிறார். 
உளர்என்னும் மாத்திரையர் அல்லால் பயவாக்
களர்அனையர் கல்லா தவர் - 406 என்கிறார். 
கல்லாதவர்கள் உயிருடன் இருக்கிறார்கள் என்று சொல்லப்படுவது அல்லாமல், களர் நிலம் போல யாருக்கும் பயன்பட மாட்டார்கள் என்கிறார். 
 நிறையப்படங்களில் பார்த்திருக்கலாம், நன்கு வாழ்ந்து கெட்டவர்களின் கதைகளையும் கேட்டிருக்கலாம், நிறைய வசதி வாய்ப்புள்ள ஜமீன்தார்கள், நிலக்கிழார்கள் தங்களுடைய கல்வியறிவின்மையால் ஏமாற்றப்பட்டு தங்களுடைய சொத்துக்களை இழந்திருப்பார்கள். இதையேதான் வள்ளுவரும் சொல்கிறார். 
நல்லார்கண் பட்ட வறுமையின் இன்னாதே
கல்லார்கண் பட்ட திரு -408
அதாவது, கல்லாதவனிடம் உள்ள செல்வமானது கற்றவனிடம் உள்ள வறுமையை விடத் துன்பம் தரும். 
மேல்குடி என்றும் கீழ்குடி என்றும் பலர் அறிவிழியாக பெருமையடித்துக் கொள்வதுண்டு. உண்மையில் பெருமைக்கு உரியவர் யார் என்று 2000 ஆண்டுகள் முன்பு வள்ளுவர் கூறுவதைப் பாருங்கள்.
மேல்பிறந்தார் ஆயினும் கல்லாதார் கீழ்ப்பிறந்தும் 
கற்றார் அனைத்திலர் பாடு -409 என்கிறார். 
கல்லாதவர்கள் மேல்குடியில் பிறந்திருந்தாலும், கீழ்க்குடியில் பிறந்தாலும் கற்றாரைப் போன்று பெருமை இல்லாதவரே ஆவார் என்கிறார். 
கற்பதன் அவசியத்தை இதைவிட மூர்க்கமாக யாராலும் சொல்ல முடியாது. பின்வரும் குறளைக் கவனியுங்கள். 
விலங்கொடு மக்கள் அனையர் இலங்குநூல்
கற்றாரோடு ஏனை யவர் - 410
கற்றவர்களுக்கும் கல்லாதவர்களுக்கும் உள்ள வேறுபாடு மக்களுக்கும், விலங்குகளுக்கும் உள்ள வேறுபாடேயாகும் என்கிறார். விலங்குகளுக்கும் மக்களுக்கும் உள்ள பல வேறுபாடுகளில் முக்கியமானது நாகரிகமாகும். கற்றவரே நாகரீகமடைந்தவர்கள் என்பதே அவர் கூற்று. கற்றலின் முக்கியத்துவத்தை வளரும் தலைமுறைகளுக்கு உணர்த்துவோம்.

தொடர்ந்து பார்ப்போம்...
குறிப்பு: இணைக்கப்பட்டுள்ள படங்கள் மற்றும் காணொலி ஆகியவற்றை செயற்கை நுண்ணறிவுத் தொழில் நுட்பத்தில் உருவாக்கியுள்ளேன். பிழையிருப்பின் பொறுத்துக் கொள்க.
நன்றி

No comments:

Post a Comment