திருக்குறள் வழி நின்று திருவள்ளுவரை அறிதல்-81:
அடக்கமுடைமை
திருவள்ளுவர் அவர்கள் உடைமை என்னும் தலைப்பில் எழுதிய அதிகாரங்களைப் பற்றிப் பார்க்கின்றோம். கடந்த வாரங்களில் அன்புடைமை மற்றும் அறிவுடைமை பற்றிப் பார்த்தோம். இந்த வாரம் அடக்கமுடைமை அதிகாரத்தினைப் பார்ப்போம்.
அடக்கத்துடன் இருப்பது என்பது பணிவு என்னும் பண்புடன் இருப்பதனைக் இருக்கிறது. பணிவு என்றால் தாழ்ந்து இருப்பது என்று அர்த்தம் இல்லை. முந்தைய அதிகாரத்தில் பார்த்தது போன்று அன்புடனும் அருளுடனும் இருப்பவர்களுக்கு இது எளிதான ஒன்றாக இருக்கிறது. அடக்கம் என்பதுவும் ஒருவருடைய செல்வமாக இருக்கிறது. இதில் சொல்லக்கூடிய செல்வம் என்பது ஒருவருடையத் திறனாகக் கொள்ளலாம்.
சிலர் அறைகுறை அறிவுடன் அதிகப்பிரசங்கித்தனமாக உதார் விடுவதைப் பார்த்திருப்போம், சிலர் கத்தியை வைத்துக் கொண்டு அதுதான் சாதியப் பெருமை என்று கூக்குரல் இட்டுக்கொண்டு சமூக வலைத்தளங்களில் பதிவிடுவதைப் பார்த்திருக்கின்றோம், வெளியிலிருந்து பார்ப்பவர்கள், ‘என்னடா, இவன் அடங்கவே மாட்டேங்கறான்?” என்ற தொனியில் அவரைப் பார்த்துச் சொல்வதைப் பார்த்திருப்போம். ஆனால், உண்மையில் அன்பும் அருளும் நிரம்பப் பெற்றிருப்பவர்கள் எதையும் சரியான அணுகுமுறையில் கொண்டு செல்வர். இதைத்தான் ‘குறைக்குடம் கூத்தாடும், நிறைகுடம் நீர்த்தழும்புவது இல்லை” என்ற பழமொழி நிறைகுடம் நீர் தளும்பல் இல்”என்ற பழமொழி நானூறில் இருந்து உருவாகிறது. இதன் அர்த்தம் நிரம்பக் கற்றவர் தேவையற்ற சலசலப்பை ஏற்படுத்துவதில்லை நிதானமாகவே இருப்பர். ‘நிறைகுடம்” பூசையில் முக்கிய இடத்தில் இருப்பது போல, மேற்கூறியவாறு அடக்கத்துடன் இருப்பவர் மதிக்கத்தக்கவர் என்பதனை உணரலாம்.
திருவள்ளுவர் அடக்கமுடைமையில் என்ன சொல்கிறார் என்று பார்ப்போமா?
அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமை
ஆரிருள் உய்த்து விடும் -121 என்கிறார். ஏற்கனவே கூறியவாறு ஒருவர் அடக்கத்துடன் இருப்பது அவருக்கு என்றும் அழியாதப் புகழைக் கொடுக்கும், அதற்கு நாம் திருவள்ளுவரையே உதாரணமாகக் கொள்ளலாம். அதேபோல், அடங்காமல் இருப்பது ஒருவர் வாழ்வையே இருளாக்கி விடும். அரைகுறை அறிவோடு உணர்ச்சிவசப்பட்டு தவறிழைத்துவிட்டு தண்டணை பெறுவோர்களை இதற்கு உதாரணமாகக் கூறலாம். அடுத்தக் குறளில்,
காக்க பொருளா அடக்கத்தை ஆக்கம்
அதனினூஉங் கில்லை உயிர்க்கு -122
ஒருவர் அடக்கத்தைச் செல்வமாகப் பேணிக் காக்க வேண்டும் என்கிறார். அதைக் காட்டிலும் ஒருவருக்குப் பெரிய செல்வம் என்று எதுவும் இல்லை. ஆகவே அடக்கத்துடன் இருக்க வேண்டும் என்கிறார்.
செறிவறிந்து சீர்மை பயக்கும் அறிவறிந்து
ஆற்றின் அடங்கப் பெறின் -123
ஒருவன் மிக சிறந்த திறன்களைப் பெற்றிருந்தாலும், அதனை அவர் எப்படி வெளிப்படுத்துகிறார் என்பதைப் பொருத்தே அவருடைய மேன்மை இருக்கும். உதாரணமாகச் சொல்ல வேண்டும் என்றாலும், ஒரு பணிக்கு நேர்காணலுக்குச் செல்வோர் அந்தப் பணி சம்பந்தமாக நிறைய விடயங்கள் தெரிந்திருந்தாலும், திறன்கள் இருந்தாலும், மரியாதைக் கெட்டத்தனமாகவும், தலைக்கனத்துடனும் நேர்காணலில் பதிலளித்தால், அவருக்குத் திறமை இருந்தாலும், அவருடைய மனப்பான்மையினையும் அதனால் விளைந்த நடத்தையையும் அடிப்படையாகக் கொண்டு அவருக்கு வாய்ப்பு நிராகரிக்கப்படுகிறது. முhறாக, நிரம்பக் கற்றிருந்தாலும், நிதானமாகவும், பணிவுடனும், பொறுப்புடனும் பதிலளிப்பவர்களுக்கு வாய்ப்புகள் எளிதில் கிடைக்கிறது. இதையே 2000 வருடங்களுக்கு முன்னர், ‘அறிய வேண்டுவனவற்றை அறிந்து வைத்துக் கொண்டு நல்ல வழியிலே அடக்கத்தோடு நடக்கும் பண்பெற்றிருந்தால், அந்த அடக்கம் மேன்மையுடையவர்களால் அறியப்பட்டு அதனால் அவனுக்கு மேன்மை கிடைக்கும்; என்கிறார்”
எந்த ஒரு நிறுவனமும் ஒருவன் நேர்மைத்தன்மை (iவெநபசவைல) மாறாதவனாக இருப்பதையே விரும்பும். அதனை தொடர்ந்து பின்பற்றுபவர்களை மிகப் பெரிய மரியாதையுடன் நோக்கும் அவருக்கு வாய்ப்புகளில் முன்னுரிமை அளிக்கும். இந்த உணர்வை முன்னரே அறிந்துள்ள நமது ஆசான் சொல்கிறார்,
நிலையின் திரியாது அடங்கியான் தோற்றம்
மலையினும் மாணப் பெரிது -124
அதாவது, தன்னுடைய நிலையில் இருந்து மாறாமல் அடக்கத்துடன் இருப்பவனின் தோற்றமானது, பிறர் மனதில் மலையைக் காட்டிலும் மிகப் பெரியதான உயர்வாக இருக்கும் என்கிறார்.
தமிழர்கள் பொதுவாக வாழ்த்தும் போது ‘பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ்க” என்று சொல்வதுண்டு. இந்தப்16 செல்வங்களை அபிராம்p அந்தாதியில் ; என அபிராமி பட்டவர் குறிப்பிடுவதாவது, கல்வி, அறிவு, ஆயள், ஆற்றல், இளமை, துணிவு, பெருமை, பொன், பொருள், புகழ், நிலம், நன்மக்கள், நம்பிக்கை, நோயின்மை, முயற்சி மற்றும் வெற்றி ஆகியவற்றைக் குறிப்பிடுகிறார். இதுபோன்ற அனைத்தையுமோ அல்லது பெரும்பாலானவற்றைப் பெற்றவரை செல்வர் எனக் குறிப்பிடலாம். திருவள்ளுவரும் இத்தகையத் தன்மையுடைய செல்வருக்கு குறிப்பிடுவதாவது.
எல்லார்க்கும் நன்றாம் பணிதல் அவருள்ளும்
செல்வர்க்கே செல்வம் தகைத்து -125
அதாவது பணிவு என்னும் பண்போடு எல்லோருக்கும் நலம் பயக்கும் வகையில் ஏற்கனவே செல்வர்களாக இருப்பவர்களுக்கு அந்தப் பண்பானது, மேலும் ஒரு செல்வமாகும் என்கிறார்.
தொடர்ந்து பார்ப்போம்...
குறிப்பு: இணைக்கப்பட்டுள்ள படங்கள் மற்றும் காணொலி ஆகியவற்றை செயற்கை நுண்ணறிவுத் தொழில் நுட்பத்தில் உருவாக்கியுள்ளேன். பிழையிருப்பின் பொறுத்துக் கொள்க.
நன்றி
No comments:
Post a Comment